முழு விடுதலை என்று முதலில் முழங்கியது கம்யூனிஸ்ட்டுகளே..! – இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்..Part 3

மார்க்சியமே வழிகாட்டி என ஏற்றுக்கொண்ட மீரட் ஆவணம்

இந்த சமயத்தில், முரண்பாடுகள் களையப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த அகில இந்திய மையத்தை உருவாக்கிக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தொடர்பாளர்களுக்கும் இடையில் முக்கியமான பல விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்களின் விளைவாக, 1936 ஜனவரியில் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டில் ஒரு விரிவான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆவணம்தான் மீரட் ஆவணம் என்று அன்றைக்கு பிரபலமாக பேசப்பட்டது. அந்த ஆவணம் இவ்வாறு கூறுகிறது: “காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது இரண்டு மிகப்பெரிய தேசிய போராட்டங்களின் அனுபவங்களிலிருந்து உருவானது. கடைசியாக நடந்த ஒத்துழையாமை இயக்கத்தின் நிறைவில் சில காங்கிரஸ்காரர்களால் இது உருவாக்கப்பட்டது. தேசிய இயக்கத்திற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளிக்க வேண்டியது அவசியம் என்று இந்த காங்கிரசார் நம்புகிறார்கள். தேசிய இயக்கத்தின் இலக்குகளை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை உள்ளது; அது செயல்படும் நடைமுறைகளை மாற்ற வேண்டியுள்ளது. இந்த பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, நமது நிகழ்கால சமூகத்தின் சக்திகளைப் பற்றி தத்துவார்த்த ரீதியாக ஆய்வுசெய்து உள்வாங்கிக் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. காங்கிரஸ் காரர்களாக இருக்கிற இவர்கள், இயல்பாகவே, இந்தப் பாதையில் செல்ல முற்பட்டு, மார்க்சியம்-சோசலிசத்தை ஏற்றுக்கொண்டவர்கள். இது இயல்பான ஒன்றே; ஏனென்றால், இந்த அமைப்பானது இன்றைய சூழலின் தேவைகளை எதிர்கொள்வதற்காக “ஒரு மந்திரச் சொல்லை உயர்த்திப்பிடிக்கிறது: “சோசலிஸ்ட். ‘சோசலிஸ்ட்’ என்ற பதத்திற்கு முன்பு காங்கிரஸ் என்ற பதத்தையும் இணைக்கிறோம்; இப்படி இணைப்பது, இந்த இயக்கம் அதிலிருந்து துவங்கியது என்பதை குறிப்பதற்காக மட்டுமே – தேசிய இயக்கத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை ஒருங்கிணைக்கும் விதமாகவே இந்தப் பெயர் சூட்டப்படுகிறது. 

“நாட்டில் சோசலிச சக்திகள் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அந்த சக்திகள் காங்கிரசுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்தன. தேசிய இயக்கத்தில் எந்த செல்வாக்கும் இல்லாமல் இருந்தன. எனவே, ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருந்த குழுக்களோடு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எனும் இயக்கம் உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையிலான இணைப்பு இப்போது தேவைப்படுகிறது. சரியான மற்றும் உணர்வுப்பூர்வமான உத்திகளை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் மேற்கொள்வது, அதன் மூலமாக பின்னர் ஒரு இணைப்பை உருவாக்கிக் கொள்வது என முடிவெடுக்கப்படுகிறது.

“நமது முன்னால் உள்ள உடனடி இலக்கு என்னவென்றால், தேசிய இயக்கத்தை ஒரு உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமாக வளர்த்தெடுப்பதுதான்; அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவது மற்றும் உள்நாட்டில் நடைமுறையில் இருக்கிற சுரண்டல் சமூக அமைப்பு முறையிலிருந்தும் விடுதலை பெறுவது என்ற இலக்குடன் கூடிய இயக்கமாக வளர்த்தெடுப்பதுதான். இதற்காக, இந்த இயக்கம் தற்போதைய நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ தலைமையிடமிருந்து பிரிந்து வரவேண்டியது அவசியமாகிறது; இந்த இயக்கத்தை புரட்சிகர சோசலிச தலைமையின்கீழ் கொண்டுவர வேண்டியது அவசியமாகிறது. இந்த இலக்கினை, காங்கிரசுக்குள்ளேயே அணிதிரட்டப்பட்ட முறையில் செயல்படுகிற மார்க்சிய – சோசலிஸ்ட்டுகளின் குழுவால் மட்டுமே செய்துமுடிக்க முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தற்போதைய சூழலில், நமது கட்சி மட்டுமே இந்த இலக்கினை நிறைவேற்ற முடியும். காங்கிரசுக்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் வலுப்பெறுவதும் தெளிவுபெறுவதும் அதற்குள் நமது கட்சியின் பலமும் செயல்பாடும் பெரிய அளவிற்கு அதிகரிப்பதைப் பொறுத்தது. கட்சியின் இந்த இலக்கை நிறைவேற்றுவதற்காக, நாட்டில் இயங்கும் இதர பல ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியமாகிறது. 

