சிந்து நதி நீர் ஒப்பந்த இடைநிறுத்தம்: கேள்விக்குறியாகும் நிலைத்தன்மை – டி.கே.ரங்கராஜன்

காஷ்மீரில் நடத்தப்பட்டுள்ள கொடூர பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா 1960ஆம் ஆண்டின் சிந்து நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை” நம்பகமான முறையில் கைவிடும் வரை இந்த ஒப்பந்தம் “இடைநிறுத்தி” வைக்கப்படும் என்று இந்திய அரசு கூறியுள்ளது.  60 ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று போர்கள், பல போர் அபாயங்கள் மற்றும் முழுமையான ராஜீய உறவு முறிவுகள் ஏற்பட்ட காலத்திலும் கூட இந்த ஒப்பந்தம் நிலைத்து நின்றது. இந்தியா-பாகிஸ்தான் உறவில் பல விஷயங்கள் மாறினாலும், நீர் பகிர்வு மட்டும் ஓரளவு முன்கணிக்கக்கூடியதாக இருந்தது. இப்போது அந்த நிலைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

ஒப்பந்தத்தின் கட்டமைப்பு

1960இல் பல ஆண்டுகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்திடப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், உலகின் மிகவும் நிலையான நீர் ஒப்பந்தங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இது சிந்து பள்ளத்தாக்கின் ஆறு நதிகளை இரு நாடுகளுக்கும் பிரித்தளித்தது: இந்தியாவுக்கு: கிழக்கு நதிகள் (ராவி, பியாஸ், சட்லெஜ்) பாகிஸ்தானுக்கு: மேற்கு நதிகள் (சிந்து, ஜீலம், சினாப்) – இவை பகிரப்பட்ட பள்ளத்தாக்கின் நீர் வளத்தில் சுமார் 80% பங்களிக்கின்றன ஒப்பந்தப்படி, இந்தியாவுக்கு மேற்கு நதிகளை நுகர்வற்ற நோக்கங்களுக்காக (நீர் மின்சாரம் போன்றவை) பயன்படுத்த உரிமை உண்டு.

மேலும், வரையறுக்கப்பட்ட அளவில் பாசனத்திற்கும் பயன்படுத்தலாம். ஆனால் கீழ்நோக்கி பாகிஸ்தானுக்கு செல்லும் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் நீரை சேமிக்கவோ திசை திருப்பவோ அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட பொறியியல் வடிவமைப்பு அம்சங்கள் மற்றும் அறிவிப்பு நடைமுறைகளை உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம், ஒத்துழைப்பு மற்றும் சர்ச்சை தீர்வுக்கான நிரந்தர செயல்முறைகளையும் வழங்குகிறது. நிரந்தர சிந்து ஆணையம் உள்ளது; இதில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு ஆணையர் உள்ளனர்; தரவுகளைப் பரிமாறிக்கொள்வது, புதிய திட்டங்களை மதிப்பாய்வு செய்வது மற்றும் தொடர்ந்து சந்திப்பது போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

கருத்து வேறுபாடுகள் அடுக்கு முறையில் தீர்க்கப்படுகின்றன; தொழில்நுட்ப கேள்விகள் முதலில் ஆணையத்திற்கு செல்கின்றன, தீர்க்கப்படாத வேறுபாடுகள் ஒரு நடுநிலை நிபுணரிடம் பரிந்துரைக்கப்படலாம், சட்ட சர்ச்சைகள் சர்வதேச நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படலாம். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இந்த ஒப்பந்தத்திற்கு காலாவதி தேதி இல்லை. மேலும் இடைநிறுத்தத்திற்கான விதி எதுவும் இல்லை. பிரிவு XII, பரஸ்பர ஒப்புதலுடன் மட்டுமே ஒப்பந்தத்தை மாற்ற முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறது. இதுவரை அப்படி நடந்ததில்லை.

நீரோட்டத்தின் நிலவரம்

இந்தியாவால் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரோட்டத்தை “நிறுத்த முடியுமா” என்ற கேள்வி எழுகிறது. உடனடியாக, சுருக்கமான பதில் இல்லை. அதிக நீரோட்ட காலத்தில் அர்த்தமுள்ள அளவில் நீரோட்டத்தைக் குறைக்க முடியாது. சிந்து, ஜீலம் மற்றும் சினாப் மிகப்பெரிய நதிகள். மே முதல் செப்டம்பர் வரை, பனி உருகும்போது, இந்த நதிகள் பல நூறு கோடி கனமீட்டர் நீரை ஏந்திச் செல்கின்றன. நாம் சற்றும் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்துடன் வெள்ளம் பாய்ந்தோடும். இந்தியாவிடம் இந்த நதிகளில் சில மேல்நிலை உள்கட்டமைப்புகள் உள்ளன, குறிப்பாக பக்லியார் மற்றும் கிஷன்கங்கா அணைகள் போன்றவை.

