‘காந்தாரா’ – கலை விமர்சனம்

“இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவுசிக்கலே”, காந்தாரா திரைப்படம் என படத்தின் இயக்குனர், நடிகருமான ரிஷப் ஷெட்டி கூறியிருந்தார்.

கன்னடத்தில் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வெளியான திரைப்படமான ‘காந்தாரா’ தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடும் அளவிற்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. பிரிட்டிஷ் ஆளுகையில் இருந்த சிற்றரசர்களின் மனகலக்கம், பழங்குடியின மக்களின் குலசின்ன வழிபாடு என தொடங்கி நிலச்சுவன்தார்களின் அடிமை முறை, சாதிய தீண்டாமை, தொல்குடிகள் மீதான அரசின் அடக்குமுறை என பல்வேறு கால கட்டங்களின் பரிமாணத்தில் படம் நீள்கிறது.

மன்னனின் மனகலக்கத்தை போக்கிய பழங்குடியின மக்களின் தெய்வமான (பஞ்சுர்ளி) அதற்கு ஈடாக அம்மக்களுக்கு காட்டினை கொடையாக வழங்க கோருகிறது. மன்னனும் அதை ஏற்கிறான். பின்னாட்களில் அரசனின் வாரிசுகள் பழங்குடி மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிக்க நினைத்து அம்முயற்சியில் தோற்றும் போகின்றனர். இது பஞ்சுர்ளி தெய்வத்தினை பகைத்ததால் நடந்தது என ஊர்மக்கள் மத்தியில் புராண கதைகள் நிலவுகின்றன.

90-களுக்கு பிறகு மன்னனின் வாரிசுகளுக்கு மீண்டும் நிலத்தின் மீதான ஆசை பிறக்கிறது. அதை ஜமீன்தார் அடைந்தாரா? பழங்குடியினர் தங்கள் நிலத்தை எப்படி பாதுகாத்தனர்? இதற்கு நடுவில் வனப்பகுதியை பாதுகாக்க அரசாங்கம் எடுக்கும் அடக்குமுறைகள் என்பதே கதைகளம்.

நில அரசியலை மையமாக வைத்து பல சினிமாக்கள் வந்திருக்கிறது. நிலப்பிரபு – கூலி விவசாயி, கார்ப்பரேட் – விவசாயி, அரசியல் – மக்கள் – கார்ப்பரேட் என திரும்ப திரும்ப இதே பாணியில் வந்திருந்தாலும் அனைத்திலும் தனிநபர் சாகசவாதமே நிரம்பிருந்தது. ‘காந்தாரா’ இதிலிருந்து வேறுபட்டு மக்களின் கடவுள் நம்பிக்கையின் ஊடாக நில அரசியலை கையாண்ட விதத்தில் கவனம் ஈர்க்கிறது. மதம் என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டது என பொருள்முதல்வாதிகளால் வரலாற்றின் வழியே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சுர்ளியான (வராக தெய்வம்) தங்கள் இருப்பிடம் சார்ந்த கடவுளாக வழிபட பட்டு வந்துள்ளது. படத்தில் பஞ்சுர்ளியின் மதிப்பை உணர்த்துகின்ற இயக்குனர், அது உருவான விதத்தையும் காண்பித்திருக்கலாம். ஏனெனில் படத்தின் முடிவில் மதம், கடவுள் என்பவையெல்லாம் சமூகத்தில் நிலையான தாக்கம் செலுத்தக்கூடிய விஷயங்களாக பார்வையாளர்கள் மனதில் பதிகிறது.

