திராவிட குடும்பத்தில் உதித்த  செஞ்சூரியன் – தீபக்

வணக்கம், எங்கள் ஊர் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முப்பது குடும்பங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய கிராமம். அங்கு இருப்பவர்கள் அனைவருமே திராவிட கட்சிகளை ஆதரிப்பவர்கள். அவ்வளவு ஏன் என் குடும்பமே திராவிட கட்சி பின்புலமாக கொண்டதுதான்.

இது போன்றதொரு சூழ்நிலையில் வளர்ந்த ஒருவனுக்கு எப்படி கம்யூனிசம் அறிமுகமானது ? அது மிகவும் ஆச்சரியமானது. அதற்கு நான் ஹிட்லருக்கு தான் நன்றி சொல்வேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது இரண்டாம் உலகப்போரை பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது. ஜெர்மனியின் ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஜோசப் ஸ்டாலினை பற்றியும் கம்யூனிசம் பற்றியும் சோவியத் யூனியன் பற்றியும் தெரிந்து கொண்டேன்.

நானும் முதலில் ஸ்டாலினை மேற்குலக நாடுகள் கூறுவது போல சர்வாதிகாரிகளின் பட்டியலில் தான் வைத்திருந்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது அவர் ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரி . அதன் பிறகு உலகில் இருந்த கம்யூனிச தலைவர்கள் கம்யூனிச சித்தாந்தங்கள் கோட்பாடுகள் இதைப் பற்றி எல்லாம் படித்து தெரிந்து கொண்டேன். எங்கள் பகுதியில் பெரிதாக கம்யூனிச கட்சி கிளைகளோ தோழர்களோ அவ்வளவாக இல்லை. நான் பின்பற்ற பல திராவிட கட்சிகள் இருக்கும்பொழுது நான் ஏன் இடதுசாரி அரசியலில் நோக்கி திரும்பினேன் என்பதற்கு இரண்டு மிக முக்கிய காரணங்கள் உள்ளது.

ஒன்று சாதி ஒழிப்பை பேசும் திராவிட கட்சிகளால் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட அதுவும் என் குடும்பத்திலேயே நடந்த ஆணவக் கொலை. அந்த ஆணவ கொலை நிகழ்ந்த பட்ட விதம் மிகவும் மோசமானது.அதற்கு முழுக்க முழுக்க பின்னணியில் இருந்தது அன்று ஆட்சியில் இருந்த ஒரு திராவிட கட்சியும் அதனோடு கூட்டணியில் இருந்த ஒரு சாதிய பின்புலமாக கொண்ட கட்சி.

அது என் சிறு வயதில் என்னை வெகுவாக பாதித்தது. நான் வளர்ந்த பின்பு தான் திராவிட கட்சிகளின் அடித்தளமே சாதி வாக்கு வங்கியில் தான் உள்ளது என்று தெரிந்து கொண்டேன். அது மட்டுமில்லாமல் மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவு தரும் வேலையையும் இந்த எண்ணிலடங்காத திராவிட கட்சிகள் இன்று வரை செய்து கொண்டு தான் இருக்கின்றன .

இரண்டாவது நிகழ்வு கடந்த உள்ளாட்சித் தேர்தல் (2019)ல் நான் நேரடியாக போட்டியிட்ட பொழுது இந்த திராவிட கட்சிகளின் கோர முகத்தையும் சூழ்ச்சி வலை பின்னலையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் எனக்கு எதிராக எழுந்த கொலை மிரட்டல்களும் என்னை அதன் பின் திராவிட கட்சிகளின் பக்கமே திரும்பிப் பார்க்க முடியாத அளவிற்கு செய்துவிட்டது.

மேலும் இடதுசாரி கொள்கைகள் என்னை வெகுவாக கவர்ந்தது ஆகையால் நான் எனக்கு மட்டும் யோசிக்காமல் என் எதிர்கால சந்ததிக்காகவும் சேர்த்து இந்த இடதுசாரி பாதையை தேர்ந்தெடுப்தேன்.

