தொழிற்சங்கங்கள் மூலதனத்தை எதிர்க்கக்கூடிய, அதிகாரத்திற்கு சவால் விடுக்கக்கூடிய ஒரு தொழிலாளர் அமைப்பை உருவாக்குவதில் முக்கியமானவை. அதே சமயத்தில் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி உலகை மாற்றும் சக்தியற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
தொழிற்சங்கங்கள் மார்க்சிய கோட்பாட்டளவில் பலசமயம் ஒரு முரண்பாடான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. தொழிற்சங்கமானது தொழிலாளர் வர்க்கத்தினை ஒன்று திரட்டும் காரணியாக வெளிப்படுவதோடு தொழிலாள வர்க்க செயல்பாடுகளுக்கு இன்றியமையாத ஒன்றாகவும் உள்ளன. “தொழிலாளர் வர்க்கம்”, “தொழிலாளர் வர்க்க செயல்பாடு” பற்றி பேசும்போது, தொழிற்சங்கங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது தொழிற்சங்கங்களாக தங்களை ஒழுங்கமைக்க முயற்சிக்கும் தொழிலாளர்களின் செயல்பாடுகள் பலமுறை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
தொழிற்சங்கங்கள் மார்க்சிய தத்துவத்தின் முக்கிய கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை கூட நிறைவேற்ற இயலாத ஒழுங்கற்ற அமைப்பாக உள்ளது. தொழிற்சங்கங்கள் அவற்றின் இருப்பை உறுதிசெய்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்க சமூகத்தையே வலுப்படுத்துகின்றன. முதலாளிகளுடன் முதன்மையானதாக ஊதியங்கள், உரிமைகள் மற்றும் வேலை நிலைமைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் நிறுவனங்களாகவும், முதலாளிகளின் தொடர்பு சாதனங்களாகவே பயன்படும் வகையிலும் தொழிற்சங்கங்கள் உள்ளன. இது அவர்களை ஏறக்குறைய சீர்திருத்தவாத நிறுவனங்களாகவே ஆக்குகிறது. தொழிலாளர்களுக்கு இடையேயான உறவுகளை புதுப்பிக்கவும், நிர்வகிக்கவும் மட்டுமே இன்று தொழிற்சங்கங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழிற்சங்கங்களால் வேறு எந்த மாற்றத்தையும் கொண்டு வர இயலாது.
பல தொழிற்சங்கங்கள் இப்படியான பழமையான, நிர்வாக அமைப்புகளாகவே மாறி போயின. இதில் ஒரு சாரார் முதலாளித்துவ சக்திக்கு சவால் விடுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். சில நேரங்களில் கிளர்ச்சி அமைப்பாகவும், நிர்வாக அமைப்பாகவும் செயல்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் பணியிட கிளர்ச்சிகளை ஒழுங்கமைத்த போது, அவை சில சமயங்களில் அரசியல் அழுத்தமாக மாற்றப்பட்டு ஜனநாயக பரவலாக்கலில் பெரிய அளவிலான கொள்கை சீர்திருத்தங்களுக்கு வழிவகுத்தது. சமீபகாலங்களில் நாம் காணக்கூடிய சில புரட்சிகர வரலாற்று சம்பவங்களில், தொழிற்சங்கங்கள் அல்லது வேறு ஏதாவது தொழிலாளர் அமைப்புகளின் முக்கியத்துவத்தை உணரலாம்.
