அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போட்டுள்ள தடைகள் காரணமாக 2017 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரை வெனிசுலா அரசு தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 213 சதவீதத்திற்கு எண்ணெய் வருவாயை இழந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் முதல் முறை அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது வெனிசுலா மீது அதிகபட்ச நெருக்கடியை கொடுத்தார். இக்காலக்கட்டதில் எடுக்கப்பட்ட உண்மையான புள்ளிவிவரங்களை கணக்கிடப்பட்டபோது அந்நாடு சுமார் 226 பில்லியன் டாலர்களை அந்நாடு இழந்துள்ளது. அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 77 மில்லியன் டாலர்களை இழந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த தரவு, வெனிசுலா பொருளாதார நிபுணர் யோஸ்மர் அரெல்லானின் ஆராய்ச்சியின் அடிப்படையில் குளோபல் சவுத் இன்சைட்ஸ் மற்றும் டிரைகாண்டினென்டல் எடுத்துள்ளது.
2017 க்கு முன், வெனிசுலா தனது ஏற்றுமதி வருவாயில் 95 சதவீதம் வரை எண்ணெய் வருவாயை மட்டுமே நம்பியிருந்தது. அதுமட்டுமல்ல இந்த எண்ணெய் வருவாய் தான் அரசாங்கத்தின் முற்போக்கான சமூகத் திட்டங்களுக்கு நிதியளிக்க முக்கிய ஆதாரமாக இருந்தது. இந்த வருவாய் இழப்பு வெனிசுலாவில் பணவீக்கத்தை அதிகரித்தது. 2019 இல் வெனிசுலா மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி மிக அதிக ஆண்டுக்கிடையேயான பணவீக்க விகிதம் 344,510% ஆக இருந்தது. அதாவது ஒரே ஆண்டில் விலைகள் 3,400 மடங்கு பணவீக்கம் அதிகரித்தது. இது எந்த நாட்டிலும் நினைத்துக்கூட பார்க்க கூடாத பேரழிவாகவும் மக்கள் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய நெருக்கடியாகவும் மாறியது.
1998 இல் ஹியூகோ சாவேஸ் முதல் முறையாக தேர்தலில் வென்ற பிறகு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் மூலம் வெனிசுலா தாக்கப்பட்டு வந்தது. எனினும் 2017 இல் டிரம்ப் தலைமையிலான அரசு வெனிசுலாவுக்கு தேவைப்பட்ட 13,808 கோடி ரூபாய் சர்வதேச கடனை அளவுக்கு தரவிடாமல் தடுத்தது. கடன்களை மறுத்ததன் மூலம் வெளிநாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் திறனை கடுமையாக குறைத்தது. மேலும் புதிய நிதி தடைகளை விதிக்க துவங்கியது.
அதாவது வெனிசுலா அரசாங்கத்திடமிருந்து புதிய கடனை வாங்குவதோ அல்லது மறுநிதியுதவிக்கு உதவியிருக்கக்கூடிய ஏற்கனவே இருக்கும் பத்திரங்களை வாங்குவதையோ எந்த ஒரு அமெரிக்க குடிமகனும் செய்யகூடாது என தடுத்தது. வெனிசுலா தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோலியோஸ் டி வெனிசுலா வின் பங்குலாப கொடுப்பனவுகள் 2019 ஜனவரி முதல் நிறுத்தப்பட்டன. அப்போது அந்நிறுவனம் கைப்பற்றப்பட்டு அமெரிக்கா ஆதரவால் வெனிசுலா ‘ஜனாதபதியாக’ நியமிக்கப்பட்ட ஜுவான் குவைடோவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதனால் எண்ணெய் ஏற்றுமதிக்கு உத்தரவாதம் அளிக்க கடன் கடிதங்களைப் பெறுவது, எண்ணெய் கப்பல்களுக்கு காப்பீடு பெறுவது, எண்ணெய் வயல்களைப் பராமரிப்பது ஆகியவற்றுடன் பிற நாடுகளுடனும் பரிவர்த்தனைகள் நடத்துவதையும் (பொருளாதார தடைகளுக்கு அஞ்சி ) வெனிசுலா அரசு எண்ணெய் நிறுவனத்தை தடுத்தது. இது மட்டுமின்றி டிரம்ப் நிர்வாகம் இரண்டு கூடுதல் நிர்வாக ஆணைகளையும் (தடைகள் ) போட்டிருந்தது. இத்தகைய தடைகள் வெனிசுலா தனது எண்ணெய் பொருளாதாரத்தின் வளர்ச்சி, உற்பத்தி மேம்பாடுகளுக்கு தேவைப்படும் நிதியை சர்வதேச வங்கிகளிடம் இருந்து பெற முடியாமல் அமெரிக்கா முடக்கியது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் இந்தியாவில் வெனிசுலாவின் எண்ணெய் வாங்கும் நிறுவனங்களிடம் இருந்து அதன் வர்த்தகத்தை முடக்கியது.
