பகுதி -3
8. உழைப்பாளர்களின் பெரும் எண்ணிக்கை – உபரி–மதிப்பின் பெரும் திரள்
ஒரு நூற்பாலையில் 500 தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களது உழைப்புச் சக்தியின் மதிப்பு அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அவர்கள் மேலே சொன்னபடி 8 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அப்படியானால், இந்த 500 தொழிலாளர்களுக்கு முதலாளி கொடுக்க வேண்டிய ஊதியத்தின் மொத்த அளவு ரூ 6 இலட்சம். அவர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது கூடுதலாக செலுத்திய உழைப்பு மொத்தம் 2,000 மணி நேரம், அது சேர்த்த புதிய மதிப்பு ரூ 6 இலட்சம். ஒரு நாளில் உற்பத்தியாகும் 10 டன் நூலில் ரூ 6 இலட்சம் உபரி-மதிப்பும் அடங்கியுள்ளது. முதலாளி அதனை சந்தையில் விற்று அதன் மொத்த மதிப்பைப் பணமாகப் பெறும்போது பஞ்சின் விலையையும் கதிர்களின் விலையையும் கூலியாகக் கொடுத்தத் தொகையையும் திரும்பப் பெறுகிறார். கூடவே, ரூ 6 இலட்சம் உபரி-மதிப்பாகப் பெறுகிறார்.
இப்போது அவர்கள் வாங்கிய மற்ற உற்பத்திப் பொருட்கள் எதுவும் புதிய மதிப்பைச் சேர்க்க முடியாது. அவற்றை உற்பத்தி செய்ய கடந்த காலத்தில் எவ்வளவு உழைப்பு செலவிடப்பட்டதோ அதுதான் அவற்றின் மதிப்பாக உள்ளது. அந்த மதிப்பு அவற்றைப் பயன்படுத்தும் உற்பத்திப் பொருளில் போய்ச் சேருகிறது.
தொழிலாளர்கள்தான் உழைப்பின் மூலம் புதிய மதிப்பைச் சேர்க்கிறார்கள். தங்களது உழைப்புச் சக்தியின் மதிப்புக்குச் (கூலியாகப் பண வடிவில் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது) சமமான மதிப்பை தாம் வேலை செய்யும் கச்சாப்பொருளில் சேர்த்து உற்பத்திப் பொருளாக மாற்றுகிறார்கள். அத்தோடு நின்று விடுவதில்லை, இன்னும் அதிக நேரம் வேலை செய்து கூடுதல் உழைப்பைச் செலுத்துகிறார்கள், அது உற்பத்திப் பொருளில் புதிய மதிப்பாக சேருகிறது. இந்த மதிப்பு தொழிலாளிக்குச் சொந்தமில்லை, அவரது உழைக்கும் ஆற்றலையும் உற்பத்திக்கான பிற பொருட்களையும் பணம் கொடுத்து வாங்கிய முதலாளிக்குத்தான் அது சொந்தம்.
இவ்வாறு பொருளை உற்பத்தி செய்த முதலாளி தனது உற்பத்திப் பொருளை சந்தையில் விற்று அதன் மதிப்புக்குச் சமமான பணத்தைப் பெறுகிறார். அது உற்பத்தியில் பயன்பட்ட பொருட்களின் மதிப்புக்கும் தொழிலாளர்கள் சேர்த்த புதிய மதிப்புக்கும் சமமாக இருக்க வேண்டும். சந்தையில் அவர் வாங்கிய பொருட்களுக்காக செலவிட்ட பணத்தொகை இவ்வாறு அவருக்குத் திரும்பக் கிடைத்து விடுகிறது. தொழிலாளர்களுக்கு ஊதியமாகக் கொடுத்த தொகையும் கிடைத்து விடுகிறது, அதோடு கூடவே தொழிலாளர்கள் சேர்த்த உபரி-மதிப்பும் அவரது கையில் பணமாக மாறிவிடுகிறது. இது அவரது இலாபமாக மாறுகிறது.
