திபெத்: பீடபூமியின் அரசியல் ஆடுகளம்-அ.பாக்கியம்

திபெத் பீடபூமி பூமியின் மிக உயர்ந்த பீடபூமி என்பது உலகறிந்த விஷயம். புவியியல் ஆய்வாளர்களுக்கு இமயலையைப்போன்றே இது ஒரு ஆய்வுப் பொருள். மானிடவியல் அறிஞர்களுக்கு உயிரின பரிணாம வளர்ச்சியின் படிமங்களை ஆய்வுக்கு உட்படுத்துகிற இடம். மலையேறிகளுக்கு தங்களது சாகசங்களை வெளிப்படுத்துவதற்கான சாகசபூமி. பறந்து விரிந்து உயர்ந்து கிடக்கும் இதன் அழகு காண்போரின் கண்களை கொள்ளை கொள்ளும். திபெத் என்றால் இந்திய மக்களுக்கு தலாய்லாமாவின் பிரதேசம் என்ற கற்பிதம் கவனத்திற்கு வரும். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த பீடபூமி சீனாவை சிதறடிப்பதற்கான ஒரு அரசியல் கருவி.

சீனாவிற்கோ சீன வரலாற்றின் பிரிக்க முடியாத பகுதியாகவும், இனக்குழு ஒற்றுமையின் சின்னமாகவும், புவிசார் அரசியலின் பிரத்யேக பிரதேசமாகவும் இருக்கக்கூடியது திபெத்பீடபூமி ஆகும். திபெத் என்றால் சீன் மொழியில் மேலே என்றும், திபெத்திய மொழியில் கீழே என்றும் பொருள்படும். 4,70,000 சதுரமைல் பரப்பளவு கொண்டது. இந்த பீடபூமி 14 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு மங்கோலியர்கள் மொன்பா, தமாங், கியாங், ஷேரபா, லோபா, ஹான் சீனர்கள், ஹுய் சீனர்கள் மற்றும் பிற இன குழுக்கள் வசிக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி 14ஆவது தலாய் லாமாவின் 90 வது பிறந்தநாள். ஒரு வாரம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்த நாளின் செய்தியாக தலாய்லாமா தனது மறுபிறவி வாரிசை கடைபிடிக்கப் போவதாக அறிவித்தார். எனது மறுபிறவி வாரிசு சுதந்திரப் பிரதேசத்தில் நடக்கும் என்றார். சீன அரசாங்கம் இதை உடனடியாக கண்டித்தது. அமெரிக்க அரசாங்கம் சீனா இதில் தலையிடக்கூடாது என்று அறிவித்தது. இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜு தனது மறுபிறவி வாரிசை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் தலாய்லாமாவிற்கு மட்டுமே உள்ளது என்று அறிவித்தார்.

சீனா இதற்கும் கண்டனம் தெரிவித்தது. இந்திய வெளியுறவுத்துறை இந்தியா மத சுதந்திரத்தை மதிக்கும் என்று அறிக்கை விட்டு முடித்தது. தற்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலாய் லாமாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார், தலாய்லாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜு ராஜூ, ரஞ்சன் சிங், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் அமைச்சர் சோனம் லாமா போன்றவர்கள் கலந்து கொண்டதும் நடந்துள்ளது.

மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளையும் சீனாவின் வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. திபெத்திய மத தலைவர் தலாய்லாமா மதத்தின் பெயரால் சீனாவில் இருந்து ஜி சாங்கை அதாவது திபேத்தை பிரிக்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தலாய்லாமா சீன எதிர்ப்பு பிரிவினைவாத நபர் என்றும் குற்றம் சாட்டி உள்ளது. பிரிவினை சக்திகளுக்கு இந்தியா துணை போகக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். பிறந்தநாளை கடந்தும் மறுபிறவி வாரிசு என்பது முக்கிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இது வாரிசை நியமிப்பது மட்டுமல்ல, சீனாவில் இருந்து திபெத் சுதந்திரம் அடைய வேண்டும், தனி நாடாக வேண்டுமென்ற கோரிக்கை சார்ந்த அம்சங்களும் இருக்கிறது . இதன் பிரச்சனைகளை அறிந்து கொள்ள வரலாற்று ரீதியான தரவுகளை அணுக வேண்டும். அதன் மூலம் திபெத்திய பிரச்சனை புரிந்து கொள்ள முடியும்.

