1840களில் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தொழிலாளி வர்க்கத்தை முதலாளித்துவ ஜனநாயக புரட்சிகளில் பங்கேற்குமாறு வலியுறுத்தினார். அவ்வாறு முதலாளித்துவ ஜனநாயகவாதிகளின் புரட்சியில் தொழிலாளி வர்க்கம் உதவுவதன் மூலம் நிலவுடைமை சமூகத்தை ஒழிப்பதற்கும் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளான பத்திரிக்கை சுதந்திரம் , நடுவர் குழு விசாரணை ( நீதிமன்றம் அல்ல பொதுமக்களிடமிருந்து சட்டரீதியாக கல்வி பெற்று இருக்காத பொது மக்களை கொண்ட நீதி விசாரணைக் குழு) , பொது இடங்களில் ஒன்று கூடும் சுதந்திரம் அமைப்பாய்த் திரளும் சுதந்திரம் மற்றும் வயது வந்தவர்களுக்கான வாக்குரிமை மூலம் மக்களுக்கான பிரதிநிதித்துவம் இத்தகைய ஜனநாயக உரிமைகளை சொந்த பாட்டாளி வர்க்க நலன்களுக்காக பயன்படுத்த முடியும் என்றனர்.
ஜனநாயக நிறுவனங்களுக்குள் போராட்டம் நடத்தி சமூகத்தை சோசலிசத்தை நோக்கி மாற்றுவதற்கு தொழிலாளி வர்க்கத்திற்கு இவை கட்டாயமாகும்.
இத்தகைய வழிகாட்டுதல் மூலம் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கும் சோசலிச கொள்கைகளுக்கும் இடையே உள்ள நெருங்கிய தொடர்பை மார்க்ஸ் வலியுறுத்தினார். அன்று போலவே இன்றும் புரட்சிகரமான தொழிலாளி வர்க்க கட்சியின் பெயருக்கு இந்த வியூகமும் தந்திரமும் பொருத்தமானது.
உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடாளுமன்ற நிறுவனங்களின் அடித்தளங்கள் ஆளும் வர்க்கத்தாலேயே தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதை வரலாறு மீண்டும் மீண்டும் காட்டி வருகிறது. தற்போது ஆளும் வர்க்கத்தில் உள்ள முதன்மையான கட்சியால் முதலாளித்துவ நாடாளுமன்றம் மிக மோசமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவில் முதலாளித்துவ ஜனநாயகம்
புதிதாக சுதந்திரம் அடைந்து சர்வாதிகாரத்தின் கீழ் உள்ள நாடுகளைப் போல இல்லாமல் இந்தியாவில் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் உயிர் பிழைத்து வந்தாலும், இந்தியாவின் முதலாளித்துவம் புதிதாக சுதந்திரமான நாடுகளை விட நன்றாகவே வளர்ந்திருந்தாலும் உண்மை என்னவென்றால் முதலாளித்துவ ஜனநாயகம் இந்தியாவில் நன்றாக வேரூன்றவில்லை. அவை இன்னும் உடையக்கூடிய வகையில் தான் உள்ளன.
முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகும் போது தொழிலாளி வர்க்கம் அதை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். அது முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தாண்டி தொடர்ச்சியான போராட்டங்களின் மூலமாக சோசலிசத்தை நோக்கி முன்னேறும் தொழிலாளி வர்க்கத்திற்கான வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகம்
தற்போது ஜனநாயகமானது இந்தியா உட்பட பல ஜனநாயக நாடுகளில் ஒரு இலவசமான பரிசாக இல்லை. சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மிக நீண்ட நெடிய சுதந்திரப் போராட்டத்தின் மூலமாக தான் இந்தியா பெற்றது. அதனடிப்படையில் தான், ஒரு பெரிய மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு பொருத்தமான அரசாங்கத்தின் வடிவமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை இந்தியா தேர்ந்தெடுத்தது. எனவே, நாடாளுமன்ற ஜனநாயகம் நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சமாக மாறியுள்ளது.
இந்த நாடாளுமன்ற ஜனநாயக அரசாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் தேர்தல் நடைமுறை தான். ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடப்பது அவசியம். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவது தான் செயல்படக்கூடிய ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடியாகவும் உள்ளது.
