சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த புரட்சி மேற்கு நாடுகளின் ஏகாதிபத்தியம், ஜப்பானின் காலனியாதிக்கம், சீன மன்னர்கள், நிலப்பிரபுக்களின் நிலவுடமை ஆதிக்கத்தை வீழ்த்தி 1949 அக்டோபர் 1 அன்று புதிய கம்யூனிஸ்ட் ஆட்சி நிறுவப்பட்டது.
இதன் 75 ஆவது ஆண்டுவிழா கோலாகலமாக சீனாவில் கொண்டாடப்பட்டது. இந்த 75 ஆண்டு கால ஆட்சியில் ஏகாதிபத்திய அரசுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்றது மட்டுமல்லாது அனைத்து நாடுகளுடனும் பொருளாதார ரீதியிலான நட்பை வளர்த்துக்கொண்டு அறிவியல் தொழில் நுட்பம்,உணவு உற்பத்தி என தன்னிகரற்ற வளர்ச்சியை அடைந்துள்ளது சீன கம்யூனிஸ்ட் கட்சி.
75 ஆவது ஆண்டுவிழா
சீனாவின் அரசியல் மையமான தியான்மென் சதுக்கத்தில் காலை 6:11 மணிக்கு ராணுவ மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் என 1,20,000 பார்வையாளர்கள் பங்கேற்புடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, புறாக்களும் பலூன்களும் விடுவிக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது.
தலைநகர் பெய்ஜிங் போன்ற பரபரப்பான நகரங்கள் உட்பட நாடு முழுவதும் தெருக்களில் கம்பீரமாக தேசியக் கொடிகள் பறக்க, மலர்கள், வண்ண வண்ண விளக்குகள் அலகாரத்துடன் மக்களை தங்கள் நாட்டில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைக்கப்பட்ட தினத்தை கொண்டாடினர்.
மக்களே முதன்மை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்தியக் குழு பொதுச் செயலாளரும், மத்திய ராணுவ தலைவருமான ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சீன விடுதலைக்கான புரட்சியில் உயிரிழந்த பாட்டாளி வர்க்க தோழர்களுக்கும், செம்படை வீரர்களுக்கும் நினைவுச்சின்னத்தில் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
விழா கொண்டாட்டத்திற்கு முதல் நாள் பேசிய ஜி ஜின் பிங், அனைத்துக் கட்சி உறுப்பினர்களும், சீனாவில் உள்ள அனைத்து இன மக்களும் தான் சீன வளர்ச்சிக்கான நாயகர்கள், நாம் அனைவரும் ஒன்றுபட்டு வலிமையான சீனாவை உருவாக்க வேண்டும். நாட்டை வலிமைமிக்க சக்தியாக உருவாக்க முன்னோக்கி கொண்டு செல்ல பாடுபட வேண்டும். மக்கள் தான் முதன்மை என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாம் செய்யும் அனைத்தும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும், நாம் செய்யும் எல்லாவற்றிலும் மக்களை நம்பியிருக்க வேண்டும். சீர்திருத்தம், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நமது கூட்டு முயற்சி என எல்லாவற்றிலும் அனைத்து சீன மக்களும் பயனடைவார்கள் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .
75 ஆண்டுகால மாற்றங்கள்
75 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் 1 அன்று மா சேதுங் தியான்மென் ரோஸ்ட்ரம் மீது ஏறி நின்று மக்களை நோக்கி புரட்சியின் வெற்றியையும், சீன குடியரசு அமைக்கப்படுகிறது என்பதனையும் அறிவித்தார்.
அப்போது சீனா ஒன்றுமே இல்லாத ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் கடந்த 75 ஆண்டுகளாக தொழிலாளர்களை, மாணவர்களை, இளைஞர்களை, கல்வியாளர்களை ஒருங்கிணைத்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்த்தி நிறுத்தியுள்ளது சீன கம்யூனிஸ்ட் கட்சி.
மாவோ தலைமையில் நடந்த புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பணியில் முக்கிய அடியை 1970 களின் பிற்பகுதியில் டெங் சியோ பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. நாட்டை தொழில் மயமாக்க, தென்கிழக்கு கடற்கரையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கியது, வெளிநாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் முதலீடுகளை ஈர்த்தது என அதற்கான சீரிய திட்டங்களை வகுத்தது.