வெனிசுலாவின் பொருளாதாரத்தின் கழுத்தைப் பிடித்து தன்னால் முடிந்தவரை டிரம்ப் நெறித்தார்.
தடைகளால் உருவான பயங்கரமான தாக்கம் டிரம்ப் நிர்வாகத்திற்கு உடனடியாகவும் தெளிவாகவும் தெரிந்தது. 2019 மார்ச் 11 அன்று, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் மாட் லீ அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த மைக் பாம்பியோவிடம் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் வெனிசுலாவில் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி பற்றி கேள்வி எழுப்பினார். பாம்பியோ நேரடியாக பதில் கொடுத்தார்.
அவர்களது பொருளாதார உறவுத் தளம் சுருங்குகிறது. அந்நாட்டில் மனிதாபிமான நெருக்கடி மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. நேற்று இரவு 7:00 அல்லது 8:00 மணிக்கு வெனிசுலாவில் உள்ள எங்கள் மூத்த அதிகாரியிடம் நான் பேசினேன். வெனிசுலா மக்கள் அனுபவிக்ககூடிய அதிகமான வலி மற்றும் துன்பம் மேலும் அதிகரித்து வருவதை நீங்கள் பார்க்கலாம்.இந்த ‘வலிகளும் துன்பங்களும்’ அமெரிக்காவின் தடைகளினால் உருவானது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரான அலெனா டூஹான், வெனிசுலாவுக்கு சென்று ஒருதலைப்பட்சமாக வெனிசுலா மீது விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக அம்மக்களின் மனித உரிமைகள் மீது ஏற்ப்பட்டுள்ள எதிர்மறையான தாக்கம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு அறிக்கை சமர்ப்பித்தார். டூஹான் அந்நாட்டில் பேரழிவை கண்டிருந்தார். 2014 இல் எண்ணெய் பொருளாதரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, அந்நாட்டில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை உருவாக்கியது. அது 2017 இல் டிரம்ப் ஆட்சியில் துவங்கப்பட்ட மிக அதிக பட்சமான பொருளாதார தடைகள் மற்றும் நெருக்கடிகளின் காரணமாக அதிகரித்தது. 1998 முதல் பொலிவிய புரட்சிக்குப் பிறகு மக்கள் அனுபவித்து வந்த கணிசமாக உயர்ந்த வாழ்க்கைத் தரத்திலிருந்து இந்த நெருக்கடி வேறுபட்டது.
டூஹான் எழுதியபடி, வெனிசுலா மீதான தடைகளை 2017 முதல் மேலும் அதிகப்படுத்தியதனால் அந்நாட்டில் நடைமுறையில் இருந்த பல ஆக்கபூர்வமான சீர்திருத்தங்கள், அந்நாட்டின் உள்கட்டமைப்பு பராமரிப்பு போன்ற சமூக திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு தேவையான வெனிசுலா அரசாங்கத்தின் திறனை குறைத்தது. ‘தற்போதுள்ள மனிதாபிமான அடிப்பையில் கொண்டுவரப்பட்டுள்ள சில தடை விலக்குகள் போதுமானதாக இல்லை.
