சோசலிச கல்விமுறையே விஞ்ஞான கல்விமுறை – க்ருப்ஸ்கயா

“ ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி”
என்பது ரஷ்ய புரட்சி குறித்த மகாகவியின் வரிகள்.

அந்த யுகப்புரட்சிக்கு முன்னரும் பின்னரும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுவதிலும், மக்களை அணிதிரட்டுவதிலும் இருந்த ரஷ்ய பெண்களின் பங்கு மகத்தானது. பெண்களின் முன்னேற்றமும் பாலின சமத்துவமும் தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் தவிர்க்கமுடியாத பகுதி என்பதை அப்புதுமைப் பெண்கள் உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கே எடுத்துக்காட்டினர்.

நாடெழ்டா க்ருப்ஸ்கயா அத்தகைய புரட்சிப் பெண்களில் ஒருவர்.

யாரிந்த க்ருப்ஸ்கயா?

காரல் மார்க்சைத் தெரிந்த அளவிற்கு அவரின் மனைவி ஜென்னி மார்க்சை இவ்வுலகம் அறிந்திடவில்லை; காந்தியைத் தெரிந்த அளவிற்கு அவரின் மனைவி கஸ்தூரிபாவை இவ்வுலகம் அறிந்திடவில்லை; ஜோதிராவ் புலேவைத் தெரிந்த அளவிற்கு அவரின் மனைவி சாவித்திரி புலேவை இவ்வுலகம் அறிந்திடவில்லை; சூரியனைப் போற்றுகிற அளவிற்கு நட்சத்திரங்களை இவ்வுலக மக்கள் போற்றுவதில்லை.

இப்பெண்மணிகள் தங்கள் கணவர்களின் புகழ் ஒளியால் மறைக்கப்பட்ட நட்சத்திரங்கள். க்ருப்ஸ்கயா அத்தகைய நட்சத்திரங்களில் ஒருவர். மாமேதை லெனினின் மனைவி என்ற பெருமையைக் காட்டிலும் சோசலிச கல்விமுறையின் பிதாமகர் என்ற பெருமையே க்ருப்ஸ்கயாவிற்கான பொருத்தமான சிறப்புமிக்க அடையாளமாகும்.

அவர் லெனினின் அன்பு மனைவியும் உற்ற தோழியும் மட்டுமல்ல

தலைசிறந்த அரசியல்வாதி, அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவர், மார்க்சிய தத்துவத்தை ஆழமாகக் கற்றதோடு நிற்காமல் நடைமுறைப்படுத்திய செயல்வீரர், எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்களை நேசித்த சமூக அக்கறை கொண்ட அறிவு ஜீவி(organic intellectual), உலகம் போற்றிய கல்வியாளர் என்று பன்முக ஆளுமைகள் கொண்ட பண்பாளரும் கூட.

அவரின் வாழ்க்கையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால், இப்படிச் சொல்லலாம்: ‘அந்த மார்க்சிய செயல்வீரர், சோசலிச கல்விமுறையை உருவாக்கவும், முன்னெடுக்கவும், உறுதிப்படுத்தவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட புரட்சிக்காரி’.

1869 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஏழைக்குடும்பம் ஒன்றின் செல்ல மகளாக க்ருப்ஸ்கயா பிறந்தாள். பெற்றோரிருவருமே மெத்தப்படித்தவர்கள். புரட்சியாளர்களுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவளின் அப்பா அவள் பிறப்பதற்கு முன்பே ராணுவத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

நொடித்துப்போன அக்குடும்பம் பொருளாதாரத்தில் மட்டும் ஏழ்மையுடன் இருந்தது. அறிவாற்றலில், முற்போக்குச் சிந்தனையில், புரட்சிகர செயல்பாட்டில் க்ருப்ஸ்கயாவின் பெற்றோர்கள் பிறர் மெச்ச வாழ்ந்தனர். எனவே அவளிடம் புரட்சிகர சிந்தனையும் செயல்பாடும் இளம் வயதிலேயே இயல்பாகத் தொற்றிக்கொண்டன.

உயர்நிலை பள்ளிக்கல்வியில் அவள் மிகச்சிறப்பாக வெற்றி பெற்றாள். அச்சமயம் அவள் அப்பா இறந்து போக அவளின் கல்விக்கனவு அத்தோடு சிதைந்து போனது. வாழ்வாதாரம் ஈட்ட தாயும் மகளும் சிறுவர் சிறுமிகளுக்கு தனிப்பயிற்சி (tuition) எடுக்க வேண்டியதாயிற்று. க்ருப்ஸ்கயா 1891ல் மாலைநேர பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியமர்ந்தாள். ஆசிரியர் பணி மீது அடங்காத ஆர்வம் கொண்டிருந்த அவளை லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்களும் ஆசிரியர்-மாணவர் உறவிற்கு முக்கியத்துவம் தரும் அவரின் கல்வி குறித்த சிந்தனைகளும் பெரிதும் ஈர்த்திருந்தன.

