அறிவுசார் சொத்துரிமை மீதான வடக்குலக நாடுகளின் ஆதிக்கம் – விஜய் பிரசாத்

தெற்குலக நாடுகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை திறனை அதிகரித்து வந்தாலும், வடக்குலக நாடுகளும், அந்நாட்டின் நிறுவனங்களும் முக்கிய அறிவியல் கண்டு பிடிப்புகளுகான அறிவுசார் சொத்துரிமையான காப்புரிமைகளை தொடர்ந்து தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ளன.

இது அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக தெற்குலக நாடுகளை காலவரையற்ற முறையில் காப்புரிமைக்கான பணத்தை செலுத்தும் சுழற்சியில் சிக்க வைக்கிறது. குறிப்பாக மருந்துகள், மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், மற்றும் மரபணு மாற்றப்பட்ட விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் உபகரணங்கள் போன்ற விவசாயப் பொருட்கள் ஆகியவற்றுக்கான உரிமைக் கட்டணங்கள் போன்ற காப்புரிமைக்கான கட்டணங்களும் அடங்கும்.

தெற்குலக நாடுகளில் குறிப்பாக ஆசியாவில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பல நாடுகள் அதிநவீன, அதிவேகமான ரயில் போக்குவரத்து, பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. ஆனால் இந்த துறைகளுக்கு தேவையான சில முக்கிய பாகங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காக அதற்கான காப்புரிமைகளை சொத்தாக வைத்துள்ள வடக்குலக நாடுகளின் நிறுவனங்களுக்கு தெற்குலக நாடுகள் அதிக பணத்தை காப்புரிமைக் கட்டணமாக செலுத்தி வருகின்றன.

காப்புரிமை தொடர்பாக கட்டணம் செலுத்துவதில் சமநிலை இல்லாமல் உள்ளது. குறிப்பாக இந்த சமத்துவமின்மை மிக அதிகமாக உள்ள ஐந்து துறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மருத்துவத்துறை

மருத்துவ துறையில் மருந்துகள் மீதான காப்புரிமைகள் பெரும்பாலும் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்களுக்கே சொந்தமானவையாக உள்ளன. அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழில்நுட்பங்களை அந்த நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு வாங்க வேண்டும். கொரோனா தொற்று பரவலின் போது எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய செய்யப்பட்ட அதிக செலவை இதற்கு சமீபத்திய உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

தென்னாப்பிரிக்கா, இந்தியா போன்ற பல தெற்குலக நாடுகள் காப்புரிமை கட்டுப்பாடுகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப பரிமாற்றம் காரணமாக கொரோனா காலத்தில் தடுப்பூசியை கொள்முதல் செய்வதில் தாமதமானது. மேலும் அதிக செலவு செய்து கொள்முதல் செய்யும் நிலையையும் சந்தித்தன.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICT)

மென்பொருள், வன்பொருள், குறைக்கடத்திகள், மொபைல் போன்கள் அதன் பாகங்கள் என ஒவ்வொரு பகுதியும் தெற்குலக நாடுகளுக்கு பெரும் செலவை ஏற்படுத்துகிறது. பொருட்களின் விலை மட்டுமல்லாமல், அடிப்படை தொழில்நுட்பங்களுக்கான அதிக உரிமைக் கட்டணங்கள் காரணமாகவும் இந்த செலவு ஏற்படுகிறது. இந்த உரிமங்கள் பெரும்பாலும் பிரத்யேக காப்புரிமை கூட்டமைப்புகளால் (அத்தியாவசிய காப்புரிமைகளை கூட்டாக நிர்வகித்து உரிமம் வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு) கட்டுப்படுத்தப்படுகின்றன.

தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி தொழில்நுட்பங்கள்

ஆட்டோமொபைல், சுரங்கம் மற்றும் ஜவுளித் துறைகளில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் முக்கியமான இயந்திரங்களாக உள்ள தானியங்கி மெசின்களான கம்ப்யூட்டர் நியூமெரிக்கல் கண்ட்ரோல் (CNC) இயந்திரங்கள் மற்றும் ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பிற உற்பத்தி சார்ந்த உபகரணங்கள் ஆகியவற்றிற்கான காப்புரிமைகள் பெரும்பாலும் வடக்குலக நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கே சொந்தமானவையாக உள்ளன. இதன் விளைவாக, தொழில்துறையில் வளர்ச்சி அடைய விரும்பும் தெற்குலக நாடுகள், இந்த தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கவோ அல்லது உற்பத்தி செய்வதற்கோ பதிலாக, இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அத்துடன், தொடர்ந்து காப்புரிமைக்கான கட்டணங்களையும் செலுத்த வேண்டியுள்ளது.

