ஜோசப் ஸ்டாலின் என்றதும் இடது சாரி தோழர்கள் பலரிடமும் கூட ஒரு வித புரிதல் குறைபாடு ஏற்பட்டு “அவர் சர்வாதிகாரின்னு எல்லாரும் சொல்றாங்களே” என்று பதட்டத்தோடு கேட்கும் சூழல் இருக்கிறது.
அப்படி யாராவது உங்களிடம் கேட்டு நீங்கள் பதட்டமானீர்கள் என்றால் அவர்களிடம் பதட்டமின்றி சொல்லுங்கள், “ஆம் எங்கள் தோழர் ஸ்டாலின் சர்வாதிகாரிதான்” என்று. மகிழ்ச்சியோடும் பெருமையோடும் சொல்லுங்கள் “எங்கள் தோழர் ஜோசப் ஸ்டாலின் சர்வாதிகாரிதான், சாதாரண சர்வாதிகாரி அல்ல மொத்த முதலாளித்துவ உலகையும் தலைதெறிக்க ஓடவிட்டு இன்று வரை அவர் பெயரை கேட்டாலே முதலாளித்துவம் அதிரக்கூடிய பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரி” என்று பெருமிதத்தோடு சொல்லுங்கள்.

தோழர் ஸ்டாலின்.
ஒரு பூதம் ஐரோப்பாவை மிரட்டுகிறது என்று பேராசான்கள் மார்க்ஸ் – ஏங்கெல்ஸை கண்டு ஐரோப்பிய முதலாளித்துவம் அஞ்சி நடுங்கியது. அந்த கம்யூனிச பூதத்தின் 20ம் நூற்றாண்டின் மனித முகம்தான் தோழர் ஸ்டாலின்.
புரட்சிகர தத்துவம் ஒன்று பாட்டாளி வர்க்கத்தை ஆட்கொண்டால் அது ஆயிரம் அணுகுண்டுகளை விட அதிக ஆற்றல் கொண்ட சக்தியாக மாறும் என்பதற்கு தலைசிறந்த உதாரணம் அவர்.இரும்பு மனிதர் என்கிற பொருள் படக்கூடிய ஸ்டாலின் என்கிற பெயருக்கு 100% பொருத்தமான ஒரு நபர் அவர் மட்டுமே. அவர் பாட்டாளி வர்க்க பின்னனியிலிருந்து வந்தவராக இருந்ததால் புரட்சிகர பாட்டாளிவர்க்க குணாம்சத்தில் இறுதி வரை எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல், உலகில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட்களுக்கும் பாட்டாளி வர்க்க உணர்வோடு சமரசமின்றி எப்படி வாழவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இன்றுவரை திகழ்கிறார்.
தோழர் ஸ்டாலின் வாழ்க்கை என்பது மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு புரட்சிக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கிற ஒவ்வொரு தோழர்களுக்குமான அரசியல் பாடமாகும்.
தோழர் லெனின் வாழ்ந்த காலத்திலும் சரி, அவரது மறைவிற்கு பிறகும் சரி மார்க்சியத்தின் மாணவனாகவும், லெனினியத்தின் தளபதியாகவும் திகழ்ந்தவர். லெனினியத்துக்கு மாற்றாக ட்ராஷ்கியமே என விஷம பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த ட்ராஷ்கியிடமிருந்து லெனினியத்தை பாதுகாக்க 1924 ம் ஆண்டு தோழர் ஸ்டாலின் எழுதி வெளிவந்த “லெனினிசத்தின் அடிப்படைகள்” என்கிற நூல் அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு
மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள மார்க்சிஸ்டுகளுக்கும் அந்த நூல் சித்தாந்த ஆயுதமாக அமைந்தது , லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் , பாட்டாளி வர்க்கப் புரட்சி மற்றும் ஏகாதி பத்தியத்தின் நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சிய சித்தாந்தத்தை செழுமைப்படுத்த லெனின் ஆற்றிய பங்களிப்பு பற்றியும் இதில் ஸ்டாலின் விளக்கினார் .
மார்க்சியத்தின் அடிப்படை அம்சமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தையும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் எளிமையான வழியில் தெளிவாக விளக்கிய “இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்” என்ற நூலையும் தோழர் ஸ்டாலின் எழுதி வெளியிட்டார்.