“இந்த இலக்கில் உறுதியுடன் நின்று காங்கிரஸ் மேடைகளில் நமது கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். காங்கிரஸ் முன்பு முழுமையான சோசலிசத் திட்டத்தை முன்வைக்கிற ஒரு தவறை நாம் செய்துவிடக்கூடாது. ஏகாதிபத்திய எதிர்ப்பு திட்டம் என்பது, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த மக்களை இந்த இயக்கத்தில் அணிதிரட்டும் விதமாக செழுமைப்படுத்தப்பட வேண்டும்.  “ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற சிந்தனைகளை நமது கட்சி அதன் தத்துவார்த்த அடிப்படைகளிலிருந்து அணுக வேண்டும்; சாத்தியமான அளவிற்கு தேவையான விதத்தில் அதற்கான உத்திகளை பின்பற்ற வேண்டும். பல்வேறு நிகழ்வுகளின் சூழலில் சகிப்பின்மையோடு அல்லது பொறுமையில்லாமல் செயல்பட்டு நாம் எக்காரணம் கொண்டும் தனிமைப்பட்டுவிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியின் தேசக்கட்டுமானம் தொடர்பான திட்டத்தை தடுத்துநிறுத்தவோ அதில் தலையீடு செய்யவோ கூடாது. மாறாக விஞ்ஞானப்பூர்வமாக அந்த நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டும்; அம்பலப்படுத்த வேண்டும்.

“காங்கிரசில் நடக்கும் தேர்தல்களில், அதன் கமிட்டிகளையோ அல்லது அலுவலகங்களையோ எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தக்கூடாது; அதேபோல இந்த நோக்கத்திற்காக அரசியல் ரீதியாக விரும்பத்தகாத குழுக்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் கூடாது. “இது, நமது கட்சி தனது சொந்த மேடையில் சோசலிச திட்டத்தை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று பொருள்படாது. நமது சொந்த மேடையில் கட்டாயம் சோசலிசப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதை இன்னும் அமைப்பு ரீதியாகவும், தீவிரமாகவும் செய்ய வேண்டும்.

“நமது கட்சியின் சொந்தத் திட்டம் என்பது அவசியம். ஒரு மார்க்சிய திட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி தனது இலக்கை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேற முடியும். ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் தங்களது இலக்கை அடைய மார்க்சியம் மட்டுமே வழிகாட்ட முடியும். எனவே கட்சி உறுப்பினர்கள் அவசியம் புரட்சிக்கான வழி என்ன என்பதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும்; வர்க்கப்போராட்டத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்; அரசு என்ன செய்யும், அதன் இயல்பு என்ன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்; அந்த அடிப்படையில் சோசலிச சமூகத்தை நோக்கி முன்செல்லும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்”.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பந்தம்.

மீரட் ஆவணம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மூன்றாவது மாநாடு பைஸ்பூரில் நடைபெற்றது. இந்த மாநாடு மேலே குறிப்பிட்ட மீரட் ஆவணத்தின் சில கருத்துக்களை மேலும் செழுமைப்படுத்தியது.

“ காங்கிரஸ் கட்சியை நாம் ஒரு அடிப்படை அலகாக எடுத்துக்கொண்டு, துவக்கப்புள்ளியாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்; ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஐக்கியப்படுத்திய ஒரு முன்னணியாக அதை மாற்றுவதற்கான முயற்சியை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக இந்திய மக்களில் விரிவான அளவில் பல்வேறு சக்திகளை ஐக்கியப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெற்றிபெற்றிருக்கிறது. இதில் இன்னும் அணிசேராமல் எஞ்சியிருப்பது தேசிய விடுதலை கோரும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட முதன்மையான வெகுமக்கள் இயக்கங்கள்தான்…காங்கிரஸ் கட்சியே ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் என்றபோதிலும் அதன் தலைமை என்பது பிரதானமாக நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளிடம் இருக்கிறது. எனவே அதன் நலன்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு அல்லாமல், மாபெரும் மக்கள் திரளின் விடுதலைப் போராட்டத்தை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்துக் கொண்டு செல்ல அந்த தலைமையால் இயலவில்லை. அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமை நீண்டகாலத்திற்கு ஒற்றுமையாக இருக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். சமீபத்தில், காங்கிரசுக்குள் மிகத்தெளிவான சிந்தனை கொண்ட இடதுசாரி இயக்கம் உருவாகியுள்ளது. இந்த வளர்ச்சிப்போக்கு, காங்கிரஸ் தலைமையிலும் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது…

நமது இலக்கு என்பது, காங்கிரஸ் கட்சிக்குள் அதன் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ தலைமையிடமிருந்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை பிரித்து கொண்டுவருவது மட்டுமல்ல, காங்கிரஸ் இயக்கத்தையே ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக விரிவுபடுத்தவும் வளர்த்துக்கொண்டு செல்லவும் செய்வது என்பதுதான்.” காங்கிரசை இத்தகைய மாற்றத்துக்கு உள்ளாக்கும் பொருட்டு, அனைத்து சோசலிச சக்திகளையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் தேவை இருக்கிறது என்ற முடிவுக்கு பைஸ்பூர் ஆவணம் வந்தது: “ இந்த சக்திகள் (சோசலிச சக்திகள்) துரதிர்ஷ்டவசமான முறையில் இன்னும் பிரிந்தே கிடக்கின்றன. துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் தலைவர்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறது… சோசலிஸ்ட்  தலைவர்களிடையே ஒற்றுமை அல்லது செயல்பாடுகளில் இயைந்து செல்வது என்பதையும் தாண்டி, இடதுசாரி சக்திகள் ஒருங்கிணைந்து நிற்பதும் கட்சியின் தலைமைக்குள் புரிந்துணர்வு மேம்படுவதும் மிகமிக அவசியமாகும்.”

( நூல் ஆதாரம்:இந்தியாவில் சோசலிச இயக்கம், அசிம்குமார் சவுத்ரி,அத்தியாயம் 2).

இப்படியாக,புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் தலைமை, அதற்கு முன்பே தோன்றிய சோசலிஸ்ட் -கம்யூனிஸ்டுகளின் குழுக்களோடு மிகப்பெரிய அளவிற்கு இருந்த இடைவெளியை நிரப்புவதற்கான-கைகோர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. இவர்களோடு,1930 களின் துவக்கத்தில் சர்வதேசிய-தேசிய வளர்ச்சிப்போக்குகளின் பின்னணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களோடு செயல்பட்டு, தலைமை பொறுப்புக்கு வந்த சில தலைவர்களுடனும் கைகோர்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்த முயற்சிகளின் மையமான அம்சம் என்னவென்றால், மறு சீரமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமையும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் ஒன்றுபட்டு செயல்படுவது என்பதுதான். எனவே இந்த இரண்டு கட்சிகளுக்கு இடையே ஒரு முறையான ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷியும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம்தான் , இரண்டாம் உலகப்போர் வெடிப்பதற்கு முன்பு இந்தியாவில் நடந்த மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சிகளில் மிகப்பெரும் பங்கினை ஆற்றியது. இந்த ஒப்பந்தம், இந்திய தொழிற்சங்க இயக்கத்தை ஒன்றுபடுத்த உதவியது. அடுத்தடுத்து ,விவசாயிகள் இயக்கமும் மாணவர் இயக்கமும் உருவாவதற்கு வழிகோலியது. தொழிற்சங்க இயக்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் விவசாயிகள், மாணவர் இயக்கங்களின் தோற்றம் ஆகிய இரண்டும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் விரிவான ஒற்றுமையை நோக்கிய நடவடிக்கைகளாக அமைந்தன. அதேநேரத்தில் காங்கிரசாரில் முற்போக்குப் பிரிவினருக்கு அது உதவியது; காங்கிரஸ் அமைப்பிற்குள் வலுவாக அணிதிரட்டப்பட்ட இடதுசாரி இயக்கம் வளர்வதற்கும் அக்கட்சியின் வலதுசாரி தலைமையின் பிடி கொஞ்சம் கொஞ்சமாக பலவீனம் அடைவதற்கும் வழிவகுத்தது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மகாத்மா காந்தியின் வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டது என்பது காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி சக்திகளிடையே வலுவடைந்த ஒற்றுமையின் பலனாக ஏற்பட்ட மிகமிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்பட்டது. மகாத்மா காந்தி இந்த தோல்வியை, தனது தனிப்பட்ட தோல்வி என்று கூறுமளவிற்கு நிலைமை இருந்தது.  

புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் மறு கட்டமைக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைமைக்கும் இடையிலான ஒப்பந்தம் இந்த இரண்டு கட்சிகளை மட்டும் ஒருங்கிணைக்கவில்லை; அதையும் தாண்டி பெரும் எண்ணிக்கையிலான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க உதவியது.காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகளின் மிக உயர்ந்த தலைவர்களான ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்களும் இந்த ஒப்பந்தத்தோடு விரிவான அளவில் ஒருங்கிணைப்பு கொண்டிருந்தார்கள். இரண்டாண்டு காலம் காங்கிரஸ் தலைவராக இருந்து நேரு வெளியிட்ட பிரகடனங்கள், அதைத்தொடர்ந்து போஸ் பிரதிபலித்த கருத்துக்கள் , இவையெல்லாம் அந்த இருபெரும் தலைவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாக அல்ல ; மாறாக காங்கிரசுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த ஒட்டுமொத்த இடதுசாரிகளின் கருத்துக்களாக வெளிப்பட்டன. 

அனைத்து இடதுசாரிகளிடையே இத்தகைய விரிவான ஒப்பந்தம் எப்படி சாத்தியமானது என்றால், அந்த சமயத்தில் உலக அரசியலில் மாபெரும் சகாப்தத்தை படைக்கும் விதத்தில் முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையே மிகப்பிரம்மாண்டமான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது ; போருக்கும் அமைதிக்கும் இடையிலான போராட்டம் நடந்துகொண்டிருந்தது என்பதுதான் காரணம். மிகப்பெரும் எண்ணிக்கையிலான காங்கிரஸ்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள், சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்டார்கள். இவர்களை இந்த வரலாற்றுப்பூர்வமான உலக வளர்ச்சிப் போக்குகள் ஈர்த்தன; அவர்களோடு ஏற்கெனவே தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் சோசலிஸ்டுகள் என்றும் அறிவித்து கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களும் இதர இடதுசாரி கட்சியினரும் தங்களது செயல்பாடுகளை மேலும் மேலும் விரிவுபடுத்துவதற்கு உத்வேகமளித்தன. இந்த நிலையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் உருவாக்கம், விரக்தியின் பிடியில் சிக்கியிருந்த காங்கிரஸ்காரர்களை ஒன்றுதிரட்டுவதற்கும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிப்பதற்குமான அமைப்பாக வடிவம் பெற்றது. அவர்களை காங்கிரசுக்கு வெளியில் இருக்கும் கம்யூனிஸ்டுகளுடனும் இதர இடதுசாரி சக்திகளுடனும் இணைந்து ஒன்றுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அதன் முத்தாய்ப்பாக ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உருவாவதற்கும் உதவியது.

ஏகாதிபத்திய எதிர்ப்பு அணிகளின் ஒற்றுமை.

ஆனால் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் பணி என்பது அவ்வளவு எளிதானதாகவோ அல்லது இயல்பாக நடப்பதாக இல்லை. அந்தப் போராட்டம் மிகக்கடுமையானதாக இருந்தது. ஏனென்றால், இதுதொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் இருந்தன. அந்த முரண்பாடு விரிவாகவும் கூர்மையடையவும் செய்தது. குறிப்பாக இத்தகைய முரண்பாடு கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இதர இடதுசாரிகளுக்கும் இடையே ஏற்பட்டது என்பது உண்மை. இன்னும் குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளுக்கும், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரிகளாக இருந்த காங்கிரசார் மற்றும் இதர தரப்பினருக்கும் இடையே இந்த முரண்பாடு எழுந்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரே, அது காங்கிரஸ்காரர்களின் ஒரு அமைப்பு என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது. காந்தியத்தின் மீது உறுதிகொண்ட காங்கிரஸ்காரர்கள் அதை சோசலிசமாக விரிவுபடுத்துவதில் உறுதிகொண்டவர்களாக இருந்தார்கள், அத்தகைய காங்கிரஸ்காரர்கள்தான் இந்தக் கட்சியில் இருந்தார்கள்; காந்தியம், நேருவியம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் இதர சித்தாந்தங்களை அவர்கள் பற்றி நின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அதாவது இடதுசாரி காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரை, சோசலிசம் என்பது காங்கிரசின் லாகூர் மற்றும் கராச்சி மாநாடுகள் நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு மேம்பட்ட வடிவம் என்றே கருதினார்கள்.

