சர்வதேச நாணய நிதியத்தில் ஆதிக்கம் செலுத்தும் வளர்ந்த நாடுகள்

சர்வதேச நாணய நிதியத்தில் (IMF) வடக்குலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு நபரும் தெற்குலக நாடுகளில் உள்ள ஒன்பது நபர்களுக்கு சமமானவர்களாக உள்ளனர். வடக்குலக மற்றும் தெற்குலக நாடுகளின் மக்கள்தொகையுடன் தொடர்புடைய சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள வாக்கு சக்தி அடிப்படையிலான தரவுகளிலிருந்து இந்த கணக்கீடு பெறப்பட்டது.

ஒவ்வொரு நாடும் அதனுடைய “ஒப்பீட்டு பொருளாதார நிலையை” அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கான வாக்குரிமையைப் பெறுகின்றன. இந்த குழு தான் அமைப்பின் அனைத்து முக்கியமான முடிவுகளையும் எடுக்கிறது. பல நாடுகள் பங்கேற்கும் இந்த முக்கியமான நிறுவனத்தில் வடக்குலக நாடுகள் அதிகமான அதிகாரங்களை கொண்டுள்ளன என்பதை இச்செயற்குழு படியலை பார்த்தாலே தெரிந்து விடும்.

அமெரிக்காவின் வீட்டோ அதிகாரமும் IMF முடிவுகளில் ஏற்படும் தாக்கமும்

உதாரணமாக ஒன்றை சொல்லலாம் உலக மக்கள் தொகையில் அமெரிக்கா 4.22 சதவீதத்தை மட்டும் கொண்டுள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவில் 16.49 சதவீதமான வாக்குகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சட்ட விதிகள் திருத்தங்கள் உட்பட மிக முக்கியமான எந்த மாற்றங்களையும் செய்ய 85 சதவீத வாக்குகள் தேவை. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பிடிக்காத அல்லது ஆதிக்கத்தை உடைக்கும் வகையிலான திருந்தங்கள் வந்தால் அதனை நிராகரிக்க அமெரிக்காவிற்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரிகள் அமெரிக்கா எடுக்கின்ற எந்த முடிவுக்கும் உடன்படுகின்றார்கள். அதுமட்டுமல்ல அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.யில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகம் அமைந்துள்ளதால் இதன் கொள்கை கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட கொள்கை முடிவுகள் குறித்து அமெரிக்க கருவூலத் துறையுடன் அடிக்கடி கலந்தாலோசிக்கின்றது.

வெனிசுலா மீதான அரசியல் அழுத்தமும் நிதி மறுப்பும்

உதாரணமாக, 2019 இல் ஒருதலைப்பட்சமாக வெனிசுலா அரசாங்கத்தை அங்கீகரிப்பதை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்தது. அப்போது அமெரிக்கா அந்த அழுத்தத்தை சர்வதேச நாணய நிதியத்தின் மீதும் திணித்தது. வெனிசுலா சர்வதேச நாணயத்தை நிறுவிய நாடுகளால் ஒன்று. பல முறை இந்த அமைப்பிடம் உதவி கேட்டுள்ளது. 2007 இல் சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடன்களை கட்டிவிட்டது. இதன் பிறகு குறுகிய கால உதவிக்கு இவ்வமைபிடம் கையேந்த வேண்டாம் என்று முடிவு செய்தது. (அந்நிய செலாவணி பற்றாக்குறையால் கடன்பட்ட நாடுகளுக்கு பாலமாக கடன் வழங்குவதற்காக தெற்குலக நாடுகளுக்கான வங்கியை கட்டியெழுப்ப வெனிசுலா அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டது).