இத்தகைய தொலை நோக்குப்பார்வையால் 1978 முதல் 2017 வரை, சீனாவின் பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சாரிசாரியாக 9.5 சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்தது. (75 ஆம் ஆண்டு விழாவிற்கு இரு நாட்களுக்கு முன் ஜி ஜின் பிங்கும் இதனை குறிப்பிட்டுள்ளார்.)
2001 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் சீனா இணைந்தது. அமெரிக்கா கட்டுப்பாட்டில் உள்ள அவ்வமைப்பை தனது பொருளாதார வளர்ச்சிக்காக சீனா பயன்படுத்திக் கொண்டது. இதன் பிறகு 2002 முதல் 2006 வரை சீனப் பொருளாதாரம் 49 சதவீதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 2007-2009 ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் வீழ்ந்த போது அது சீனாவின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் பெருமளவு பாதிக்க வில்லை. மாறாக 2007 முதல் 2011 வரை அந்நாட்டின் பொருளாதாரம் 43 சதவீதம் வளர்ந்தது.
சீன தேசிய புள்ளியியல் பணியக தரவுகளின் படி , 2023 ஆம் ஆண்டு அதன் பொருளாதாரம் 5.2 சதவீதம் தன வளர்ந்தது.இது 2022 ஐ விட குறைவு, மேலும் முந்தைய பத்தாண்டுகளை கணக்கில் எடுத்துப் பார்க்கும் போது குறைவான வளர்ச்சி. தான் இருப்பினும், 2023 ஆம் ஆண்டிற்கான வாங்கும் திறன் (PPP) சீனாவின் ஜிடிபி $34.6 டிரில்லியனை எட்டியது. இது அமெரிக்காவின் $27.3 டிரில்லியனை விட அதிகமானது என உலக வங்கி தெரிவித்தது.
இந்த வளர்ச்சியின் தொடர்ச்சியாக அறிவியல் கல்வி, வேலை வாய்ப்புகள் உருவாக்கம் என ஒட்டுமொத்த சீனா மக்களையும் 2020 ஆம் ஆண்டு வறுமையிலிருந்து மீட்டது. இது இன்றைய நவீன சமூக வரலாற்றில் சமத்துவமின்மையை குறைப்பதில் மிகப்பெரிய வெற்றியாகும்.
தனிநபர் நுகர்வு அதிகரிப்பு
ஒரு சீன குடிமகனின் உண்மையான வருமானத்தின் அடிப்படியில் தனிநபர் நுகர்வு 76 மடங்கு அதிகரித்துள்ளது. அவர்களின் சராசரி ஆயுட்காலம் 35 இல் இருந்து 78 என இருமடங்காக அதிகரித்துள்ளது எனவும் அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
தொழில் நுட்ப வளர்ச்சி
சீனா மிகப்பெரிய அளவில் அதிவேகமாக நகரமயமாகியுள்ளது. சீனா வரலாற்று ரீதியாக ஒரு விவசாய நாடாகும். எனினும் அதன் பொறியியல், தொழில் நுட்ப கட்டமைப்புகள் மிகப்பிரம்மாண்டமான, அழகான, பாதுகாப்பான அதிசயமிக்க நகரங்களை உருவாக்கி உலகத்தையே பிரமிக்க வைத்துள்ளது. நவீன தொழில்நுட்பம் கொண்ட அதிவேக புல்லட் ரயில்கள், ரயில் பாதைகள் உள்ள உள்ள முன்னணி நாடாக உள்ளது. மேட் இன் சீன பொருட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக பல கோடி பட்ஜெட்
2024 ஆம் ஆண்டுக்கான சீன நிதித்துறை பட்ஜெட்டில் 52 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாகும்.
2022 ஆம் ஆண்டு ஜப்பான் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மேற்கொண்ட ஆய்வில் உலகளவில் அதிக மாற்றங்களை தரும் அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த நாடாக சீனா உயர்ந்து நிற்கிறது. அதற்கு அடுத்த இடத்தில தான் அமெரிக்காவும் ஜெர்மனியும் உள்ளன.