கம்யூனிஸ்ட் செயல்திட்டம்..


ஆனால் கம்யூனிஸ்ட்டுகள், துவக்கத்திலிருந்தே இந்திய பாட்டாளி வர்க்க மக்களின் நிலை என்ன என்பது பற்றி உலகளாவிய பார்வையுடன் திட்டவட்ட முறையில் ஆய்வு செய்து, திட்டவட்டமான முறையில் நடைமுறை உத்தியையும் நீண்டகால மற்றும் உடனடி போராட்ட நடவடிக்கைகளை வகுப்பதையும் அதற்கு ஏற்றவாறு ஒரு உறுதியான ஸ்தாபனத்தை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தார்கள். 1930ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சியின் வரைவு செயல்திட்டம் இவ்வாறு கூறுகிறது: “உலக வரலாறும், இந்தியாவில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்ட நிகழ்வுகளும் எதை உணர்த்துகிறது என்று சொன்னால், இந்திய மக்களை அதிகாரம் பெறச் செய்யும் வரலாற்றுப்பூர்வமான இலக்கினை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தலைமையால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதையே உணர்த்துகிறது. அது மட்டுமல்ல, தேசிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, நிலங்களை கையகப்படுத்தி குவித்து வைத்துக் கொண்டு தேசிய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிற அனைத்து அம்சங்களையும் தகர்த்து அதிலிருந்து விடுதலை மற்றும் அதன் மூலமாக நீண்டகால இலக்குடன் கூடிய புரட்சிகர குணாம்சத்துடனான ஜனநாயக மறுகட்டுமானம் ஆகிய இலக்குகளையும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையே நிறைவேற்ற முடியும்.

இந்திய தொழிலாளி வர்க்கமானது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழிற்சாலை நடவடிக்கைகள் மூலமாகவும், வர்க்கப் போராட்டங்களின் மூலமாகவும் தொடர்ந்து உறுதிமிக்க முறையில் அணிதிரட்டப்பட்டு வருகிறது; இந்த அணிதிரட்டல் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் நடந்து வருகிறது. அது நாடு முழுவதும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை தனது அணிதிரட்டுவது என்ற தனது வரலாற்றுப்பூர்வமான இலக்கினை நிறைவேற்றி வருகிறது; பிரிட்டிஷ் ஆட்சியை ஒழித்துக்கட்டவும், இந்திய நிலப்பிரபுத்துவத்தை தகர்க்கவுமான மாபெரும் போராட்டத்தை இந்த வரலாற்று இலக்குகளை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை நிறைவேற்றும் பொறுப்பினை மேற்கொண்டு வருகிறது. ஆனால், மிகப்பெரும் எண்ணிக்கையிலான வெகுமக்களாக இருக்கிற தொழிலாளர்களை அணிதிரட்டும் பொருட்டு, ஒரு பிரத்யேகமான வர்க்கமாக பாட்டாளி வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு, அந்த வர்க்கத்தின் பிரத்யேகமான நலன்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினை ஊட்டி, மக்கள் விடுதலைக்கான தேசிய இயக்கத்தில் போராடுகிற தலைமையை வலுப்படுத்தும் பொருட்டு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய இருபெரும் வர்க்கங்களின் புரட்சிகர கூட்டணியை உருவாக்கும் பொருட்டு, அதன் மூலமாக இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை விடுதலை செய்யும் பொருட்டு, இந்திய விவசாயிகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளை தேசிய சீர்திருத்தவாதத்தின் பிடியிலிருந்து மீட்கும் பொருட்டு, இந்த ஒட்டுமொத்த போராட்டங்களையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டமாக வழிநடத்தும் பொருட்டு, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புரட்சியாக அதை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு, இந்த அனைத்து இலக்குகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றும் பொருட்டு, தொழிலாளி வர்க்கம் தனக்கே சொந்தமான ஒரு பாட்டாளி வர்க்க கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி இருக்கிறது.

