அரசுகள் என்றும் முதலாளிகளின் பக்கம்!
மக்கள் என்றும் மக்களின் பக்கமே !!

ஜூன் 8 காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த 54 ஆண்டை குறிக்கிறது.அது மட்டும் அல்ல 2023 அக்டோபர் மாதம் காசா மீதான இனப்படுகொலை போரை இஸ்ரேல் துவங்கிய 8 ஆவது மாதமாகும்.

இந்த போரில் 36,000 க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இதில் 40% அதிகமானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே.

காசா மீதான போரை அறிவித்த போது இது போன்ற காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போர் என்றும் பொதுமக்கள் இதில் பாதிக்க மாட்டார்கள் என்றும் கூறிய இஸ்ரேல் ராணுவம்.

இன்றுவரை பொதுமக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திக்கொண்டே உள்ளது.இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு வகையில் கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருவதோடு அந்த போராட்டங்கள் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.

அனைவரின் பார்வையும் ரஃபாவை நோக்கி 

மே 28 முதல் All eyes on rafha என்ற படம் இணைய தளங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கு எதிராகவும் கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான மக்களால் பகிரப்பட்டுள்ளது.

வரலாற்றை திருப்பும் போது 1948 ஆம் ஆண்டே  துவங்கிய இந்த பாலஸ்தீன இஸ்ரேல் போர் இன்றைய நவீன சமூகத்தினுடய நுட்பமான கவனத்திற்கு வந்துள்ளது. 

ரஃபா தாக்குதலும் பின்னணியும்

1967 ஆம்‌ ஆண்டு காசாவை ஆக்கிரமிக்க துவங்கிய இஸ்ரேல் ராணுவம் தற்போது நடத்தி வரும் போரில் முழு காசாவையும் ஆக்கிரமிப்பதோடு ஒட்டு மொத்த பாலஸ்தீன மக்களையும் இனப்படுகொலை செய்து துடைத்தெறியும் வேலையில் இறங்கியுள்ளது.

2023 அக்டோபர் 7 போர் துவங்கிய பிறகு வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக ரஃபாவை நோக்கி துரத்தியது. வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் மீது தாக்கல் நடத்துகிறோம் இதில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க ரஃபா நோக்கி அனுப்புகிறோம்  அந்த பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று கூறி இஸ்ரேல்  அவர்களை துரத்தியது.

வடக்கு காசாவில் இருந்து ரஃபாவை நோக்கி செல்லும் மக்கள் மீது நேரடியாக குண்டுகளை வீசி கொலை செய்தது.அதுமட்டமல்ல ரஃபாவிலும் வான் வழி தாக்குதல் நடத்தியது.

தற்போது  கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரஃபாவில் தரைவழி தாக்குதல் தொடங்கியுள்ள இஸ்ரேல் கூடாரங்களின் மீது நேரடியாக குண்டு வீசி 40க்கும் அதிகமான பாலஸ்தீனர்களைஸஉயிரோடு எரித்துக் கொலை செய்தது குழந்தைகள் தலைவெடித்து கொலையாகியுள்ளன.

செல்வதற்கு இடமே இல்லாத சூழலில் நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்ட போல அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் மீது குண்டுகளை வீசி கொடூரத்தை நிகழ்த்தி வருகிறது இஸ்ரேல் 

இந்த தாக்குல் உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்களை அதிகப்படுத்தியுள்ளது.

ஏகாதிபத்திய போர் 

இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஏதோ இரண்டு மதங்களுக்கு இடையிலான போர் என்ற அளவில் மட்டுமே இன்றைய சமூகத்தில் சிலர் கருதுகின்றனர்.