நான் கல்லூரியில் சேர்ந்த போது  அங்கு சில தோழர்களின் அறிமுகமும் அறிவுரையும் கிடைத்தது. அவர்களின் மூலமாக சில போராட்டங்கள், சில பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள நேர்ந்தது. இடதுசாரி கொள்கை  எனக்கு அரசியல் அறிவை மட்டுமல்ல காதலையும் கொடுத்தது . அந்தத் தோழருக்கு என்னோடு சேர்த்து கம்யூனிச கொள்கைகளும் பிடித்து போனது.

அதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ளும் பொழுது தான் எனக்கு ஒரு விஷயம் தெளிவானது. கம்யூனிஸ்ட் கட்சி மற்ற கட்சிகளைப் போல போலியான ஒரு பிம்பத்தை கட்டி எழுப்பும் வேலையில் ஈடுபடாமல் மக்களுக்கான போராட்டத்தில் களத்தில் நிற்பதில் உறுதியாக இருக்கிறது. இருந்தும் ஏன் இந்த மக்கள் கம்யூனிச கட்சியின் பக்கம் வர மறுக்கிறார்கள் என்ற கேள்வி எனக்குள் பல காலமாக இருந்தது.?

அதன் பிறகு தான் சில காலங்களுக்கு முன்பு தான் உணர்ந்தேன். இந்த மக்களும் அடையாள அரசியலில் தொலைந்து போனவர்களே . அவர்களை மீட்டெடுப்பதே செங்கோடியின் வேலை.

மேலும் போராட்டத்தின் போது அல்லது கட்சிக்காக உயிர் நீத்த தோழர்களை வருடா வருடம் நினைவு கூறுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்வு. மற்ற கட்சிகளில் நினைவு கூறுவது என்பது தலைவர்களுக்கு மட்டுமே இருக்குமே தவிர தொண்டர்களுக்கும் தனி மனிதனுக்கும் இருக்காது. இந்த எளிமை உட்கட்சி ஜனநாயகம் இது போன்ற விஷயங்களில் எனக்கு கம்யூனிச கட்சி பிடித்தது. எனக்கும் மேடை ஏறி பேச முதலில் வாய்ப்பளித்ததும் இந்த கம்யூனிஸ்ட் கட்சி தான். எனக்கும் பேச தெரியும் எனக்கும் மேடைப்பேச்சு நன்றாக வரும் என்பதை உணர வைத்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தான். எனக்கு எழுத வரும் என் எழுத்து கோர்வையாக இருக்கும் என்று உணர வைத்ததும் கம்யூனிஸ்ட் கட்சி தான்.

மேலும் புத்தகங்கள் வாசிப்பது சமூக வலைதளங்களில் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட உரையாடல்களில் கலந்து கொள்வது இதுபோல நாளுக்கு நாள் என்னுடைய இடதுசாரி சிந்தனையை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் நான் பல நாட்களில் யோசிப்பதுண்டு ஏன் இடதுசாரி சிந்தனைகள் மிக நன்றாக இருந்தும் மக்கள் அதை நோக்கி வரவில்லை ? நாம் ஏன் சிறுபான்மையினராகவே இருக்கிறோம் ?

அப்பொழுதுதான் எனக்கு தோழர் லெனின் கூறிய வார்த்தை ஞாபகம் வரும் “மக்கள் பெருங்கடலில் கம்யூனிஸ்டுகள் ஒரு சிறு துளி மட்டுமே”
கம்யூனிஸ்டுகள் ஆகிய நாம் புரட்சி விதையை மட்டுமே தூவ முடியும் மற்றவற்றை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். மேலும் புத்தக வாசிப்பை ஒரு முன்னெடுப்பாக எடுத்து செல்வதில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்று இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.

தோழர் தீபக்

Leave a Reply