அவை நீண்ட மற்றும் அதிக செலவு மிக்க நடைமுறைகளுக்கு உட்பட்டவை. குறிப்பாக வெனிசுலாவின் பொருளாதாரத்தை மீட்கவும் அந்நாட்டின் முக்கிய பொது துறைகளான எண்ணெய் நிறுவனங்களை பராமரிப்பதற்கும் மிக முக்கியமான தேவையாக உள்ள இயந்திரங்கள் உதிரி பாகங்கள் ஆகியவற்றின் விநியோகத்தை எளிமைப்படுத்தும் வகையிலும் இல்லை. அதாவது அரசு எண்ணெய் நிறுவனக்கள் மீது பொருளாதார தடைகள் இருந்த போதிலும் வெனிசுலா மக்கள் தலையில் அதிக விலை ஏற்றம் இருந்தது. இதை நாங்கள் சமீபத்திய ஆவணத்தில் ஏகாதிபத்திய போர் மற்றும் தெற்குலக நாடுகளில் பெண்ணிய எதிர்ப்பு என்ற தலைப்பில் எழுதியுள்ளோம் .
இந்த மோசமான பொருளாதார அழிவை ஏழு ஆண்டுகளில் (2017-2024) தவறான நிர்வாகம் மற்றும் ஊழலால் ஏற்படுத்த முடியாது இதற்கு டிரம்ப் மற்றும் பாம்பியோ போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளே மிக முக்கிய காரணம் ஆகும். 2017 முதல் டிரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மீது தடைகளை தீவிரப்படுத்தியதால் தான் இந்த பொருளாதார அழிவு ஏற்பட்டது என்பதை வெனிசுலா பொருளாதாரத்தை உன்னிப்பாக கவனித்து வந்த அனைவரும் கூறுகிறார்கள்.
அந்த நேரத்தில், டிரம்ப்பின் ஆதரவுடன் இயங்கிய லத்தீன் அமெரிக்க குழுவில் மவுரிசியோ க்ளேவர்-கரோன் போன்றவர்கள் இருந்தனர். அவர் ஒரு கியூப அமெரிக்க வழக்கறிஞர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த இயக்குனராகவும் இருந்தார். க்ளேவர்-கரோன் வெனிசுலா மீது டிரம்ப் உருவாக்கிய ‘அதிகபட்ச நெருக்கடி’ தொடர்பான பிரச்சாரத்தை உருவாக்கி கொடுத்த ஆசிரியராகக் கருதப்பட்டார். மேலும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் டிரம்ப்பின் நிர்வாக ஆணைகளையும் உருவாக்கிகொடுத்துள்ளது தெரிய வநதுள்ளது. இன்டர்-அமெரிக்கன் டெவலப்மென்ட் பேங்கில் ஏற்ப்பட்ட ஒரு பிரச்னைக்குப் பிறகு, அவர் இப்போது டிரம்ப்பின் லத்தீன் அமெரிக்காவுக்கான சிறப்புத் தூதராக இருக்கிறார். கியூப மற்றும் பொலிவிய புரட்சி ஆகிய இரண்டையும் என்ன செய்தாவது எந்த வழியிலாவது கவிழ்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் ஆகும்.