தொழிலாளர் சங்கங்களும், இயக்கங்களும் நீண்டகாலமாக மார்க்சிய விவாதத்தின் மைய புள்ளியாக இருந்து வருகின்றன. அதன் முக்கிய விவாதம் வர்க்க அணிதிரட்டலில் தொழிற்சங்கங்களின் பங்கு, புரட்சிகர தொழிலாள வர்க்க பிரதிநிதித்துவத்தை உருவாக்குதல் ஆகியவற்றையே மையமாகக் கொண்டிருக்கிறது. இவ்விவாதமானது நான்கு முக்கிய கேள்விகளில் தீர்வளிக்க முயல்கிறது. முதலாவது, தொழிற்சங்கங்கள் உற்பத்தி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் தற்போதைய உறவுகளை எந்த அளவிற்கு பிரதிபலிக்கின்றன அல்லது அந்த உறவுகளை எந்தளவுக்கு தீவிரமானதாக வடிவமைக்கின்றன? இரண்டாவதாக, தொழிற்சங்கங்கள் வர்க்கப் போராட்டத்தை ஏன் தீவிரமாக வடிவமைக்கின்றன, எந்த சூழ்நிலையில் அதனை மேம்படுத்துகின்றன அல்லது தடுக்கின்றன? மூன்றாவதாக, தொழிற்சங்கங்கள் வர்க்க அடையாளங்களை எவ்வாறு வடிவமைக்கின்றன? இது தொழிற்சங்கங்களின் செயல்பாட்டில் எவ்வாறு பாதிக்கிறது? நான்காவதாக, தொழிற்சங்கங்களுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?
இந்த கேள்வி தொழிற்சங்கங்கள் எந்த அளவிற்கு பணியிட போராட்டங்களை விரிவடைந்த அரசியல் போராட்டங்களாக மாற்ற உதவுகின்றன அல்லது தடுக்கின்றன?
அரசியல் சார்ந்த கோரிக்கைகளை முன்னெடுப்பதற்கு, பொதுவழியான அரசியல் கட்சிகளுடன் தொழிற்சங்கங்கள் எவ்வாறு தொடர்பு கொள்ள வேண்டும்? என்பதோடு இணைத்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
மார்க்சும் ஏங்கெல்சும் தங்கள் காலத்தின் தொழிற்சங்கங்கள் குறித்து முழுமையாக இல்லாவிட்டாலும் விரிவாக எழுதினார்கள். தொழிற்சங்கங்கள் பற்றிய அவர்களின் பெரும்பாலான எழுத்துக்கள் அந்த காலத்தின் தொழிலாளர் வர்க்க போராட்டங்களுக்கு பதில் கூறுபவையாக இருந்தன. முதலாளித்துவத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் கொண்ட ஒரு தொழிலாள வர்க்க பிரதிநிதியை உருவாக்குவதில் தொழிற்சங்கங்களின் அவசியத்தையும் வரம்புகளையும் அவர்களது ஆரம்பகால படைப்புகளில் இருந்து மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் பற்றிக்கொண்டனர்.
ஏங்கெல்ஸ் எழுதிய “இங்கிலாந்தில் தொழிற்சங்கங்களின் நிலை” என்ற கட்டுரையில், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் முதன்மை போராட்டங்களாக ஊதியம், சலுகைகள் போன்ற பொருள் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தபோதிலும், அவை ஆழமான சமூக மற்றும் அரசியல் மோதலை சுட்டிக் காட்டுகின்றன. தொழிற்சங்கங்களும் அவற்றின் வேலைநிறுத்தங்களும் தொழிலாளர்களுக்கு இடையேயான போட்டியை ஒழிப்பதற்கான, தொழிலாளர்களின் உண்மையான முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கான முதல் முயற்சியாகும். முதலாளித்துவத்தின் மேலாதிக்கமானது முற்றிலும் தொழிலாளர்களுக்குள் இருக்கும் போட்டியை அடிப்படையாக கொண்டது என்ற உண்மையை தொழிலாளர்கள் இப்போது உணர்ந்துள்ளார்கள் என குறிப்பிடுகிறார். அவர்களின் தற்போதைய தேவை ஒற்றுமை. சமூக ஒற்றுமை என்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் தங்களை வழி நடத்துவதால் அவை ஒரு தலை பட்சமாகவோ, குறுக்கு வழியிலோ செயல்பட்டால் அவையே சமூக ஒழுங்கிற்கு கேடாக மாறும் வாய்ப்புள்ளது.
