“வர்க்க பகைமைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து அரசு தோன்றுகிறது. அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அரசு தோன்றியது.
அரசு தோன்றிய காலத்திலிருந்து போலீஸ் படை இருந்து வந்தது… போலீஸ் படை இல்லாமல் ஒரு அரசு இருக்கமுடியாது” . – பேராசான் ஏங்கெல்ஸ்
அரசு இயந்திரத்தின் அங்கமாக இருக்க கூடிய சிறை வாயிலிலிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளிவரும் சிறைவாசிகள் சாதி பெயரை அதிகாரிகள் கேட்கின்றனர். அதில் முதலில் வரும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்ட நபர் ஆரவாரத்தோடு சொல்லி கடந்து செல்கிறார். மேல்சாதி, இடைசாதிகாரர்களும் கடந்துசெல்ல குறவர், இருளர், ஒட்டர் போன்ற ஓடுக்கப்பட்ட பழங்குடியினரை நமது நண்பர்களாகிய காவல்துறை தங்களின் பதவி உயர்வுக்காகவும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்காகவும் தங்களுக்குள் பேரம் பேசி அந்த அப்பாவி மக்களை வண்டியில் வழுக்கட்டாயமாக ஏற்றிச்செல்லும் போது “என் பொண்டாட்டி பிள்ளைகளை பாத்துக்கப்பா இந்த போலிஸ் காரங்க என்ன வாழவிடமாட்டாங்க” என்று கைதான ஒருவரின் குரல் உடைந்த சத்தத்துடன் படம் துவங்குகிறது.
ஜெய் பீம் படத்தின் மொத்த கதையின் சாராம்சம் இந்த முதல் காட்சியில் உள்ளது. நாம் வாழும் இந்த ஜனநாயகத்தின் கால்கள் யாருடைய தலையின் மேல் நின்று கொண்டு தன்னை புனிதமாக காட்டிக்கொள்கிறது என்பதற்கான சாட்சியே இந்த முதல் காட்சி. இருளர் இனமக்கள், தமிழகத்திலும் கேரளத்திலும் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள். எல்லா பழங்குடி குழுக்களைப் போலவே இவர்களும் காடு, வேட்டை, தேன் எடுத்தல், என இயற்கை வழிப்பட்ட பகிர்ந்து வாழக்கூடிய கூட்டுச்சமூக வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளனர்.
சமூக மாற்றத்தால், நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்த மன்னர்களின் (சோழர்கள்) படைகளில் படைவீரர்களாக சேவகம் செய்யும் நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலனித்துவத்தில், தங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த பழங்குடியினர்களை பிரிட்டிஷாரால் அடக்கமுடியவில்லை. மேலும் இந்திய சமூக அமைப்பும் அவர்களை ஒதுக்கி ஒடுக்கிய நிர்பந்தத்தால் அவர்கள் செய்த குற்றங்களை காரணம் காட்டி அந்த மக்கள் மீது குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தி கொடூரமான கைரேகை சட்டத்தை அமல் படுத்தி நரவேட்டையாடியது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி. இந்த அடக்குமுறைக்கு இருளர்களும் தப்பவில்லை.
சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஓடியும் இன்னும் இவர்களை போன்ற பழங்குடிகளுக்கு வாழ்வு விடியவில்லை. இன்றும் இவர்கள் எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது, தேன் எடுத்தல், வேட்டையாடுவதையும் மிகச்சிலரே விவசாயம், மேலும் அரிசி ஆலை மற்றும் செங்கல் சூளைகளிலும் கொத்தடிமைகளாக உழைக்கும் அம்மக்களின் வாழ்க்கை போராட்டத்தை எதார்த்தமாக காட்டியுள்ளது ஜெய்பீம். கதைகளம் 1995-ல் கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட புனைவு என்றபோதும் பல உண்மைகளை எவ்வித தயக்கமுமின்றி எடுத்து பேசியுள்ளனர்.
அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்திற்கும், பணத்தாசைக்கும் அடிபணியாமல் தங்களுக்கு நேர்ந்த கொடும் துயரத்திற்கு எதிராக நீதி வேண்டிய அம்மக்களின் போராட்ட உறுதியை காட்சிபடுத்தியுள்ள விதம் அருமை. மேலும் அம்மக்களிடையே இந்த மன உறுதி உண்டாவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு அளப்பரியது. ஆம். “அறிவொளி இயக்கம்” இல்லாவிட்டால் அம்மக்களுக்கு கல்வி பற்றியோ, நிலப்பட்டா பற்றியோ விழிப்புணர்வு ஏற்பட்டிருக்காது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என்றால் வழக்கறிஞர் சந்துருவிடம் இந்த வழக்கு வந்திருக்காது. முற்போக்கான இடதுசாரிய சிந்தனை கொண்டு போராடக்கூடிய தோழர் சந்துரு இல்லை என்றால் இந்த சட்ட போராட்டமும் வெற்றியடைதிருக்காது. ஒரு ரூபாய் கூட வாங்காது இந்த வழக்கை ஏற்று நடத்தியது என்பது இந்த வழக்கை தனக்கு அனுப்பியுள்ள தோழர் ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மீதுள்ள அவரின் நம்பிக்கையை காட்டுகிறது. முற்போக்காளர்களையும், கல்வியாளர்களையும் கொண்ட ‘அறிவொளி இயக்கம்’ ‘பழங்குடி இருளர் மக்கள் சங்கம்’ மற்றும் அதில் செயல்படும் பேராசிரியர் பிரபா கல்விமணியையும் (கல்யாணி) திரையில் காட்டியது இப்படம் தான் என்பதும் குறிப்பிட்டதக்கது.
இப்படியான அம்மக்களின் வாழ்நிலை, அவர்களை இந்த ஆதிக்க சாதிய சமூகம் நடத்தும் விதம், செங்கற்சூளை மற்றும் அரிசி ஆலையிலும் அவர்களை சுரண்டி வெறும் கொத்தடிமைகளாக வைத்திருக்கும் நிலை, சொத்துடைமை கொண்ட ஆதிக்க சாதியின் பிரதிபலிப்பாக இருக்கும் காவல்துறையின் அடக்குமுறை, மேலும் உண்மையான திருடர்களுடன் செய்து கொள்ளும் உடன்படிக்கை என திரைமறைவு விஷயங்களையும், நம் அன்றாட வாழ்வில் எதார்த்தத்தில் இருக்க கூடிய நவீன தீண்டாமையையும் ஒடுக்குமுறையையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இவ்வாறான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக எந்த வாக்கரசியல் கட்சியும் போராடவில்லை இடதுசாரி கட்சி என்ற ஒன்றை தவிர. அம்மக்களில் பாதிக்கும் மேலானவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை அதனால் அவர்கள் நமக்கு பிரயோஜனம் இல்லை என்று எண்ணி பிற கட்சிகள் போராடவில்லையா? என்பது மக்களுக்கே வெளிச்சம். ஆனால் இது போன்ற சந்தர்ப்பவாத ஆதாயம் தேடுவது, வாக்கரசியலுக்காக மட்டுமே செயல்படுவது என்பது கம்யூனிஸ்ட் கட்சியிடமோ அதன் வெகுஜன அமைப்பிடமோ கிடையாது. பாதிக்கபபட்ட மக்களின் பக்கம் நிற்பதே அதன் பிரதான நோக்கம்.
“கோர்டல நீதி கிடைக்கலனா ரோட்ல இறங்கி போராடுவேன் போராடுறதுக்கு law எனக்கு ஒரு weapon” என பேசும் வழக்கறிஞர் சந்துருவின் கதாபாத்திரம் முற்போக்கானதாக, இடதுசாரிய சிந்தனை கொண்டதாக உண்மை சம்பவத்தில் வரும் நீதியரசர் சந்துருவின் சமூக வாழ்வை பிரதிபலிப்பதாக உள்ளது. இதில் வரும் அறிவொளி இயக்கத்தை சார்ந்த பெண் கதாபாத்திரத்தையும், பவா செல்லதுரை ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தையும் இன்னும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த உண்மை சம்பவம் இன்று எல்லாருக்கும் தெரியவும், பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவும் தொடக்கப்புள்ளியாக இருந்தவர்கள் தோழர் கோவிந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அப்போதைய விருத்தாசலம் மாவட்ட செயலாளராக இருந்த தோழர் கே. பாலகிருஷ்ணன் ( தற்போது மாநில செயலாளர்) இவர்களின் பிரதிபலிப்பே அந்த இரண்டு கதாபாத்திரங்களும். இந்த வழக்கை முடிக்கும் வரை திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று 39 வயது வரை உரிய நீதிக்காக களத்தில் போராடியவர் தோழர் கோவிந்தன்.
கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் காவல் துறை SI குருமூர்த்தியாக நடித்திருக்கும் தமிழும், லிஜோமொல் ஜோஸ் (செங்கனி), மணிகண்டன் ( இராஜகண்ணு) இவர்களின் நடிப்பு பிரம்மிப்பாக உள்ளது. மணிகண்டனின் உடல் மொழி கணக்கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்துகிறது. எல்லா நடிகரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
அறிமுக காட்சியில் சூர்யா காவல் தடுப்பை தாண்டி குதிக்கவும் சண்டைக்காட்சிகள், பஞ்ச் டயலாக் என இதுவும் ஒரு மாஸ் ஹீரோ பாடமாக போய்விடுமோ என்று தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் பொருத்தமான, அதிக ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் இப்படியான கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிப்பாரா என்றால் அது தமிழ் சினிமாவில் அரிதான ஒன்று தான். வசனங்களின்போதும் மற்ற இடங்களிலும் மன உணர்வுகளை முக பாவனையில் எதார்த்தமாக பிரதிபலித்து தன்னுடைய நடிப்பில் மீண்டும் ஒரு நல்ல படைப்பை தந்திருக்கிறார் சூர்யா. மேலும் எங்கே கட்சி சாயல் பூசப்பட்டுமோ அது மூலம் வியாபாரத்தை பாதிக்குமோ என்றெல்லாம் எண்ணாமல் உண்மையின் பக்கம் நின்று முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இந்த படத்தில் நடித்து தயாரித்தமைக்கு நடிகர் சூர்யாவிற்கு நன்றி.
சாப்பிட முடியாத அளவிற்கு அடிவாங்கியபிறகும் “இந்த அடி காயம் எல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிப்புடும் ஆனா திருட்டு பட்டம் காலத்துக்கும் தங்கிடும்” என்ற வசனம் குற்றப்பரம்பரை என்ற கொடுமையை தாங்கி நிற்கும் சமூகத்தின் வைராக்கியத்தையும் “இந்த கையாள எம்மா செங்கல் அறுத்துருப்பேன் ஒரு கல்லுசுவரு வச்சு வூடு கட்டமுட்ல” என்ற வசனம் உழைத்து உழைத்து உடைமைகளும் உரிமைகளும் இல்லாத வர்க்கத்தின் ஆதங்க குரலாகவும் ஒலிக்கிறது. சிறையில் இராஜாக்கண்ணு அக்காவிற்க்கு நேர்ந்ததை காண்பிக்கும் போது 1990 காலகட்டத்தில் வீரப்பன் தேடலின் போது வாச்சாத்தி, சின்னாம்பதி போன்ற இடங்களில் நடந்த வன்கொடுமைகளை நம் கண்முன் நிறுத்துகிறது. போலீஸ் நடத்தும் வன்முறைகளை பிரயோகிக்கும் காட்சியை விட தாங்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று சங்கத்தில் அம்மக்கள் காவல்துறை அதிகாரியிடம் விவரிக்கும் போது நம் மனதை உலுக்குகிறது.
இக்கொடுமைகளுக்கு எதிரான இடதுசாரிகளின் சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் எதிராக மக்களாகிய நாம் அடையாளங்கள் கடந்து அணிதிரள வேண்டும் என்பதை திரைக்கதை வாயிலாக எடுத்துரைத்துள்ளார் இயக்குனர்.
இறுதிகாட்சியில் ராஜாக்கண்ணுவின் மகள் மூலம் ஆணாதிக்க மனோபவத்தை உடைத்து காண்பிக்கும் காட்சியில் லெனின் சிலையை காட்சிப்படுத்தியது அதற்கு கூடுதல் அழகியலையும் அர்த்தத்தையும் சேர்க்கிறது. ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக மானுட விடுதலையை நோக்கிய சமூகத்தை செயல்பூர்வமாக அதை நிகழ்த்தி குரலற்றவர்களின் குரலாக, இருளில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு அங்கீகாரம் வெளிச்சமாக மிளிர்ந்த ஆசான் லெனின் சிலையை தவிர வேறு யார் சிலையை இங்கு வைக்க முடியும்.!
” புரட்சி பாதையில் கைத்துப்பாக்கியை விட புத்தகங்களே பெரிய ஆயுதம்”
– ஆசான்.லெனின்