இருப்பினும் கொரோனா காலத்தில் பணப்புழக்க சுழற்சியை அதிகரிப்பதற்காக பெரும்பாலான நாடுகளைப் போலவே வெனிசுலா அரசும் சர்வதேச நாணய நிதியத்தில் இருப்பாக தனது நாடு வைத்திருந்த 5 பில்லியன் டாலர் பணத்தை சிறப்பு வரைவு உரிமைகளை (IMF இன் ‘நாணயம்’) பயன்படுத்தி எடுக்க முயன்றது. ஆனால் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சர்வதேச நாணய நிதியம் பணம் கொடுக்க வில்லை. இதுமட்டுமல்ல இதற்க்கு முன்பே வெனிசுலாவின் சிறப்பு வரைவு உரிமைகளின் அடிப்படையில் 400 மில்லியன் டாலரை எடுக்க முயன்ற போது அப்போதும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிகோலஸ் மதுரோ இருந்த போது அவரை ஜனாதிபதியாக ஏற்காமல் உண்மையான ஜனாதிபதி ஜுவான் குவாய்டோ என்று அமெரிக்கா அடம்பிடித்து வந்தது. அப்போது சர்வதேச நாணய நிதியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த “சிமோன் அலெஜாண்ட்ரோ ஜெர்பா டெல்காடோ”வை வெனிசுலாவின் பிரதிநிதியாக தொடர்ந்து அங்கீகரித்தது. தொடர்ந்து நிதி மறுக்கப்பட்டு வருவது குறித்து 2020 மார்ச் மாதம் நாங்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செய்தி தொடர்பாளர் ராபேல் அன்ஸ்பாக் எந்த பதிலும் சொல்லவில்லை. இருந்தாலும் அவர் ஒரு முறையான அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘தங்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளுடன் ஈடுபாடு என்பது சர்வதேச சமூகத்தால் அதிகாரப்பூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது’ என்று தெரிவித்திருந்தார். இந்த அங்கீகாரம் குறித்தான ‘தெளிவு இல்லை’ என்பதால், கொரோனாவின் போது வெனிசுலா தனது சிறப்பு வரைவு உரிமைகளை பயன்படுத்த அனுமதிக்காது என்று அன்ஸ்பாக் எழுதினார். பிறகு திடீரென்று வெனிசுலாவின் பிரதிநிதியாக இருந்த ஜெர்பாவின் பெயரை தனது இணையதளத்திலிருந்து சர்வதேச நாணய நிதியம் திடீரென நீக்கியது. இது முழுக்க முழுக்க அமெரிக்காவின் அழுத்தத்தால் ஏற்பட்டது.

ஏழை நாடுகளின் மீது கடன் சுமை

2023 இல், சீனாவின் ஷாங்காயில் உள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையின் ஏழை நாடுகளுக்கு வரும் போது அந்நாடுகளுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தி விடுகின்றது. அர்ஜெண்டினாக்கு ஏற்ப்பட்டதை குறிப்பிட்டு பேசிய அவர் ‘கடன்பட்டுள்ளதால் அந்நாடுகளின் அரசு கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ( வெளியல் இருந்து அழுத்ததிற்கு அடிபணிந்து ) வேலை செய்ய முடியாது. வங்கிகள் பொறுமையாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு எந்த வங்கியும் மூன்றாம் உலக நாடுகளுக்கு (வளரும் நாடுகளுக்கு ) கடன் வழங்கும் போது, அந்த நாடுகளின் நிதியை நிர்வகிக்கவும், அந்த நாடுகளுக்கு ஆணையிடவும் தங்களுக்கு முழு உரிமையும் கிடைத்து விட்டது என நினைகின்றார்கள். இது கடன் வாங்கிய நாடுகளை பணையகைதிகளாக நடத்துவது போன்றது.

மூலதனத்தின் மீதான ஆதிக்கம்

இந்த உலகத்தில் மூலதனத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற உண்மையான அடிப்பையான அதிகார போட்டி வரும் போது இங்கு பேசப்படகூடிய அனைத்து ஜனநாயகமும் காணாமல் போய்விடும். கடந்த ஆண்டு, ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் உலகின் முதல் 1 சதவீதமான நபர்கள் 95 சதவீதமான மனிதர்களை விட அதிக செல்வத்தை வைத்திருக்கிறார்கள் என்று அம்பலப்படுத்தப்பட்டது. உலகின் மிகப்பெரிய 50 நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான நிறுவனங்கள் 13.3 டிரில்லியன் டாலர்கள் மதிப்புள்ளவை – இவற்றை இப்போது ஒரேயொரு பில்லினிய கோடீஸ்வரர் நிர்வகிக்கிறார் அல்லது ஒரு பில்லினிய கோடீஸ்வரர் முக்கிய பங்குதாரராக உள்ளார் என்றும் அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.இந்த பில்லியனர்களில் ஒரு 12 க்கும் அதிகமானவர்கள் இப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் இனி அந்த 1 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள். உண்மையில் அவர்கள் 0.0001 சதம் அல்லது பத்தாயிரத்தில் ஒரு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

தற்போதைய விகிதத்தில், இந்த பத்து ஆண்டுகளின் முடிவில் உலகில் ஐந்து டிரில்லியனர்கள் உருவாகுவார்கள். அவர்கள்தான் அரசாங்கங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள், எனவே, பலதரப்பு நிறுவனங்களில் அசாதாரண தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு பாரபட்சம்  

ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐ.நா அவைகளில் உள்ள எந்த ஒரு முக்கிய அமைப்புகளிலும் தங்கள் கருத்தை வெளிப்படுத்த உரிமை கொடுக்கப்படுவதில்லை என்று 1963 ஆம் ஆண்டே நைஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாஜா அனுசா நடுபுயிஸி வாசுகு ஐ.நா அவை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். எந்த ஒரு ஆப்பிரிக்க நாடும், லத்தீன் அமெரிக்க நாடும் ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர இடத்தை கொண்டிருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில், எந்த ஒரு ஆப்பிரிக்க நாடும் ஒரு முன்மொழிவை முன்னெடுக்க முடியவில்லை. இதனால் இந்நிலையை பொறுக்க முடியாமல், ‘நாங்கள் தொடர்ந்து சும்மா உக்காந்து செல்லும் நபர்களாக மட்டுமே இருப்போமா?’ என ஐ.நா அவையிலேயே நைஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாசுகு கேட்டார்.

2024 இல் சர்வதேச நாணய நிதியத்தில் ஆப்பிரிக்க பிரதிநிதிக்கு மேலும் ஒரு இடம் சேர்க்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த கண்டத்திற்கு போதுமானதாக இல்லை. ஆப்ரிக்க கண்டம் சர்வதேச நாணய நிதியத்தில் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளது (190 நாடுகளில் 54 ) மற்றும் அதிகளவு அந்த நிறுவனத்தில் இருந்து கடன்களை (2000 முதல் 2023 வரை 46.8%) பெற்றுள்ளது. ஆனால் ஓசியானியா நாட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட கண்டமாக (6.5%) உள்ளது. இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட வட அமெரிக்காவிற்கு 9,43,085 வாக்குகள் உள்ளன. அதே நேரத்தில் 54 உறுப்பினர்களைக் கொண்ட ஆப்பிரிக்காவிற்கு 3,26,033 வாக்குகள் மட்டுமே உள்ளன.

IMF இல் சீர்திருத்தமும் பிரச்சனையும் 

2007 ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகும், மூன்றாவது உலக பொருளாதார பெரும் மந்தத்தின் துவக்கத்திலும், சர்வதேச நாணய நிதியம் ஒரு சீர்திருத்தத்தை துவங்க முடிவு செய்தது. சர்வதேச நாணய நிதியத்திடம் குறுகிய கால கடன் (பிரிட்ஜ் லோன்) கேட்கும் போது, அது எந்தவித பாதிப்பும் இல்லாதது போல் கருதப்பட வேண்டியிருந்தாலும், உலக மூலதன சந்தைகளில் அந்த நாடு மோசமான வளர்ச்சி கொண்டதாக பார்க்கப்பட்டது. இதனால், அந்த நாட்டிற்கு வழங்கிய கடனுக்கு அதிக வட்டிகளை வசூலித்தனர். இந்த அதிக வட்டி , கடன் வாங்கிய நாட்டின் நிதி நிலையை மேலும் மோசமாக்கி கடன் நெருக்கடியை இன்னும் மோசமாக்கியது. இந்த சிக்கலைத் தீர்க்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைக் குறைக்கவுமே இந்த சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பிரச்சனையையும் தாண்டி ஒரு பெரும் பிரச்சினை உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து மேலாண்மை இயக்குநர்களும் ஐரோப்பியர்களாக இருந்துள்ளனர். இதன் பொருள் என்னவென்றால் வளரும் நாடுகளாக உள்ள தெற்குலக நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொறுப்பில் எந்த பிரதிநிதித்துவமும் இல்லை என்பதாகும். இந்த அமைப்பின் முழு வாக்களிப்பு அமைப்பும் கோட்டா அடிப்படையிலானது.‌ அதாவது பொருளாதாரத்தின் அளவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒவ்வொரு நாடும் செய்யும் நிதி பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால் ஜனநாயக அடிப்படையில் ஒரு நாடுக்கு ஒரு வாக்கு என்ற முறை வீழ்ச்சியடைந்து வளர்ந்த நாடுகளுக்கு அதிக வாக்குகளாக உள்ளது.

இந்த வெவ்வேறு வாக்குகள் இரண்டு வடிவங்களில் அளவிடப்படுகின்றன: கணக்கிடப்பட்ட கோட்டா பங்குகள் (Calculated Quota Shares), இது ஒரு சூத்திரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது, மற்றும் உண்மையான கோட்டா பங்குகள் (Actual Quota Shares), இது அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, 2024 கணக்கீட்டில், சீனாவின் உண்மையான கோட்டா பங்குகள் (AQS) 6.39 சதவீதமாக இருந்தது. அதே நேரத்தில் அதன் கணக்கிடப்பட்ட கோட்டா பங்குகள் (CQS ) 13.72 சதவீதமாக இருந்தது . சீனாவின் உண்மையான கோட்டா பங்குகளை அதன் கணக்கிடப்பட்ட கோட்டா பங்குகளுடன் பொருத்துவதற்கு அமெரிக்கா போன்ற பிற நாடுகளின் பங்கை குறைக்க வேண்டும்.