ஆனால் இது ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்க போட்டியை தக்கவைத்துக் கொள்ள போட்டியிடும் களமாக உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1948 ஆம் ஆண்டு அன்று மிகப்பெரிய காலனித்துவ நாடான இங்கிலாந்து ஹிட்லரால் துரத்தப்பட்ட அல்லது ஹொலோஹாஸ்ட் எனப்படும் கொலைக்களத்தில் இருந்து தப்பித்த யூதர்களை கொண்டு சென்று மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தில் குடியமர்த்தி அதனை நாடாக அங்கீகரித்தது.

அப்போதிலிருந்து மத்திய கிழக்கில் ஆதிக்கத்தை தக்க வைக்க இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணி செயல்படுகிறது. தற்போது கூட காசா திட்டுக்களில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கொள்ளை அடிப்பதற்காக ஒட்டுமொத்த காசாவையும் கைப்பற்றும் வேலையை இஸ்ரேல் ராணுவம் முன்னெடுத்து வருகிறது.

இரு துருவ அரசியல் முதல் இன்றைய நிலை

இரண்டாம் உலகப் போருக்கு பின் சோவியத் ரஷ்யா தலைமையிலான நாடுகள் இஸ்ரேலை ஒரு முழு நாடாக ஏற்கவில்லை அதே நேரத்தில் மற்றொரு துருவ கூட்டணியாக இருந்த இங்கிலாந்து அமெரிக்கா தலைமையிலான அரசுகள் இஸ்ரேலை தொடர்ந்து அங்கீகரித்து ஆதரவு தெரிவித்து வந்ததோடு. பாலஸ்தீன நிலத்தை தொடர்ந்து ஆக்கிரமிக்க இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தன.

அதேபோல மத்தியக் கிழக்கு நாடுகளும் அன்று இஸ்ரேலை ஏற்காமல் இருந்தன. ஆனால் இன்று நவீன தாராளவாத கட்டத்தில் அரசியல் ரீதியாக சில முன்னெடுப்புகளை எடுத்தாலும் போர் உள்ளிட்ட செயல்பாடுகளில் இஸ்ரேல்- அமெரிக்க கூட்டணிக்கு ஆதரவாக கைப்பாவையாக சவுதி , அமீரகம் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக, துருக்கி, எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் உள்ளன. இதுபோன்ற பல முரண்கள் மத்திய கிழக்கில் உள்ளது.

இந்த முரண்கள் ஐரோப்பிய நாடுகள் வரை வளர்ந்துள்ளது. சமீபத்தில் ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகளும் பாலஸ்தீனத்தை கூட்டாக அங்கீகரித்துள்ளன. 

இங்கு நாம் கவனிக்க வேண்டியது இதே நாடுகள் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின்  பாதுகாப்பு கவுன்சில்  இஸ்ரேலின் இன படுகொலைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. ஆனால் பிரான்சு அரசு தொடர்ச்சியாக ஆயுதங்களை இஸ்ரேலுக்கு  வழங்கி வருகிறது போலந்து இஸ்ரேலை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது அதே சமயம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்  தங்கள் வெளிநாட்டு கொள்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாற்றத்தை கொண்டு வந்து ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றன. 

சர்வதேச போராட்டங்களும் மாற்றங்களும் 

இஸ்ரேலின் இனப்படுகொலைகளை கண்டித்து சர்வதேச அளவில் மிகப்பெரும் எழுச்சியான போராட்டங்கள் நடந்து வருகிறது. உதாரணமாக அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இஸ்ரேல் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ள நிறுவனங்களிடம் இருந்து பல்கலைக்கழகங்கள் உறவுகளை துண்டிக்க வேண்டும் நிதி உதவி பெறக்கூடாது என்ற மாணவர்கள் கோரிக்கை வைத்து போராடினர்.

இந்த போராட்டம் அந்நாடு பல்கலைக்கழகங்கள் முழுவதும் பரவியது.

போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர் எங்களுடைய வரிப்பணத்தை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்காதே என்று அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். 

இதே போன்றுதான் ஐரோப்பாவிலும் பொதுமக்கள் பெரும் போராட்டங்கள் மூலமாக அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.