ஆனால் இவை எதுவும் இந்த அளவிலான தண்ணீரை தடுத்து வைக்க வடிவமைக்கப்படவில்லை. இவை ஆற்றின் ஓட்டத்தில் இயங்கும் நீர்மின் திட்டங்கள், மிகக் குறைந்த நீர் சேமிப்பு திறன் கொண்டவை; அவ்வளவே! சிந்து பள்ளத்தாக்கு முழுவதும் நீரோட்டம் குறைவாக இருக்கும் வறண்ட காலத்தில் என்ன நடக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது. அப்போதுதான் ஒப்பந்தக் கட்டுப்பாடுகளின் இல்லாமை அதிகமாக உணரப்படலாம். நடுத்தரம் முதல் நீண்ட காலத்தில், நிலைமை மிகவும் சிக்கலாகும். இந்தியா ஒப்பந்த கட்டமைப்புக்கு வெளியே செயல்பட முடிவு செய்தால், பாகிஸ்தானுக்குள் செல்லும் நீரோட்டத்தின் நேரம் மற்றும் அளவை அதிகமாக கட்டுப்படுத்தும் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டியிருக்கும்.

ஆனால் அப்போதும், பாதை எளிதானதல்ல. பெரிய அளவிலான அணை அல்லது நீரைத் திருப்பிவிடும் தடுப்புகள் எதுவும் கட்ட பல ஆண்டுகள் ஆகும். நிதிச் செலவு மிகப்பெரியதாக இருக்கும். அரசியல் ஆபத்தும் அதிகமாக இருக்கும்.

பாகிஸ்தானுக்கான விளைவுகள்

பாகிஸ்தானுக்கு, இந்தியாவின் இந்த முடிவு பரந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பாகிஸ்தானின் பாசன அமைப்பு உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாகும், மேலும் இது மேற்கு நதிகளின் நீரோட்டத்தின் முன்கணிக்கக்கூடிய நேரத்தை முற்றிலும் சார்ந்துள்ளது. விவசாயிகள் அந்த நீரோட்டங்களைச் சுற்றி தங்கள் விதைப்பைத் திட்டமிடுகிறார்கள். கால்வாய் அட்டவணைகள் பல தசாப்தங்களாக நிலைத்திருந்த அனுமானங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டம் சிறிதளவு தடைபட்டாலும், நீர் அமைப்பு தேய ஆரம்பிக்கும். மிக உடனடி ஆபத்து நீர்வரத்து குறித்த முன்கணிப்பு விபரங்கள் சார்ந்தது.

பாகிஸ்தானுக்குள் வரும் நீரின் மொத்த அளவு உடனடியாக மாறாவிட்டாலும், அந்த நீர் வரும் நேரத்தில் சிறிய மாற்றங்கள் கூட பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். கோதுமை நடவு சுழற்சியின் போது தாமதம், அல்லது உலர் குளிர்காலத்தில் நீரோட்டத்தில் எதிர்பாராத வீழ்ச்சி போன்றவை விதைப்புக் காலத்தைத் தவறவிடுதல், குறைந்த மகசூல் மற்றும் அதிக செலவுகளை ஏற்படுத்தக்கூடும். சிந்து டெல்டா ஏற்கனவே நன்னீர் வெளியேற்றம் குறைவதால் சுருங்கி வருகிறது. மேல்நிலை நீரோட்டங்களில் மேலும் நிச்சயமற்ற தன்மை அந்த சீரழிவை விரைவுபடுத்தக்கூடும், கடலோர வாழ்வாதாரங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

பாகிஸ்தானின் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நீர்மின் சக்தியிலிருந்து வருகிறது, இது   அங்குள்ள தர்பேலா, மங்களா மற்றும் பிற நீர்த்தேக்கங்கள் வழியாக பாயும் நீரால் உருவாக்கப்படுகிறது. மேல்நிலை நீரோட்டங்கள் குறைக்கப்பட்டால் அது உற்பத்தி திறனைக் குறைக்கக்கூடும்.

வரலாற்றுப் பின்னணி

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நீண்ட காலமாக அதன் நிலைத்தன்மைக்காக பாராட்டப்பட்டாலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நல்லுறவு இன்மை காரணமாக அழுத்தத்தின் பிடியில் தான் இருக்கிறது. 2013ஆம் ஆண்டில், கிஷன்கங்கா திட்டத்தின் கீழ் பகுதிகளுக்கு குறைந்தபட்ச சுற்றுச்சூழல் காரணங்களின் பின்னணியில் நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 2016 உரி தாக்குதலுக்குப் பிறகு இந்தியா வழக்கமான ஒத்துழைப்பை இடைநிறுத்தியது, அணைத் திட்டங்களை விரைவுபடுத்தத் தொடங்கியது, மேலும் நீரை, தனது பாதுகாப்பு பிரச்சனையுடன் இணைக்கத் தொடங்கியது. 2023இல், இந்தியா பிரிவு XII(3) விதியைப் பயன்படுத்தி, காலநிலை மாற்றம், தேசிய வளர்ச்சித் தேவைகள் மற்றும் பாகிஸ்தானின் தடைகளைக் காரணம் காட்டி மறுபேச்சுவார்த்தைக்கு கோரியது.

