தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் என்கிற டிஜிட்டல் இறையாண்மை போராளி!!! – பரணி

மென்பொருளில் (software) இன்று இரு பிரிவு உண்டு காப்புரிமை கொண்ட மென்பொருள் மற்றும் கட்டற்ற மென்பொருள் (Free Software)., பயனர்களின் சுதந்திரங்களை கட்டுப்படுத்திய காப்புரிமை கொண்டுள்ள மென்பொருள்/நிறுவனங்களுக்கு மாற்றாக ரிச்சர்ட் ஸ்டால்மன் என்கிற அமெரிக்க coder முயற்சியால் உருவானது தான் இந்த கட்டற்ற மென்பொருள்.

கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையானது (FSF) 1985 ஆம் ஆண்டில் உலகளாவிய மென்பொருள் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அமெரிக்காவில் நிறுவப்பட்டது. கட்டற்ற மென்பொருள் என்பது தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு பயன்தரும் பின்வரும் சுதந்திரங்களை மென்பொருளில் வழங்குகிறது:

1.எந்த நோக்கத்திற்காகவும் மென்பொருளை பயன்படுத்த முடியும்.

2.மென்பொருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் படித்து, அதைத் தகவமைக்க செய்யலாம்.

3.அதன் நகல்களை மீண்டும் விநியோகிக்கலாம்.

4.மென்பொருளை மேம்படுத்தி, மேம்பாடுகளை பகிர முடியும்.

இந்த சுதந்திரங்கள் மென்பொருள் துறையில் சுயநிர்ணயத்தை ஊக்குவிக்கின்றன, புதிய முயற்சியை வளர்க்கின்றன மற்றும் பெரும் நமது நாட்டின் தொழில் நுட்பத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதிக்கத்தை (காலனித்துவத்தை) தடுக்கின்றன. இந்த கட்டற்ற மென்பொருள் இயக்கம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இன்று நம் கையில் உள்ள Android OS mobile முதல் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் உருவானதற்கு பின் 1985 இல் தான் FSF உருவானது.

இன்று உலகம் முழுக்க உள்ள FOSS (Free and Open Source Software) செயல்பாட்டாளர்கள் ஒரு மென்பொருளை சுதந்திரமாக பயன்படுத்தவும், மாற்றவும், பகிரவும், மேம்படுத்தவும் இயலவேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையாக உலகம் முழுவதும் இயங்குகிறார்கள்.

இந்தியாவில் மென்பொருள் உற்பத்திகான அடித்தளமிடப்பட்ட 90 களின் காலகட்டத்திலே, கட்டற்ற மென்பொருள் இயக்கம் அமைப்பாக உருவானது. உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவு இந்தியாவில் அரசியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் சமூகத்துறைகளை உள்ளடக்கிய ஒரு ஆழமான இயக்கமாக அது வலுவடைந்து.

குறிப்பாக கட்டற்ற மென்பொருளின் கொள்கையை அரசியல் கொள்கை ரீதியாக மற்றும் அரசு கொள்கையாக ஏற்ற ஒரே மாநிலம் “இடதுசாரிகள் தலைமையிலான கேரளா”. கேரள மாநிலத்தில் இந்த இயக்கம் ஒரு அரசியல் ஒழுங்கமைப்புடன் இணைந்த இயக்கமாக உருவெடுத்ததில் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் வி.எஸ். அச்சுதானந்தனின் பங்கு முக்கியமானது.

1996 முதல் 2001 வரை இடது ஜனாநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பளாராக வி.எஸ். அச்சுதானந்தன் இருந்த போதிலிருந்து FOSS இயக்கத்துடனான அவரது தொடர்பு துவங்கியது. E K நயனார் தலைமையிலான இடதுசாரி அரசு அமைந்த காலம் அது. 2001 ஜூலை மாதம் Freedom First! என்ற மாநாடு, திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் கட்டற்ற மென்பொருள் நிறுவனர் ரிச்சர்ட் ஸ்டால்மேன் கலந்துகொண்டு FOSS India அமைப்பைத் தொடங்கினார். FOSS உடைய தத்துவமனது இடதுசாரி அரசியலுடன் இயற்கையாகவே ஒத்துப்போனது. தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் இதை புரிந்து கொண்டு அதற்கு உறுதியாக துணைநின்றார்.

2001-05 காலகட்டத்தில் வி.எஸ். அச்சுதானந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கேரள மாநிலத்தின் காப்புரிமை கொண்ட மென்பொருள் சார்பு நிலையை கடுமையாக விமர்சித்தார். டிஜிட்டல் அதிகாரமளிப்பு மற்றும் தொழில்நுட்ப இறையாண்மைக்காக அவர் சட்டமன்றத்தில் தீவிரமாக வாதிட்டார். 2006 இல் தோழர்.வி.எஸ். அச்சுதானந்தன் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் கேரள அரசு சார்பாக கட்டற்ற மென்பொருள் கொள்கை ஒன்றை வகுத்தார். இவ்வாறு தான் இந்தியாவில் கட்டற்ற மென்பொருள் கொள்கையை வகுத்த முதல் அரசாக வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான கேரள இடதுசாரி அரசு உருவானது.