அதே சமயத்தில், தொழிற்சங்க போராட்டங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வ வல்லமைக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை ஏங்கெல்ஸ் கண்டார். மேலும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தை உடைக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை தாண்டிய ஒன்று தேவைப்படுகிறதென என்பதையும் உணர்ந்திருந்தார். தொழிலாள வர்க்க உருவாக்கத்திற்கு தொழிற்சங்கங்கள் இன்றியமையாதவை, அவை முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்காகவும், அதிகாரத்திற்காக அதனை சவால் செய்யும் திறன் கொண்ட ஒரு கூட்டு பிரதிநிதியையும் உருவாக்குகிறது. இந்த கூட்டு பிரதிநிதியை உருவாக்குவதற்கும் அணிதிரட்டுவதற்கும் இவை மட்டுமே போதுமானவையல்ல.
தொழிற்சங்கங்கள் இன்றியமையாதவை என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் அறிந்திருந்தனர். ஏனெனில், முதலாளித்துவத்தின் கீழ், “கட்டற்ற சுதந்திர உழைப்பு” என்ற அமைப்பு தனிப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் உழைப்பு சக்தியை கூலிக்காக விற்றும், தொழிலாளர்களுக்கிடையேயான உறவுகளை துண்டாக்கி ஒருவருக்கொருவர் போட்டியிடவும் முதலாளிகள் தூண்டுகின்றனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறுவது போல், முதலாளித்துவமானது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான சுயநலம் தவிர, பரிவு உணர்ச்சியற்ற “பணப் பட்டுவாடா” தவிர வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்டது. தொழிலாளர்களை சந்தை போட்டியின் அனைத்து ஏற்ற இறக்கங்களாலும் பாதிப்படையும் கூறுகளாகவே நடத்தி வந்தனர்.
தொழிலாளர்களை நிறம், இனம், மதம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பிரித்து வைத்தாலும், தொழிற்சங்கங்கள் மட்டுமே அவர்களை முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களாக ஒன்றிணைக்க முடியும். இவையே “கூலி உழைப்பு மற்றும் முதலாளித்துவ ஆட்சி அமைப்பு முறையை மாற்றுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கங்களாக செயல்படுகின்றன”. தொழிற்சங்கங்கள் உழைப்பாளி வர்க்கத்தை அணிதிரட்டி முதலாளித்துவ வர்க்க அதிகாரத்திற்கு எதிராக சவால் விடுத்தாலும், இவை மட்டுமே அதனை எதிர்க்க போதுமான காரணிகள் இல்லை என மார்க்சும் ஏங்கெல்ஸும் கருதினர்.
தொழிற்சங்கங்களின் அடிப்படை நோக்கமானது, முதலாளிகள் – தொழிலாளர்களுக்கு இடையே போட்டியினை உருவாக்கி அவர்களை அடிமட்டத்திற்கு தள்ளும் முயற்சிகளுக்கு எதிராக தொழிலாளர்களை பாதுகாக்கும் ஒரு தற்காப்பு படையாக செயல்பட வேண்டும். ஆனால் அவர்களோ “தற்போதுள்ள அமைப்பின் செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு கெரில்லா போருக்கு மட்டுமே தங்களை தயார்ப்படுத்திக் கொண்டனர். மேலும் ஒரே நேரத்தில் முதலாளித்துவத்தை மாற்ற முயற்சிக்கின்றனர்.” இத்தகைய போர்க்குணமிக்க தொழிற்சங்கங்கள் கூட முதலாளித்துவத்தின் அடிப்படை அதிகாரத்திற்கு, குறிப்பாக கூலித் தொழிலாளர் முறைக்கு எதிராக சவால் விடாமல் நியாயமான ஒரு நாள் ஊதியத்திற்காக, நியாயமான ஒரு நாள் வேலைக்காகவுமே போராடினர்
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சில அடுக்குகள், பெரும்பாலான தொழிலாளர் பிரச்சனைகளை முன்னெடுக்காமல், தொழிலாள வர்க்கத்தின் சிறுபான்மையினருக்கான சலுகைகளுக்காக போராடுவதிலே திருப்தி அடைந்தனர். மேலும், தொழிற்சங்கங்களின் கவனம் ஊதியங்கள் பணியிட பிரச்சனைகள் மற்றும் பொருளாதார அரசியல் போராட்டங்கள் இவற்றுக்கு இடையேயான பிளவை வலுப்படுத்த முனைந்தது. இத்தகைய இரு வேறு கொள்கையை கொண்ட அமைப்புகள் பிரிட்டனில் உள்ள மிகவும் பழமைவாத பழைய தொழிற்சங்கங்களில் வெளிப்படையாக இருந்து வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சார்ட்டிஸ்டுகள் (அ) பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதிய தொழிற்சங்கங்கள் போன்ற முற்போக்கான அமைப்புகளும் கூட, பணியிடப் போராட்டங்களிலிருந்து அரசியலுக்கு மாறுவது இல்லை என்பதனை மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கண்டனர்.