” இத்தகைய நிலையில், 1930களின் பிற்பகுதியில் சர்வதேச நிலைமை மிகக்கூர்மையான மாற்றங்களை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய நிலைமையும் மாறியது. 1935-36 ஆண்டுகள் உலகம் முழுவதும் பாசிச எதிர்ப்பு சக்திகள் ஒன்றுபடத் துவங்கின. 1935ஆகஸ்டில் கம்யூனிஸ்ட் அகிலம் விடுத்த அறைகூவலை ஏற்று பாசிச எதிர்ப்பு சக்திகள் தங்களது ஒன்றுபட்ட செயல்பாட்டை உணர்ந்து கரம்கோர்த்தன. இந்தியாவிலும், முதலாளித்துவத்தால் தலைமை தாங்கப்பட்ட விடுதலை இயக்கமானது, உலக அளவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான வலுவான கூட்டணியாக சோவியத் யூனியனையும் இதர சோசலிச – கம்யூனிஸ்ட் சக்திகளையும் பார்க்கத் துவங்கின. இந்த கண்ணோட்டமானது, இந்தியாவில் காங்கிரசால் முற்போக்கான சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுவதற்கு தூண்டுகோளாக அமைந்தது, காங்கிரசுக்குள் இருந்த நேரு மற்றும் போஸ் போன்ற இடதுசாரி தலைவர்களின் செயல்பாடுகளை மட்டுமல்ல, காந்தியால் தலைமை தாங்கப்பட்ட வலதுசாரி தலைவர்களின் பேச்சுக்களிலும் பிரதிபலித்தது. இந்த நிகழ்வுப்போக்குகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட்டுகள் இந்திய தேசிய காங்கிரசின் திட்டத்திற்கு ஒரு விவசாய எழுச்சி வடிவத்தை கொடுக்கத் துவங்கியிருந்தனர். இத்தகைய திசையில், காங்கிரசின் 1928ஆம் ஆண்டு மாநாட்டில் ஒரு திருத்தம் முன்மொழியப்பட்டது; அது தோற்கடிக்கப்பட்டது. அந்தத் தோல்வியைத் தொடர்ந்து 1930களில் கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட் மற்றும் இதர முற்போக்காளர்களின் ஒத்துழைப்புடன் விவசாயிகள் சங்கத்தின் கீழ் இந்திய விவசாயிகளை அணிதிரட்டுவதற்கான தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளத் துவங்கியிருந்தனர். இந்தப் பின்னணியில்தான், 1930களின் பிற்பகுதியில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒற்றுமையின் வளர்ச்சிப்போக்காக விவசாயிகள் சங்கத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைத்தன; இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஒற்றுமை ஒரு குறிப்பிடத்தக்க, தீர்மானகரமான பங்கினை ஆற்றியது.

உலகைக் காத்த சோவியத் ஒன்றியம்..

வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான மோதல்

எனினும், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி வளர்ந்து வந்த நிலையில் இடதுசாரிகள் தங்களை மேலும் மேலும் அணிதிரட்டிக்கொள்ளவும், வலுப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டதால், வலதுசாரிகள் பதற்றமடைந்தனர். அவர்கள், மூன்றாண்டு காலம் நேரு மற்றும் போஸ் ஆகிய இடதுசாரி காங்கிரஸ் தலைவர்களை சகித்துக் கொண்டனர்; அது அவர்களுக்கு 1937ஆம் ஆண்டு தேர்தல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் அளவிற்கான ஒரு ஸ்தாபனமாக உறுதிப்படுத்தப்படுவதற்கு உதவி செய்தது. எனினும், காங்கிரசின் காரியக்கமிட்டியில் இடதுசாரிகள் சிறுபான்மை எண்ணிக்கையாகவே இருந்தார்கள். நேருவும், போஸும் காங்கிரஸ் தலைவர் பதவியில், அவர்கள் பிரதானமாக வலதுசாரிகளே நிறைந்திருந்த காரியக்கமிட்டியுடன் இணைந்துதான் பணியாற்ற வேண்டும் என்ற அளவிற்கே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அந்த குறிப்பிட்ட மூன்றாண்டு காலத்தில் இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி என்பது உண்மையிலேயே காங்கிரசின் வலதுசாரி தலைமையை மிகுந்த படபடப்புக்குள்ளாக்கிவிட்டது. தேர்தல் போராட்டத்தில் காங்கிரசின் பின்னால் வெகுமக்களை அணிதிரட்டுவதில் இடதுசாரி இயக்கம் உதவி செய்தது என்ற போதிலும், அந்தத் தேர்தலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துகொள்ள முடியாத அளவிற்கு காங்கிரஸ் தலைமைக்குழு எதிராகவும் இடதுசாரி இயக்கம் நின்றது.  எனவே, வலதுசாரி தலைமையில் இருந்தவர்கள், காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஓராண்டுகாலம் வகிப்பதற்கு சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் நான்காவது ஆண்டாக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கு இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடையே காங்கிரசுக்குள் மிகக் கடுமையான போராட்டம் நடைபெற்றது. இடதுசாரிகளின் வேட்பாளராக சுபாஷ் சந்திர போஸும், வலதுசாரிகளின் வேட்பாளராக பட்டாபி சீத்தாராமையாவும் போட்டியிட்டார்கள். மிக முக்கியமான போராட்டமாக இது மாறிவிட்டது. இப்போராட்டத்தில் இடதுசாரிகள் சார்பில் வெற்றிகரமாக சுபாஷ் போஸ் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதற்குப்பிறகுதான் இன்னும் கடுமையான மோதல் துவங்கியது. அந்த மோதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரை தோல்வியடைந்தவராக ஆக்குவதில் வலதுசாரிகள் சில தவறான உத்திகளை கைக்கொண்டு வெற்றிபெற்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு முன்பு வலுவாக கட்டமைக்கப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியில் விரிசல் விழத் துவங்கியது. 1936ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள் மற்றும் காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரிகள் ஆகிய அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய ஐக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை துவக்கிவைத்தது என்று சொன்னால், 1939ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாடு அதற்கு முடிவுரை எழுதும் விதமாக அமைந்துவிட்டது.

இது காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவிலும் பிரதிபலித்தது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் அதன் ஸ்தாபன கட்டமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த மாசானி போன்ற தலைவர்கள் தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை ஆனது, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் தனிப்பட்ட தலைவர்களின் விருப்பம் எதுவாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளின் ஒற்றுமை அவசியம் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஏனென்றால், ஜெயப்பிரகாஷ் நாராயணன்தான், ஏன் சோசலிசம் என்ற நூலின் ஆசிரியர்; காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களை வடிவமைத்ததில் முதன்மையானவர்.  இந்த நிலையில், உலகில் குறிப்பிடத்தக்க அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுப்போக்குகள் நடந்துகொண்டிருந்தன. பாசிச எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக முன்னேறிக்கொண்டிருந்தது. அதேவேளை, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளின் நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ தலைவர்களால் பாசிச எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சிகளும் சதிவலைகளும் பின்னப்பட்டன. இத்தகைய உலகச் சூழலில் உலக அளவிலேயே கம்யூனிஸ்ட்டுகளின் சோசலிஸ்ட் ஒற்றுமை தேவை என்பதை ஜெயப்பிரகாஷ் நாராயணன் உணர்ந்திருந்தார். இந்தியாவிலும் கூட ஒன்றுபட்ட இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார். சாத்தியமானால் கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளை இணைத்துவிட வேண்டுமென்றும் கூறி வந்தார். மாசானி போன்ற தனது கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சகாக்களின் கருத்தான, இரண்டு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது கம்யூனிஸ்ட்டுகளை வலுப்படுத்தவே உதவும் என்பது உண்மைதான் என ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஒப்புக்கொண்டார். எனினும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை; அவரைப்பொறுத்தவரை, சோசலிஸ்ட் கட்சியும் சேர்ந்தே வளரும் எனக் கருதினார். 