பாகிஸ்தான் மறுத்தது. 2025 ஆரம்பத்தில், இரண்டு நாடுகளும் இணையாக போட்டியிடும் சட்ட வழிமுறைகளை பின்பற்றின. எப்படி இருப்பினும் 1960க்குப் பிறகு முதல் முறையாக, தற்போது தான் ஒரு நாடு (இந்தியா) ஒப்பந்தத்தின் நடைமுறை மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்பை விட்டு வெளியேறியுள்ளது. இது ஒரு நிர்ப்பந்திக்கும் உத்தியா அல்லது நிரந்தர முறிவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. சட்டச் சிக்கல்கள் இந்திய-பாகிஸ்தான் உறவில் நீர் ஒப்பந்தத்தின் இடைநிறுத்தம் சட்டபூர்வமாக சிக்கல்களையும் கொண்டது. வியன்னா உடன்படிக்கை சட்டத்தின் (1969) படி, உடன்படிக்கைகள் “நல்லெண்ணத்துடன் செயல்படுத்தப்பட வேண்டும்” என்று பிரிவு 26 கூறுகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஒருதலைபட்சமாக இடைநிறுத்துவது, பாகிஸ்தானால் ஒரு போர்க்காரணமாக கருதப்படும். பாகிஸ்தான் தனது வேளாண் துறைக்காக சிந்து நதி அமைப்பை பெரிதும் சார்ந்துள்ளது, இது அந்நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது.

உடன்படிக்கைகளின் இடைநிறுத்தம் என்பது, பிரிவு 57-இன் படி “உடன்படிக்கையின் விதிகளுக்கு ஏற்ப; அல்லது பிற ஒப்பந்த நாடுகளுடன் கலந்தாலோசித்த பிறகு அனைத்து தரப்பினரின் ஒப்புதலுடன்” மட்டுமே நடைமுறைப்படுத்தப்படலாம் என, வியன்னா உடன்படிக்கை கூறுகிறது. சிந்து நீர் ஒப்பந்தத்தில் இடைநிறுத்தம் தொடர்பான விதிகள் இல்லை; மேலும் இந்தியா பாகிஸ்தானுடன் ஆலோசனை நடத்தவில்லை. தன்னிச்சையாக இடைநிறுத்தம் அறிவித்துள்ளது.

பிராந்திய நிலைத்தன்மைக் கான அபாயங்கள்

இந்த விவகாரத்தால் ஆசியாவின் அணு ஆயுதம் கொண்ட இரு பெரும் சக்திகளுக்கு இடையேயான உறவை மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பதட்டங்களை அதிகரிக்கும் பல அம்சங்கள் உள்ளன. “எந்த தவறான கணக்கீடுகளும் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும். இரு தரப்பினரும் கட்டுப்பாடு காப்பது முக்கியம். இராஜதந்திரமே ஒரே சாத்தியமான பாதை” என்று இரு நாடுகளின் அறிஞர்களும், மக்களும் கருதுகின்றனர். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறைவானது அல்ல. ஆனால் இரு எதிரிகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் செய்ய முயற்சிக்கும் ஒரு வேலையை அது செய்கிறது. நதிகள் தொடர்ந்து பாய வைக்கிறது;  மற்ற அனைத்தும் முறிந்தாலும் கூட இரு நாடுகளும் தொடர்ந்து பேச ஒரு காரணமாக, ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. சிந்து மற்றும் அதன் துணை நதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரிகங்களை நிலைத்திருக்கச் செய்துள்ளன.

தற்போது, இரு நவீன அணு ஆயுதம் கொண்ட நாடுகளின் ஒத்துழைக்கும் திறனை சோதிக்கின்றன. வரும் மாதங்களும் ஆண்டுகளும் விவேகமான அம்சங்கள் மேலோங்குமா, அல்லது இந்திய துணைக்கண்டம் அதன் மிக அரிய வளமான  நீரை ஒருவர் தர மறுப்பதன் மூலம் புதிய, நிச்சயமற்ற காலத்தை நோக்கி செல்லுமா; உலக வங்கியும் உலக நாடுகளும் இதில் சமாதனப்படுத்த முயல்வார்களா என்ற கேள்விகள் எழுகின்றன. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மிகக் கொடூரமானது. கொடிய படுகொலைகளை நடத்திய பயங்கரவாதிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும். அதேவேளையில், சிந்து நதி பள்ளத்தாக்கின் இருபுறங்களிலும் உள்ள சுமார் 30 கோடி அப்பாவி மக்களை பழிவாங்குவது மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.

கட்டுரையாளர் டி.கே.ரங்கராஜன் சிஐடியு முன்னாள் தலைவர்  

இக்கட்டுரை முதலில் தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியானது.

Leave a Reply