விவசாய உயிரி தொழில்நுட்பம்

DuPont, Monsanto (Bayer), மற்றும் Syngenta போன்ற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே உரங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள், மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட முக்கிய விவசாய உயிரி தொழில்நுட்பங்களை கட்டுப்படுத்துகின்றன. இந்த தொழில் நுட்பத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றால் அதிக பணத்தை உரிமைத்தொகையாக கட்ட வேண்டும். இந்த ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் தெற்குலக நாடுகளில் உள்ள விவசாயிகள் விவசாயத்துறையில் புதிய வழிமுறைகளை பின்பற்றுகிற அல்லது உருவாக்குகிற திறனை கட்டுப்படுத்துகின்றன.

அதாவது வளரும் நாடுகள் தங்கள் உள்நாட்டு விவசாயத்தை மேம்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையை அதிகரித்து, விவசாய உற்பத்திக்கான செலவுகளை அதிகரிக்கிறது. அத்துடன் மரபணு மாற்றப்பட்ட விதைகள்  உள்நாட்டு விவசாயத்தை அழிக்கின்றன. மேலும் ஒரே வகையிலான பயிர் சாகுபடி, ரசாயனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துவது காரணமாக சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுகிறது.

பசுமை தொழில்நுட்பம்

மாற்று எரிசக்தி உற்பத்திக்கு தேவையான பேட்டரிகள், சூரிய தகடுகள் மற்றும் காற்றாலைகள் ஆகியவற்றில் உள்ள முக்கிய பாகங்கள் பெரும்பாலும் வடக்குலக நிறுவனங்களுக்கே சொந்தமானவை. அவை தான் காப்புரிமைகளை பெற்றுள்ளன. இதனால் தொழில்நுட்ப பரிமாற்றம் சாத்தியமற்றதாகிறது. இதன் விளைவாக தெற்குலக நாடுகள் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு  அதிகளவில் உரிமைக் கட்டணங்களை செலுத்த வேண்டும். இது ஒரு வளரும் நாடு தனது நாட்டின் எரிசக்தி துறையின் வளர்ச்சியை சுயமாக முன்னேறும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த வேறுபாடுகள் பெரும்பாலும் வடக்குலக நாடுகளில் உள்ள நிறுவனங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆதிக்கத்தின் மீதான ஏகபோக கட்டுப்பாட்டின் காரணமாக ஏற்படுகின்றன. இந்த ஆதிக்கம் தெற்குலக நாடுகள் வளர்ச்சிக்கான போட்டியில் மாற்று வழிகளை உருவாக்குவதைத் தடுக்கிறது. வளர்ந்து வருகிற சிறிய தெற்குலக நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) திறன் இல்லாத நிலையானது ஏற்கனவே உள்ள இந்த வேறுபாடுகளை மேலும் தீவிரப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.

தெற்குலக நாடுகளில் உள்ள தரமற்ற கல்வி நிறுவங்களால் போதிய வளர்ச்சியற்ற கல்வி குறிப்பாக காலனித்துவ மரபில் வேரூன்றியுள்ள கல்வி திட்டம். வேலைவாய்ப்புகளைத்  தேடி திறமையான மாணவர்கள் வடக்குலக நாடுகளுக்கே செல்லுகின்ற புதிய காலனித்துவ இடம்பெயர்வு முறை ஆகியவை இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமாக வடக்குலக நாடுகளும், நிறுவனங்களும் அறிவு சார் சொத்துரிமை மீது செலுத்தும் ஆதிக்கத்தை சவால் செய்ய தெற்குலக நாடுகள் அரசியல் செல்வாக்கை உருவாக்கத் தவறிவிட்டன.