ஒன்றிய அரசு கூட 2014 இல் தான் பெயரளவில் சிக்கன நடவடிக்கையாக FOSS (Free and Open software) கொள்கையை கொண்டு வந்தது.

கேரளவில் FOSS மிகப்பெரிய வெற்றியை கல்வித்துறையில் இருந்து தொடங்கியது, அப்போது அச்சுதானந்தன் தலைமையிலான அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த தோழர்.எம்.ஏ.பேபி ( தற்போதைய CPIM அகில இந்திய பொதுச்செயளாலர்) இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். IT@School (தகவல் தொழில்நுட்பத்தை பள்ளியில் சொல்லி தர ஒரு தனி திட்டம்) திட்டத்தில் காப்புரிமை மென்பொருளுக்கு பதிலாக Linux மற்றும் FOSS கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

2008 இல் KITE (Kerala Infrastructure and Technology for Education) உருவாக்கப்பட்டு 14,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் FOSS பயிற்சி நடைமுறைக்கு வந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவில் கல்வித் துறையில் மிகப்பெரிய FOSS உட்கட்டமைப்பு கேரளாவில் தான் உருவானது. இது மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படை கட்டமைப்பை புரியவைத்தது. FOSS கொண்டு வந்ததன் விளைவாக மாணவர்கள் மென்பொருளுக்கு வெறும் வாடிக்கையாளர்களாக மட்டும் இல்லாமல், அவர்களை உருவாக்குனர்களாக (உருவாக்குபவர்களாக) மாற்றியது.

அரசு துறை கடவுச்சொற்கள், மேலாண்மை மென்பொருள்கள், அச்சுப்பதிவு முறைகள் போன்ற அனைத்திலும் கட்டற்ற மென்பொருள் அமலாக்கம் நடந்தது. இது அரசு செலவினங்களில் கோடிக்கணக்கில் மிச்சம் செய்தது. அரசு வேலை வாய்ப்புகளிலும் FOSS பயிற்சி தேவைப்பட்டதன் மூலம், திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

கட்டற்ற மென்பொருள் வளர்ச்சியை உலக அளவில் மேலும் கொண்டு செல்ல 2008 இல் அச்சுதானந்தன் ஆட்சியில் ICFOSS (International Centre for Free and Open Source Software) நிறுவப்பட்டது. இது அரசு சார்பாக வேலை செய்கிற ஒரு அமைப்பாக இருந்தாலும், அதன் சமூக அடித்தளம் FOSS இயக்கம் மூலம் பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

தோழர் வி.எஸ். அவர்கள் ஆட்சியில் போட்ட விதையை தோழர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியின் போது ICFOSS முலம் 2018 முதல் தொழிலாளர்கள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களிடையே தொழில்நுட்ப சுதந்திரத்தை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்ல அது தொழிலாளர்களின் உரிமைகளை நிர்ணயிக்கும் ஒரு அரசியல் கருவியாகவும் செயல்பட்டது. அதேபோன்று நாட்டின் மிகப்பெரிய பள்ளி மாணவர்களின் IT குழுமமான Kerala Infrastructure and Technology for Education, 2024 இல் புதிய கட்டற்ற மென்பொருள் அடிப்படையிலான இயங்குதள தொகுப்பான KITE GNU லினக்ஸ் 22.04-ஐ வெளியிட்டுள்ளது. இந்த கட்டற்ற OS முலம் 300 கோடி ரூபாயை கேரளா அரசால் சேமிக்க முடியும்.

கேரளா முழுமையாக கட்டற்ற மென்பொருளை ஏற்றுக்கொண்டது பல துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மேலும் அது பிற இந்திய மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.

தோழர் வி. எஸ். அச்சுதானந்தன் முன்னெடுத்த FOSS இயக்கம் என்பது வெறும் ஒரு தொழில்நுட்ப மாற்றம் அல்ல. அது அறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் மீது மக்களின் உரிமையை நிலைநாட்டும், டிஜிட்டல் சுயாட்சி மற்றும் டிஜிட்டல் ஜனநாயகம், அரசியல், கல்வி மற்றும் பண்பாட்டியல் புரட்சியாகும். வி.எஸ். அச்சுதானந்தன் தனது அரசியல் வாழ்க்கையின் முழு நேரத்திலும் இதனை ஆதரித்து, அதை ஒரு மாநில மட்டுமல்லாது உலக அளவிலும் ஒரு முன்னோடி இயக்கமாக மாற்றியதன் மூலம், FOSS இயக்கத்தில் ஒரு வரலாற்றில் அவர் பெயர் என்றும் எழுதப்படும்.

 

கட்டுரையாளர் :- பரணி மாநில தலைவர் UNITE

Leave a Reply