தொன்மத்தின் தொடர்ச்சிகள்..

சுமார் 40 முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியா மற்றும் யுரேசிய தட்டுகளின் மோதலால் திபெத் பீடபூமி மேல் எழுந்து வந்துள்ளதாக புவியியல் விஞ்ஞானம் மதிப்பீடு செய்துள்ளது. பழைய கற்காலத்தில் அதாவது முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. புதிய கற்காலங்களில் விவசாயம், மண்பாண்டம் போன்றவற்றை இப்பகுதியில் இருந்த மக்கள் பயன்படுத்திய தற்கான தரவுகள் கிடைத்து இருக்கின்றன. இதற்கு மேலும் திபெத் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட நுண்கற்கள் வடக்கு சீன கருவியின் கலாச்சாரம் திபெத்திய கற்காலம் ஆகியவற்றின் இணைப்பை வெளிப்படுத்துகின்றன. ஹோலோசீன் காலத்தின் நடுப்பகுதியில் வடக்கு சீனாவில் இருந்து வந்தவர்களும் திபெத்திய பிரதேசங்களில் குடியிருந்தவர்களும் இரண்டற கலந்து விட்டனர். ஹோலோசீன் காலம் என்பது புவியியல் அட்டவைணைப்படி பனியுகத்தின் முடிவில் அதாவது சுமார் 11,700 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சகாப்தம் ஆகும். இக்காலகட்டம் மனித நாகரீகம் விவசாயம் போன்ற முக்கிய நிகழ்வுகளை பயன்படுத்த ஆரம்பித்த காலகட்டமாகும்.

வரலாற்று வளர்ச்சி விதிகளின்படி துண்டு துண்டான சிற்றரசுகள் தான் பண்டைய காலத்தில் அதிகாரத்தில் இருந்தார்கள். உலகம் முழுவதும் நிலப்பிரபுத்துவம் விரிவடைந்த பொழுது தன்னுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக பேரரசுகளை உருவாகியது. இக்காலகட்டத்தில் எண்ணற்ற சிற்றரசுகள் அழிக்கப்பட்டு பேரரசுகளின் ஆட்சியின் கீழ் வந்தன. திபெத்தியப் பகுதியும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வரலாற்றின் பல காலங்களில் இன்றைய திபெத் என்று சொல்லக்கூடிய பகுதிகள் தனித்தனியான சிற்றரசுகளாகவும், பல நேரங்களில் சீனாவின் பேரரசின் கீழும் இருந்து வந்துள்ளது.

பொது ஆண்டு முன்பு முதலாம் நூற்றாண்டில் மேற்கு திபெத்திலும் வடகிழக்கு திபெத்திலும் சும்பா என்ற பழங்குடி மக்கள் சிறிய சிறிய குடியிருப்புகளையும் கோட்டைகளையும் உருவாக்கி இருந்தார்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றது. பொது ஆண்டுக்கு முன்பு (கிமு) 500 முதல் பொது ஆண்டு(கிபி) 625 வரை திபெத்தின் மேற்கு பகுதியில் ஜாங் சுங் என்ற வம்சத்தின் ஆட்சி நடைபெற்றது. ஜாங் சுங் மக்கள் இன்றைய மேற்கு பகும ஆட்சியாளர்கள் என்பதை பண்டைய திபெத்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.பொஆமு127 முதல் பொது ஆண்டு 242 வரை யார் லங்க் வம்சம் திபெத்திய பகுதியில் ஆட்சியில் இருந்தது. இந்த வம்சம் ஆட்சி நடத்திய காலத்தில் திபெத்தை விரிவு படுத்தினார்கள். இதன் மூலம் விரிவடைந்த ஒரு அரசு உருவாவதற்கான அடித்தளத்தை யார் லங்க் வம்சம் அமைத்துக் கொடுத்தது. இந்தப் பேரரசு திபெத்திய பீடபூமியை மையமாகக் கொண்டு ஆட்சி நடத்தியது. ஏழாம் நூற்றாண்டில் மன்னர் சாங்ட்சென் காம்போ என்பவரால் இந்தப் பேரரசு விரிவடைந்தது. அடுத்து வந்த மன்னர் இதை மேலும் விரிவு படுத்தினார். ஆப்கானிஸ்தான் வரை பரவியது. இக்காலத்தில் நடைபெற்ற மோதல்கள் மூலமாக திபெத்திய பேரரசு துண்டு துண்டாக மாறியது. அரசியல் வீழ்ச்சியையும் சந்தித்தது. 1240களில் மங்கோலியா மன்னர்கள் திபெத்தை கைப்பற்றினார்கள்.

திபெத்திய பௌத்தம் இந்திய வழி பௌத்தம் அல்ல. 

ஜாங்சுங் வம்சம் ஆட்சி செய்த காலத்தில் திபெத்தில் போன் என்ற பூர்வீகமதம் இருந்தது. இந்த மதம் ஏழாம் நூற்றாண்டில் பௌத்தம் வருவதற்கு முன்பு ஒழுங்கமைக்கப்பட்ட, செல்வாக்கு மிக்க உள்ளூர் மதமாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டில் சாங்ட்சென் காம்போ மன்னர் காலத்தில் திபெத்திற்குள் பௌத்தம் நுழைந்தது. எட்டாம் நூற்றாண்டில் அரசர் இட்ரிசங் தட்சன் காலத்தில் பௌத்தம் செழித்து வளர்ந்தது..பௌத்தத்திற்கும் போன் மதத்திற்கும் கடுமையான போட்டி இருந்தது. பௌத்த மதத்தால் போன் மதத்தை மாற்றியமைக்க முடியவில்லை.அதற்கு மாறாக பொத்தம் ஒரு ஆழமான சமய கலப்பிற்கு உட்படுத்திக் கொண்டது.

போன் மதம், மேற்கு திபெத்தில் ஜாங்ஜூங் எந்த இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக நம்பப்படுகிறது. இந்த மதத்தை ஞானி டொன்பா ஷென்ரப் மிவோச்சே என்பவர் உருவாக்கியதாகவும் இம்மக்கள் நம்புகிறார்கள். இம்மதத்தின் நம்பிக்கைப்படி அண்டவியலில் தெய்வங்கள் மட்டுமல்ல ஆவிகளும் இருக்கிறது. மலைகளும், வானமும், மூதாதையர்களுடன் தொடர்புடையது. இயற்கை வளங்கள் வாழ்க்கை செழிப்புக்கு உதவுகிறது. அதே நேரத்தில் கோபம்நிறைந்தது. தெய்வங்களும் ஆவிகளும் கோபங்கள் வந்தால் பலி கொடுக்கும் வழக்கம் இவர்களிடையே காணப்பட்டது. சில நேரங்களில் மனிதர்களையும் பலி கொடுத்தார்கள்.

சடங்குகள் நடத்துவது, அன்றாட நடவடிக்கையாகவும் எதிர்காலத்தை கணிப்பதற்காக குறி சொல்லுதலும் இவர்களின் வழக்கத்தில் இருந்தது. எண்ணற்ற மூடநம்பிக்கைகள், சடங்கு நிறைந்து காணப்பட்டாலும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற மதமாக இருந்தது. இந்த சடங்குகளை நடத்துவதற்கு நிபுணர்கள், மற்றும் மருத்துவர்கள், ஆவிகளை ஓட்டக் கூடியவர்களும் இருந்திருக் கிறார்கள்.