இப்போது, நாடாளுமன்ற நிறுவனங்களுக்கான தேர்தல் நடத்தக்கூடிய முழு செயல்முறையும் – அரசியலமைப்பு மற்றும் ‘சுதந்திரமான’ தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுக்கு நன்கு வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கும் போதிலும், தேர்தல் ஆணையர்களை நியமிப்பதும், தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதிலும் வரும் பாகுபாடுகளையும் தலையீடுகளிலிருந்து தனிமைப்படுத்துவதும் மிக மிக சவாலான பணிகளாக மாறியுள்ளன.
வணிகமயமான தேர்தல்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமலாக்கத்துறை சுமார் ரூ.8889 கோடிகும் அதிகமான பணத்தைக் கைப்பற்றியுள்ளது. தேர்தலைகளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செலவிடும் பெரும் அளவிலான பணம் ஒருபுறம் இருக்கட்டும். தேர்தல் பத்திரங்கள் மூலமாக கார்ப்பரேட்/பெரிய வணிக நிறுவனங்களின் நிதியுதவியை சட்டப்பூர்வமாக முயன்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மற்றும் சில என்ஜிஓக்களின் சட்ட ரீதியிலான தலையீடுகளால் தேர்தல் பத்திர நடைமுறை முறியடிக்கப்பட்டது.
எனினும் ஆள்பலத்தின் காரணமாக (வன்முறையை ஏவி பூத்களை கைப்பற்றுவது, சிறுபான்மையினர் உள்ளிட்ட மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது) மொத்த தேர்தல் செயல்முறையும் சிதைக்கப்பட்டது. வாக்காளர்களின் மனதைக் கட்டுப்படுத்துவதிலும், ஈர்ப்பதிலும் ( திசை திருப்புவது ) செல்வாக்கு செலுத்துவதிலும் கார்ப்பரேட் ஊடகங்களின் பங்கு அதிகமாக உள்ளது.
கட்சிகள் தங்கள் சொந்த செய்திகளையும், கட்டணம் கொடுத்தும் செய்திகளையும் பெருமளவில் உற்பத்தி செய்கிறார்கள். இந்நிலையில் நியாயமான மற்றும் பாகுபாடு காட்டாத தேர்தல் செயல்முறை, அதிகமான குடிமக்கள் பங்களிப்புடன் நடைபெறுவது, ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கப்படுவதற்கு அடிப்படையானது என்பது மிகவும் அடிப்படையான மற்றும் தெரிந்ததே என்றாலும், அதன் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
தேர்தலில் தேவைப்படும் கட்டுப்பாடுகள்
ஆனால் கடந்த சில 10 ஆண்டுகளாக தேர்தல் முறை ஏன் இவ்வளவு ஊழல் நிறைந்ததாக உருவெடுத்துள்ளது? பேராசிரியர் பிரபாத் பட்நாயக்கின் கூற்றுப்படி, ஜனநாயகம் என்பது கொள்கையளவில் மக்களின் இறையாண்மையைக் குறிக்கிறது; உலகமயமாக்கல் காலகட்டத்தில் நிதி உலகமயமாக்கல் என்பது, நிதி மூலதனத்தின் இறையாண்மையை நிறுவுவதாகும், இது மக்களின் இறையாண்மையை கட்டாய இடமாற்றம் செய்கிறது, எனவே ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை அழிக்க துவங்குகிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் ஒரு விரிவான தேர்தல் சீர்திருத்தத்திற்கான சூழலும் அவசரமும் பார்க்கப்பட்டு ஒரு புதிய வடிவத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். தேர்தல் முறையில் சிறுசிறு மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், கறுப்புப் பணப் பயன்பாடு, சாதிய வெறி, வகுப்புவாதம், மோசடி, வன்முறை, நிர்வாக இயந்திரத்தை தவறாக பயன்படுத்துவது, அரசியல் குற்றவாளிகள் நிறைந்த இடமாக மாறுவது, சில பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவது, எல்லாவற்றிற்கும் மேலாக இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு போன்ற பல தீமைகளால் நமது தேர்தல் செயல்முறை இன்னும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் அனைத்தும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையை சிதைக்க வழிவகுக்கிறது. எனவே, தேர்தல் செயல்முறையின் தூய்மையைத் தன்மையை பேணுவதற்கும், அரசியல் கட்சிகளுக்கு பெருநிறுவனங்களின் நிதி பாய்வதை தடுத்து நிறுத்துவதும், அந்த பணத்தின் செல்வாக்கை உரிய