ஆப்ரிக்க பெண்கள் ஒரு வருடத்திற்கு 40 மில்லியன் மணி நேரங்கள் நீரை சேகரிப்பதற்காக மட்டுமே செலவிடுகிறார்கள்-தீபக்

சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை முன்னிட்டு கடன் மற்றும் பொருளாதார கொள்கைகள் காலநிலை மாற்றங்கள் ஆகியவை  பெண்களையும் விவசாய தொழிலாளர்களையும் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை இந்த கட்டுரையில் ஆராய்வோம்.

மார்ச் மாதம் சர்வதேச உழைக்கும் மகளிர்  தினத்தின் மாதமாகும். இந்த நாள் சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் ஆழமாக வேரூன்றிய  நாள். இந்த நாளை தவிர்த்து விட்டு நாம் இடதுசாரி அரசியலை அணுகவே இயலாது.  இந்த நாள் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டாலும், சர்வதேச மகளிர் தினம் என்று மட்டுமே கொண்டாடப்படுகிறது. உழைக்கும் என்ற வார்த்தையை முதலாளித்துவம் மிக அழகாக விளக்கி வைத்துள்ளது. உழைத்தல் என்பது பெண்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பின் 2022 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி உலக அளவில் பெண்கள் 63.3% தொழிலாளர் சக்தியில் பங்கேற்கின்றனர். இதில் சமூக பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் கட்டமைப்பின் காரணமாக 10 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் தீவிர வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். இதே கொள்கையை பின்பற்றி நாம் பெண்களிடையே இருக்கும் வறுமையை ஒழிக்க முற்பட்டால் நமக்கு 137 ஆண்டுகள் ஆகும்.

 

உலக பொருளாதாரத்தில் ஆப்பிரிக்கா மிகவும் பின்தங்கிய ஒரு கண்டம். ஐக்கிய நாடுகளின் ஒரு வளர்ச்சி திட்ட அறிக்கை நம்மை அதிர்ச்சி அடைய வைக்கும். இந்த அறிக்கையின்படி துணை சகாரா பகுதியில் வசிக்கும் பெண்கள் ஒரு வருடத்திற்கு 40 மில்லியன் மணி நேரங்களை நீரை சேகரிப்பதற்காக மட்டுமே செலவிடுகிறார்கள். இது பிரான்சில் உள்ள ஒட்டுமொத்த  தொழிலாளர்களும் ஒரு ஆண்டு முழுவதும் செய்யும் வேலை நேரத்திற்கு சமமானது ஆகும். துணை சகாராவில் உள்ள ஆப்ரிக்க நாடுகளில் குடிநீர் கட்டமைப்பை உருவாக்க ஆகும் செலவு 11 பில்லியன் டாலர்களாகும்.

இது உலக பில்லியினியர்களின் இரண்டு நாளில் ஈட்டும் வருவாயை விட குறைவானதாகும். அந்த பணத்தை இம்மக்களுக்காக செலவு செய்தால் சஹாராவில் வசிக்கும் அனைத்து பெண்களும் கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தூக்கி வர வேண்டிய வேலையில் இருந்து விடுபடுவார்கள்.

ஆப்பிரிக்க நாடுகள் தினசரி 447 மில்லியன் டாலர்களை தாங்கள் வாங்கிய கடனை அடைக்க  செலவு செய்கின்றன. இந்த கடனை அடைக்க 25 நாட்கள் செலுத்தும் பணம் இருந்தால் போதும் அந்நாடுகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு தண்ணீர் குழாய் இணைப்பை வழங்கி விடலாம். ஆனால் இதை செய்யாமல் முதலாளித்துவம் மிக சுலபமாக கடந்து  செல்கின்றது.