இது பல்வேறு தேசிய சூழ்நிலைகளில் வேறுபட்டு இருந்தது. பிரெஞ்சு தொழிலாளர்கள் அரசியல் ரீதியாக அணிதிரள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஏங்கெல்ஸ் கணித்தார். அதே சமயம் ஆங்கிலேய தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பதற்கு மாறாக நேரடியாக முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுகிறார்கள். 1870-களில், அரசியல்ரீதியாக ஆங்கிலேய தொழிலாள வர்க்கம் தாராளவாத கட்சியின் வாலாக மட்டும் உள்ளதே தவிர வேறெதுவுமாக இருந்ததில்லை. இதனை “முதலாளித்துவத்தின் கையாட்கள்” என்று மார்க்ஸ் விமர்சித்தார்.
அதேபோல், ஆங்கிலேய தொழிலாளி வர்க்கத்தின் மீதும் ஏங்கெல்ஸ் அதிருப்தியை தெரிவித்தார். இருவரும் அந்த நேரத்தில் அமெரிக்காவில் போர்க்குணமிக்க தொழிலாளர் எதிர்ப்பில் பிடிவாதத்தை கண்டனர். ஒரு புதிய தொழிலாளர் கட்சியின் விதைகளைக் கண்டனர். ஆனால் அதுவும் குறைவடைந்தது. இத்தொழிற்சங்கங்கள் மார்க்ஸ் – ஏங்கெல்ஸின் முக்கிய பணியான “ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் அரசியல் அமைப்பை” உருவாக்குதலில் தோல்வியை தந்தன. மார்க்ஸ் – ஏங்கெல்ஸின் எழுத்துக்கள், தொழிற்சங்கங்கள் பொருளாதாரத்திலிருந்து அரசியல் போராட்டங்களுக்கு நகர்வதில் உள்ள கடுமையான சிரமங்களைப் பற்றிய விரிவாக பகுப்பாய்வு செய்தன. இந்த மாற்றம் தவிர்க்க முடியாததாக தோன்றிய அவர்களின் பல தத்துவார்த்த கருத்துக்களுடனே முரண்பட்டனர்.
“தொழிலாளர் அமைப்பு ஒரு வர்க்கமாக மாறுவதும், அதன் விளைவாக அது ஒரு அரசியல் கட்சியாக மாறுவதும், தொழிலாளர்களுக்கிடையேயான போட்டியால் மீண்டும் தொடர் நிலைக்கு செல்வதும் வருத்தமடைய செய்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், தொழிற்சங்கங்கள் மீண்டும் வலுவான, உறுதியான, வலிமையான அமைப்பாக எழுச்சி பெரும் என மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் உறுதியாக நம்பினர்.”
ஜாக்கோபின் கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம்