வேலை நேரத்தை அதிகரித்தால் நாடு வளருமா ? – அன்வர்

தமிழ்நாட்டில் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த L&T சேர்மன் திரு. சுப்பிரமணியன் வேலை நேரம் வாரத்துக்கு 90 மணியாக அதிகரிக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார். இதற்கு முன்பு இன்ஃபோசிஸ் நாரயண மூர்த்தி 70 மணி நேரம் என முன்வைத்தார். இந்த கார்ப்பரேட் முதலாளிகள் ஏன் வேலை நேரம் குறித்து இப்பொழுது கூக்குரலிடுகின்றனர் என்பது முக்கிய கேள்வி.

ஏற்கெனவே தொழிலாளர் சட்டங்களை நீர்த்து போகச் செய்ய பல முனைப்புகளை மோடி அரசாங்கம் எடுத்து வரும் இந்த சூழலில் வேலை நேரமும் அதிகரிக்க வேண்டும் எனும் திசைவழியை இவர்கள் காட்டுகின்றனரா எனும் கேள்வி எழாமல் இல்லை. குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் “கரடியே காரித்துப்பிய” கதையாக திரு. சுப்பிரமணியன் கூற்றுக்கு சில கார்ப்பரேட் முதலாளிகள் கூட எதிர்வினையாற்றியுள்ளனர் என்பதுதான்!

திரு சுப்பிரமணியனின் கூற்று வேலை நேரத்துக்கும் அப்பால் இன்னொரு முக்கிய கண்டிக்கத்தக்க அம்சத்தையும் கொண்டுள்ளது. இல்லத்தரசிகளின் உழைப்பு பற்றிய அவரது பார்வையும் பெண்கள் குறித்து பார்வையும் மிக மோசமானதாக உள்ளன. ஒரு கார்ப்பரேட் உயர் அதிகாரி எப்படி இவ்வளவு மோசமான பார்வை கொண்டுள்ளார் எனும் கேள்வியை இது விளைவிக்கிறது.

இந்தியாவில் வேலை நேரத்துக்கான போராட்டங்கள்

8 மணி வேலை நேரம் என்பது சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. இதற்காக தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம். தியாகம் செய்த உயிர்கள் பல! 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனின் தொழில் உற்பத்திமுறை உழைப்பாளிகளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட, அனைவரையும் கசக்கி பிழிந்த சூழலில்தான் வேலை நேரம் முறைப்படுத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தது. இதற்கான வலுவான வர்க்க வடிவத்தையும் வேலை நேரத்துக்கும் சமூக மாற்றத்திற்கான தொடர்பையும் உருவாக்கியது காரல் மார்க்ஸ் அவர்கள்.

மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையே நடக்கும் இடைவிடாத முரண்பாடின் வெளிப்பாடுதான் வேலை நேரத்துக்கான போராட்டம் என கூறிய மார்க்ஸ் வேலை நேரத்தின் அரசியல் பொருளாதார கூறுகளை தனது மகத்தான படைப்பான மூலதனத்தில் விரிவாக விளக்குகிறார். பின்னர் முதல் அகிலம் என அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பை மார்க்ஸ் நிறுவிய பின்னர் அதன் மிக முக்கிய கோரிக்கையாக 8 மணி நேர வேலை என்பது வலுவாக தொழிலாளர்களை கவ்வி பிடித்தது.

“8 மணி நேரம் உழைப்பு/ 8 மணி நேரம் ஓய்வு/ 8 மணி நேரம் உறக்கம்” எனும் முழக்கம் உலகமெங்கும் வலுப்பெற்றது. இதன் உச்சமாகவே சிகாகோவின் ஹே மார்க்கெட் கிளர்ச்சியும் அதன் விளைவாக மேதினம் எனும் மகத்தான கருத்தாக்கமும் உருவானது. நியூசிலாந்து/ ஆஸ்திரேலியா போன்ற தேசங்களில் சில பகுதிகளில் 8 மணி நேரம் வேலை அறிவிக்கப்பட்டாலும் அதனை உலகம் முழுவதும் அதிகாரபூர்வ சட்டமாக அறிமுகம் செய்தது லெனின் தலைமையிலான சோவியத் ரஷ்யா என்ற முதல் சோசலிச அரசுதான்!

