மேற்கு வங்கத்தில் தனியார் துறையால் முன்னெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களின் போராட்டத்திற்கு முக்கியமான வெற்றியாகும். கடந்த 15 ஆண்டுகளாக, மேற்கு வங்க மக்கள் முதல் முறையாக தங்களது சொந்த திட்டத்தை சரியான முறையில் திட்டமிட்டு முன்வைத்து, திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கையைத் திரும்பப் பெற வைத்துள்ளனர். எனவே, இந்த இயக்கத்தின் நோக்கத்தையும், அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் பற்றி சிந்திப்பது மிகவும் அவசியம். அதே போல வரும் நாட்களில் அதன் நோக்கத்தை விரிவுபடுத்தி, தீவிரப்படுத்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த போராட்டத்தின் கருத்தியல் மையத்தையும் அடையாளம் காண்பதும் அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது.
மின்சாரத் துறையின் முக்கியத்துவம்
மின்சாரத் துறை இரண்டு தனித்துவமான வடிவங்களில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: முதலாவதாக, நவீன வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நிலைநிறுத்துவதில் அதன் அத்தியாவசியப் பங்கு; இரண்டாவதாக, ஒரு நிரந்தர உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழிமுறை மூலம் சமூகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் நேரடி அணுகல். இந்தத் துறையில் செயல்படும் தொழிற்ச் சங்கங்கள் அமைப்புகள் அதன் ஆற்றலை முழுமையாகப் புரிந்துகொண்டு செயல்பட்டால், அவைகளால் சர்வாதிகார அரசுகளையும் அசைத்துப்பார்க்க முடியும்.
இந்த போராட்டத்தின் அனுபவத்தைப் பகிரும்போது, நமது இயக்கம் எதிர்கொண்ட முக்கிய அபாயங்களில் ஒன்று, அதை “வளர்ச்சிக்கு எதிரானது” என்று முத்திரை குத்தப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மூலதனத்தால் வழிநடத்தப்படும் தொழில்நுட்ப மாற்றங்களை எதிர்க்கும் போதெல்லாம் உழைக்கும் வர்க்க இயக்கங்களுக்கு இது ஒரு தொடர் சவாலாக உள்ளது. இந்த இயக்கத்தின் வெற்றி, என்பது அத்தகைய தொழில்நுட்பத் தலையீடுகளுக்குப் பின்னால் உள்ள ஆளும் வர்க்கத்தின் உண்மையான நோக்கங்களையும், உழைக்கும் வர்க்கத்திற்கும் பொதுமக்களுக்கும் அதனால் ஏற்படும் பெரிய அளவிலான தாக்கங்களையும் அம்பலப்படுத்துவதில் தான் அமைப்பின் செயல்திறன் அடங்கியுள்ளது. இதில் இந்திய மின்சார ஊழியர் கூட்டமைப்பு (EEFI) முக்கிய பங்காற்றியது, இந்த பிரச்னைக்குரிய திட்டத்தின் பின்னணியில் உள்ள மறைக்கப்பட்ட பெருநிறுவனங்களின் நோக்கத்தை வெற்றிகரமாக அம்பலப்படுத்தியது.
மறைமுகத்திட்டம்
ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் திட்டமானது “புனரமைக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் (RDSG)” கீழ் மறைமுகமாக, ஒன்றிய அரசால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டம் அனைத்து மாநில அரசுகளும் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதை மட்டுமல்லாமல், அவற்றின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு (TOTEX மாதிரி கீழ்) ஆகியவற்றையும் பெரும் தனியார் நிறுவனங்களால் செய்யப்பட வேண்டும் என்றும் கட்டளையிடுகிறது. தனியார் ஏலதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளபடி, இந்த மீட்டர்களின் சராசரி சந்தை விலை சுமார் ரூ. 10,000 முதல் ரூ. 12,000 ஆகும், மேலும் இதன் ஆயுட்காலம் வெறும் ஆறு ஆண்டுகள் மட்டுமே ஆகும். அதாவது, ஒவ்வொரு நுகர்வோரும் ஆண்டுக்கு ரூ. 2,000 கூடுதல் செலவை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இது இந்திய அளவில், ரூ. 50,000 கோடிக்கும் அதிகமான கூடுதல் சுமையாக மாறும்.