அமெரிக்காவின் உண்மையான கோட்டா பங்கு 17.40 சதவீதமாகும். இது சீனாவின் அதிகரிப்பை ஏற்பதற்கு 14.94 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமெரிக்காவின் பங்கு குறைவது அதன் வீட்டோ சக்தியை அரித்து விடும். இதன் காரணமாக, 2014 இல் சர்வதேச நாணய நிதியத்தில் செய்ய இருந்த மாற்றத்தை அமெரிக்கா கைவிட்டது. 2023 லும் இத்தகைய சீர்திருத்தம் தோல்வியடைந்தது.

முன் மொழியப்பட்ட ஏழு சீர்திருத்தத்தங்கள் 

பௌலோ நோகெய்ரா படிஸ்டா ஜூனியர் 2007 முதல் 2015 வரை பிரேசில் மற்றும் பல நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராகவும், 2015 முதல் 2017 வரை புதிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். மேலும், முன்னணி சீன இதழான வென்ஹுவா ஜோங்க்ஹெங்கின் சர்வதேச பதிப்புக்கு பங்களிப்பாளராகவும் உள்ளார். இவரது சர்வதேச நாணய நிதியத்தில் சீர்திருத்தத்திற்கான ஒரே வழி” (ஜூன் 2024) என்ற முக்கியமான ஆய்வறிக்கையில், இந்த அமைப்புக்கான ஏழு சீர்திருத்தத்தை முன்மொழிந்தார்.

  1. கடன் விதிமுறைகளை தளர்த்துவது.
  2. நீண்ட கால கடன்களுக்கான கூடுதல் வரிகளை குறைப்பது.
  3. வறுமையை ஒழிக்க கடன் சலுகைகளை அதிகரிப்பது.
  4. சர்வதேச நாணய நிதியத்தின் மொத்த வளங்களை அதிகரிக்க வேண்டும்.
  5. ஏழை நாடுகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்க அடிப்படை வாக்குகளின் சக்தியை அதிகரிக்க வேண்டும்.
  6. ஆப்பிரிக்க கண்டத்திற்கு குழுவில் மூன்றாவது இருக்கையை வழங்க வேண்டும்.
  7. ஐந்தாவது துணை மேலாண்மை இயக்குநர் பதவியை உருவாக்கி அதனை ஒரு ஏழை நாட்டின் மூலம் நிர்வகிக்க வேண்டும்.

 

வடக்குலக நாடுகள் இத்தகைய அடிப்படையான, நியாயமான சீர்திருத்தங்களை புறக்கணித்தால், “ஒரு வெற்று நிறுவனத்தின் ஒரே உரிமையாளர்களாக வளர்ந்த நாடுகள் மாறிவிடுவார்கள்” என்று படிஸ்டா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் வருகை

தெற்குலக நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தை விட்டு வெளியேறி பிரிக்ஸ் போன்ற புதிய கட்டமைப்புகளின் கீழ் புதிய நிறுவனங்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். 2014 இல் சர்வதேச நாணயத்தின் மறுசீரமைப்பு செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்த பின்னர் அமைக்கப்பட்ட பிரிக்ஸ் கூட்டமைபில் அமைப்பில் உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் நெருக்கடிகால இருப்பு ஏற்பாடு (CRA) போன்றவை ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் CRA ‘பெரும்பாலும் உறைந்து கிடக்கிறது’ என்று படிஸ்டா எழுதுகிறார்.

பிரிக்ஸ் உருவாகும் வரை சர்வதேச நாணய நிதியம் மட்டுமே ஏழை நாடுகளுக்கு தேவையான நிதியுதவியை வழங்கும் ஒரே நிறுவனமாக இருந்தது. அதனால்தான் இலங்கை போன்ற அரசாங்கங்களும், 2025 இல் அந்நாட்டின் மொத்த செலவினத்தில் 41 சதவீதம் வரை அமெரிக்காவில் உள்ள சர்வதேச நாணய நிதியத்திற்கு வட்டி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

Tricontinental இணையத்தில் வெளியான The Global North Has Nine Times More Voting Power at the IMF Than the Global South என்ற தலைப்பில் விஜய் பிரசாத் எழுதிய செய்திமடலின் தமிழாக்கம்.

தமிழில் சேது சிவன் 

 

Leave a Reply