இந்தியாவிலும் இயற்கையிலேயே இந்த கோரிக்கை வலுவாக பிரதிபலித்தது. 1908ம் ஆண்டே அதாவது இந்தியாவின் தாய் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. உருவாவதற்கு முன்பே 8 மணி நேரத்துக்காக தொழிலாளர்கள் குரல் கொடுத்தனர். 1923ம் ஆண்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடியதன் மூலம் 8 மணி நேர கோரிக்கையை வலுவாக முன்னெடுத்தார். 1925ம் ஆண்டு வட மேற்கு ரயில்வே தொழிலாளர்கள் ஒரு வலுவான வேலை நிறுத்தம் செய்த பொழுது இந்த கோரிக்கையும் முதன்மை இடத்தில் இருந்தது. இந்த வேலை நிறுத்தத்தின் பொழுது 8,000 பேரை பிரிட்டஷ் நிர்வாகம் வேலை நீக்கம் செய்தது.

1930ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சியின் “செயல் மேடைக்கான வரைவறிக்கையில்” வேலை நேரம் குறித்து கீழ்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

  •  8 மணி நேர வேலை அமலாக்கப்பட வேண்டும்.
  • சுரங்கம் போன்ற ஆபத்து நிறைந்த தொழில்களில் வேலை 6 மணி நேரமாக இருக்க வேண்டும்.
  • அவர்களுக்கு பாலும் வெண்ணெயும் இலவசமாக தர வேண்டும்.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு வேலை நேரம் 6 மணியாக இருக்க வேண்டும்.
  • பிரசவத்துக்கு முன்பும் பின்பும் தலா இரு மாதங்கள் விடுமுறை தரப்பட வேண்டும்.
  • 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை வேலைக்கு அமர்த்த கூடாது. அவர்களின் கல்விக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • உழைப்பாளிகளின் வாழ்வியல் சூழல் தீவிரமாக மேம்படுத்த வேண்டும்.
  • ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும்
  • வேலையில்லாதவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க வேண்டும்.

1946ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வைஸ்ராய் கமிட்டியில் தொழிலாளர் தரப்பு உருப்பினராக இருந்த பொழுது 8 மணி நேர பணிக்காக அரசு சட்டத்தில் திருத்தம் முன் மொழிந்தார். தொழிலாளர்களின் போராட்டங்கள்/ கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை/ அம்பேத்கரின் திருத்தம் ஆகியவை ஒன்றிணைந்து 8 மணி நேரம் பணி என்பது அதிகாரபூர்வ சட்டமாக உருவானது. இந்த நீண்ட போராட்டங்களின் பயனாக உருவான இந்த உரிமையைதான் அகற்ற வேண்டும் என சுப்பிரமணியன்களும் நாரயண மூர்த்திகளும் சொல்ல அரம்பித்துள்ளனர்.

கரடியே காரித்துப்பிய தருணம்

L&T சேர்மன் திரு. சுப்பிரமணியன் அவரது நிறுவனத்தின் ஆவணங்கள் படியே கடந்த ஆண்டு ரூ 51 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். அதாவது ஒரு நாளைக்கு ரூ 14 லட்சம் ஊதியம் பெறுகிறார். இவரது நிறுவனத்தில் ஊழியர்கள் பெறும் சராசரி ஆண்டு ஊதியம் ரூ 9 லட்சம். ஒரு நாளைக்கு 2465. அவரது நிறுவனத்தில் உள்ள சராசரி ஊதியத்தைவிட சுமார் 560 மடங்கு அதிகமாக ஊதியம் பெறும் சுப்பிரமணியன் வாரத்துக்கு 90 மணி நேரம் என முன்வைக்கிறார். இதைவிட அபத்தம் ஏதாவது இருக்க இயலுமா?

ஞாயிற்று கிழமை எவ்வளவு நேரம்தான் உங்கள் மனைவியின் முகத்தையே பார்த்து கொண்டிருப்பீர்கள்? எனவே ஞாயிறும் பணிக்கு வாருங்கள் என கூறுகிறார்.இது கடைந்தெடுத்த நிலபிரபுத்துவ பார்வை. இல்லத்தரசிகள் வீடுகளில் செய்யும் பணி ஊதியமற்ற உழைப்பாக உள்ளது என்பது இன்று பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இல்லத்தரசிகளின் ஊதியமற்ற பணி என்பது நியாயம் எனவும் அது இந்திய மண்ணின் பண்பாடு எனவும் கூறுவது பிற்போக்குத்தன்மான ஒன்று. பெண்ணடிமைத்தனத்தை பறைசாற்றும் கூற்று. இது பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் சுப்பிரமணியம் திருவாய் மலர்ந்துள்ளார். மேலும் இல்லத்தரசியின் முகத்தை உற்று நோக்குவது பற்றி அவரது கூற்று இன்னும் மோசமானது. கீழ்த்தரமானது. இதற்கு இன்னொரு கார்ப்பரேட் முதலாளியான ஆனந்த் மகிந்திரா கீழ்கண்டவாறு எதிர்வினையாற்றியுள்ளார்:

“எனது மனைவி அற்புதமானவர்; அவர் முகத்தை பார்த்து கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். எத்தனை நேரம் பணியாற்றுகிறோம் என்பதைவிட வேலையின் தரத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். 70 மணி நேரமா;90 மணி நேரமா என்பது முக்கியமல்ல”. இதுதான் கரடியே காரித்துப்பிய தருணம் என்பது.

டென்மார்க் இஞ்சினியர்கள் ஹென்னிங் லார்சன் என்பவரும் சொரேன் டூப்ரோ என்பவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம்தான் L&T என்பது. 1938ம் ஆண்டு மும்பையில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த இஞ்சினியர்களின் தேசமான டென்மார்க் பணி மற்றும் வாழ்க்கை சமன்பாட்டில் உலகில் 3வது இடத்திலும் தனி நபர் ஜி.டி.பி. சராசரியில் 9வது இடத்திலும் உள்ளது. டென்மார்க்கின் தனி நபர் ஜி.டி.பி. சராசரி 68,000 அமெரிக்க டாலர். இந்தியாவின் தனி நபர் ஜி.டி.பி. 2485 டாலர். டென்மார்க்கில் பணி நேரம் என்பது வாரத்திற்கு 34 மணி நேரம்தான். இவையெல்லாம் திரு சுப்பிரமணியனின் கவனத்தில் இருந்ததா என்பது தெரியவில்லை.

ஆனந்த் மகிந்திரா மட்டுமல்லாது ஹர்ஷ் கோயங்கா/ அனுபம் மிட்டல்/ சைரஸ் பூனம்வாலா ஆகிய கார்ப்பரேட் உயர் அதிகாரிகளும் சுப்ரமணியத்தின் கூற்றை விமர்சித்துள்ளனர். இந்தி திரைப்பட கலைஞர் தீபிகா படுகோன் “ஒரு சிறந்த நிறுவனத்தின் மிக உயர் அதிகாரி இப்படி பேசியிருப்பது அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த விமர்சனங்களுக்கு பின்னரும் இவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.

தான் ஒரு சீன தொழிலாளியிடம் பேசியதாகவும் அவர் தாங்கள் நீண்ட நேரம் உழைப்பதால்தான் அமெரிக்காவுடன் போட்டியிட முடிகிறது என கூறியதாகவும் அதனால் தான் கூறியது சரியே எனவும் நியாயப்படுத்தினார். பின்னர் அவரது நிறுவனம் சுப்பிரமணியன் கூறியது நமது தேசத்தின் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்டது என அறிக்கை விட்டது. தமது லாபக்கொள்ளையை நியாயப்படுத்த தேசத்தின் நன்மை பற்றி பேசுவது பெரு முதலாளிகளின் வாடிக்கை. உண்மையில் திரு. சுப்பிரமணியன் தனது நிறுவனத்தின் நற்பெயரை மிகவும் பாதித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். L&T நிர்வாகம் உண்மையிலேயே இவரது கூற்றையும் அதன் தாக்கத்தையும் ஆய்வு செய்தால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அது நடக்காது. ஏனெனில் இவருக்கு முன்பு சேர்மனாக இருந்த திரு. நாயக் என்பவரும் நாரயண மூர்த்தியின் 70 மணி நேரம் பணி என்பதை ஆதரித்தவர். ஆனால் இவர்களின் கனவை நிறைவேற்ற இந்திய உழைப்பாளி மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

செய்யும் தொழில் தெய்வம்; ஆனால் பிரசாதம் குறைவு

இந்தியாவில் எந்த அளவுக்கு பணி சுமை உள்ளது என்பதை கீழ்கண்ட சில விவரங்களிலிருந்து அறியலாம்:

  1. பணி சுமை காரணமாக 2022ம் ஆண்டு 11,486 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என தேசிய குற்ற பதிவேடு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
  2. தொழிலாளர்களின் ஊதிய விகிதம் 1990-91ல் 28% ஆக இருந்தது 2022-23ல் 16% ஆக சரிந்துவிட்டது.
    அதே சமயத்தில் கார்ப்பரேட்டுகளின் லாப விகிதம் 19%லிருந்து 52%ஆக உயர்ந்துள்ளது.
  3. செய்யும் தொழிலே தெய்வம் என்பது இந்திய பண்பாடு கூற்றுகளில் ஒன்று. எந்த தொழிலும் இழிவாக பார்க்கப்படக்கூடாது என்பதே இந்த கூற்றின் நோக்கம். ஆனால் கார்ப்பரேட்டுகள் இதனை எப்படி மாற்றிவிட்டனர்?