தேர்தல்களில் எதிரொலிக்கும் போராட்டம்

சர்வதேச அளவில் சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இறங்கி வருவதற்கு 2024 ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது எனலாம்.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட நாடுகள் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. இதில் கிட்டத்தட்ட 40 சதவீதத்துக்கு அதிகமான நாடுகளில் ஆட்சி மாற்றமே ஏற்படும் என்று சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்பிரிக்கா அமெரிக்கா துருக்கி எகிப்து  மத்தியக்கிழக்கு என பல நாடுகளில் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெளும் மாபெரும் போராட்டங்கள் அரசாங்கத்தை அழுத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. 

அது அவர்களுடைய வெளிநாட்டு கொள்கைகளில் கூட முடிவுகளை மாற்ற அழுத்தத்தை உருவாக்கி விடுகிறது. இது ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றமாகும்.

குறிப்பாக இந்த போராட்டத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து அதை அரசியல் போராட்டத்திற்குள் கொண்டு செல்லும்போது இந்த மாற்றங்கள் சற்றே துரிதமாக நடைபெறுவதாக பார்க்க முடிகிறது.

நாடுகள் எதிர்கொள்ளும் அழுத்தம் 

உதாரணமாக தென்னாப்ரிக்காவில் தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலுக்கு முந்தைய பிரச்சாரத்தில் அங்கு பிரதானமான இடதுசாரி கட்சியான economic freedom fighters கட்சி இஸ்ரேல் எதிர்ப்பு பிரச்சாரத்தை மிக தீவிரமான போராட்டமாக மாற்றியது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாக்குகள் சதவிகிதம் குறையலாம் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில் இடதுசாரிகள் முன்னெடுத்த போராட்டம் மேலும் அழுத்தத்தை உருவாக்கியது.

தற்போது அந்நாட்டு தேர்தலில் அவர்கள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

இதுவே மத்திய கிழக்கு நாடுகளில் பார்த்தால் துருக்கி இஸ்ரேலுடன் நெருங்கிய பொருளாதார உறவுகளை கொண்டுள்ளது. போர் துவங்கிய பிறகு இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்தாலும்  வெளிநாட்டுக் கொள்கையில் எந்த தீவிர மாற்றத்தை கொண்டு வரவில்லை.

அந்நாட்டில் தெருவில் இறக்கிய லட்சக்கணக்கான மக்களின் தீவிரமான போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தது. இதன் பிறகே துருக்கி கடந்த மே மாத துவக்கத்தில் இஸ்ரேலுடனான பொருளாதார உறவை துண்டித்தது.

துருக்கி போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மக்கள்  போராட்டத்தின் ஆக்கப்பூர்வ பலன்களையும் மாற்றத்தையும் பார்க்கலாம்.

அமெரிக்காவில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ரஃபாவில் தரைவழி தாக்குதல் துவங்கினால் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுக்க மாட்டோம் என ஜோ பைடன் கூறினார். அதே நேரத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் இந்த போரை வேகப்படுத்தி ஹமாஸை முற்றிலும் அழிப்பேன் என்று ட்ரம்ப் பேசினார்.

அமெரிக்க அரசாங்கத்தை கட்டுப்படுத்தி வரும் தீவிர பிற்போக்கு யூத முதலாளிகள், ஆயுத முதலாளிகளின் ஆதரவு ட்ரம்புக்கு அதிகரித்தது.உடனே பைடன் ஆயுதங்கள் தரமாட்டேன் என்று பேசிய அடுத்த ஒரு வாரத்திலேயே இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பினார்.

அதே நேரத்தில் இந்தியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அதற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை வைத்திருந்தாலும் ஆயுத முதலாளிகள் நலக்காக பாலஸ்தீனர்களை பலி கொடுக்க இங்கிருந்து ஆயுதங்களை அனுப்ப அனுமதித்துள்ளது.