காதலும் புரட்சியும்

சமூக உணர்வு கொண்ட க்ருப்ஸ்கயா ஆசிரியர் பணியாற்றி ‘தேடிச் சோறு தினம் தின்ப’தோடு நின்றுவிடவில்லை. அவளின் மாசற்ற சமூக அக்கறை மக்களை நேசிக்க வைத்தது; பெரும்பாலான மக்களின் ஏழ்மை குறித்து யோசிக்க வைத்தது; அண்ணாந்து பார்க்கும் மாளிகைக் கட்டி அதனருகில் ஓலை குடிசை கட்டி பொன்னான உலகமென்று பெயரிடும் ஏமாற்றுத்தனத்தை வெறுக்க வைத்தது; இத்தகைய சமூக முரண்பாடுகளுக்கான அடிப்படைக் காரணங்கள் எவையென்று தேட வைத்தது. அத்தேடல் அவளுக்கு காரல்மார்க்சின் எழுத்துக்களை அறிமுகம் செய்தது.

மார்க்சின் எழுத்தும் தத்துவார்த்த சிந்தனைகளும் அவளை முழுமையாக ஈர்த்துக்கொண்டதில் வியப்பேதுமில்லை. அன்றைய ரஷ்யாவில் மார்க்சிய நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன.

எனவே மார்க்சிய நூல்களைப் பரிமாறிக்கொள்ளவும் விவாதிக்கவும் பல சிறு சிறு குழுக்கள் இயங்கிக் கொண்டிருந்தன. அத்தகைய குழ ஒன்றில் 1890 ல் க்ருப்ஸ்கயா தன்னை இணைத்துக் கொண்ட போது அவளுக்கு வயது 21.

1894ல் லெனின் ஒரு குழு விவாதத்தில் பங்கேற்க வந்த போது க்ருப்ஸ்கயாவும் லெனினும் முதல்முறையாக சந்தித்துக் கொண்டனர். அவர்களுக்குள் காதல் எப்போது எப்படி மலர்ந்தது என்பன தெரியவில்லை. “என்னருகே நியிருந்தால் உலகமெலாம் சுழல்வது ஏன்?” என்று தன்னிலை மறந்த காதலல்ல அக்காதல். “என்னருகே அவரிருந்தால் மொழியாக்கப் பணியும் காதலின் சுகமே” என்ற க்ருப்ஸ்கயாவின் வாக்குமூலம் அவர்களின் ஆழமான காதல் புரட்சிகர கடமையோடு பின்னிப் பிணைந்திருந்ததை பறைசாற்றுகிறது. அக்காதல் திருமணமாக உருமாறியது ஒரு தனிக்கதை. 1896ல் லெனின் கைதான சில மாதங்களில் க்ருப்ஸ்கயாவும் கைதாகிறாள். அவளும் நாடு கடத்தப்படவுள்ள நிலையில் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்ட லெனினிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. ‘நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளோம் என்று உறுதி அளித்தால் உன்னையும் சைபீரியாவிற்கே அனுப்பவேண்டும் என்பதே சட்டம்’ என்ற அச்செய்தியைத் தொடர்ந்து 1898ல் க்ருப்ஸ்கயா சைபீரியாவை சென்றடைந்ததும் அவர்களின் திருமணம் நடந்தது.

*மதமும் பெண்களும்*

1905ல் ரஷ்யா திரும்பும் வரை பல நாடுகளில் அவர்கள் வாழந்தபோது க்ருப்ஸ்கயா லெனினின் தனிச்செயலராகவும், கட்சி நடத்திவந்த நாளிதழ் மற்றும் பிற இதழ்களின் ஆசிரியர் குழு செயலராகவும் திறம்பட செயல்பட்டாள். அச்சமயம் அவளாற்றிய பணி குறித்து “அவள் அமைப்புப்பணிகளின் மையமாகச் செயல்பட்டாள்” என்று ட்ராஸ்ட்கி புகழாரம் சூட்டினார். ஆலைத் தொழிலாளர்களை அணிதிரட்டுவது, பெண்ணுரிமைப் போராட்டங்களுக்கு பெண்களைத் திரட்டுவது என்று க்ருப்ஸ்கயா அயராது ஆற்றிய களப்பணிகள் ஏராளம். இயக்கப்பணிகள், அடக்குமுறைத் தடைகள் மற்றும் சிறைவாசம் – இவைஎதுவும் அவளின் எழுத்துப்பணியை தடுத்திடவில்லை. புரட்சிக்கு முன்னரே நாற்பது நூல்களை எழுதிக்குவித்த க்ருப்ஸ்கயா எழுதிய நூல்கள் மற்றும் வெளியீடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3000 என்பது அவளின் எழுத்தாளுமைக்கான சான்று. “மதமும் பெண்களும்” அவளின் அற்புதமான படைப்புக்களில் ஒன்று.

தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதில் மற்றும் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலுள்ள சவால்களைப் பற்றி அந்நூல் தெளிவாகப் பேசுகிறது; மக்களிடம் செல் மக்களிடம் கற்றுக்கொள் என்று கட்சி அணிகளுக்கு பாலபாடம் புகட்டுகிறது; பெண்களின் வாழ்வியல் தேவைகளை அறிந்துகொள்வது சமூக மாற்றத்திற்கான இயக்கங்களின் முன் தேவையென்று வலியுறுத்துகிறது. ‘சமூக மாற்றத்திற்குக் கிளர்ச்சிப் பிரச்சாரம் தேவைதான், ஆனால் அது மட்டும் போதுமானதல்ல; அவ்வியக்கங்களில் கலைகளின் பங்கு மகத்தானது. ஆன்மீகத் தளங்களில் பக்தர்கள் வெறும் பார்வையாளர்கள் அல்லர், நிகழ்கலைகளில் பங்கேற்கிறார்கள்.

அதுபோல முற்போக்கு கலைநிகழ்ச்சிகளில் மக்களை பங்கேற்கச் செய்வது அவசியம்’ என்கிறது அந்நூல். மதங்களைக் குறித்த விமர்சனத்தைக் காட்டிலும் மக்களை அணிதிரட்டுகிற உத்திகள் குறித்தே அந்நூல் விரிவாகப் பேசகிறது.

*கல்வியும் ஜனநாயகமும்*

புரட்சிக்குப் பின்னர் க்ருப்ஸ்கயாவின் உழைப்பு பன்மடங்காகிப் போனது. கட்சிப்பணி, இணைஅமைச்சர் பணி, சோசலிச கல்விமுறையை உருவாக்கும் பணி, எழுத்துப்பணி என்று பலதளங்களில் சமமாகவும் கருத்தோடும் கடுமையாகவும் உழைப்பதே அவளின் வாழ்வாகிப் போனது. ‘பொதுக் கல்வியும் ஜனநாயகமும்’ என்பது அவளின் மற்றொரு அருமையான படைப்பு. ஓவன் மற்றும் ரூசோ முன்வைத்த ஜனநாயகக் கல்வியை உழைக்கும் வர்க்கப் பார்வையில் விளக்கும் நூல் என்று லெனின் பாராட்டிய நூலிது.

சோசலிச கல்வி முறையின் வரைபடம் குறித்து விவாதிக்கும் இந்நூல் பன்னாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பார்வை, கம்யூனிச நெறி மற்றும் சமூக அக்கறை ஆகிய உணர்வுகளை ஊட்டி வளர்ப்பது சோசலிச கல்விமுறையின் அடிப்படை இலக்கு. ‘முதலாளித்துவ சமூகத்தில் ஆசிரியப்பணிக்கும் மக்களுக்கும் இடையில் உள்நோக்கத்தோடு ஓர் இடைவெளி உருவாக்கப்படுகிறது;

ஆசிரியர்கள் சமூக மாற்றத்தின் தூதர்கள் ஏனெனில் அவர்கள் மக்களிடம் நெருக்கமாக இருக்கிறார்கள்’ – இந்த புரிதல் சோசலிச கல்விமுறையின் முக்கியமான அம்சம். 1923ல் அவள் தலைமையில் நடைபெற்ற எழுத்தறிவு இயக்கம் உலகப்புகழ் பெற்றது. எழுத்தறிவு இயக்கத்தில் சாதனை படைக்கும் நாடுகளுக்கும் தனிநபர்களுக்கும் UNESCO ஆண்டுதோறும் வழங்கிவரும் பரிசின் பெயர் நாடெழ்டா க்ருப்ஸ்கயா பரிசு! புரட்சிக்கு முன்னர் ரஷ்யாவில் முடங்கிக்கிடந்த நூலகத்துறையை தூக்கி நிறுத்தி வலுவானதாக மாற்றிய பெருமையின் சொந்தக்காரி, க்ருப்ஸ்கயா. வாசிக்கும் சமூகம் யோசிக்கும் என்பதை அறிந்தவள் அல்லவா அந்த புரட்சிக்காரி.

1939 பிப்ரவரி 27ம் நாள் அவளின் புரட்சிகர வாழ்க்கை முடிந்து போனது.

மாஸ்கோ நகரில், செஞ்சதுக்கத்தில், மாமேதை லெனின் நினைவாலயம் அருகில் ‘கல்வி, புத்தகம், ஆய்வுச்சிந்தனையே மக்களின் பெருஞ்சொத்து’ என்ற க்ருப்ஸ்கயாவின் அறிவார்ந்த நம்பிக்கையின் அடையாளமாக அவளின் நினைவாலயம் நிற்கிறது.

க்ருப்ஸ்கயாக்களின் நினைவாகத்தான் “ எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்று பாரதி எழுதினான், போலும்.

கட்டுரையாளர்: பேரா.வ.பொன்னுராஜ் (புதிய ஆசிரியன்)

Leave a Reply