முறையில் அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் அகற்றுவதும், அரசியல் குற்றச் செயல்களை ஒழிப்பது,தேர்தல் மனுக்களை விரைவுபடுத்த வைத்து, உள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது, அரசியல் கட்சிகளின் செயல்பாட்டில் நிதி வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவது , இந்திய தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்துவது, கருத்துக்கணிப்புகள் மற்றும் கட்டணச் செய்திகள் ( paid news ) கருத்துகளை ஒழுங்குபடுத்துவது என பலவற்றை உள்ளடக்கிய பல்முனை அணுகுமுறை தேவைப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் மீதான தாக்குதல்
கெடுவாய்ப்பாக பல பத்தாண்டுகளாக இந்திய தேர்தல் முறையைப் இந்த பிரச்சனைகள் பாதித்துள்ளன. சமீபத்தில் அந்த பாதிப்புகள் அதிகரித்திருப்பது இந்த அச்சத்தை நிரூபிக்கின்றது. 2023 மே 2 முதல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முற்றிலுமாக மீறி தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டது முதல், முன்னாள் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென எந்த விளக்கமும் கொடுக்காமல் பதவியை விட்டு வெளியேறியது வரை, அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வரை நடந்த நிகழ்வுகளில் அந்த பாதிப்புகளை பார்க்க முடியும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தேர்தல் ஆணையம் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அட்டவணை வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஒவ்வொரு கட்டமாக வாக்குப்பதிவு முடிந்தவுடன் செய்தியாளர் சந்திப்பில் பதிவான வாக்குகளின் உண்மையான தரவைப் பகிர்வது என்ற தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையை கைவிட்டது. பிரதமரின் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தவறான தகவல் நிறைந்த பேச்சுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் அமைதிகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தான் இந்தியா தனது ஜனநாயக நற்சான்றிதழைத் தொடர அதன் தேர்தல் செயல்முறையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக, தேர்தல் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய சிக்கல்களின் முழு வரம்பையும் உள்ளடக்கிய சில முக்கியமான உறுதியான பரிந்துரைகள் மற்றவற்றிற்கு இடையே உள்ளன.
செயல்முறை, அதிகமான குடிமக்கள் பங்களிப்புடன் நடைபெறுவது, ஜனநாயகத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கப்படுவதற்கு அடிப்படையானது என்பது மிகவும் அடிப்படையான மற்றும் தெரிந்ததே என்றாலும், அதன் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.”
அவை பின்வருமாறு;
விகிதாசார பிரதிநிதித்துவம்
ஒருதொகுதியில் அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றி பெறுவார் என்ற ( first-past-the-post ) இந்தியாவில் தற்போது உள்ள நடைமுறை அமைப்பின் கீழ் ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டுள்ளது. பணபலம் ஆட்சியை ஆளுகிறது. இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் பிரச்சினையைப் பொறுத்த வரையில், நாடாளுமன்றத்திலும், நாட்டில் உள்ள பல்வேறு மாநில சட்டப் பேரவைகளிலும் மக்களவைக்கான பிரதிநிதித்துவத்தை நிர்வகிக்கும் அமைப்பில் ஒட்டுமொத்த கவனம் செலுத்தப்படுகிறது.
இங்குள்ள பிரதிநிதித்துவ அமைப்பு பொதுவாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் தனித்தனியாக மற்ற அனைவருடனும் ஒப்பிடும்போது அதிக வாக்குகளைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த 70 ஆண்டுகால தேர்தல் அனுபவங்கள், இதுவரை, மக்கள் மன்றத்தில் (லோக்சபா) மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை நிரூபித்துள்ளது.
