வங்கதேச அரசை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து விட்டதாகவும், இடைக்கால அரசாக ராணுவம் செயல்படும் என்றும் புதிய அரசை அமைக்க ராணுவம் உதவும் எனவும் ராணுவத் தளபதி வாக்கர் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார்.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவழியாக இங்கிலாந்திற்கு செல்வதாக கூறப்பட்டது.
இந்தியாவின் அகர்தலா விமான நிலையத்திற்கு வந்த அவர் தில்லி வழியாக இங்கிலாந்து செல்வதாக கூறப்பட்டது எனினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
கலவரமாக மாறிய போராட்டம்
வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 30 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக 2024 ஜூலை இறுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் உருவாக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்தது. 93 சதவீத இடங்கள் திறமையின் அடிப்படையில் நிரப்படும் எனவும் அறிவித்தது.
உச்ச நீதிமன்ற அறிவிப்பு வந்து 2 வாரங்களில் ஆகஸ்ட் 4 அன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டம் வெடித்தது. மாணவர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பிறகும் அவர்கள் போராடுவது அதிர்ச்சியை ஹசீனா அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் இந்த கலவரம் மாணவர்களால் நடத்தப்படவில்லை; நாட்டில் உள்ள பிரிவினைவாதிகளால் தூண்டிவிடப்பட்டுள்ளது,இது நாட்டின் பொருளாதார, அரசியல் சூழலை வைத்து தூண்டிவிடப்பட்டுள்ள கலவரம் என பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்தார்.
மாணவர்கள் நடத்திய நியாயமான போராட்டங்களில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற பயங்கரவாதக்குழுக்களுடன் பேகம் கலீத் ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பி.என்.பி ) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த கலவரத்தை உருவாக்கியுள்ளனர் என பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வாரமே குறிப்பிட்டார்.
“மாணவர்களை நாங்கள் பயங்கரவாதிகள், வன்முறையாளர்கள் என குறிப்பிடவில்லை. மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தை துவங்கியது மூன்றாம் தரப்பு நபர்கள். மாணவரகளின் போராட்டத்தை அவர்களின் சுய லாபத்திற்காகவும் அரசை கவிழ்க்கவும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என அந்நாட்டின் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் முகமது அராபத் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்
இந்நிலையில் கலவரத்தில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து ஆகஸ்ட் 4 ஞாயிறன்று மீண்டும் ஹசீனா குறிப்பிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கு ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் மோதல் உருவாகியுள்து.இந்த மோதலில் ஒரே நாளில் கிட்ட தட்ட 100 பேர் பலியாகினர். இதில் 14 க்கும் மேற்பட்ட போலீசார் ஆவர்.
இந்நிலையில் வங்கதேச தொழிலாளர் கட்சியும் (WPB),கம்யூனிஸ்ட் கட்சியும் (CPB) ஞாயிற்றுக்கிழமையன்றே வன்முறையார்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தன.
இந்நிலையில் திடீரெனெ திங்களன்று பிரதமர் ஹசீனா பதவி விலகிவிட்டார் எனவும் ராணுவம் இனி ஆட்சி நடத்தும் எனவும் புதிய ஆட்சி அமைக்க ராணுவம் உதவும் எனவும் ராணுவத் தளபதி வாக்கர் அரசாங்க தொலைக்காட்சி நேரலையில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஹசீனாவின் அரசு இல்லத்தில் புகுந்த கலவரக்காரர்கள் அவரது உடைமைகள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
வளங்களை திருட அமெரிக்காவின் திட்டம்
1975 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வங்க ராணுவ அதிகாரிகள் படுகொலை செய்து ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தினர்.
அதன் பிறகு தான் ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்கா வங்கதேசத்தை ஆட்சி செய்த வலதுசாரிகளை தனது கூட்டாளிகளாக மாற்றியது.
குறிப்பாக வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்தின் மீது அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம் வங்காள விரிகுடாவில் உள்ள இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களையும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கனிம வளங்களையும் , நிலக்கரி சுரங்கங்களையும், தெற்காசிய நாடுகளின் இயற்கை வளங்களையும் அமெரிக்க நிறுவனங்களால் எளிமையாக கொள்ளையடிக்க முடியும் என்றெல்லாம் கணக்கு போட்டது. இதன் பின்னணியில் வங்கத்தில் அமைதி நிலவுவதை ஏகாதிபத்திய சக்திகள் விரும்பவில்லை.
கடந்த ஆண்டே எச்சரித்த தொழிலாளர்கட்சி
2023 செப்டம்பர் மாதமே வங்கதேச தொழிலாளர் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ரஷேத் கான் மேனன் நாடாளுமன்றத்தில் பேசிய போது, வங்கதேச செயின்ட் மார்ட்டின் தீவில் நிரந்தர ராணுவ தளத்தை உருவாக்கிட அமெரிக்கா விரும்புவதாக அதிர்ச்சித் தகவலை கூறினார். அதனைத் தொடர்ந்தே அமெரிக்கா உருவாக்கியுள்ள குவாட் (QUAD) உள்ளிட்ட அதன் பிற இராணுவக் கூட்டணிகளில் சேருமாறு வங்கதேசத்துக்கு அழுத்தத்தை உருவாக்கியது எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் உத்தரவுக்கு வங்கதேசம் பணியாத நிலையில் பிற நாடுகளில் செய்து வருவது போல வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலுக்குள் புகுந்து நாட்டில் ஜனநாயகம் இல்லை, தேர்தலில் மோசடி என கலகம் செய்து வந்தது.
ரஷேத் கான் எம்.பி. பேசிய அதே கூட்டத்தொடரில் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தின் மீது அமெரிக்கா செலுத்தி வரும் அழுத்தங்களை குறிப்பிட்டு கவலை தெரிவித்தார்.
தீவிர வலதுசாரிகளுக்கு வாய்ப்பைக் கொடுத்த அவாமி லீக்
உலகம் முழுவதும் அமலாக்கப்பட்ட நவீன தாரளமயப் பொருளாதார கொள்கைகளின் காரணமாக பல நாடுகளில் பொருளாதார பிரச்சனைகள் உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் எழுந்து வருகங.
வங்கதேசத்திலும் அவ்வாறான பிரச்சனைகள் உருவாகியுள்ளது.ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் தலைமையிலான ஆட்சி அந்நாட்டின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவில்லை,இளைஞர்கள் எதிர்கொண்டுவரும் தீவிர வேலையின்மை, மோசமான உள்கட்டமைப்பு மேம்பாடு, விலைவாசி உயர்வு , பணவீக்கம், ஊழல், மோசமான சுகாதார கட்டமைப்பு ஆகியவை அக்கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கை இழக்க காரணமாக அமைந்தது.
இதனை பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகளும் ஏகாதிபத்திய சக்திகளும் கூட்டுச்சேர்ந்து ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளனர் என்பதே உண்மை.