தற்பொழுதும் திபெத்தில் பரவிய பௌத்தம் இந்த மதத்தின் சடங்குகளை தழுவிக் கொண்டது, திபெத்திய பௌத்த மதத்தில் இருக்கக்கூடிய மலைகளையும், நீர் மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகள் இதனைச் சார்ந்தது. சடங்குகள், மைய ஆன்மீக நம்பிக்கை, குறி சொல்லுதல், பாதுகாப்பு சடங்குகள், உள்ளூர் தெய்வங்களுக்கான மரியாதை போன்றவை அனைத்தும் இதிலிருந்து திபெத்திய பௌத்தம் உள்வாங்கிக் கொண்டது.

அதே நேரத்தில் போன் மதமும் சில மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு துறவற கட்டமைப்புகளையும், தத்துவ கட்டமைப்புகளையும் பௌத்தத்திலிருந்து ஏற்றுக்கொண்டு இன்று வாழும் ஒழுங்கமைக்கப்பட்ட யுங்ட்ருங்போன் மதமாக உருவெடுத்தது. தலாய்லாமா திபெத்திய பௌத்தத்தின் ஐந்தாவது பள்ளியாக போன் மதத்தை அங்கீகரித்தார். நியிங்மா, காக்யு, சாக்யா, கெலுக் என்பவை திபெத்திய பௌத்தத்தின் நான்கு முக்கிய பள்ளிகளாகும்(மரபு). ஐந் தாவது பள்ளியில் சில பிரிவுகள் உள்ளன. அவற்றில் போன் மற்றும் ஜோனாங் ஆகும். எனினும் போன் மதம் தங்களை தனித்துவமாகவும் கருதுகிறார்கள்.

திபெத்திய பௌத்தம் என்பது போன் மதத்தின் ஆழமான வேர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்ட அதிநவீன கலவையாகும். இதன் காரணமாகத்தான் திபெத்திய பௌத்தம் சீனாவின் இதர பௌத்தத்திலிருந்து மாறுபட்டு இருக்கிறது. திபெத்திய மதம் சீனத்தில் உருவானது. அதற்கும் மற்ற இடங்களில் உருவான மதத்திற்கும் வேறுபாடு உண்டு என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மறுபிறவி வாரிசை தேர்ந்தெடுக்கிற பொழுது இதர நாடுகளின் தலையீடு கூடாது என்ற கருத்தை சீனாவின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ பேச்சாளர் திபெத்திய மதம் சீனாவில் உருவானது என்பதை ஆணித்தரமாக தெரிவித்திருக்கிறார்.

திபெத்தில் நிலப்பிரப்புத்தும் வளர்ந்த பொழுது அதன் பிரதிநிதிகளாக நிலப்பிரபுக்களும் அவர்களின் மதத் தலைவர்களாக, ஆட்சியாளர்களாக லாமாக்கள் மாறினார்கள். லாமாக்களுக்கும், நிலப்பரிப்புகளுக்கும் மக்களை அடிமைப்படுத்தி சுரண்டுவதற்கு ஏற்ற வகையில் திபெத்திய பௌத்தம் இருந்தது. எனவே அந்த மத நம்பிக்கையை பயன்படுத்தி மக்களை அடமையாக வைத்திருந்தனர். புரட்சிக்குபிறகு இவை அனைத்தும் மாற்றப்பட்டது.

