“இடப்பக்கம்  திரும்புங்கள்” – பாலாஜி DYFI

எனது பெயர் பாலாஜி (40 வயது) நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன்.  சிறுவயது முதலே என்னை ஆக்கிரமித்தது கம்யூனிசம் என்று நினைவு. ஏனெனில் பல  கட்சிகள்  சார்பாக எவ்வளவு பேர் எங்கள் தெருவிற்கு வருவார்கள். ஆனால் அவர்களிடம் பார்த்த ஆடம்பரங்களை நான் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பார்த்ததே இல்லை. அதிலும் ஒரு பெரியவர் எங்கள் தெருவிற்கு வந்து குழல் போல் உள்ள ஒரு அட்டையில் சத்தம் போட்டு பேசுவார்.

பெரும்பாலும் அவர் பேசுவது கம்யூனிசத்தை பற்றியதாக  இருக்கும். அப்போது எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கும். அப்போ அப்போ அவர் பேசுவதை  சற்று திரும்பி பார்த்தது.   9, 10 வயதுகளில் வாசிப்பு அனுபவம் ஏற்பட்டு 11 , 12 வயதுகளில் கொஞ்சம் கட்டுரைகள் வாசிக்கும் பழக்கம் வந்தது. அப்போது நூலகங்களில் படிப்பைது. எங்கள் தெரு சாலையில்  கம்யூனிஸ்ட்கள் போடும்  கூட்டங்களை போகிற போக்கில் கேட்டுக் கொண்டே செல்வது வழக்கம்.

மற்றவர்களை விட நான் சற்று வித்தியாசமாக இருப்பதை கொஞ்சம் உணர முடிந்தது. இன்னும் இரண்டு வருடங்கள் போக எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது வாசிப்பின் சுவையை அறிந்த பொழுது எல்லாவற்றையும் படிக்கும் பொழுதும் கம்யூனிசம் சம்பந்தமான விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. எனது அண்ணனும் காரணம் தெரியாமல் எப்போதும் சொல்வது வாக்களித்தால் கம்யூனிஸ்டுகளுக்கு போடு  என்று சொல்வார். அவன் யாருக்கும் வக்காலத்து வாங்கக் கூடிய ஆள் கிடையாது.

அவன் படித்தது வியாசர்பாடி என்பதால் செல்லும் வழியில் இடதுசாரி வாலிபர் சங்கம்,  மாணவர் அமைப்புகள் நடத்தும் நிகவுழ்வுகளை கவனித்துக் கொண்டே செல்வேன் என் ஏரியாவில் உள்ள நண்பர்களும் சிலர் அதில் கலந்து கொள்வார்கள்.

வியாசர்பாடி ஜனநாயக வாலிபர் சங்கம் பெரம்பூரில் அப்போது அதிகமாக செயல்பட்ட ஒரு இயக்கம். பொதுவாக மக்களுக்காக உழைத்த எல்லோரைப் பற்றியும் படிக்கும் பழக்கம் இருந்தது. காந்தி ,நேரு என்று ஆரம்பித்து ஆபிரகாம் லிங்கன், கம்யூனிசம் சம்பந்தமான கட்டுரைகள் ஒவ்வொன்றாக வாசிக்க வாசிக்க என்னவென்றே தெரியாத ஒரு ஈர்ப்பு உருவானது.  முக்கியமாக ஜோதி பாசு பற்றிய கட்டுரை அவருடைய எளிமையை எடுத்துரைத்தது.

புத்ததேவ் பட்டாச்சாரியா பற்றிய கட்டுரை , கேரளத்தின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் பற்றிய கட்டுரைகள் என்னை மிகவும் ஈர்த்தது குறிப்பாக. 2008 ஒன்பது காலகட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை ஒட்டிய கட்டுரைகள் குமுதம் மற்றும் தீக்கதிரில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் என்னை வெகுவாக ஈர்த்தது.

குறிப்பாக இடப்பக்கம்  திரும்புங்கள் என்ற கட்டுரையை  திரும்பத் திரும்ப, படிக்கப்  படிக்க பாட்டாளி வர்க்கத்திற்காகவும் ஏழை எளியவர்களுக்காகவும் உழைக்கும் ஒரே கட்சி கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதை வாசிப்பின் மூலமும் அறிய முடிந்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் சமயங்களில் கம்யூனிசம் பற்றி நண்பர்கள் கேட்கும் போது பதில் தெரியாமல் விழிக்க கூடாது என்று கட்டுரைகள் வாசிப்பது. அது சம்பந்தமான ஆட்களை சந்தித்து பேசுவது என இருந்தேன். அதுமட்டுமல்ல  செங்கொடி இயக்கங்கள் நடத்தும் எல்லா கூட்டங்களிலும் முடிந்த அளவுக்கு பார்வையாளராக கலந்து கொள்ள முயற்சித்து வந்தேன். அதில் சிலவற்றில் கலந்து கொள்ளவும் முடிந்தது.

அதேபோல் சீர்திருத்தம், தீண்டாமை ஒழிப்பு கூட்டங்களில் எல்லாம்  கலந்து கொண்டிருக்கிறேன். பிறகு வேலைக்கு  சேர்ந்த பிறகு இவாறு கூட்டங்களில் பங்கேற்பது முடியாமல் போனது. ஆனாலும் நான் பேசும் பேச்சை வைத்தே  என்னை கம்யூனிஸ்ட் என்று எல்லோரும் சொல்வார்கள். அப்போதெல்லாம்  எனக்கு சற்று பெருமையாக இருக்கும்.