இந்த கடுமையான பணி அந்தப் பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் பெண்கள் பலர் கிராமப்புறத்தில் வாழ்கின்றனர். அவர்கள் விவசாயிகளாகவும் தொழிலாளர்களாகவும் வேலை செய்பவர்கள். பெண்கள் தங்களுடைய ஒரு நாளில் பெரும்பான்மையான நேரத்தை தண்ணீர் எடுக்க  செலவிடுவதால் வேலை செய்யும் இடங்களில் அவர்களின் உற்பத்தி திறன் குறைகிறது. ஆகையால் பெண்களின் உற்பத்தித்திறன் விகிதம் என்பது ஆண்களை விட சராசரியாக 24 சதவீதம் குறைவாக உள்ளது. (இது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 2023 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது)

உலக அளவில் விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் தரவுகள் நம்மிடம் நிறைய இல்லை. ஏனெனில் பெண்கள் விவசாயிகளாக கருதப்படுவதில்லை மாறாக அவர்கள் உதவியாளர்களாகவே கருதப்படுகிறார்கள். இந்த போக்கு பெண் விவசாய தொழிலாளர்கள் சராசரியாக ஆண்கள் விட 18.4 சதவீதம் குறைவாக சம்பாதிக்க வழிவகிக்கிறது.

இந்த இந்த போக்கை எதிர்க்கும்  முயற்சியாக ஐக்கிய நாடுகளின் பொது சபை 2026 ஆம் ஆண்டை பன்னாட்டு பெண்கள் விவசாயிகள் ஆண்டு என்று அறிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

  • இதன் நோக்கம் பெண்களின் பங்கை விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளில் முன்னிலைப்படுத்துதல்.
  • விவசாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டை எதிர்த்துப் போராடும் கொள்கைகள் நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.
  • கிராமப்புற விவசாய சங்கங்களில் பெண்கள் தலைமை பதவிகளில் பங்கேற்பதை உறுதி செய்தல்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FOA). இந்த அமைப்பாபு உணவு அல்லாத உணவு விவசாய உற்பத்தி மற்றும் பண்ணை சார் செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் அறிக்கையின்படி பெண்கள் பண்ணை சார் தொழில்களில் அதாவது வர்த்தக போக்குவரத்து, பதப்படுத்துதல், விநியோகம், சேமிப்பு சந்தைப்படுத்துதல் போன்றவற்றிலிருந்து விலக்கப்படுவதால் தொழில்துறையில் மொத்தத்தில் அவர்கள் ஆண்களை விட குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.

குளோபல் சவுத் ( தெற்குலக ) நாடுகளில் பெண்களே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் விவசாயம் மட்டுமே அவர்களின் வருமானத்தின் முக்கிய பகுதியாகும். ஆப்பிரிக்காவின் துணை சகாரா பகுதியில் 66% பெண்களின் வேலை வாய்ப்பு விவசாயத்தை மட்டுமே சார்ந்து உள்ளது.

இதே தெற்காசியாவில் எடுத்துக் கொண்டால் பெண்களின் பங்களிப்பு 71% ஆகவும் ஆண்களின் பங்களிப்பு 47 சதவீதமாகவும் உள்ளது. இந்த அதிகப்படியான பங்களிப்பு மூலமாக அவர்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்த ஊதியத்தின் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதற்கு போராடுகிறார்கள் பின்னர் அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். உலகின் பல ஆய்வு நிறுவனங்களில் தரவு என்பது ஆண்களைவிட பெண்களே அதிகம் பட்டினி கிடப்பதை காட்டுகிறது.

மேலும் இந்த முதலாளித்துவத்தின் மிக வேகமான உற்பத்தி என்பது காலநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை பேரழிவுகளால் பாதிக்கப்படும் முதல் அமைப்பு விவசாயத் துறையே . மேலும் எந்த ஆச்சரியமும் இல்லாமல் பெண்களே இந்த தாக்கத்தை அதிகம் ஏற்றுக்கொள்கின்றனர். அதாவது தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்ய பெண்கள் ஆண்களை விட 55 நிமிடங்கள் அதிகமாக வேலை செய்யும் நிலை உள்ளது. மேலும் ஆண் தலைமையிலான குடும்பங்களுடன் ஒப்பிடும் பொழுது பெண் தலைமையிலான குடும்பங்களின் விசாயத்துறையில் வருமானம் 23.6 சதவீதம் குறைவு. மேலும் பெண்கள் விவசாயத்துறையை  தாண்டி வெளியே சென்று வேலை வாய்ப்பு தேடுவதால் அவர்கள் கூலித் தொழிலாளிகளாக குறைந்த ஊதியத்திற்கு பணி அமர்த்த படுகிறார்கள். இது அவர்களின் வருவாயை மேலும் குறைக்கிறது.