சீனாவில் இருந்து 4 லட்சத்து 7 ஆயிரத்து 181 , ஆய்வறிக்கைகளும், அமெரிக்காவில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 434 ஆய்வறிக்கைகளும் வெளியாகியுள்ளது. அதேபோல உலகம் முழுவதும் வெளியிடப்படும் ஆய்வறிக்கைகளில் 23.4 சதவீதம் சீனா வெளியிடப்படுகிறது. ( இந்த எண்ணிக்கை 2018 – 2020 வரையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எண்ணிக்கையின் அடிப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.)
அறிவியல் ஆராய்ச்சில் சீனா முன்னணியில் இருப்பதை கண்டு மிரண்டு போனது அமெரிக்கா. இனத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் 2022 ஆகஸ்டு 9 அன்று அமெரிக்க அறிவியல் ஆய்வுகளுக்கு 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
சுற்றுசூழல் பிரச்சனைகள்
இந்த அதிவேக வளர்ச்சியின் போது சீனா காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் எதிர் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிரச்சனைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரி செய்து முன்னேறியுள்ளது.
அதாவது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் கடுமையான காற்று மாசுபாடு உள்ள நாட்களின் எண்ணிக்கை 83 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகார பூர்வமாக புள்ளி விவரங்களின் படி சொல்ல வேண்டும் என்றால் 2017ஆம் ஆண்டு சுற்றுச்சூழலில் பொதுமக்களின் திருப்தி 80 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது இதுவே 2023 ஆம் ஆண்டு 91 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
மேலாதிக்கம் காலனித்துவ பாதையை தேர்வு செய்யக்கூடாது
மேலும் இந்த 75 ஆம் ஆண்டு விழாவில் உலக அமைதிக்காக சீனா தொடர்ந்து செயல்படும் என்பதை அழுத்தம் திருத்தமாக பேசிய ஜி ஜின் பிங், ஏழ்மை நிலையில் இருந்து வளர்ந்த உடன் பல நாடுகள் வளர்ச்சிக் குறைந்த நாடுகளை கொள்ளையடிக்கும். அதுபோல சீனா பழைய காலனித்துவ மற்றும் கொள்ளையடிக்கும் பாதையை தேர்வு செய்யக்கூடாது. மேலாதிக்கம் என்ற தவறான பாதையை தேர்வு செய்யக்கூடாது. உலக அமைதியை நோக்கி சீன பாணியிலான நவீன சோசலிசம் நோக்கி நாம் முன்னேற வேண்டும் என ஜி ஜின் பிங் குறிப்பிட்டுள்ளார்.
நவீன சோசலிசத்தை நோக்கிய பயணம்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சீன பாணியிலான நவீன சோசலிசத்தை அடைவதற்கான விரிவான திட்டத்தை விவாதித்துள்ளது. அதன்படி நவீன சோசலிசம் என்ற இலக்கை தொடுவதற்கு இன்னும் 11 ஆண்டுகள் உள்ளது எனவும், மேலும் 25 ஆண்டுகளில் அதாவது இந்த 21 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அனைத்து வகையிலும் ஒரு சிறந்த நவீன சோசலிச நாடாக மாறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னே உள்ள சவால்
சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த நூற்றாண்டில் தனது இலக்குகளை அடைய அடைய வேண்டும் என்றால் தொடர்ந்து பொருளாதாரத்தை வளர்பது , முக்கியமாக எதிர்காலத்தை தக்கவைக்க தொழில்நுட்ப வளர்ச்சிகளில் உள்ள தடைகளை சமாளித்து முன்னேறுவது, அதிக மக்கள் தொகையால் வரும் ஆண்டுகளில் உருவாகும் அதிக முதியோர்களை பராமரிப்பு செய்வதற்கான திட்டம், செல்வ சமத்துவமின்மையை மேலும் குறைப்பது உள்ளிட்டவை சீனாவின் முன் உள்ள மிகபெரிய சவாலாக அமைந்துள்ளது.
இதற்காக கடந்த ஜூலை மாதமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மத்தியக்குழு கூட்டம், பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்கப்பது முதல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், குறிப்பாக புதிய உற்பத்தி ( செயற்கை நுண்ணறிவு பசுமை உற்பத்தி உள்ளிட்ட ) சக்திகளை வளர்ப்பது வரை 300 சீர்திருத்த நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வரக்கூடிய ஆண்டுகளில் சீனாவில் செயற்கை நுண்ணறிவு, பசுமை ஆற்றல் மற்றும் உயிரி மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இருந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பில் துணைத் தொழில்கள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சேது சிவன்