சராசரியாக ஒரு பொறியல் பட்டதாரி வேலைக்கு அமர்த்தப்பட்டால், குறிப்பாக மென் பொருள் நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ3.5 லட்சம் ஊதியம் பெறுகிறார். ஆனால் இவரின் பணி நேரம் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம். உணவு டெலிவரி செய்யும் ஒரு ஊழியரின் மாத சம்பளம் ரூ 10,000. மழையானாலும் வெயிலாக இருந்தாலும் உயர் மத்திய வர்க்கத்தினருக்கு அவர்கள் 10 நிமிடத்தில் டயட் கோக் அல்லது பீசா அல்லது KFCன் கோழிக்கறியை டெலிவரி செய்தாக வேண்டும்.
இவர்களுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் கூட பொருந்தாது. ஏனெனில் இவர்கள் “நிறுவனத்தின் பங்குதாரர்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். பல மென்பொருள் நிறுவனங்கள் தமது கீழ்மட்ட ஊழியர்களுக்கு “எக்ஸிகிடியூவ்” என பதவி கொடுத்து அவர்களுக்கு ஓவர் டைம் ஊதியமோ அல்லது தொழிலாளர் நல சட்டங்களோ அமலாகாமல் பார்த்து கொள்கின்றனர்.

  1. இவர்கள் எப்படி 70 அல்லது 90 மணி நேர பணி என்பதை பார்ப்பார்கள்?
  2. ஏன் இவர்களுக்கு கோபம் வராமல் போகும்?
  3. வேலை நேரம் அதிகரிக்க வேண்டும் என சொல்லும் கனவான்கள் இந்தியாவின் அதீத பொருளாதார அசமத்துவத்தை அறிவார்களா?
  4. அதன் பொருள் என்ன என்பதை உணர்ந்துள்ளனரா?

செய்யும் தொழிலே தெய்வம் எனும் இந்த மண்ணில்தான் அதற்கான பிரசாதமும் குறைவாக தரப்படுகிறது.
உலகிலேயே மிக அசமத்துவ தேசமாக இன்று இந்தியா உள்ளது. பொருளாதார அசமத்துவத்துடன் வர்ண அல்லது சாதிய அசமத்துவமும் பின்னி பிணைந்துள்ளது. வேலை நேரம் அதிகரிக்க வேண்டும் என சொல்லிய இந்த கனவான்களில் ஒருவர் இட ஒதுக்கீடுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இத்தகைய கனவான்கள் எவரும் எப்பொழுதும் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக அல்லது மதவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்ததாக உதாரணம் இல்லை. ஒரே முறை இப்படி குரல் எழுப்பிய டாட்டா குழுமம் பின்னர் பின்வாங்கியது. பஜாஜ் குழுமம் மட்டும்தான் அதில் உறுதியாக நிற்கிறது. அதற்காக அவர்கள் அனுபவிக்கும் பாரபட்சம் அதிகம். எனினும் இவையெல்லாம் விதிவிலக்குகளே!

“கரோஷி” பாதிப்புகள்

ஜப்பானில் “கரோஷி” என ஒரு சொல் உண்டு. இதற்கு “பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மரணம்” என பொருள். 1969ம் ஆண்டு முதல் கரோஷி மரணம் நிகழ்ந்தது. 2000ம் ஆண்டில் சுமார் 25% தொழிலாளர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் பணியாற்றிக்கொண்டிருந்தனர். எனவே கரோஷி மரணங்கள் அதிகரித்தன. பெரும்பாலும் மாரடைப்பு அல்லது பாரிச வாயுவால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உளவியல் ரீதியாக உதவிட “கரோஷி ஹாட் லைன்” எனும் தனி தொலைபேசிகள் உருவாக்கப்பட்டன.

