காலநிலை நெருக்கடியும் தொழிலாளர் வர்க்கமும்: ஓர் அறிமுகப் பார்வை – அ. சங்கர் பிரகாஷ்

காலநிலை நெருக்கடி உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக பாதிக்கிறது, ஏனெனில் இவர்கள் விவசாயம், முறைப்படுத்தப்பட்ட அல்லது முறைசாரா தொழில் மற்றும் பலதரப்பட்ட நிலையற்ற வேலைகளை முதன்மையாக நம்பியிருக்கின்றனர்.

2024 ஆம் ஆண்டு புவியின் மிக வெப்பமான ஆண்டாக பதிவாகியது, இதில் புவி வெப்பநிலை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலையை விட 1.55°C அதிகரித்தது. இந்தியாவில், பருவமழைப் பொழிவின் மாறுதல், வறட்சி மற்றும் வெப்ப அலைகள் விவசாயம் மற்றும் இதர தொழில்களையும், அது சார்ந்து இருக்கும் தொழிலார்களையும் பாதித்துக் கொண்டிடுக்கின்றன.

இக்கட்டுரை, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கான  வழி பசுமை முதலாளித்துவமா அல்லது சுற்றுச்சூழல் சார்ந்த பொதுவுடைமை கோட்பாடா என்பதைப் பற்றி ஆராய்கிறது.

தொழிலாளர்கள் மீதான தாக்கம்

காலநிலை மாற்றத்தால் உருவாகும் நிலையற்ற பருவமழை, வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவை விவசாய உற்பத்தியை கடுமையாக பாதிக்கின்றன. 65% மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் இந்தியாவில், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையோர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

கடந்த பத்தாண்டுகளில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ச்சியான வறட்சிகளை எதிர்கொண்டு வருகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் இழப்பும், அதனால் ஏற்படும் கடன் சுமையும், விவசாயிகள் தற்கொலைக்கு காரணமாக அமைகின்றன. மேலும், நிலங்களை இழந்த விவசாயிகள் கூலித் தொழிலாளர்களாக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலையும் ஏற்படுகிறது, இது சமூக கட்டமைப்பையும் பாதிக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த வேலைத் திறனில் சுமார் 92% தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் பணிபுரிகின்றனர். கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், சாலையோர வியாபாரிகள் போன்றோர் போதிய நிழல், உடலை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் சூழல் அல்லது ஓய்வு நேரம் இன்றி, நீண்ட நேரம் வெயிலில் உழைக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலோர் தினமும் 8-10 மணி நேரம் நேரடி சூரிய வெப்பத்தை எதிர்கொண்டு பணியாற்றுகின்றனர். இதன் விளைவாக, இத்தொழிலாளர்கள் பல உடல்நலப் பாதிப்புகளை சந்திக்கின்றனர். நீரிழப்பு, வெப்பச் சோர்வு, அயர்ச்சி ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன. கடுமையான சூழல்களில், பிற உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

ஓர் ஆய்வின்படி, வெப்ப அலை காலங்களில் முறைசாரா தொழிலாளர்கள் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுப்பது மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக தங்கள் மாத வருமானத்தில் 40% வரை செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய வருமான இழப்பை ஈடு செய்ய எந்த முன்னெடுப்பும் அரசிடம் இருப்பதாக தெரியவில்லை. இது தற்காலத்தின் முக்கிய சமூகநீதி பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பாலின அடிப்படையில் வேறுபாடும் பாதிப்புகள்  

காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள் பாலின அடிப்படையில் வேறுபடுகின்றன. பெண் தொழிலாளர்கள், குறிப்பாக கிராமப்புற பெண்கள், காலநிலை நெருக்கடியால் கூடுதல் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டில், கிராமப்புற பெண்கள் குடிநீர் சேகரிப்பு, விறகு சேகரிப்பு மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர். காலநிலை மாற்றத்தால் நீர்நிலைகள் வற்றுவதால், நீர் சேகரிக்க அதிக நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இதனால் பெண்களின் வேலைப்பளு அதிகரித்துள்ளதோடு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை சேவைகளை அணுகுவதும் கடினமாகியுள்ளது.

மேலும், வீட்டுப் பணியாளர்களாக, சிறு வணிகர்களாக, விவசாய கூலித் தொழிலாளர்களாக பணிபுரியும் பெண்கள், காலநிலை பேரிடர்களின் போது வேலை மற்றும் வருமான இழப்பை அதிகம் சந்திக்கின்றனர். புயல்கள், வெள்ளங்களுக்குப் பின் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அந்த வகையில் காலநிலை மாற்றம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவது நிதர்சனம்.

