சுயமரியாதையில் கிளர்ந்தெழுந்த வர்க்கப் போராட்டம்

கீழ்வெண்மணி. இந்திய வர்க்கப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத பெயர். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் அன்றைய தஞ்சை மாவட்டம், இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வெண்மணி எனும் ஊரில் சாதி ஆதிக்க பண்ணையார்களுக்கும் உழைக்கும் விவசாயக் கூலித் தொழிலாளர் வர்க்கத்திற்கும் இடையே நடைபெற்ற சுயமரியாதையுடன் கூடிய வர்க்கப் போராட்டத்தில் கோபாலகிருஷ்ண நாயுடு என்ற சாதி ஆதிக்க பண்ணையாரின் மனிதத்தன்மையற்ற செயலால் 44 பேர் பெண்கள் குழந்தைகள் உட்பட உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.இந்திய அளவில் தெலுங்கானா விவசாயிகள் வீர எழுச்சி,தெபாகா எழுச்சி போல கீழத்தஞ்சை விவசாயிகளின் எழுச்சியையும், கொடூரத்தையும் இந்தியா அறிந்தது.

நாற்பதுகளில் தொடங்கிய கீழத்தஞ்சையின் கம்யூனிஸ்டு இயக்கம் அன்று நிலவிவந்த பண்ணை அடிமை முறைக்கு எதிராக மக்களிடையே சமத்துவம் நோக்கிய விடுதலை உணர்வை விதைத்து. அதுவரை இந்திய விடுதலையை மட்டுமே பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிலேயே எல்லா மக்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.சமூக விடுதலை பற்றிய பேச்சே காங்கிரஸ் கட்சியில் இல்லை. மக்கள் அடிமையாய் இருக்கும் உணர்வின்றி இருந்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி கீழத் தஞ்சையில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் விடுதலைக்காக மிகப்பெரிய ஒருங்கிணைவை ஏற்படுத்தியது. அதுவரை அவர்களை எதிர்த்துப் பேசாதே கூலிகளிடம் “திருப்பி அடி” என்ற முழக்கத்தை கொண்டு எழுச்சியை ஏற்படுத்தினார் B.சீனிவாசராவ். தொடர்ச்சியாகப் பல ஆளுமைகள் உருவாகினர். மக்கள் விடுதலையை உரக்க பேசினர். கம்யூனிஸ்ட் கட்சி விவசாயத் தொழிலாளர்களை அரசியல் படுத்திய அதே காலத்தில் தந்தை பெரியாரின் இயக்கமும் “திராவிட விவசாய தொழிலாளர் சங்கம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி சுயமரியாதையை ஊட்டியது. செங்கொடியும் கருப்புக்கொடி சுயமரியாதையையும் சுரண்டலையும் சேர்த்தே எதிர்த்தன.இதன் தொடர்ச்சியாகப் பண்ணையார்களுக்கும், கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் 1968ல் நாற்பத்தி நான்கு உயிர்களை எரிக்கக் காரணமானது.

இதனை கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டம் என்று கூறி கூலி உயர்வோடு பேசுகின்றனர். தலித்தியவாதிகளோ சாதிய அடக்கு முறையின் கோரத்தாண்டவமே இப்படுகொலை என்கின்றனர். பெரியார் இயக்கத்திலும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரமாக இயங்கிய தோழர் ஏஜிகே என்கிற ஏஜி கஸ்தூரிரங்கன் பார்வையில் வெண்மணி சம்பவத்தை விளங்கிக்கொள்வது இக்கட்டுரையின் நோக்கம் .

வெண்மணிப் படுகொலை என்பது ஏதோ ஒரே நாளில் ஏற்பட்ட போராட்டத்தின் முடிவு அல்ல. எல்லோரும் சொல்வது போல் ஒரு படி நெல் கூடுதலாக கேட்டதற்காக அதாவது கூலி உயர்வு போராட்டத்திற்கு எதிராக மட்டுமே 44 பேர் எரிக்கப் படவில்லை. ஆனால் இங்கே பதியப் பட்டுள்ள வரலாறு அனைத்துமே புனைவாக, நூல்களில் கூலி உயர்வு மட்டுமே பதியப்பட்டுள்ளது. ஏஜிகே அவர்கள் கீழத்தஞ்சை மக்களின் சுயமரியாதை உணர்வை, சாதி எதிர்ப்பு உணர்வை, வெண்மணி நிகழ்வோடு தொடர்பு படுத்துகிறார். இது முதன்மையாக கவனம் கொள்ள வேண்டிய பார்வை. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டின் பிற பகுதிகளைவிட நாகை விவசாயக் கூலிகள் அதிக கூலியைப் பெற்றனர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் கொலைக்குப் பிறகான நீதிமன்ற சாட்சிகளின் கூற்றிலேயே இது பதிவாகியிருக்கிறது. கூலி உயர்வு கொடுப்பது பண்ணையாளர்களுக்கு பிரச்சனையே இல்லை ஒரு படி அல்ல இரண்டு படி கூடுதலாக கொடுக்கக்கூட அவர்கள் தயாராக இருந்தனர் பின்னர் ஏன் 44 பேரை உயிருடன் எரித்தனர்.?