1976 ஏப்ரலில், அமெரிக்க செனட்டர் ஃபிராங்க் சர்ச் தலைமையில் உளவு நடவடிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த அமெரிக்க செனட் தேர்வுக் குழு தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது. அத்தேர்வுக் குழு அறிக்கை சிலியில் மறைமுக நடவடிக்கை ( ஆட்சி கவிழ்ப்பு ) , 1963-1973, சிலி ஜனாதிபதி சால்வடோர் அலெண்டேவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆவணங்களைத் தொகுத்தது. அந்த ஆவணத்தில் 15 செப்டம்பர் 1970 அன்று வெள்ளை மாளிகையில் அன்றைய அமெரிக்க ஜானாதிபதி ரிச்சர்ட் நிக்சன், அட்டர்னி ஜெனரல் ஜான் மிட்செல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆகியோருடன் நடந்த கூட்டம் பற்றி சிஐஏ இயக்குனர் ரிச்சர்ட் ஹெல்ம்ஸ் கையால் எழுதப்பட்ட குறிப்பையும் உள்ளடக்கியது. சிலியின் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அலெண்டே ஜனாதிபதியாக பதவி ஏற்ற பதினொரு நாட்களுக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது. நிக்சன் ‘நம்மிடம் உள்ள சிறந்த மனிதர்களை’ இவ்வேலையில் எடுபட வைத்து ‘சிலியைக் காப்பாற்றுமாறு’ அறிவுறுத்தினார். அந்த சதித் திட்டம்: ‘பொருளாதாரத்தை அலற செய்வது’. ( பொருளாதரத்தை முடக்கும் திட்டம்)
கூட்டத்திற்குச் சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 9 அன்று, கிஸ்ஸிங்கர் தேசிய பாதுகாப்பு முடிவு இயக்குனர் குறிப்பாணை 93 ஐ தாக்கல் செய்தார். அது இந்த ‘ சதித் திட்டத்தை’ விவரித்தது. ‘சரியாக ஆனால் ரகசியமாக ‘ ( correct but cool ) என்ற பொது நிலைப்பாட்டுடன் சதி திட்டம் இருக்க வேண்டும் என கிஸ்ஸிங்கர் எழுதினார். ( அதாவது சிலிக்கு எதிரான சதித்திட்டம் யாருக்கும் வெளிப்படையாக தெரியக்கூடாது வெளிப்படையாக எதிர்க்காமல் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.) இந்த திட்டத்தின் படி சிலி அரசாங்கத்தை பொருளாதரீதியா முடக்க வேண்டும். அதற்காக சர்வதேச வங்கிகள், பல்தரப்பு நிதி நிறுவனங்கள், தனியார் அமெரிக்க வங்கிகள் உட்பட எந்த நிறுவனங்களிடமும் எந்த நிதியையும் கடனையும் பெற்று விடாமல் இருக்க அமெரிக்கா அதிகபட்சமான நெருக்கடியை பயன்படுத்தி தடுக்க வேண்டும். சிலி தனது செம்பு ( காப்பர்) உலோக தொழிலை நாட்டுடமை ஆக்கியது.
அதன் பின்விளைவாக அமெரிக்காவை பன்னாட்டு சுரங்க நிறுவனங்கள் உரிபாக கென்னெகாட் போன்ற நிறுவனங்கள் செம்பு கனிமத்தை ஏற்றி செல்லும் சிலி நாட்டின் கப்பல்களை மறித்து அந்த உலோகங்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட வேறு மூன்றாம் நாடுகளுக்கு விற்பனை செய்து விடாமல் தடுக்க திருடத் துவங்கின. அமெரிக்கா சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மீது தான் கொண்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி சிலி கடன் கேட்ட போதெல்லாம் கடன்களை மறுத்தது. மேலும் சிலி தன் நாட்டின்சுரங்கங்களுக்கு எதிரான சட்டரீதியான சவால்கள் தொடர்பாக நடுவர் நீதி மன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்க சர்வதேச அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்தது அமெரிக்கா.
இந்நிலையில் கப்பல் நிறுவனங்கள் சிலியைத் தவிர்க்கத் தொடங்கின. இதனால் அந்நாட்டின் செம்பின் மீது வாடிக்கையாளர்களுக்கு ஆர்வம் குறையத்துவங்கியது. செப்பு ஏற்றுமதி அளவிவு மற்றும் விலை கடுமையா வீழ்ச்சி அடைந்தது. சிலியின் வெளிநாட்டு வர்த்தகத்தில் 80 சதவீதம் பங்களித்தது செம்புதான். இந்நிலையில் செம்பு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்தது அந்நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பதித்தது.