பசுமை முதலாளித்துவம்: சந்தை அடிப்படையிலான கானல் நீர்

பசுமை முதலாளித்துவம், தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தை சந்தை அடிப்படையிலான தீர்வுகள் மூலம் கையாள முடியும் என வாதிடுகிறது. கார்பன் வரி, பசுமை பத்திரங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் இதில் முக்கியமானவையாக முன்னிறுத்தப்படுகின்றன.

இந்தியா 2030-க்குள் 500 ஜிகாவாட் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளது. தமிழ்நாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இதில் 22.16 ஜிகாவாட்டுக்கு மேல் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள், குறிப்பாக அதானி பசுமை ஆற்றல் போன்றவை, பெரும் பங்கு வகிக்கின்றன. இத்தகைய முயற்சிகள் முதல் பார்வையில் நம்பிக்கை அளிப்பவையாக தோன்றினாலும், பசுமை முதலாளித்துவத்தின் குறைபாடுகள் பல உள்ளன.

பசுமை முதலாளித்துவம் லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கிறது. இதனால் சமூக சமத்துவமின்மை மேலும் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில், சூரிய மற்றும் காற்றாலை திட்டங்களுக்காக விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர். இதற்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டங்கள், இத்தகைய திட்டங்களின் சமூக தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

மேலும், பசுமை தொழில்நுட்பங்களுக்கு தேவையான லித்தியம் மற்றும் கோபால்ட் சுரங்கங்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில், 10% பேர், 77% செல்வத்தை வைத்திருக்கும் நிலையில், பசுமை முதலாளித்துவம் பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது, தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை பெரும்பாலும் புறக்கணிக்கிறது. மேலும், பசுமை முதலாளித்துவம் காலநிலை நெருக்கடியின் மூல காரணங்களை அடிப்படையில் தீர்க்கவில்லை.

உதாரணத்திற்கு, ஆற்றல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் புதைப்படிம எரிபொருள் பயன்பாட்டை ஒரு புறம் பல்வேறு நாடுகள் ஊக்குவித்தே வருகின்றன. இதனால், காலநிலை நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு கிடைப்பது சந்தேகமே!

சுற்றுச்சூழல் சார்ந்த பொதுவுடைமை கோட்பாடு: தொழிலாளர்களை மையமாகக் கொண்ட மாற்று

இது முதலாளித்துவத்தின் அடிப்படைகளை நிராகரித்து, பொது உரிமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் மூலம் மனித தேவைகளையும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் முன்னிறுத்துகிறது. இது, வரம்பற்ற வளர்ச்சி என்ற முதலாளித்துவ கருத்தை எதிர்த்து, சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பை கட்டமைக்க முன்மொழிகிறது. 2019இல் நிகழ்ந்த உலகளாவிய காலநிலை வேலைநிறுத்தங்களில், இந்தியாவிலிருந்தும் பல மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து, காலநிலை நெருக்கடிக்கு எதிராக மாற்று அமைப்பை கோரினர்.

தமிழ்நாட்டில், சாகர்மாலா திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நடத்திய போராட்டங்கள், சுற்றுச்சூழல் சார்ந்த பொதுவுடைமை கோட்பாட்டை ஆதரிக்கும் மனநிலையை வெளிப்படுத்துகின்றன. இதற்கு அடிப்படை, இயற்கை வளமென்பது பணம் படைத்த பெருமுதலாளிகளுக்கானது மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானது என்பதே!

சுற்றுச்சூழல் சார்ந்த பொதுவுடைமை கோட்பாடு, காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளவும், தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாக்கவும் ஒரு நம்பிக்கைக்குரிய மாற்று வழியை முன்வைக்கிறது. பசுமை முதலாளித்துவம் தற்காலிக தீர்வுகளை மட்டுமே வழங்கி, சிக்கலின் ஆணிவேரை அகற்றத் தவறுகிறது; ஆனால், சுற்றுச்சூழல் சார்ந்த பொதுவுடைமை, பொது உரிமை மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு, அடிப்படை அமைப்பு மாற்றத்தை முன்மொழிகிறது. இருப்பினும், இந்தப் பயணம் சவால்கள் நிறைந்தது; முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கமும், பரந்த ஆதரவைத் திரட்டுவதிலுள்ள தடைகளும் முக்கிய தடைகளாக உள்ளன. எனினும், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இடையேயான தோழமைகளை மேலும் வலுப்படுத்தி செயல்படும்பட்சத்தில் அனைவருக்குமான நிலையான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இறுதியாக, காலநிலை நீதி என்பது சமூக நீதியுடன் பிரிக்க முடியாத தொடர்பு கொண்டது; இதில் தொழிலாளர்கள் முன்னணியில் நின்று, பசுமையான பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை வழிநடத்த வேண்டும்.

 

கட்டுரையாளர் அ. சங்கர் பிரகாஷ், வளம் காப்பு குற்றவியல் ஆராய்ச்சியாளர்.

Leave a Reply