எனினும் ஜப்பானின் உற்பத்தி திறன் ஏனைய ஜி-7 நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது அதிகரிக்கவில்லை. ஜப்பானின் முன்னேற்றத்துக்கு பின்னால் உள்ள சோகமான சூழல் இது. ஜப்பானின் பொருளாதார முன்னேற்றம் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பாலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ராணுவ செலவு மிகக்குறைவாக இருந்ததாலும் ஏற்பட்டதாகும். ஆனால் இது கரோஷி மரணங்களை விளைவித்தது என்பது நாணயத்தின் இன்னொரு பக்கம்.
இந்த பிரச்சனையை தீர்க்க ஜப்பான் அரசாங்கம் “பிரிமீயம் வெள்ளி” எனும் திட்டத்தை அறிவித்தது. இதன் படி மாத கடைசி வெள்ளியன்று நிறுவனங்கள் தமது ஊழியர்களை மாலை 3 மணிக்கே வீட்டுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இதனை சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அமலாக்கின. சில அமலாக்கவில்லை. ஜப்பானிலேயே இதுதான் நிலை!

இந்த பிரச்சனை ஜப்பானில் மட்டுமல்ல; உதாரணத்துக்கு மனித வாழ்வில் முன்னேற்றம் கண்ட ஸ்காண்டினேவிய தேசமான சுவீடனில் கூட பணி சுமை காரணமாக ஒரு ஆண்டுக்கு 770 தின ஊதிய தொழிலாளர்கள் மரணம் அடைகின்றனர். பணி சுமை மற்றும் பணி தொடர்பான விபத்துகளில் ஒரு ஆண்டுக்கு சுமார் 2 கோடி பேர் உயிரிழக்கின்றனர் என 2021ம் ஆண்டு ஐ.நா.சபை அறிக்கை கூறுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆய்வுகளும் இதனை உறுதிபடுத்துகின்றன.

வேலை நேரமும் உற்பத்தி திறனும்

ஏற்கெனவே பா.ஜ.க. ஆளும் உ.பி/ம.பி/ குஜராத் ஆகிய மாநிலங்களில் 12 மணி நேரம் வேலை நேரமாக கை கொள்ளலாம் எனும் அனுமதியை முதலாளிகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கர்நாடகமும் தமிழ்நாடும் இந்த பட்டியலில் இணைந்தன. ஆனால் தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக தமிழ்நாடு பின் வாங்கியது. எனினும் நாரயண மூர்த்திகளும், சுப்பிரமணியன்களும் வேலை நேரம் அதிகரிப்பதன் மூலம்தான் உற்பத்தி திறனை அதிகரிக்க இயலும் என கூருகின்றனர்.

எந்த அறிவியல் ஆய்வும் இதனை நிரூபிக்கவில்லை. உண்மையில் ஓய்வே இல்லாமல் வேலை நேரம் அதிகரிப்பு என்பது உற்பத்தி திறனை பாதித்துள்ளது என்பதே உண்மை. முதல் உலகப்போரின் பொழுது சில தேசங்கள் ஆயுத தயாரிப்புக்காக வேலை நேரத்தை அதிகரித்தன. ஆனால் அது உற்பத்தி திறனில் உயர்வை ஏற்படுத்தவில்லை. அதே சமயம் போர்டு நிறுவனம் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைத்து ஊதியத்தை அதிகரித்தது. இதன் மூலம் உற்பத்தி திறன் உயர்ந்தது. இது அறிவியல் ஆய்வு படி நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் உலகில் 7வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வேலை நேரம் குறைவாக இருப்பது காரணம் அல்ல. வறுமை/ அசமத்துவம்/ வாங்கும் சக்தி இல்லாமை/ பொது முதலீடு வீழ்ச்சி இவையே காரணங்கள் ஆகும். எனவே நாராயண மூர்த்திகளும் சுப்பிரமணியன்களும் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகின்றனர். தாங்கள் பில்லியனர்களாகவும் மில்லியனர்களாகவும் இருந்து கொண்டு கீழ்மட்ட உழைப்பாளிகளை இழிவு படுத்துகின்றனர். இன்றைய தேவை வேலை நேரம் அதிகரிப்பு அல்ல; மாறாக உலக தொழிற்சங்க சம்மேளனம் வற்புறுத்துவது போல 7 மணி நேர தினசரி பணி/ வாரத்துக்கு 5 நாட்கள் வேலை என்பதே ஆகும்.

கட்டுரையாளர், அன்வர் உசேன்.

Leave a Reply