ஆனால் நான் அதற்கு தகுதியான ஆள் இல்லையோ  என நினைத்துகொள்வேன்.   ஒரு முறை  இரவு நேரத்தில்  புத்தகம் வாங்க மூலக்கடையில் சுனில் என்ற தோழரை சந்திக்கும் போது அவர் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் மிக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். பிறகு தான் தெரிந்தது அவர் அப்போதைய திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ பாலபாரதி என்று.

2011  என்று நினைவு எங்கள் வீட்டு அருகே 150 வீடுகளுக்கு பட்டா இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு  பட்டா வாங்கி தர வேண்டி , எம்எல்ஏ எஸ்.கே. மகேந்திரன் அவர்களை எனது அண்ணனின் வீட்டு மாடியில் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்.  எஸ்.கே.மகேந்திரன் தோழர் வந்துவிட்டார். ஆனால் எனது அண்ணனுக்கு அடையாளம் தெரியவில்லை. ஏனெனில் அவர்  மோட்டார் சைக்கிளில் வந்தார். என் அண்ணனால் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. நான் அடையாளம் கண்டு கொண்டு அண்ணனுக்கு எடுத்துச் சொல்ல, அண்ணன் ஆச்சரியப்பட்டு போனார். அப்போது அந்த வயதிலேயே நான்  எனது அண்ணனிடம் சொன்னது “கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் எளிமையாகவே இருப்பார்கள்”. அதேபோல் 2004- 2009 காலகட்டங்களில் இந்திய அரசியலில் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு என்னை மிகவும் ஈர்த்தது.

காலங்கள் உருண்டோடு கொண்டிருக்க வேலை நிமித்தமாக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர வேண்டாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். அந்த எண்ணத்தை 2019 ஆட்சியைப் பிடித்த பிஜேபி என்னை சற்று சிந்திக்க வைத்தது. பாசிஸ்டுகள் உருவெடுத்து வளர்ந்து வரும் இவ்வேளையில் தனியாக  இருப்பது சரியாகாது. அமைப்பாக  ஒன்று திரள  வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில்  சேர முடிவு செய்தேன்.

பிறகு கொரோனா காலகட்டத்தில்  தமிழ் மார்க்ஸ் கல்வி  வட்டத்தில் இணைந்து நிறைய ட்விட்டர் ஸ்பேஸில் கலந்து கொண்டேன். அப்போது தெரிந்து கொண்ட ஒரு மிக்கிய  விஷயம், ஒரு “கம்யூனிஸ்ட் என்பவர் களப்பணி ஆற்றாமல் முழுமையடைய முடியாது”   எனஅடிக்கடி சொல்வதை கேட்டு உந்துதலில் எனது தோழர்களிடம் கட்சியில் சேர உதவி கேட்டிருந்தேன். அவர்கள் சில காலம் காத்திருக்க வைத்தார்கள். பிறகு 2022 கடைசியில் சேர்ந்தேன்.

ஆதரவாளர், பரிச்சாத்த உறுப்பினர், கட்சி உறுப்பினர் என்ற நிலையை இரண்டு ஆண்டுகளில் அடைந்து விட்டேன். முதல் ஒரு வருடம் ஸ்தாபனம் பற்றிய தெரியாததால் அடிக்கடி தோழர்களுடன் சண்டையிடுவேன். பிறகு புரிந்து கொண்டேன்.  இப்பொழுது அவர்களுக்கு ஒத்துழைப்பதுடன், அவர்களுக்கு என்னால் முடிந்த கட்சிப் பணிகளையும் அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்.

“அந்த வகையில் மகிழ்ச்சி. வயதில் சிறிய தோழர்களே இவ்வளவு நாட்களாக  கட்சியில் என்னை வழிநடத்தி வருகிறார்கள். அதை நினைக்கும் பொழுது ஒரு அறிவார்ந்த அறிவியல் பூர்வமான ஒரு கட்சியில் இருப்பதை என்னால் உணர முடிகிறது.”

இந்த இரண்டரை ஆண்டுகளில் என் வாழ்நாளில் மகிழ்ச்சியான நாட்களாக கருதுகிறேன். ஏனெனில் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் மக்களுக்கான எனது எனது பங்களிப்பும் இருப்பதை நினைத்து சற்று பெருமிதமும் அடைகிறேன். ஒரு இடதுசாரியாக, அனைத்து வழிகளிலும் எனது இயக்கத்தை முன்னேற்றி கொண்டு செல்ல தொடர்ந்து முயல்வேன்.

கம்யூனிஸ்ட் என்ற வார்த்தை மிகப்பெரியது என்பதை உணர்கிறேன். எனக்கு உந்து சக்தியாக இருந்த கோகுல்ராஜ் வழக்கு வாச்சாத்தி வழக்கு என்று மிக நீண்டது. சொல்ல இடமில்லாததால் தவிக்கிறேன். தொடர் வாசிப்பு ஒருவரை நிச்சயம் கம்யூனிசத்தை நோக்கி அழைத்துச் செல்லும். எனவே படித்த தோழர்கள் நமது வாசிப்பு அனுபவத்தை அருகில் இருப்பவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம் மிகப் பெரிய இயக்கமாக இதைக் கட்டி எழுப்ப முடியும் என்று நான் மனதார நம்புகிறேன்.

பாலாஜி ( DYFI ) வடசென்னை

Leave a Reply