அடையாள அரசியல்
இப்போது முன்னுக்கு வந்துள்ள இரண்டாவது முக்கியஅம்சம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் – அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் முயற்சியை மழுங்கடிப்பதற்காக – அவர்களை சாதிரீதியாக, இனரீதியாக பிரித்திடும் அடையாள அரசியலை அவர்கள் மத்தியில் புகுத்துவதாகும். இது அவர்களை சாதிரீதியாக பிரிப்பதோடு மட்டுமல்லாமல், இறுதியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு நின்று நிறைவேற்ற வேண்டிய அரசியல் பங்களிப்பினைப் பாதிக்கக்கூடிய ஒன்றுமாகும்.
ஆணாதிக்க சமூகத்திலிருந்து சாதி அடிப்படையி லான சமுதாயம் வரை, அனைத்துப் பிற்போக்கான சமூக நடைமுறைகளும், உண்மையில் சுரண்டல் ஆட்சிக்குத் துணை புரிபவைகளேயாகும். இத்தகைய சக்திகள் தங்களின் மேலாதிக்க சமூக அரசு எந்தி ரங்கள் மூலம், ஆட்சி புரிவோருக்கு ஊதியம் பெறாத அல்லது மலிவான உழைப்பையே அளிக்கின்றன.
இத்தகைய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக தீவிரப் போராட்டத்தின் மூலம்தான், தொழிலாளி வர்க்கம் அதன் தலைமையை செயல்படுத்த முடியும், நிலப்பிர புத்துவ-முதலாளித்துவ அடக்குமுறைக்கு எதிராக, ஒரு சக்தி வாய்ந்த முன்னணியை உருவாக்க முடியும். தொழிற்சங்கங்களின் பங்கு முக்கியமானதாக மாறுவது இதில்தான் இருக்கிறது.
சிறு உற்பத்தியாளர்களைப் பற்றி…
இந்தியாவில் சிறு உற்பத்தியாளர்களின் ஒரு பெரும் படை உருவாகி இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளின் தொடர்ச்சியேயாகும். இருப்பினும் விவ சாயத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விரிவடைந்து கொண்டிருக்கிறது. நிலப்பிரபுக்கள் முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாறிக் கொண்டிருப்பதும் அதிக ரித்துக் கொண்டிருக்கிறது.
வரலாறு படைத்த விவசாயிகள் இயக்கம் சிறிய உற்பத்தியாளர்களுக்கும் ஏகபோக முதலாளித்துவத் திற்கும் இடையேயான முரண்பாடுகளை முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது. சிறிய உற்பத்தியாளர்கள் ஏராளமாக உருவெடுத்திருப்பது என்பது முதலாளித்து வத்திற்கு எதிரான “உலகளாவிய முறையில் தெற்கு நாடுகளில்” ஏற்பட்டுள்ள வளர்ச்சிப் போக்கு ஆகும். இது, சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக தொழி லாளர் வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் இருந்து வருகின்றன என்பதைக் குறைக்கிறது.
சிறிய உற்பத்தி வடிவங்களின் பெரும் பகுதியானது, ஏகபோகங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள உலகளா விய மதிப்புச் சங்கிலிகளின் ஒரு பகுதிதான் என்கிற உண்மையை கவனிக்க வேண்டியுள்ளது. சிறிய உற் பத்தியாளர்கள் உற்பத்தி செய்திடும் பொருள்களின் விலைகளும்கூட ஏகபோகங்களால் கட்டுப்படுத் தப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. மேலும் அவற்றின் உபரிகளும் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன. எனவே சிறிய அளவிலான உற் பத்தி வடிவங்கள் என்பவை ஏகபோக முதலாளித்து வத்தின் ஓர் ஒருங்கிணைந்த இணைப்பேயாகும்.
இரண்டாவதாக, சிறிய உற்பத்தியாளர்கள் பூகோள ரீதியாக சிதறடிக்கப்படுகிறார்கள். அவர்களை ஸ்தா பனரீதியாகத் திரட்டுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே சிறிய உற்பத்தியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்பதும், நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களை நிறைவு செய்வது என்ப தும் ஒரு நீண்ட நெடிய போராட்டமாகும். இதற்கு தொழி லாளர் வர்க்கத்தின் அணிதிரட்டலும், ஒற்றுமையும் தலைமையும் அவசியமாகும். இதன்மூலம்தான், சிறு உற்பத்தியாளர்களைத் திரட்டினால், அதுவே புரட்சிகர சக்தியாகிவிடும் என்ற தவறான புரிதலை நீக்க முடியும்.
ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சமர்புரிவோம்
தொழிலாளி வர்க்கத்தை அதன் தொழிற்சாலை சார்ந்த, உள்ளூர் அல்லது பொருளாதாரக் கோரிக்கை களுக்குள் மட்டுப்படுத்திடும் சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்திற்கும், உலக அளவிலான தொழிலாளர் வர்க்கத்தை சர்வதேச நிதி மூலதனத்துடன் பிணைத்திருக்கும் எதார்த்த நிலைக்கும் இடையே இடைவெளி இருப்பது வெளிப்படை யாகவே தெரிகிறது. சர்வதேச நிதி மூலதனம், தொழிலாளர்களை மேலும் ஒட்டச் சுரண்டும் விதத்திலும், சிறிய அளவிலான உற்பத்தியை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்திலும், கொள்ளை லாபம் ஈட்டுவதை உத்தரவாதப்படுத்தும் விதத்திலும் ‘உலகத்தின் தெற்கில்’ உள்ள நாடுகள் அனைத்திலும் மனிதாபிமானமற்ற தொழிலாளர் கொள்கைகளை அமல்படுத்துமாறு கட்டளையிடுகிறது. காலனிய ஆதிக்கக் காலத்திலிருந்தே ‘உலகின் தெற்கே’ உள்ள நாடுகளில் வாழும் தொழிலாளர்களுக்கும் ‘வடக்கே’ வாழும் தொழிலாளர்களுக்கும் இடையே தொழிலாளர்களின் வாழ்க்கை வசதிகளில் பெரும் இடைவெளி இருந்து வருகிறது. இந்நிலையில், நவீன தாராளமய உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் இன்றைய கால கட்டத்தில் மூலதனம் மேலும் மோசமான முறையில் கொள்ளையடிக்கக்கூடியதாக மாறி இருக்கிறது. இது, உலகின் வடக்கிலும் கூட பெரிய அளவில் தொழில்மயம் கைவிடப்படுவதற்கும், மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கட்டுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது. கொஞ்ச நஞ்சம் இருந்த சமூக நலத் திட்டங்களும் வெட்டப் பட்டுக் கொண்டிருக்கின்றன. நிலைமைகள் வெடிக்கக் கூடிய அளவிற்கு மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக, நவீன பாசிச அரசியல் மேலாண்மை ஏகாதிபத்தியப் போர்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இவ்வாறு நெருக்கடியின் மையம் ஒரு நாட்டிலிருந்து பிறிதொரு நாட்டிற்கு இடம் பெயர்வது தொடர்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், புரட்சிகரமான வர்க்கக் கண்ணோட்டத்துடன் செயல்படும் தொழிற்சங்க இயக்கமானது, ஏகாதிபத்தியம் நெருக்கடியைச் சமாளிப்பதற்காகக் கட்டவிழ்த்துவிடும் ஒவ்வொரு ராணுவ-அரசியல் நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரி வித்து ஒருமைப்பாட்டுடன் போராட வேண்டியது முக்கி யக் கடமையாகும். ஏகாதிபத்தியம், நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விதிப்பதன் மூலமாகவோ அல்லது ராணுவ ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாகவோ அல்லது யுத்தங்களை ஏவுவதன் மூலமாகவோ மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதனை எதிர்த்து முறியடித்து அதனை தனிமைப்படுத்துவது அவசியமாகும். இந்தப் போராட்டத்தை உயிர்ப்புடன் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்தால் மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வல்லமை படைத்த ஒரே சித்தாந்தம், சர்வதேசியத்துடன் கூடிய சமூக மாற்றத்திற்கான சித்தாந்தமேயாகும்.
தொடரும்…..
சுதீப் தத்தா,அகில இந்திய செயலாளர் சிஐடியு
சுனந்த் , சிஐடியு டெல்லி மாநில செயலாளர்
மொழிப்பெயர்ப்பு தோழர் வீரமணி