அறிவுசார் சொத்துரிமை விதிகள் உருவான வரலாறு

1986 இல், அமெரிக்காவின் தலைமையில் வடக்குலக நாடுகள், வர்த்தகம் மற்றும் வரிகள் மீதான பொது ஒப்பந்தம் (GATT) குறித்தான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையை , துவங்கின. இது உருகுவே பேச்சுவார்த்தை எனவும் அழைக்கப்படும். தெற்குலக நாடுகளில் வடக்குலக நாடுகளுக்கான சந்தையை அதிகரிக்க வேண்டும். மேலும் வடக்குலக நாடுகள் முதலீடு செய்வதற்கான தொழில்நுட்பம், சேவைகளுக்கான தடைகளை அந்நாடுகள் தங்கள் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை திருத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் வடக்குலக நாடுகளின் ஏகபோக நிறுவனங்களின் அறிவுசார் சொத்துரிமை மற்றும் சேவைத் துறையில் உள்ள ஒப்பீட்டு நன்மைகள் பெரும் லாபகரமான தொழிலாக உருவெடுத்தது.

இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட வரைவுகள் அங்கு பங்கேற்ற நாடுகளிடமிருந்து வரவில்லை. ஆனால் அறிவுசார் சொத்துரிமை கூட்டணி மற்றும் பன்முக வர்த்தக பேச்சுவார்த்தை கூட்டணி போன்ற மர்மமான குழுக்களிடமிருந்து வந்தன. இந்த குழுக்களில் இருப்பவை அங்கீகரிக்கப்பட்ட நாடுகள் அல்ல, ஆனால் DuPont, Monsanto, மற்றும் Pfizer போன்ற வடக்குலக நாடுகளை சேர்ந்த ஏகபோக நிறுவனங்களின் ஆதரவுக் குழுக்கள் என்பது பின்னர் தெரிய வந்தது.

இந்தக் குழுக்கள் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விசயங்களை திருத்த அழுத்தம் கொடுத்தன. அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு வரை ஒரு கண்டுபிடிப்பு நடந்தால் அந்த பொருள் உருவாக்கப்பட்ட செய்முறைக்கு மட்டுமே காப்புரிமைகள் பெற முடியும்.  இதனால் உலகம் முழுவதும் தனிநபர்கள், நிறுவனங்கள், ஒரு நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் என யார் வேண்டுமானாலும் தலைகீழ் பொறியியல் கண்டுபிடிப்புகள் மூலமாகவோ, வேறு செய்முறைகளை பயன்படுத்தியோ அதே போன்ற கண்டுபிடிப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இதனைத்தான் அந்த பேச்சு வரத்தை மாற்றியது. ஒரு பொருளை முழுமையாக தயாரிக்க அடைய பயன்படுத்தப்படும் எந்த வகையான செய்முறையானாலும் காப்புரிமை வைத்திருப்பவருக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. இது வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் (TRIPS) என அழைக்கப்பட்டது.

பிரேசில் மற்றும் இந்தியாவின் தலைமையில் அர்ஜென்டினா, கியூபா, எகிப்து, நிகரகுவா, நைஜீரியா, பெரு, தான்சானியா, மற்றும் யூகோஸ்லாவியா என பத்து தெற்குலக நாடுகள் இந்த பேச்சுவார்த்தையால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து விவாதிக்க கூடின.  இந்த புதிய அணுகுமுறை தெற்குலக நாடுகளில் தொழில்நுட்ப பஞ்சத்திற்கு வழிவகுக்கும், அதிக செலவில்லாமல் குறைந்தபட்ச தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் கிட்டத்தட்ட வீழ்ச்சி ஏற்படும் என்று பத்து நாடுகளின் குழு (G10) வாதிட்டது. இந்த கூட்டமைப்பு நாடுகள் சில வருடங்களுக்கு சலுகைகளை வெல்லும் என்று தோன்றியது. ஆனால் அமெரிக்கா அக்குழுவில் உள்ள நாடுகளின் மீது அழுத்தம் கொடுக்க துவங்கியது. இதனால் அக்குழு பிளவுபடத் துவங்கியது. 1989 இல், பிரேசில் மற்றும் இந்தியா ஒப்புதலுடன் அக்குழு கலைக்கப்பட்டது.