தவறான மீட்டர் அளவீடுகள், தாமதமான அல்லது தோல்வியுற்ற கட்டணங்கள், அல்லது மின்சாரத் திருட்டு மூலம் தற்போது ஏற்படும் நிதி இழப்புகள் இந்த திட்டமிடப்பட்ட செலவை விட கணிசமாகக் குறைவாகும். ஸ்மார்ட் மீட்டர் மின் கட்டண வசூலில் சிறிய மேம்பாடுகளைக் கொண்டு வரலாம் அல்லது தற்போதுள்ள டிஜிட்டல் மீட்டர் அளவீடுகளை சற்று மேம்படுத்தலாம். ஆனால் நிதி சார்ந்த பார்வையில், இந்த பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றம் மக்களுக்கோ அல்லது மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கோ (DISCOMs) லாபகரமானதாகவோ அல்லது பயனுள்ளதாகவோ இல்லை. மேலும் மீட்டர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு அந்த மீட்டர்கள் ப்ரீபெய்ட் அல்லது தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த விஷயத்தில் ஒன்றிய அரசின் ஆணை அதன் கார்ப்பரேட் நண்பர்களின் நலன்களுக்காக தெளிவாக சேவை செய்கிறது.
மறைமுகத்திட்டத்தை அம்பலப்படுத்துவது
ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்ப்பதற்கான சொந்த காரணங்களை நாம் கண்டறிந்து அதை உறுதியாக அம்பலப்படுத்த வேண்டும். இந்த பணியானது அதன் பின்னால் உள்ள பெருநிறுவனங்களின் திட்டத்தை அம்பலப்படுத்துவதற்கும், அதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சொல்வது ஆகிய இரண்டையும் பிரிக்க முடியாத வகையில் இணைத்துள்ளது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை என்பது அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனம் நுகர்வோரின் பணத்தைப் பயன்படுத்தி தனது தொழிலை நடத்தும். மேலும் ப்ரீபெய்ட் கட்டணம் தீர்ந்துவிட்டாலோ, நிறுவனத்தின் தரப்பில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ கூட வீட்டின் மின்சார இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.
இத்திட்டம் ஏழை மற்றும் விவசாய குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் அனைத்து வகையான மானியங்களையும் நீக்கி விடும். கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு மானிய பணத்தை நேரடியாக வங்கியில் செலுத்துகிறோம் என கூறினார்கள் இப்பொது பணமா வருகிறதா? அந்த அனுபவம் நமக்கு நன்றாக உள்ளது. கூடுதலாக, நுகர்வோர் தான் மீட்டர் தொடர்பான முழு செலவையும் ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள், இது அவர்களுக்கு ஒரு புதிய நிதிச் சுமையை சேர்க்கும்.
இந்தத் திட்டம் ஒரு தொழில்நுட்ப வழிமுறையையும் அறிமுகப்படுத்துகிறது, இது தனியார் பெருநிறுவனங்களைஅவர்கள் பெற்றுள்ள உரிமம் மூலம் மின் விநியோக நிறுவனங்களின் தற்போதுள்ள நெட்வொர்க்கில் நுழைய அனுமதிக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் முறை நுகர்வோரை திறந்த (தனியாரின்) மின்சார சந்தைக்குள் தள்ள வழிவகுக்கும் மற்றும் மாறும் விலைகளை அவர்கள் மீது திணிக்க உதவும். மேலும், இது தனிநபர் மற்றும் மொத்தமாக மின் நுகர்வோரின் தனிநபர் தரவுகளை அளவை சர்வதேச சந்தைகளுக்கு வழங்கும். இது நுகர்வோரின் தேவைகளை அறிந்து கொண்டு, அதிக மின்சாரம் தேவைப்படும் நேரத்தில் அதிக கட்டணங்களை திணிக்க வழிவகுக்கும்.
அரசு மின் விநியோக நிறுவனங்கள் தங்கள் வருவாய் வசூலுக்காக மூன்றாம் தரப்பு ஸ்மார்ட் மீட்டர் நிறுவனங்களை நிதி ரீதியாகச் சார்ந்திருக்கும். இந்த சார்பு, சைபர் தாக்குதல்கள் காரணமாக பேரழிவு தரும் கட்டமைப்பு தோல்விகளை உருவாக்கும் மிகப்பெரிய அபாயங்களைக் கொண்டுள்ளது. இந்த போக்குகள் மக்கள் மற்றும் தேசத்தின் இறையாண்மையை அச்சுறுத்துகின்றன. இந்த திட்டம் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது ஒன்றிய அரசின் மானியங்களின் புத்திசாலித்தனமான பயன்பாடு பற்றியது அல்ல இது தனியார்மயமாக்கல் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் அரசு நிறுவனக்களை ஒப்படைப்பது பற்றியது.
