நாம் ஏன் போரை வேண்டாம் என சொல்கிறோம் ?

போர் ஒருபோதும் தீர்வைக் கொண்டுக்காது. அதுதுயரத்தை மட்டுமே அதிகரிக்கும்.

ஒவ்வொரு போரும் மக்களின் அத்தியாவசிய நலன்களான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு நாட்டின் பணத்தையும் வளங்களையும் ஆயுதங்கள் மற்றும் போருக்காக மடை மாற்றி விடப்படுகிறது.

ஆம் போர் நிலவும் நெருக்கடியான சூழலில் உள்ள ஒரு நாட்டின் அரசிடம் தங்களுக்கான வேலை, ஊதியம், நாட்டின் வளர்ச்சி என அந்நாட்டு மக்கள் எதை கேட்க முடியும்? நாடே போர் நெருக்கடியில் உள்ளது எனவே எல்லோரும் அவசர நிலையை உணர்ந்து போரில் நாட்டோடு உடன்பட்டு நிற்க வேண்டும் என அரசால் நாம் அனைவரும் நிர்பந்திக்கப்படுகிறோம்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் ஏற்கனவே லட்சகணக்கான மக்கள் பசி, வீடில்லா நிலமை மற்றும் வேலையின்மையால் தொடர்ந்து துன்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . இந்த நேரத்தில், போர் வேண்டும் என அழைப்பு விடுகின்ற எண்ணம் நமது மக்களின் அத்தியாவசிய தேவைகளை மறுக்க கூடிய செயலாகும்.

போர் வேண்டும் என அழைப்பு விடுக்கும் நபர்கள் ஒன்று போரின் விளைவுகளால் ஏற்படும்துன்பத்தை குறித்து அறியாதவர்களாக இருப்பார்கள். அல்லது மக்களை சுரண்டி கொழுத்துபோயுள்ள பெருமுதலாளிகள், ஆயுத வியாபாரிகள்/முதலாளிகள் ஆகியோரை பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களாக இருப்பார்கள்.

ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற நபர்கள்உள்ளார்கள். அவர்களால் தொழிலாளி வர்க்கத்திற்கு ஒரு பயனும் கிடையாது. ஆனால் இவர்கள் தூண்டி விடும் போர் வெறியில் தொழிலாளி வர்க்கம் சிக்கிக்கொண்டு பாதிக்கப்பட கூடிய பலியாகக்கூடிய சூழல் அதிகமாக உள்ளது.

தற்போது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதட்டங்கள் சாதாரண நிகழ்வு அல்ல. இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை கொண்ட நாடுகள். இரு நாடுகளுமே பொருளாதார பாதிப்புகளில் சிக்கியுள்ள நாடுகள்.

இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் ஏற்பட்டு விட்டால் அது ஒட்டு மொத்த தெற்காசிய பிராந்தியம் முழுவதும் பாதிப்பையும் போர் பதட்டத்தையும் தூண்டிவிடும். இதனால் தெற்காசியாவில் உள்ள வளரும் நாடுகளில் உள்ள ஏழை எளிய மக்கள் மேலும் அதிக நெருக்கடிகளை சந்திக்கும் சூழல் உருவாகும்.

உலகில் காங்கோ-சூடான் உள்நாட்டு போர், இஸ்ரேல்-பாலஸ்தீன போர், உக்ரைன்-ரஷ்யா போர் என ஏற்கனவே பல போர்கள் நடத்து வருகின்றன. இந்நிலையில் தெற்காசியாவில் ஒரு பெரும் போர் வெடித்தால் அது ஆயுத முதலாளிகளுக்கும், மக்களை மடைமாற்றி வளங்களை கொள்ளையடித்து முதலாளிகளுக்கு கொடுக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே கொண்டாட்டமாக இருக்கும்.

இந்த போர் ஏற்கனவே நெருக்கடியில் உள்ள உலக பொருளாதாரத்தை மேலும் அதிக நெருக்கடியை கொடுக்கும். இந்த சூழலில் தான் உலக நாடுகள் இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில் தொழிலாளி வர்க்கமாகிய நாம் போரை நிராகரிக்கவேண்டும். ஒவ்வொரு நாட்டின் தொழிலாளியும் போரை நிராகரித்து ஒவ்வொரு நாட்டின்

வளத்தையும் அந்நாட்டின் தொழிலாளி வர்க்கத்தினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முதலீடு செய்ய வலியுறுத்த வேண்டும். அந்நாட்டின் வளங்களை பிறநாட்டில் உள்ள சக தொழிலாளி  வர்க்கத்தின் அழிவுக்கோ, போரினால் ஆதாயம் அடைபவர்களுக்காகவோ பயன்படுத்த அனுமதிக்க கூடாது. அவ்வளத்திற்கு சொந்தமான மக்களுக்கும் அவர்கள் வாழும் நாட்டை கட்டியெழுப்பவும் பயன்படுத்த குரலெழுப்ப வேண்டும்.

தமிழ் மார்க்ஸ் ஆசிரியர் குழு

Leave a Reply