அதன்பின், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே விவசாய மானியங்கள் குறித்த கருத்து வேறுபாடுகள் விவாதத்தின் மையமாக மாறியது. 1994 இல்  தெற்குலக நாடுகள் புதிய ஆபத்தான அறிவுசார் சொத்துரிமை ஆதிக்கம் மற்றும் அதிலிருந்து உருவான விதிகளை ஏற்றுக்கொண்டன. வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தமானது உலக வர்த்தக அமைப்பு (WTO) நிறுவப்பட்ட போது அதன் முக்கிய விசயமாக மாறியது.

ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா IBSA என்ற ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. இது அத்தியாவசிய மருந்துகள், குறிப்பாக எச்ஐவி/எய்ட்ஸ் நோய்க்கான மருந்துகளுக்கு அறிவுசார் சொத்துரிமை மீது கட்டாயமாக தள்ளுபடிகள் வேண்டும் என வலியுறுத்தியது. இந்த கூட்டமைப்பின் முயற்சியின் காரணமாக 2003 ஆகஸ்ட் 30 தேதி அன்று உலக வர்த்தக அமைப்பானது அறிவியல் ஆராய்ச்சியில் போதிய உற்பத்தி திறன் வளர்ச்சி இல்லாத நாடுகள் ஜெனிரிக் மருந்துகளை இறக்குமதி செய்யலாம் என வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக தளர்வு செய்யும் முடிவை எடுத்தது.

இது வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தின் அடிப்படையை மாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனினும், அடுத்தடுத்து சில மருந்துகளுக்கான விலையை குறைக்கவும் இது உறுதிப்படுத்தியது. பிரேசில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே உருவாக்கப்பட்ட இந்த தொடக்க கால கூட்டணி, 2007 இல் மூன்றாவது பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2009 இல் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பாக வளர்ந்தது. இக்கூட்டமைப்பு சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கியமான திட்டங்களைத் துவங்கியிருந்தாலும், வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தத்தை எதுவும் செய்ய முடியவில்லை.

உயிர் கொள்ளை மற்றும் காப்புரிமை சட்டங்கள்

1980 களில், தெற்குலக நாடுகள் உயிர் கொள்ளை (biopiracy) என்ற பிரச்சனையை எழுப்பத் தொடங்கின. விவசாயம் மற்றும் மருந்துகள் தொடர்பான பல நவீன கண்டுபிடிப்புகள்,  ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள விவசாயிகள் மற்றும் பாரம்பரிய மருத்துவர்களால் பாரம்பரிய முறையில் இருந்து உருவானவை என்பதே அவர்களது வாதமாக இருந்தது. இந்த வாதம் பொதுவாக பெரிய அளவில் எடுபடவில்லை. இருப்பினும், சில முக்கிய வழக்குகளில் – தெற்காசியாவில் இருந்து வேப்ப இலையை காப்புரிமை செய்ய டபிள்யு.ஆர்.கிரேஸ் என்பவரின் முயற்சி மற்றும் தென்னாப்பிரிக்காவின் சான் மக்களால் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் ஹூடியாவை (hoodia) உருவாக்க ப்ய்டோபார்ம் (Phytopharm) என்ற நிறுவனத்தின்   முயற்சியானது பாரம்பரியமாக அப்பொருட்களை பயன்படுத்திவருபவர்களை அவர்களது காப்புரிமைகளை கைவிட வேண்டும் அல்லது அவர்களது லாபத்தைப் அந்த நிறுவங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்த நிறுவனக்கள் ​வற்புறுத்தின.

உயிர் கொள்ளை குறித்தான விவாதம் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பை (WIPO) ஒரு ஒப்பந்தத்திற்குள் தள்ள வழிவகுத்தது. இந்த ஒப்பந்தமானது நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் மரபணு வளங்கள் மற்றும் பாரம்பரிய அறிவின் மூலத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுருத்தியது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் நடைமுறையில் அடிக்கடி உதாசீனப்படுத்தப்படுகிறது. இது பழங்குடி சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ குறிப்பிடத்தக்க நன்மையை வழங்கவில்லை. உண்மையில், அந்த ஒப்பந்தம் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் விதிகளை மீறுவதுடன் பாரம்பரிய அறிவை சுரண்ட ஏகபோக நிறுவனங்களுக்கு சுதந்திரத்தை வழங்குகிறது.

 

பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 26  ஆவது செய்தி மடல்

தமிழில் அமீர் ஹைதர் கான் 

Leave a Reply