உற்பத்திப் பொருட்களையும் உழைப்புச் சக்தியையும் மீண்டும் சந்தையில் வாங்கி மீண்டும் உற்பத்தியில் ஈடுபடுகிறார். தொழிலாளர்களும் தங்களது உழைப்புச் சக்தியை விற்றுக் கிடைத்த பணத்தைக் கொண்டு தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டே மீண்டும் மீண்டும் வேலைக்கு வருகிறார்கள். முதலாளிகள் சந்தையில் வாங்கும் பொருட்களும் பிற முதலாளிகள் உற்பத்தி செய்த பொருட்களாக இருக்கின்றன. அவற்றையும் பிறமுதலாளிகள் உற்பத்திக்கான பொருட்களையும் உழைப்பு ஆற்றலையும் பயன்படுத்தி உற்பத்தி செய்திருக்கிறார்கள். அதனை விற்று அவர்கள் இலாபம் ஈட்டுகிறார்கள்.
இந்த ஆலை ஆண்டுக்கு 300 நாட்கள் இயங்கினால், மொத்தம் 3000 டன் நூலை உற்பத்தி செய்திருக்கும். அதில் அடங்கிய ரூ 18 கோடி உபரி-மதிப்பைச் சந்தையில் நூலை விற்பதன் மூலம் பணமாக மாற்றியிருக்கும். இயந்திரங்களுக்கும் பஞ்சுக்கும் கட்டிடத்துக்கும் கூலிக்கும் பணத்தை முன்னீடு செய்ததன் மூலம் முதலாளி ஆண்டுக்கு ரூ 18 கோடி இலாபம் ஈட்ட முடிந்திருக்கும்.
(நடைமுறையில் இந்த உபரி-மதிப்பின் பகுதிகள் முதலாளிகளுக்கு இடையிலான போட்டியால் பிற முதலாளிகளால் அல்லது வணிகர்களால் அல்லது வங்கிகளால் அல்லது வரியாக அல்லது வாடகையாக பல்வேறு தரப்பினரால் பறித்துக் கொள்ளப்படலாம். ஆனால், அவை அனைத்தும் இந்த 18 கோடி இலாபத்தில் இருந்துதான் வருகின்றன என்பது தெளிவு.)
அம்பானி போன்ற முதலாளிகள் ஒரு துறையில் (எடுத்துக்காட்டு நூல் உற்பத்தி) தொழிலைத் தொடங்கி அதில் ஈட்டும் இலாபத்தையும் பிற வழியில் திரட்டும் பணத்தையும் பயன்படுத்தி பிற துறைகளிலும் தமது மூலதன உற்பத்தியை விரிவாக்கிக் கொள்கிறார்கள். ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் சில்லறை விற்பனை, ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் என பல துறைகளில் கூலி உழைப்பைச் சுரண்டி தமது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டே செல்கிறார்கள். நேரடியாக கூலி உழைப்பைச் சுரண்டுவதில் ஈடுபடுத்துவதோடு கூடவே உற்பத்தி நிகழாத பிற துறைகளில் (ஐ.பி.எல் கிரிக்கெட், ஊடகங்கள்) முதலீடு செய்வதன் மூலம் சந்தையில் அதிக உபரி-மதிப்பை இலாபமாக மாற்ற வழி செய்து கொள்கிறார்கள்.
இந்த இலாபத்தை மீண்டும் முதலீடு செய்து மூலதனமாக மாற்றும் போது, இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் புகுத்துகிறார்கள். உழைப்பின் உற்பத்தித் திறனை உயர்த்துகிறார்கள். எனவே, உழைப்புக்கான தேவை குறைந்து செல்கிறது.
9. உற்பத்தி தொடர்பாக தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான போராட்டம்
முதலாளி வர்க்கத்தினர் முடிந்தவரை உபரி-உற்பத்தியையும் உபரி-மதிப்பையும் அதிகரிக்க முயல்கிறார்கள். வேலை நாளின் நீளத்தை அவசிய வேலை நேரத்துக்கு அப்பால் நீட்டிக்க முயல்கிறார்கள்.
உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் அவசிய வேலை நேரத்தைக் குறைக்க முயல்கிறார்கள். அதாவது, உற்பத்தித் திறன் அதிகரிக்கும் போது தொழிலாளர்களின் நுகர்வுப் பொருட்களின் மதிப்பு குறைகிறது. அதாவது, அவற்றை முன்பை விட குறைந்த அளவு உழைப்பின் மூலமே உற்பத்தி செய்ய முடிகிறது. எனவே, உழைப்புச் சக்தியின் மதிப்பும் அதை ஈடுகட்ட தொழிலாளர்கள் உழைக்க வேண்டிய அவசிய உழைப்பு நேரமும் குறைகிறது. உபரி-உழைப்பு நேரம் அதிகரிக்கிறது.
தொழிலாளிகள் முடிந்தவரை வேலை நாளின் நீளத்தைக் குறைக்க முயல்கிறார்கள். தமது உழைப்புச் சக்தியின் மதிப்பைப் பெறுவதற்குப் போராடுகிறார்கள். உற்பத்தித் திறன் அதிகரிப்பால் கிடைக்கும் பலன்களைப் பெற்று தமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் போராடுகிறார்கள். அதாவது, உழைப்புச் சக்தியின் மதிப்பை உயர்த்த முயல்கிறார்கள். இன்னும் குறிப்பாக, தொழிலாளி வர்க்கம் தமது வேலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவே போராட வேண்டியிருக்கிறது.
இந்த முரண்பாடுகளின் ஊடாக முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ந்து செல்கிறது, அம்பானி போன்ற முதலாளிகளின் கையில் செல்வம் (மூலதனம்) குவிகிறது. உற்பத்தியில் ஈடுபடுத்தும் இலாபம் போக அதில் ஒரு சிறு பகுதியை சொந்த நுகர்வுக்குப் பயன்படுத்தினாலும் அவர்கள் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது. முகேஷ் அம்பானியைப் போல பல நூறு கோடிகள் செலவழித்து ஆடம்பர திருமண விழாக்களை நடத்த முடிகிறது. பல நூறு கோடி ரூபாய்களைச் செலவழித்து வீடு கட்டிக் கொள்ள முடிகிறது.
மறுபுறம், தொழிலாளர்களின் நிலைமையோ மேலும் மேலும் இக்கட்டுக்குள்ளாகிறது. தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடுவதற்கான தேவை அதிகரிக்கிறது.
இவ்வாறு முதலாளிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையிலான இழுபறியினாலும் பல்வேறு முதலாளிகளுக்கு இடையிலான போட்டியினாலும் முதலாளித்துவப் பொருளாதாரம், உற்பத்திச் சக்திகளை மாபெரும் அளவில் வளர்த்து விடுகிறது. உழைப்பின் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கான அறிவியல் தொழில்நுட்பத்தையும் இயந்திரங்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது. அதே நேரம், அவற்றின் வளர்ச்சிக்குத் தானே வரம்பாக அமைகிறது. எனவே, நெருக்கடிகளில் வீழ்கிறது.
தொழிலாளர்களின் வர்க்க நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வி வழங்கி தலைமை வகிக்கிறது. அதற்காக உழைப்பதற்கு தோழர் நல்லகண்ணு போன்ற ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் முன்வருகிறார்கள்.
முதலாளித்துவத்தின் வரம்புகளை உடைத்து உழைப்பின் உற்பத்தித் திறனையும் உழைப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட சோசலிச உற்பத்தி முறைக்கு மாறிச் செல்வதற்கான நிலைமைகளை முதலாளித்துவமே படைக்கிறது. அதற்கான அரசியல் போராட்டத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைமை வகிக்கிறது.
இதுதான் உபரி-மதிப்பு பற்றிய அல்லது முதலாளித்துவ இலாபம் பற்றிய மார்க்சியக் கோட்பாட்டின் சுருக்கம்.
தோழர் சிவக்குமார் மூலதன வாசிப்பு குழு