வெண்மணி படுகொலையின் சூத்திரதாரியான கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான பிறகு உருவான கீழத்தஞ்சையே வரலாற்றிலும் புனைவுகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கூலித்தொழிலாளர்கள் செங்கொடி இயக்கத்தில் சேர்ந்து இருப்பதால் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பதும் கூலியை இவர்களே நிர்ணயிக்கும் மாற்றமும் உருவானது. இது பண்ணையார்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. பெண் விவசாயத் தொழிலாளர்களைப் பாலியல் ரீதியாகவும் பண்ணையார்கள் ஒடுக்கினர். வேலை செய்த கூலியை தாமதப்படுத்தி கொடுத்தனர். சூரிய உதயத்திற்கு முன் வயலில் இறங்கி சூரியன் மறைந்த பிறகு கரை ஏறினர். இவை எல்லாவற்றையும் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர். இந்த சுயமரியாதை உணர்வு தான் பண்ணையார்களின் எரிச்சலுக்கு முதன்மைக் காரணம் என்கிறார் ஏஜிகே. இதனை கிள்ளி எறிய அனைத்துக் கூலிகளையும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேர்க்க வேண்டுமென பண்ணையார்கள் முடிவு செய்தனர். ஆய்மழை மைனர் ராமநாத தேவர் சங்க தலைவர் ஆகிறார். ஒவ்வொரு ஊருக்கும் சென்று சாதி இந்துக்களை நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சேர்க்கிறார் இவரால் சாதி இந்துக்களை ஒருங்கிணைக்க முடியவில்லை.

நாகை தாலுக்கா முழுவதும் பண்ணையார்களுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன. பாடை கட்டும் போராட்டங்கள், முகத்தில் மலம் வீசுதல்,மலப் பானைகளை வீட்டு வாசலில் உடைத்தல் எனப் போராட்டங்கள் வித்தியாசமான முறையில் நடைபெறுகின்றன நாகை முழுதும் ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாகிறது. கூலித் தொழிலாளர்களுக்கும் பண்ணையார்களுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகமாகின்றன. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுகவின் முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெண்மணி நிகழ்வு நடக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே களச் சூழல் கடிதம் வடிவில் எழுதப் பட்டிருக்கிறது. பண்ணையார்கள் நிரம்பியிருந்த காங்கிரசை எதிர்த்து ஆட்சியைப் பிடித்த திமுக பண்ணையார்களின் அராஜகத்தை கண்டு கொள்ளாமல் மௌனம் காத்தது. இங்கேதான் பெரியாரின் வாரிசாய் ஆட்சியைப் பிடித்தவர்கள் ஏன் மௌனம் காத்தார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்

கோபாலகிருஷ்ண நாயுடு தலைவரான பின்னர் சாதி இந்துக்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட சமூக கூலித் தொழிலாளர்களையும் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேரச் சொல்லியும் செங்கொடியை இறக்கச் சொல்லியும் கட்டாயப்படுத்தினர். கூலித் தொழிலாளர்கள் மறுத்தனர் விளைவு, எல்லோரும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்காக கேரளா சென்றிருந்த நாளில் திட்டமிட்டு கிசான் போலீஸ் உதவியோடு அடியாட்களுடன் சென்று கீழ்வெண்மணியில் வீடுகளை சிதைத்து 44 பேரை தீக்கிரையாக்கிய சம்பவம் நடந்தது இதுவே கீழ்வெண்மணியில் வரலாறு.

வர்க்கப் போராட்டத்தில் உயிர்நீத்த நாற்பத்தி நான்கு பேருமே ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பது கொண்டு இதனை சாதிப் பிரச்சனையாக முன்வைப்பதன் வலியைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில் தலித்துகள் என்பதற்காக அவர்கள் கொல்லப்படவில்லை ஒரு தலித் சுயமரியாதை உணர்வு பெற்று சுரண்டல் குறித்த அறிவு பெற்று காலங்காலமாய் அனுபவித்த ஆதிக்க கொடுமையை கேள்விக்குள்ளாக்குகிறானே என்ற அதிகார வர்க்க மனோபாவமே படுகொலைக்கு காரணம்.

வர்க்கப் போராட்டத்திற்கு சாதியால் ஒடுக்கப்பட்டு இருப்பவனின் சூழலையும் வரலாறையும் உள்வாங்கிக்கொண்டு வர்க்கப் போரை சமரசமின்றி முன்னெடுத்துச் செல்வதே வெண்மணி தியாகிகளுக்குச் செலுத்தும் அஞ்சலி.

உ.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை..

2 thoughts on “சுயமரியாதையில் கிளர்ந்தெழுந்த வர்க்கப் போராட்டம்

  1. கம்யூனிசம் கட்சியில் உறுப்பினராக என்ன செய்ய வேண்டும்

  2. நீங்கள் வசிக்கும் பகுதியில் யாராவது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் இருந்தால் அவரை அனுகலாம்.அல்லது Dyfi Sfi Citu போன்ற துணை அமைப்புகள் இருந்தால் அதில் இணையலாம். அல்லது நீங்கள் எந்த ஊர் என்று தெறியப்படுத்துங்கள் நாங்கள் உதவுகிறோம்..

Leave a Reply