மார்க்சிய எழுத்தாளரும், இலக்கிய ஆர்வலருமான பிரட்ரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்திலும், ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை அவதானித்த அனுபவங்களை பயன்படுத்தி கம்யூனிச சமுதாயத்தை அடைய உழைக்கும் மக்களுக்கு புரட்சியின் அவசியத்தை உருவாக்கினார்.
அவரது முதல் புத்தகமான “பிரிட்டிஷில் உழைக்கும் வர்க்கத்தின் நிலைமை” என்பதில் தொழிலாளர்கள் அனுபவித்த மோசமான நிலைமைகள் குறித்து விரிவான விவரங்கள் அடங்கிய தொகுப்பாக அப்புத்தகம் வெளியானது. இது பிரிட்டனில் தொழில்மயமாக்கலை இதுவரை கண்டிராத ஜெர்மன் பார்வையாளர்களுக்கு பாட்டளிகளின் வேறொரு பரிமாணத்தை கண்முன் காட்டியது. ஆனால் இந்த புத்தகம் தொழிற்சாலை வாழ்க்கை முறையின் உண்மைகளை வெளிகொண்ரும் ஒரு முக்கியமான பார்வை கொண்ட புத்தகமாக இருந்தது. முதலாளித்துவ சமூகத்தின் முரண்பாடுகள் அதற்கான வழியை தயார் செய்வதாக நம்பிய ஏங்கெல்ஸ், அங்கே ஒரு புரட்சியை எதிர்நோக்கி காத்து இருந்தார்.
கார்ல் மார்க்ஸூடன் வாழ்நாள் முழுவதும் நட்புடன் இருந்த ஏங்கெல்ஸ், அவருடன் சேர்ந்து வரலாற்று பொருள்முதல்வாத கோட்பாட்டை உருவாக்கினார். ஏங்கெல்ஸ் எழுதிய ‘இயற்கையின் இயங்கியல்’ எனற நூல் வரலாற்று பொருள்முதல்வாதத்தை அறிவியில் ரீதியாக பயன்படுத்த வழிகோலியது. மனித பரிணாமத்தின் வளர்ச்சிக்கு கூட உழைப்பு எவ்வளவு இன்றியமையாதது என்பதை ஏங்கெல்ஸால் காட்ட முடிந்தது.
ஐரோப்பா முழுவதும் கிளர்ச்சி நிகழ்ந்து கொண்டிருந்த சமயமான, 1848-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்சும், ஏங்கெல்சும் எழுதி வெளியிட்டனர். பிரான்சில் ஏற்பட்ட கிளர்ச்சி அடக்குமுறையினால் ஒடுக்கப்பட்டது. இந்த ஒடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஏங்கெல்ஸ், பாட்டாளி வர்க்கம் ஒரு தனி வர்க்கமாக அவர்களுக்கு எதிராக தனது நிலைபாட்டை எடுக்கத் துணிந்த தருணத்தில் அவைக்கு பல பைத்தியக்காரத்தனமான பழிவாங்கும் கொடுமைகளையெல்லாம் முதலாளித்துவம் செய்து காட்டியது”. அந்த நேரத்தில் ஐரோப்பா முழுவதிலும் நடந்த பல்வேறு உச்சகட்ட போராட்டங்கள் பற்றிய அவரது அவதானிப்புகள் உண்மையான மாற்றத்தை கொண்டு வருவதில் பணியாற்றுவதன் மையநோக்கத்தை அவருக்கு கற்றுக்கொடுத்தது.
1860-ம் ஆண்டில், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் சர்வதேச உழைக்கும் ஆண்கள் சங்கத்தில் கலந்து கொண்டனர். பின்னர் இதுவே முதல் சர்வதேச சங்கம் என்று அழைக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை ஒன்றிணைத்தது. இச்சங்கத்தின் செயலாளராகவும் ஏங்கெல்ஸ் இருந்தார். இதே சமயத்தில்தான் ஏங்கெல்ஸின், “பிரிட்டிஷில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை” என்ற புத்தகத்தில் இருந்து பல்வேறு குறிப்புகளுடன், மார்க்ஸ் தனது மூலதனம் நூலின் முதல் தொகுதியை எழுதி முடித்தார்.
1883-ம் ஆண்டு மார்க்சின் மரணத்திற்கு பிறகு அவர் எழுதி வெளியிடாமல் இருந்த பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் திருத்தி எழுதும் பணிகளில் ஏங்கெல்ஸ் ஈடுபட்டார். இந்த சமயத்தில் குடும்பம், தனிச்சொத்து மற்றும் அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற புத்தகத்தை ஏங்கெல்ஸ் எழுதினார். குடும்பத்தின் தோற்றம், குடும்பங்கள் வரலாற்று ரீதியாக எவ்வாறு மாறியது? வர்க்க சமூகத்தின் வளர்ச்சியுடன் பெண்கள் மீதான ஒடுக்குமுறை எவ்வாறு எழுந்தது என்பதையும் விரிவாக விளக்கி அவர் எழுதினார்.
விவசாய முறைகளில் நிகழ்ந்த வியத்தகு மாற்றங்கள், குடியேறிய சமூகங்களுக்கு வழிவகுத்தது. மக்கள் குறிப்பாக குடும்பங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டன என்பதில் அவை தாக்கங்களை ஏற்படுத்தியது. “மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை எப்படி மாற்றினார்கள், அது அவர்களோடு சேர்த்து சொந்த சமூகத்தையும் மாற்றியது” என்பதை ஏங்கெல்ஸ் இப்புத்தகத்தில் வெளிச்சம் போட்டு காட்டினார்.
உண்மையான அன்பைத் தவிர வேறு எவற்றில் இருந்தும் ஒரு ஆணுக்கு தம் பங்களிப்பு என்னவென்று அறியாத பெண்களின் இந்த தலைமுறை ஒரு புதிய சமுதாயத்தை அடைய போராடுவதாக ஏங்கெல்ஸ் கூறினார். குடும்பத்தின் தோற்றம் குறித்து எழுதும் அதே நேரத்தில், மூலதனத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் தொகுதிகளை முடிக்க மார்க்சின் நூல் குறிப்புகளை ஏங்கெல்ஸ் பயன்படுத்தினார். தொழிலாளி வர்க்கத்தை மாற்றத்திற்கான முகவராக விளக்குவதற்கு ஏங்கெல்சின் புரட்சிகரமான படைப்புகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.