திரைப்படத்தின் இசை, கலை, வடிவமைப்பை கொண்டாடும் பலரும் கதைக்களம் உணர்த்துகின்ற ஒர் உண்மையை குறித்தே பேசு பொருளாக்கவே இல்லை. நிலபிரபுத்துவத்தை எதிர்க்கும் நவீன அரசு எந்திரம் (கார்ப்பரேட்) மக்களை எவ்வாறு பயன்படுத்தியிருக்கிறது என்பதுதான். முதலாளித்துவவாதிகளின் கோஷமான வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற வழக்கமான பாணியை மக்களிடம் கடுமையான அடக்குமுறையின் மூலம் திணிக்க நினைத்து, வனப்பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடியின மக்களை வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற அரசு முயல்கிறது. ஆனால் அது ஒருகட்டத்தில் நிலப்பிரபுவின் ஆதிக்கத்திற்குள் சிக்குகிற நிலை ஏற்படுவது என்பது இந்தியாவில் ஆளும் வர்க்கங்களால் சரிவரசெய்யப்படாத நிலச்சீர்திருத்த முறையினை வெட்ட வெளிச்சமாக கண்முன் காண்பிக்கிறது.

எந்தவித படிப்பறிவும் இல்லாத மக்களின் நிலைமையை உணரும் நிலபிரபுத்துவம் அதனை சாதகமாக உணர்கிறது. ஆனால் நவீன முதலாளித்துவமோ அதை அம்மக்களின் குறைபாடாக கருதி அவர்களுக்கான கல்வியை புறம் தள்ளுகிறது. “வன அதிகாரி ஒருவர் மக்களின் சம்மதத்தை பெற சொல்லும்போது இவர்களெல்லாம் பைத்தியக்காரர்கள், மிருகத்தனமானவர்கள்” என்ற வசனம் பழங்குடியின மக்களின் கல்வி முன்னேற்றத்தில் அரசின் போதாமையை உணர்த்துகிறது. இது அம்மக்களில் கல்வியறிவு பெற்ற ஒருவரின் செயல்பாடுகள் கல்வி, அரசாங்க உத்தியோகங்கள் அவர்களுக்கே விரோதமானவர் என்ற நிலைபாட்டை எடுக்க வைக்கிறது. நவீன தாராளமய காலத்தில் இதெல்லாம் எத்தனை ஆபத்தானவை.

தங்களின் நிலங்களை பாதுகாக்க அம்மக்கள் போராடுகின்ற போது அரசாங்க விரோதிகள் என பொய் வழக்குகளை போட்டு சிறையில் அடைக்கும் அரசாங்கம் படத்தின் இறுதியில் தங்களின் நோக்கம் ஈடேற நல்லவர், புனிதர் வேடம் தரித்திருப்பது முரண். நிலபிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறியும் உழைக்கும் மக்களின் போராட்டத்தை அரசாங்கம் பயன்படுத்தியதெல்லாம் வரலாறு நெடுகிலும் நாம் கண்டவைதான்.

இந்தியாவில் பெரும்பான்மை மதத்தின் பெயரில் உழைக்கும் மக்கள் மீது நடத்தும் சுரண்டலான நவீன தாராளமய காலத்தில், மக்களின் இறுதி நம்பிக்கை, விடுதலை என்பது தாங்கள் வழிபடும் கடவுளினால்தான் சாத்தியம் என்பதாக படம் முடிகிறது. பலரும் படத்தில் காட்டப்படும் வழிபாட்டு நம்பக்கையை Mythology ( உண்மை இல்லாத நம்பிக்கையின் வெளிப்பாடு) என வாதிட்டாலும், இன்றைய வலதுசாரி அடையாள அரசியலுக்கு அது எத்தகைய பலம் கொடுக்க கூடும்? இன்னொன்று கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக வன பாதுகாப்பு சட்டத்தையே நீர்த்து போகச் செய்திருக்கிற பாஜக ஆட்சியின் காலத்தில் பழங்குடியின மக்களின் நல்வாழ்விற்காகவே அரசாங்கம் அவர்களை சமவெளியில் குடியமர்த்துகிறது என உணர்த்தும் கதைக்களம் ஆளும் வர்க்கம் தனது கருவியாக கலையையும் பயன்படுத்தி வருவதை உணர்த்துகிறது.

‘காந்தாரா’ திரைப்படம் அதன் கலை, இசை, வடிவமைப்பில் ஒர் புதுவித அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கும். அதே சமயத்தில் அதனுளிருக்கும் கார்ப்பரேட் – வலதுசாரி நல அரசியலை புரிந்து கொள்வதும் அவசியம்!

Leave a Reply