பேரரசின் ஆட்சியின் கீழ் திபெத்திய பகுதிகள் 

மங்கோலியர்கள் சீனாவை வெற்றிகொண்டு அவர்களின் ஆட்சியின் பிரதேசத்தை விரிவு படுத்தினார்கள். சீனாவின் பட்டுப்பாதை உட்பட தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள். தங்கள் ஆட்சிக்கு யுவான்வம்ச ஆட்சி என்று பெயரிட்டார்கள். இவர்களின் விரிவாக்கத்தின் ஒரு நிகழ்வாக 1240 இல் டோர்டூ தர்கான் என்ற படைத்தளபதியின் தலைமையில் படையெடுத்து திபெத்தை கைப்பற்றினார்கள். 1354 ஆம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்த யுவான் வம்சத்தின் ஆட்சியின் கீழ் தான் சீனாவின் ஒரு பகுதியாக திபெத்தும் இருந்தது. இராணுவம், நிர்வாகம், சட்டம் என அனைத்தையும் யுவான் ஆட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. சில மத அம்சங்களில் மட்டும் லாமாக்களுக்கு உரிமை கொடுத்திருந்தது. திபெத்திய பகுதிகளில் யுவான் பேரரசின் பிரதிநிதி யார் என்பதற்கான ஆலோசனையை லாமா சொன்னாலும் அவற்றை இறுதிப் படுத்தி அறிவித்தது யுவான் பேரரசின் அதிகாரமாக இருந்தது. 1354 ஆம் ஆண்டு யுவான் பேரரசு வீழ்ச்சி அடைந்த பிறகு மீண்டும் பிரதேசங்கள் பிரப்புக்களின் ஆட்சிக்கு மாறியது.

1354 முதல் பக்மோத்ரூபா என்ற வம்சம் திபெத்தின் சில பகுதிகளை ஆட்சி செய்தனர். 1435 க்கு பிறகு இந்த வம்சத்தின் அதிகாரம் குறைந்து. ரின்புங்பாவின் மந்திரிகள் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்கள் 1435 முதல் 1565 வரை திபெத்தின் மேற்கு பகுதியை ஆட்சி செய்தனர். 1565 முதல் 1642 ஆம் ஆண்டுகளில் சாங்பா அரசர்கள் ஆட்சி செய்தார்கள். திபெத்தின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்திய இவர்கள் தங்களது சொந்த பெயரிலேயே ஆட்சி நடத்திய கடைசி திபெத்தியஅரச வம்சமாகும். 1642 ஆம் ஆண்டு மங்கோலிய போட்டியாளர்களை தோற்கடித்து குஷி கான் ஆட்சியை நிறுவினார். இவரின் உதவியுடன் ஐந்தாவது தலாய்லாமா திபெத் பகுதியில் காண்டன் போட்ராங் என்ற ஒரு சிவில் நிர்வாகத்தை நிறுவினார். ஆட்சி அதிகாரம் முழுமையாக லாமாக்கள் கைக்கு வரவில்லை. தலாய்லாமா மத விஷயங்களுக்கு மட்டுமே பொறுப்பு என்று முடிவாக்கப்பட்டது இந்த ஆட்சியின் கடைசி கட்டத்தில் ஐந்தாவது தலாய்லாமா பதவி நீக்கம் செய்யப்பட்டார். வேறொரு தலாய்லாமாவை குஷிகான் ஆட்சி நியமித்தது. இந்த காண்டன் போட்ராங் இன்றும் அறக்கட்டளை என்ற பெயரில் அரசாங்க அமைப்பாக பேணப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள தலாய்லாமா இந்த காண்டன் போட்ராங்தான் அடுத்த வாரிசை நியமிப்பதற்கான அதிகாரம் படைத்தது என்றும் அதன் தலைவர் தான் என்பதையும் அறிவிக்கிறார்.

சீனாவில் யுவான் வம்சம் தோற்கடிக்கப்பட்டு மிங்க் வம்சம் ஆட்சிக்கு வந்த பொழுது திபெத்தும் அதன் ஒரு பகுதியாக மாறியது. மிங்க் வம்சம் திபெத்தின் மீது முழுமையான ஆட்சி அதிகாரத்தை செலுத்தியது. திபெத்தில் இருந்த தலைவர்களுக்கு மிங்க் வம்சம் பல்வேறு பட்டங்களை வழங்கியது. சீனாவின் தலைநகருக்கு வந்து போவதற்கான உரிமைகளை கொடுத்தது. இதன் பிறகு ஆட்சிக்கு வந்த கிங் வம்சம் அதாவது மஞ்சு வம்சம் 1720 முதல் 1912 வரை சீனாவை ஆட்சி செய்தது. இந்த ஆட்சியின் கீழ் திபேத் உட்பட மற்ற உள் ஆசிய பிரதேசங்கள் சீனாவின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. மஞ்ச வம்ச ஆட்சி காலத்தில் திபெத்தின் அனைத்து பகுதிகளிலும் இவர்கள் தலையிட்டு அதிகாரம் செலுத்தினார்கள்.

1912 ஆம் ஆண்டில் சன் யாட் சென் தலைமையில் சீனாவில் குடியரசு ஆட்சி ஏற்பட்டது. இந்த ஆட்சியிலும் திபெத்தில் இருந்த லாமாக்கல் தனிநாடு, தனி பிரதேசம் என்று கலகம் செய்த பொழுது சீனாவிற்கு உட்பட்ட பிரதேசம் என்பதையும், சீன சட்டங்கள்தான் திபெத்திலும் செல்லுபடியாகும என்பதையும் விளக்கினார்கள். இதன்பிறகு மஞ்சு வம்ச ஆட்சி வீழ்ச்சி அடைந்தவுடன் 13வது தலாய்லாமா திபெத்தின் உறவு சீனாவுடன் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இது வெறும் அறிவிப்பாக இருந்ததேதவிர எந்த மக்களும் இதன் பின்னால் செல்லவில்லை. 1933 ஆம் ஆண்டு 13வது தலாய்லாமா இறந்துவிட்டார். நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக குடியரசு ஆட்சியாளர் தூதுக்குழுவை திபெத்தின் லாசா நகருக்கு அனுப்பப்பட்டது. அந்த குழு அங்கு தங்கி திபெத்தின் சுதந்திர அறிவிப்புகளை பேசி தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுத்தது. ஆனால் முன்னேற்றம் ஏற்படவில்லை.

1945 மற்றும் 49 ஆம் ஆண்டுகளில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் புரட்சி வெற்றி பெற்ற பொழுது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. 1949 ஆம் ஆண்டு திபெத் பகுதியில் இருந்த சீன அதிகாரிகளையும், மைய அரசு தொடர்பான அலுவலகங்களையும் திபெத்திய லாமாக்கள் தாக்குதல் நடத்தி வெளியேற்ற தொடங்கினார்கள். கடும் பாதிப்புகளை உருவாக்கியது. கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான மக்கள் விடுதலை படையின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டது. வேறு வழியின்றி சீன அரசு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன் காரணமாக அக்டோபர் 23 1950 ஆம் ஆண்டு திபெத்திய துருப்புகள் சீன மக்கள் விடுதலைப்படையிடம் சரணடைந்தன.

13ம் நூற்றாண்டில் இருந்து திபெத் பகுதி முழுவதும் சீனப் பேரரசுடன் இணைந்து இருந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்து சீன கலாச்சாரங்களுடன் கலந்து பல புதிய கலாச்சார விழுமியங்களையும் உருவாக்கி இருக்கிறது வரலாறு இவ்வாறு இருக்கையில் ஏகாதிபத்திய அரசுகளும் மேற்கத்திய அரசுகளும் 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர திபெத்தை கைப்பற்றி விட்டார்கள் என்ற பொய் பிரச்சாரத்தை கிளப்பி வருகிறார்கள். அதனால் சீனாவிடமிருந்து திபெத்தை விடுவிக்க வேண்டும் என்ற விஷயத்தை பிரகடனம் செய்கிறார்கள்.

அ.பாக்கியம்

தொடர் 29 ஜூலை 16 புதனன்று வெளியாகும்

 

 

Leave a Reply