இந்த வீழ்ச்சி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்துறை வழங்கல்களின் பற்றாக்குறை உருவாகவும் 1973 இல் 200 சதவீதமாக ஆக உயர்ந்த பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது.
2023 செப்டம்பர் மாதம் மூன்றாம் உலகத்திற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு: சிலி 1973, என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் அலெண்டேவின் அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பானது, மூன்றாம் உலக நாடுகள் தங்கள் மூலப்பொருட்கள் மீது தங்களின் இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கும், அதம் மூலம் வருகிற லாபங்களுடன் ஒரு சோசலிச பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் எடுக்கும் எந்த முயற்சிக்கும் எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு என்பதைக் காட்டியுள்ளோம். இதே நோக்கங்கள் தான் வெனிசுலாவின் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளிலும் உள்ளது என தெளிவாகத் தெரிகின்றன. 2019பிப்ரவரி மாதம் டிரம்ப் மியாமியில் ஒரு நிகழ்வில் கியூபா, நிகரகுவா, வெனிசுலா மற்றும் சோசலிசம் பற்றி ஒரு உரையாற்றினார். அதில் ‘நமது அரைக்கோளத்தில் சோசலிசத்தின் அந்திவேளை ( வீழ்ச்சி ) வந்துவிட்டது’ என்று அறிவித்தார். டிரம்ப் லத்தீன் அமெரிக்காவை மட்டுமல்ல, அமெரிக்காவையும் குறிப்பிடுகிறார். அது ‘ஒருபோதும் ஒரு சோசலிச நாடாக இருக்காது’ என்று வலியுறுத்தியுள்ளார்.
1970 மற்றும் 1973 க்கு இடையில் அமெரிக்கா சிலிக்கு என்ன செய்ததோ அதையே சரியாக 2017 முதல் வெனிசுலாவுக்கும் செய்து வருவகிறது. 1972 இல் சிலி மீதான பொருளாதார போரின் உணர்வையும் அந்த போருக்கு எதிரான சிலியின் எதிர்ப்பின் சாரத்தையும் விக்டர் ஜாரா, எல் ஹொம்ப்ரே எஸ் உன் க்ரியடோர் (மனிதன் ஒரு படைப்பாளி) என்ற பாடலில் எதிரொலித்தார். இது தொழிற்சாலைகளிலு, வயல்களிலும், சுரங்கங்களில் பூமிக்கு அடியிலும் உள்ள தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிய எளிய பாடல். அதன் கடைசி வசனம் சக்தி வாய்ந்தது:
நான் எனது எஜமானர்கள், உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகளின்
மொழியைக் கற்றுக்கொண்டேன்
அவர்கள் என்னை பல முறை கொன்றார்கள்,
அவர்களிடம் என் குரலை உயர்த்தியதற்காக,
ஆனால், நிலத்திலிருந்து நான் எழுகிறேன்,
ஏனென்றால் எனக்கு ஒரு கை கொடுக்கப்பட்டது,
ஏன்? ஏனெனில் இப்போது நான் தனியாக இல்லை,
ஏனென்றால் இப்போது நான் அல்ல! நாங்கள்!
அலெண்டே ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு விக்டர் ஜாரா சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சாண்டியாகோவில் உள்ள அவரது கல்லறை கனவு காண்பவர்கள் மற்றும் கனவுகளுக்கான இடமாகும். கனவுகள் மதிப்புக்குரியவை: அவை நமக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. நிக்சன் மற்றும் டிரம்ப், கிஸ்ஸிங்கர் மற்றும் க்ளேவர்-கரோன் போன்ற மனிதர்களின் கசப்பை விட கனவுகள் சிறந்தவை.
– பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 18 ஆவது tricontinental செய்தி மடல், தமிழில் சேது சிவன்.