இந்த சூழல்களை இயக்கியல் படிவ ஆய்வு செய்து பார்க்கும் போது “மக்கள் என்றும் மக்களின் பக்கமே” “அரசாங்கங்கள் என்றும் முதலாளிகளின் பக்கமே” என்பதைத் தெள்ளத் தெளிவாக நமக்கு காட்டுகிறது.

யார் போரை நிறுத்துவது?

பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பது போல இந்த போரை யார் நிறுத்துவது என்று தற்போது  உருவாகி இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா தொடுத்த இனப்படுகொலை வழக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்கள் மீது கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தனியான பாதுகாப்பு படைகள் இல்லாத சூழலில் இவர்களை யார் கைது செய்வது ?

 ஹமாஸ் ஆதரவான ஈரான் அவர்களை கைது செய்ய மாட்டோம் என்ற நிலையில் இருக்கிறது. அதேபோல தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நேதன்யாகுவை கைது செய்ய மாட்டோம் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

இவ்வாறான சூழலில் சர்வதேச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் எந்த பலனும் இல்லாமல் தான் உள்ளது. ஆனாலும் போரை நிறுத்த முடியும்.

எப்படி?

தொழிலாளர்கள், பொது மக்கள், மாணவர்கள் ஒற்றுமை இருக்கும்போது நாம் ஒன்றிணைந்து பாலஸ்தீனத்தை ஆதரவாக குரல் கொடுக்கும் போது இந்த போரை நாம் நிறுத்த முடியும்.

இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தீவிர ஆதரவுகளுமே இனப்படுகொலையை தீவிரப் படுத்துகிறது. இந்த சூழலில் உலக நாடுகளின்  தொழிலாளர்கள் ஆயுதங்கள் உட்பட இஸ்ரேலுக்கு எந்த சரக்குகளையும் ஏற்ற மாட்டோம் இறக்க மாட்டோம் என்று ஒரு போராட்டத்தை துவங்கும் போது அது அந்நாடுகளுக்கு பெருத்த நெருக்கடியை கொடுக்கும். 

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் துறைமுக தொழிலாளர்கள் சங்கம்  இந்த முடிவை அறிவித்தது. அந்த அறிவிப்பு உலக அளவில் பெரும் எழுச்சியை கொடுத்தது.

அதேபோல ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நடத்துகிற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் அந்நாடுகளின் வெளியுறவு கொள்கையில் மாற்றத்தையும் , ஆட்சி மாற்றத்தில் வரக்கூடிய புதிய அரசாங்கத்திற்கு வெளியுறவு கொள்கைக்கான  பார்வையையும் ஏற்படுத்தி வருகிறது.

அரேபியா,ஐக்கிய அரபு அமீரகம்,ஜோர்டன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேல் – அமெரிக்காவின் கை பாவைகளாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அந்நாடுகள் மன்னர்களால் ஆளப்படுகிறது.

அந்நாடுகளிலும் ஜனநாயகப்பூர்வமான தேர்தல் இருக்குமேயானால் மக்களின் போராட்டம் இந்த அரசுகளை தூக்கி எறிந்து விட்டு ஆட்சி மாற்றத்தை கொடுக்கும் அல்லது இந்த அரசுகளையே இஸ்ரேல் – அமெரிக்காவின் இனப்படுகொலை ஆதரவுக்கு எதிராக கொண்டு சென்று நிறுத்தும். 

எனவே போரை நிறுத்த அரசுகளால் அல்ல மக்களால் தான் முடியும். மக்களின் போராட்டங்களும் அழுத்தங்களும் இந்த அரசுகளை போர் நிறுத்தம் என்ற இடத்திற்கு தள்ளும் எனவே மாணவர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் அரசு ஊழியர்கள் என அனைத்து வர்க்கமும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் ஒன்று திரண்டு குரல் கொடுப்போம்.

தௌ.சம்சீர் அகமது

மாநிலத் தலைவர் 

இந்திய மாணவர் சங்கம் 

Leave a Reply