FOA  அறிக்கையின்படி வெள்ளத்தின் போது பணக்காரர்களின் குடும்பங்களை விட ஏழை மக்களின் குடும்பங்களே தங்கள் வருமானத்தில் 4.5% சதவீதத்தை இழக்கின்றன. குளோபல் சவுத் நாடுகள் முழுவதும் வெள்ளம் காரணமாக ஏழை குடும்பங்களில் மொத்த வருமான இழப்பு 21 பில்லியன் டாலர்கள் ஆகும். காலநிலை பேரழிவுகளால் முதலில் பாதிக்கப்படுவது ஏழை விவசாயிகளே, குறிப்பாக பெண்கள்.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு என்ன செய்யலாம்?

இத்தகைய சூழ்நிலைக்கு ஐக்கிய நாடுகள் தரும் ஒரே தீர்வு பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் (empowerment).

ஆனால் பெண்கள் எப்படி அதிகாரம் பெறுவார்கள்?

எண்ணற்ற தீர்மானங்களை கொண்டு வந்து அவற்றை அரசாங்கங்கள் முற்று முழுதாக கண்காணிக்க வேண்டும்.

பெண்களை அதிகார பதவியில் அமர்த்த வேண்டும். ஆனால் இவை யாவுமே பிரச்சனை இன் மைய புள்ளியை தொடவில்லை. அதாவது கிராமப்புறங்களில் அனைத்து விவசாய தொழிலாளர்களையும் சங்கமாக இணைக்கும் முயற்சி பெரும்பாலும் சட்ட ரீதியாக  ஏமாற்றுவது மற்றும் வன்முறையிலேயே முடிகின்றன. 1975 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கிராமப் புறத் தொழிலாளர்களின் தொழிற்சங்க அமைப்புகளை ஏற்றுக்கொண்டது.

இதன் மூன்று பிரிவுகள் குறிப்பிடத்தக்து.

அனைத்து வகையான கிராமப்புற தொழிலாளர்களும் இதில் பங்கேற்கலாம் அவர்கள் ஊதியம் பெறுபவர்களாக இருந்தாலும் சரி சுயதொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி. முந்தைய அனுமதி எதுவும் இல்லாமல் தங்கள் விருப்பத்தின் படி அமைப்புகளை நிறுவவும் அவற்றை செயல்படுத்தவும் அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்ட அதிகாரம் அளிக்கிறது. மேலும் அவர்கள் சங்கத்தில் இணையவும் உரிமை உண்டு.

விவசாய தொழிற்சங்க அமைப்பாளர்களுக்கு எதிரான வன்முறை உலகம் முழுவதும் தொடரும் விஷயமாகும். ஆனால் இவை பெரும்பாலும் ஊடக வெளிச்சத்திற்கு குறைவாகவே வருகிறது. இதுவரை கொல்லப்பட்ட கிராமபுர தொழிற்சங்க வாதிகளின் பட்டியல் இந்த மொத்த இணையத்தையே நிரப்பக்கூடும். 2023இல் குவாதமாலாவின் டெர்ரிஸ் லிசெத் அல்டானா முதல் 2024 இல் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்த சுப்கரண் சிங் வரை இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. இந்த இடத்தில் நாம் சுப்கரண் சிங்கை நினைவு கூர்ந்தாக வேண்டும். 2024 பஞ்சாப் விவசாயிகள் டெல்லி செல்லும் போராட்டத்தின் போது பஞ்சாப் மாநிலத்தின் எல்லையை கடக்க முயன்ற போது ஹரியானா போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 வயதான சுப்கரண் சிங் கொல்லப்பட்டார்.

விவசாய மற்றும் விவசாய தொழிலாளர்களை தொழிற் சங்கங்களாக ஒன்றிணைத்து ஒரு சக்தியாக கட்டி எழுப்புவதற்கு நம் உரிமைகளைக் கேட்டு பெறுவதைத் தவிர மாற்று எதுவும் இல்லை.

பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர்கள் இயக்கம்(Movimento dos TrabalhadoresRuraisSemTerra,MST) அமெரிக்காவின் மிகப்பெரிய சமூக இயக்கம், ஒன்றரை மில்லியன் உறுப்பினர்கள். அவர்களின் குறிக்கோள்: விவசாய சீர்திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கத்தை வலியுறுத்துவதன் மூலம், ஏழைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கைகளில் நிலத்தை வழங்குவதன் மூலம், ஏற்றுமதிக்கு அல்லாமல் பிரேசிலியர்களுக்கு ஆரோக்கியமான உணவை வளர்ப்பதன் மூலம் பிரேசிலிய கிராமப்புறங்களில் நிலத்தின் மிகப்பெரிய செறிவை அதிகரிப்பது.2022 ஆம் ஆண்டு “நிலமற்ற பெண்களின் அன்பு மற்றும் போராட்டத்தின் திறந்த கடிதம்”என்ற தலைப்பில் ஒரு கடிதத்தை வெளியிட்டனர். அது உலகம் முழுவதையும் ஒரு அதிர்வுக்கு உள்ளாக்கியது.

எத்தனை முறை நாங்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்தோம். குழந்தைகளை பராமரித்தோம். கால்நடைகளை வளர்த்தோம்.காடுகளில் வாழ்ந்தோம்.நாங்கள் வாழ்வதற்காக எங்கள் நிலங்களை வாழ்வதற்கு ஏற்ற இடமாக ஒழுங்கமைத்தோம். சாத்திய மற்ற இடங்களில் வீடுகளை அமைத்தோம். நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்தோம். நாங்கள் அதிகாலையில் எழுந்து உழைக்க ஆரம்பித்தால் இரவு வரை ஓய்வே கிடையாது. எங்கள் கால்கள் பயணிக்காத நிலங்களே கிடையாது. எங்களோடு வயலில் சேற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்கள் எத்தனை எத்தனை? எங்கள் பிரார்த்தனைகள் கூட எங்களையும் எங்கள் நிலத்தையும் பாதுகாப்பது பற்றியதாகவே இருக்கும். நாங்கள் எங்கள் நிலத்திலிருந்து மருந்துகள் மற்றும் உணவுகளை தயார் செய்கிறோம். நாங்கள் எங்கள் வாழ்வை காப்பாற்றிக்கொள்ளும்  உரிமைக்காக போராடுகிறோம். உழைத்த எங்கள் கையில் இப்பொழுது நிலங்கள் இல்லை. நம்முடைய போராட்டம் இந்த பூமி அசைப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் போராட்டத்தில் உள்ள பெண்கள் சரணடைய மாட்டார்கள். இந்த மார்ச் மாதம் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை உருவாக்குவதற்கும் ஒவ்வொரு நம் வாழ்க்கை அழிக்கும் முதலாளித்துவத்தை அழிவிற்கு தள்ளவும் அழைக்கிறது.

சக்திவாய்ந்தவர்கள் நாங்கள் சரிந்து விடுவோம் என்று நினைத்தால், அது அவர்கள் முட்டாள்தனம். நாம் படைப்பாளர்கள், மாணவர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் விதைகள்  என்பதை உணரவில்லை . பெண்கள் இருக்கும் எந்த இடத்திலும், நம்பிக்கை, கூட்டு ஒழுங்கமைப்பு, போராட்டம், துணிச்சல் மற்றும் கிளர்ச்சியும் இருக்க முடியும். நாங்கள் பல சவால்களை எதிர்கொள்கிறோம், ஆனால் நாங்கள் என்றும் முன்னணியில் இருப்போம், ஏனென்றால் வரலாறும் நம்மைச் சேர்ந்ததே, மேலும் நாங்கள் அதை தெருக்களிலும், போராட்டத்திலும், வயல்களிலும் உருவாக்குவோம். எங்கள் பலம் விழுந்த பல போராளிகளிடமிருந்து வருகிறது, ஆனால் அவர்கள் எங்களுக்குள் வாழ்கிறார்கள். அவர்கள் போர்க் காலத்திலும் உதிக்க விரும்பும் சூரியனின் கதிர்கள், நம் சிவப்பு அனல் கொண்ட தகிக்கும் சூரியன்.

 

ட்ரை காண்டிநெண்டில் தோழர் விஜய் பிரசாத் எழுதிய Twenty-Five Days of Debt-Service Payments Could Emancipate African Women from 40 Billion Hours of Water Harvesting என்ற 11 ஆவது செய்திமடலின் மொழிபெயர்ப்பு 

மொழிப்பெயர்ப்பாளர் : தோழர் தீபக். 

Leave a Reply