எனினும், 1930களின் பிற்பகுதியில் நிலைமை வேகமாக மாறியது. சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்புரட்சிக்காரர்களாக மாறிவிட்ட டிராட்ஸ்கியவாதிகளுக்கு எதிராக விசாரணைகள் நடக்கத் துவங்கின; எதிர்ப்புரட்சி பாதைக்கு சென்றுவிட்ட செஞ்சேனையின் சில உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது  தொடர்பான செய்திகள், தாராளவாத சோசலிஸ்ட்டுகளான ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களை தடுமாற்றம் அடையச் செய்தது. இந்தத் தலைவர்கள், ஏற்கெனவே மாசானி மற்றும் அவரது கூட்டாளிகள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராகவும் கூறிவந்த சந்தேகக் கருத்துக்களை நம்பத் துவங்கினர். இந்தக் கருத்துக்கள் அடிப்படை அற்றவை என்று இதற்கு முன்பு அவர்கள் கூறிவந்தனர் என்பது கவனிக்கத்தக்கது. அங்கே சோவியத் ஒன்றியத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டநிகழ்வுப் போக்குகளின் பின்னணியில், சோவியத் தலைவர்கள் நாஜிச ஜெர்மனியுடன் அனாக்கிரமிப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து, இங்கே கம்யூனிஸ்ட்டுகள் மீதான இவர்களது சந்தேகம் மேலும் வலுவடைந்தது. உலக நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இருந்த மாசானி, அசோக் மேத்தா, பட்வர்தன் போன்ற தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனை நெருக்கமானவராக மாற்றியது. எனினும், ஏற்கெனவே வரையறுக்கப்பட்டு பிரகடனம் செய்யப்பட்ட மீரட் மற்றும் பைஸ்பூர் ஆவணங்களின் அடிப்படையில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் இணைந்து மிகப்பெரும் எண்ணிக்கையிலான இளம் காங்கிரஸ் ஆண்களும், பெண்களும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்; எனவே தனது முந்தைய நிலைப்பாடான சோவியத் ஆதரவுமற்றும் பாசிச எதிர்ப்பு என்பதிலிருந்து புதிய நிலைப்பாடான கம்யூனிஸ்ட் எதிர்ப்பு என்ற நிலையை நோக்கி ஜெயப்பிரகாஷ் நாராயணனால் நகர்ந்து செல்ல முடியவில்லை. முன்பு நிலவிய உலகச்சூழலில் உலகிலேயே பாசிச எதிர்ப்பு சக்திகளால் மிகவும் ஆதரிக்கப்பட வேண்டிய தளமாக சோவியத் யூனியனே திகழ்கிறது என்றும், எதிரி வர்க்க ஏஜெண்டுகளிடமிருந்து சோவியத் ஒன்றியம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டி உள்ளது என்றும் உறுதியாக இவர்கள் நம்பினார்கள்; அதனால் சோவியத் ஒன்றியத்தின் தலைமைக்கும் கம்யூனிச அகிலத்தின் தலைமைக்கும் அவர்கள் முழு மனதுடனான ஆதரவினை அளித்திருந்தார்கள்.

சோவியத் – ஜெர்மனி உடன்பாட்டைப் பொறுத்தவரை, அதை சந்தேகமில்லாமல் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். சோவியத் ஒன்றியத்தை தனிமைப்படுத்தவும் பலவீனப்படுத்தவும் ஏகாதிபத்தியம் ஒவ்வொரு ராஜ்ஜிய ரீதியான  மற்றும் அரசியல் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தியது; அப்படி தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து தங்களது நாட்டை பாதுகாப்பதற்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும், வாய்ப்பையும் சோவியத் தலைவர்கள் பயன்படுத்துவதில் மிக உறுதியாக இருந்தார்கள். அடுத்தடுத்த நிகழ்வுப்போக்குகள் அதை நிரூபித்தன. அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்திவிட்டு கடைசியாக நாஜிகள் சோவியத் மீது தாக்குதலைத் துவக்கினார்கள். அதை எதிர்த்து சோவியத் மக்கள் வரலாற்றில் முத்திரைப் பதிக்கத்தக்க விதத்தில் மிகப்பெரும் எழுச்சியோடு தடுத்து நிறுத்தி பதிலடி தாக்குதல் நடத்தினார்கள். இந்த நிகழ்வுகளின் உச்சக்கட்டமாக பாசிசத்தை சோவியத் ஒன்றியம் மண்ணோடு மண்ணாக வீழ்த்தியது. இது, சோவியத் ஒன்றியத்தின் தலைமை மேற்கொண்ட நிலைபாடுகள் மிகச்சரியானவை என்பதை வரலாற்றில் நிரூபித்து விட்டன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

Part IV Link https://backup.tamilmarx.org/?p=484&preview=true

Leave a Reply