பிரச்சாரம்
எங்கள் செயல் திட்டம் ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் முயற்சியின் பின்னால் உள்ள மறைமுக நோக்கங்களை அடையாளம் கண்டு பகுப்பாய்வு செய்து மின்சார துறை ஊழியர்களுக்கு அவற்றை அம்பலப்படுத்துவதில் துவங்கியது. இரண்டாவது, அதற்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த பணி, இந்த பிரச்சனையை அத்துறைக்கு அப்பால் – தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவன (MSME) தொழில்முனைவோர் வரை கொண்டு செல்வதாகும். இந்த விரிவான அணுகுமுறை மின்சாரத்துறை ஊழியர்களால் தீவிரத்துடனும் அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுகர்வோர்-ஊழியர் மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டன, அதைத் தொடர்ந்து தொகுதி, கிராம பஞ்சாயத்து மற்றும் வார்டு வாரியாக கூட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகளுடன் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன, மேலும் இப்பிரச்சாரம் குடியிருப்போர் நலச் சங்கங்களையும் சென்றடைந்தது. நமது சமபின் தலைவர்கள் அத்திட்டத்தின் உடனடி பிரச்சனைகள் மற்றும் நீண்டகால தாக்கங்கள் இரண்டையும் தெளிவாக விளக்குவதில் கவனம் செலுத்தினர். மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது. தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் கூட, மக்கள் திரளாக வந்து, மேலோட்டமாக ஒரு சிக்கலான தொழில்நுட்பப் பிரச்சினையாக இருந்ததைக் கவனமாகக் கேட்டனர். சிறிய தெருமுனை கூட்டங்கள் பெரிய கூட்டங்களாக மாறத் தொடங்கின. மேற்கு வங்காள மக்கள் தங்கள் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் நேரடியாகத் தாக்கும் திட்டத்திற்கு எதிராக ஈர்க்கப்பட்டனர்.
மேற்கு வங்க அரசு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணியை சில கட்டங்களாகப் பிரித்து படிப்படியாக அமலாக்க திட்டமிட்டிருந்தது. முதல் கட்டமாக சுமார் 37 லட்சம் வீடுகளுக்கு 2023 டிசம்பருக்குள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தின் தீவிரத்தின் காரணமாக, அரசாங்கத்தால் அதனை அமலாக்க முடியவில்லை. 2024 இல் கூட அமலாக்க முடியவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதன் பின்னணியில், இந்திய மின்சார ஊழியர் கூட்டமைப்பின் (EEFI) கீழ் உள்ள ஊழியர் சங்கங்கள் பல மனுக்களை கொடுத்தன, போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளை ஏற்பாடு செய்தன, மேலும் மாற்று திட்டங்களைப் பற்றி ஆராய திறந்த விவாதங்களுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தன. இந்த விஷயத்தில் கேரள அனுபவம் ஒரு முக்கிய உதாரணமாகும். இருப்பினும், மேற்கு வங்கத்தின் எதேச்சாதிகார அரசாங்கமும், மாநில மின் துறையும் ஊழியர்களின் கவலைகளைப் பற்றி அலட்சியமாக இருந்தன. மாநில மின் கழகம் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தினால் நன்மை என பரந்த அளவில் ஊடகப் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், மேற்கு வங்காள அரசு சில துணைப்பிரிவுகளில் ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதைத் துவங்கியது. நுகர்வோருக்கு முறையாகத் தெரிவிக்காமல் ஏற்கனவே உள்ள மீட்டர்களை மாற்றுவது உட்பட பல ஏமாற்று வேலைகளை அது கையாண்டது. இந்தச் செய்தி பரவியவுடன், பொதுமக்களின் கோபம் வெடித்தது. தனியார்மயமாக்கலுக்கான ஒரு மறைமுக முயற்சிக்கு எதிராக மக்கள் தானாக முன்வந்து அணிதிரளத் துவங்கினர். பல சமையங்களில் புதிதாக பொருத்தப்பட்ட மீட்டர்கள் மின் கட்டணங்களை மிக அதிகமாக உயர்த்தின. இது பொதுமக்களின் கோபத்தை மேலும் தூண்டியது.
இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) இந்த சூழலில் உடனடியாக வினையாற்றியது. மின் விநியோக அலுவலகங்களுக்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தது. ஆரம்பத்தில், துறை அதிகாரிகள் ப்ரீபெய்ட் மீட்டர் கட்டாயமானது என்று சித்தரிக்க முயன்றனர். இருப்பினும், இந்தக் கூற்று மின்சாரச் சட்டம், 2003 இன் விதிகளின்படி இல்லை. போராட்டங்கள் தீவிரம் அடைந்து, கிளர்ச்சியின் தீ மாநிலம் முழுவதும் பரவியதால், பொதுமக்களின் எதிர்ப்பின் பலத்தையும், திட்டத்தை பரவலாக நிராகரிப்பதையும் அரசாங்கம் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியில், மேற்கு வங்க அரசு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் முயற்சியை நிறுத்தியது, பின்னர் அதிகாரப்பூர்வமாக அதைத் திரும்பப் பெற்றது.
நாம் கற்றுக் கொண்ட பாடங்கள்
முதலாவதாக, ஒரு பிரச்சினை சரியாக அடையாளம் காணப்பட்டு, ஆராயப்பட்டு, முறையாக மக்களிடம் கொண்டு செல்லப்படும்போது, அது பலமாக எதிரொலிக்கிறது. மக்கள் ஒரு திட்டத்தை தங்களுடையதாக ஏற்றுக்கொண்டவுடன், எப்படிப்பட்ட சர்வாதிகார அரசுகளையும் கூட, மக்கள் விரோதக் கொள்கைகளை மாற்றியமைக்க கட்டாயப்படுத்த முடியும்.
இரண்டாவதாக, மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள், குறிப்பாக சமூக வளர்ச்சி தொடர்பான அதிக பிரிவு மக்களை அணிதிரட்டும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளன. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தொடர்பான போராட்டங்கள், தொலைநோக்குப் பார்வையுடனும் தெளிவுடனும் திட்டமிடப்பட்டால், எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமைக்கான மிகப்பெரிய பிரச்சாரங்களாக இயல்பாகவே விரிவடைய முடியும்.
மூன்றாவதாக, இந்த இயக்கம் சேவைத் துறையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு முக்கியமான பாடங்களைக் வைத்துள்ளது. சேவைத் துறை சார்ந்த தொழிலாளர்கள் அந்த சேவையை பயன்படுத்தும் நுகர்வோர்கள் அல்லது பயனாளிகளுடன் இணையும்போது, எதிர்ப்பின் திறன் பன்மடங்கு அதிகரிக்கிறது. இது ஒரு குறுகிய துறை சார்ந்த போராட்டமாக நின்றுவிடாமல், மிகப்பெரிய, பிரபலமான போராட்டமாக உருவாகிறது.
நான்காவதாக, இந்தப் பிரச்சாரம் தனியார்மயமாக்கலின் சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் வடிவங்களைப் புரிந்துகொள்வதன் அவசியத்தை எடுத்துக்காட்டியது. குறிப்பாக ரகசிய தொழில்நுட்ப மற்றும் நிதி பரிமாணங்களைக் கொண்டவை. இந்த செயல்முறைகளைப் பற்றிய ஆழமான, உறுதியான புரிதல் மட்டுமே ஒரு வெற்றிகரமான வெகுஜன இயக்கத்திற்கு அடித்தளமாக அமையும்.
ஐந்தாவதாக, இந்தப் போராட்டம் ஏகபோக மூலதனத்திற்கு எதிரான எதிர்ப்பின் தற்போதைய கட்டத்தை மறுவரையறை செய்ய நம்மை கட்டாயப்படுத்துகிறது. பொதுச் சொத்துக்களை கைப்பற்ற பெருநிறுவனங்கள் நுழைவைத் தடுப்பதற்கான போராட்டம் இன்றைய நவதாராளவாத இந்தியாவில் மக்கள் போராட்டங்களின் மையமாக உள்ளது.
மேற்கு வங்க மக்கள், இந்த எதிர்ப்பின் மூலம், இருண்ட காலங்களில் ஒரு நம்பிக்கையின் ஒளிகீற்றை உருவாக்கியுள்ளனர். இந்த வெற்றி கூட்டுப் போராட்டத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எண்ணற்ற எதிர்காலப் போராட்டங்களுக்கான கதவைத் திறக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, இது மக்கள் இயக்கங்களின் மீதான நம்பிக்கையை மீண்டும் தூண்டும் ஒரு வெற்றியாகும்.
ஜூன் 23-29 பீப்பில்ஸ் டெமாக்ரசியில் சிஐடியு அகில இந்திய செயலாளர்களுள் ஒருவரான சுதீப் தத்தா எழுதிய கட்டுரை