இதுமட்டுமல்லாமல் முதலாளித்துவ சமூக மாற்றக்காலத்தில் ஏற்படக்கூடிய தேசிய இனப்பிரச்சனைகள் பற்றிய மார்க்சிய-லெனினியத்தின் தெளிவான நிலைப்பாட்டையே ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி தனது கட்சி திட்டத்திலும் ஏற்றது. அதன் படியே புரட்சிக்கான தேசிய இன அணித்திரட்டல்கள் நடந்த்து. மேலும் பாட்டாளி வர்க்க கட்சியின் ஸ்தாபனம் பற்றி , மொழி குறித்தான மார்க்சிய பார்வை என நவீன முதலாளித்துவ உலகில் மார்க்சிய கட்சி ஒன்று மக்களை புரட்சிக்கு அணிதிரட்டும் பணியில் எதிர்கொள்ள வேண்டிய அனைத்து பிரச்சனைகளையும் பற்றி தோழர் ஸ்டாலின் நடைமுறையில் கற்றுணர்ந்த மார்க்சிய-லெனினியத்தினை அடிப்படையாகக்கொண்டு உலகத்தின் பாட்டாளி வர்க்க விடுதலைக்காக போராடுகின்ற அனைத்து தோழர்களுக்கும் வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்.
தத்துவார்த்த துறையில் மார்க்சிய – லெனினியத்தை தகர்க்க நடந்த சதிகளையும், அரசியலில் இழந்த அதிகாரத்தை மீட்க முன்னாள் ஆளும் வர்க்கம் உள்ளுக்குள் நிகழ்த்திய சதி புரட்சிகளையும்,ஏகாதிபத்தியங்கள் வெளியிலிருந்து நிகழ்த்திய தாக்குதல் என மூன்று முனைகளிலிருந்து வந்த தாக்குதல்களை எதிர்கொண்டு கட்சியையும், ஆட்சியையும் மார்க்சியத்தின் துணைக்கொண்டு மாபெரும் சோவியத் ரஷ்யாவை தோழர் ஸ்டாலின் வழிநடத்தினார்.
இத்ததைய கடுமையான சூழல்களை இளம் ரஷ்ய சோசலிச அரசு எதிர்கொண்டிருந்த சூழலில் இரண்டாம் உலகப்போரும் அணி சேர்ந்து கொண்டது. அதில் ஏகாதிபத்தியங்களால் சோவியத் ரஷ்யா உள்ளிளுக்கப்பட்டது.அந்த போரில் உலகையே அழிக்க நினைத்த பாசிச ஹிட்லரையும் வீழ்த்தி உலகையும் பாதுகாத்தது தோழர் ஸ்டாலினின் தலைமையிலான ரஷ்ய செம்படைகளே.
சோவியத் ரஷ்யாவை மட்டுமல்ல உலகின் அனைத்து நாட்டு மக்களையும் தங்கள் இன்னுயிரை ஈந்து பாதுகாத்த பெருமை தோழர் ஸ்டாலினின் தலைமையிலான சோவியத் ரஷ்ய செம்படைகளை மட்டுமே சேரும். அந்த தியாகத்தின் விளைவாகத்தான் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து உலகம் அமைதியானது. மொத்த உலகமும் தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செம்படையின் தியாகத்தால் மார்க்சியத்திற்கு கடமைப்பட்டுள்ளது.
மார்க்சிய-லெனினியத்தின், சோவியத் ரஷ்யாவின், உலக பாட்டாளி வர்க்க இயக்கங்களின், உலகில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாவலராகவும், உற்ற தோழராகவும் திகழ்ந்த மகத்தான பாட்டாளி வர்க்க படையின் சிம்ம சொப்பனமான தோழர் ஸ்டாலின் பிறந்த தினம் இன்று(21.12.1978). தோழர் ஸ்டாலினின் பிறந்த தினத்தில் அவர் போதித்த பாட்டாளி வர்க்க உணர்வோடு சமரசமின்றி புரட்சிகர கட்சியை வழிநடத்தி பாட்டாளி வர்க்க புரட்சியை நிகழ்த்திட உறுதியேற்போம்..
சே.ரா.
Wow Super ஸ்டாலின் சிறந்த கம்யூனிஸ்ட்