17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய தேர்தல் நடைமுறையின் கீழ் பாஜக தலைமையிலான அரசு 38 சதவீத வாக்குகளுடன் மட்டுமே ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டியது மிகவும் பொருத்தமானது. அதாவது 62 சதவீத வாக்காளர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு உட்பட அனைத்து முந்தைய அரசாங்கங்களும் பெரும்பான்மை வாக்குகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வரவில்லை என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமான உண்மை தான். அதனால்தான், விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு செல்லவேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
அம்முறையில் ஒவ்வொருவரும் தங்களின் வாக்குப் பங்கிற்கு ஏற்ப மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.
திரும்ப அழைக்கும் உரிமை
ஒரு தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை செயல்படாத காரணங்களுக்காகவும், அவ்வப்போது முன்னே வரும் பிற காரணங்களுக்காகவும் அவரது மக்கள் பிரதிநிதி பதவியில் இருந்து திரும்ப பெரும் அதிகாரத்தையும் இந்த விகிதாசாரப்பிரதிநித்துவ முறை வழங்குகிறது.
அடிமட்டத்தில் உள்ள மக்களுக்கு இம்முறை மூலமாக அதிகாரம் கொடுக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி மக்களுக்கு உண்மையாகப் பொறுப்புள்ள நபராக இருக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முறையாக செயல்படவில்லை என்றால் நீக்கப்படுவார்கள் என்ற பயத்தின் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தகுதியான மற்றும் மக்கள் விரும்பத்தக்க வேட்பாளர்களை களமிறக்குவதன் மூலம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
தேர்தல்களுக்கு அரசாங்கத்தின் நிதியுதவி
அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசாங்கம் நிதி உதவியை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கலாம். இதன் மூலம் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு நிதியளிப்பதன் மூலம் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் சுயநலன்களின் மீதான வெளிப்புற அழுத்தத்தை கட்டுப்படுத்துவது அல்லது அகற்றுவது இதன் நோக்கமாக இருக்கும். தேர்தல்களின் போது கணக்கில் காட்டப்படாத பணத்தை புழக்கத்தில் விடுவதையும், குற்றவாளிகளின் பலம் மற்றும் பொது வாழ்க்கையில் ஊழலையும் கட்டுப்படுத்தவும் இது உதவும்.
தேர்தல் கமிஷன்
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நமது அரசியலமைப்பு நடுநிலைத் தன்மையை கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை (ஆர்பிஏ) இயற்றியுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த சட்ட விதிகளை கவனமாக பின்பற்ற வேண்டும். ஒரு தேர்தல் ஆணையர் சட்ட அதிகாரங்களை மீறினாலோ, மற்ற அரசியலமைப்பு அதிகாரிகளின் அதிகாரங்களை தவறான நோக்கத்துடன் பறித்தாலோ அவரைக் கட்டுப்படுத்த சட்டரீதியான அதிகாரமும் வழிமுறைகளும் இருக்க வேண்டும்.
உலகமயமாக்கல் ஏற்கனவே உழைக்கும் மக்களை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளி அவர்களை மீண்டும் மீண்டும் கொடூரமான முறையில் பிழிந்து தள்ளிக்கொண்டுள்ளது. இந்நிலையில் உலகமயமாக்கல் நீண்டகால நெருக்கடிக்குள் நுழையும் போது, ஜனநாயகத்தில் வெளிப்படையான பலவீனம் மற்றும் பாசிசப் போக்குகளின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கி விடுகிறது. உலகமயமாக்கலால் உருவான பொருளாதார நெருக்கடியின் காரணமாக எதேச்சதிகார மற்றும் பாசிச சக்திகளின் இத்தகைய எழுச்சி சில காலமாகவே நிரம்பியுள்ளது.
எனவே 1.) ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நமது போராட்டம் 2.) ஒரு விரிவான தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்பதற்கான போராட்டம் ஆகிய இரண்டும் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் ஒருங்கிணைந்த தேர்தல் சீர்திருத்தங்கள் உண்மையான சீர்திருத்தங்களைச் சீர்குலைக்காமல் இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், விரிவான தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டுவரவும் நாம் போராடுவது, சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாகும். மேலும் சிறப்பானதாக காட்டப்படுகிற தேர்தல் சீர்திருத்தங்கள் உண்மையான சீர்திருத்தங்களை மறைத்துவிடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கட்டுரையாளர் ஆர்.கருமலையான், அகில இந்திய செயலாளர், சிஐடியு.
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் சேது சிவன்