முகம் தெரியாத வால்பாறை செங்கொடி தியாகிகள்

அப்பாரு… குருசாமி.. பழனி… ஞானமுத்து.. இன்னொருவரின் பெயர் தெரியவில்லை.

இவர்களின் புகைப்படங்களும் இல்லை.

பெயர் தெரியாத…முகம் அடையாளப்படுத்த முடியாத இவர்கள்தான் தமிழகத்தில் முதன்முறையாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு இவர்களும் ஒரு காரணம் என்று நான் இப்போது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா….?

கூலி உயர்வு கேட்டான் அத்தான்..குண்டடி பட்டு செத்தான்….என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தமிழக முழுவதும் இம்முழக்கம் அறிஞர் அண்ணாவால் பேசப்பட்டது என்பது உண்மைதானே.

தேசம் விடுதலை அடைவதற்கு முந்தைய 100 ஆண்டுகள் வால்பாறை மலைப்பகுதி என்பது அடர்ந்த மரங்களைக் கொண்ட ஒரு வனம்.

பிரிட்டிஷ்காரன் தென்மாவட்ட தமிழக மக்களை பயன்படுத்தி கிட்டத்தட்ட அடிமைகள் போல் கடத்திவரப்பட்டு திரும்பிப் போக முடியாத அளவிற்கு வேலை வாங்கினார்கள்.

வனம் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாகின.

தேயிலை தோட்டம் உருவான பின்னும் அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்களை பல நாவல்கள் கதைகளாக வடிவமைத்துள்ளன.

சொந்த ஊருக்கு திரும்பி போக முடியாது. கடன் மேல் கடன்… வட்டிக்கு மேல் வட்டி.. மர்மமான நோய்கள்.. சுகாதாரமில்லாதா சுற்றுப்புறமும் தங்குமிடங்களும்.. பெண்கள் எதிர் கொண்ட பிரச்சனைகள் என எதுவும் சொல்லிமாளாது.

தேசம் விடுதலை அடைந்த பின்னரும் தேயிலை தோட்ட முதலாளிகள் அதே பாணியை கையாண்டபோது வெடித்து சிதறியது போராட்டங்கள் .

1952 ஆம் ஆண்டு செங்கொடி ஏந்தி உரிமைக்கான போராட்டங்களை நடத்தினர்.

இது ஆட்சியாளர்களின் கவனத்திற்கு போக அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதியை தலைவராகக் கொண்டு ஒரு விசாரணை கமிசன் அமைக்கிறார்.

விசாரணைக் குழு நான்கு ஆண்டுகள் விசாரித்து அதன் பிறகு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது.

ஆண் தொழிலாளிகள் பெற்று வந்த ஊதியம் ஏழரை அணா, பெண் தொழிலாளிகள் பெற்று வந்த ஊதியம் ஐந்தரை அணா என்பதை மாற்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் இரண்டு ரூபாய் 25 பைசா தர வேண்டும் எனவும் அதை 1952 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் எனவும் 1956 ஆம் ஆண்டு அறிக்கையை வழங்கியது.

இவ்வறிக்கை வந்த பின்னும் தோட்ட முதலாளிகள் கூலி உயர்வை அமல்படுத்தவில்லை. அரசும் வற்புறுத்தவில்லை.

ஓய்வு பெற்ற நீதிபதி அளித்த அறிவிப்பை அமுலாக்க சொல்லி நடைபெற்ற போராட்டங்கள் வால்பாறை மலைமுகடுகள் முழுவதும் எதிரொலித்தது.

செங்கொடி இயக்கம் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தியது .அதன் தொடர்ச்சி தான் இந்திய அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த ஜனவரி 26 ஆம் தேதி அன்று குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை அமுலாக்கு என்று பத்தாயிரம் தோட்ட தொழிலாளர்கள் வால்பாறையில் காவல் நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தோட்ட முதலாளிகளின் ஏவலால் காவல்துறை எவ்வித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள்.

நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே செங்கொடி இயக்கத்தின் முன்னணி ஊழியர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அவர்களை புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்கவில்லை. வால்பாறையில் ரத்த ஆறு ஓடிய நாள்தான் 1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி .

தேசமே மூவர்ணக் கொடியை ஏற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்த நாளை கொண்டாடிய வேலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மலை முகட்டில் செங்கொடி ஏந்தி சட்டத்தை அமுலாக்கு என போராடி உயிர் தியாகம் செய்த வீர வரலாறு நடைபெற்றது.

அதற்கு பின்னரும் தொடர்ந்து போராடித்தான் கூலி உயர்வு பெற்றனர். 1957ஆம் ஆண்டு துவங்கி 1967ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் தெருக்களில் இந்த தியாகம் பேசப்பட்டாலும் ….

திமுக ஆட்சிக்கு வர இம்முழக்கம் மக்களை கவ்விப்பிடித்தது என்றால் மிகை அல்ல.

இன்றும் ஆளும் அரசுகள் யாராக இருப்பினும் யார் பக்கம் என்பதை வரலாறு முழுவதும் நீண்டு கொண்டே உள்ளது.

கடைசியாக நடைபெற்ற சாம்சங் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டம் வரை பார்க்க முடியும்.

இன்றும் சங்கம் பதிவு செய்வதை கூட மறுக்கும் நிலை ,வேலை நேரம் நீட்டிப்பு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யாமல் இருப்பது, பணி நிரந்தரம் இல்லாமல் இருப்பது, போராடிப் பெற்ற உரிமைகளை மறுப்பது என எண்ணற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலையில் தான் இந்திய தொழிலாளி வர்க்கம் உள்ளது.

சமரசமின்றி உறுதியாக போராடும்

செங்கொடி சங்கம் சேர்ந்து போராடி வெற்றி பெறுவோம் என்ற முழக்கத்துடன்… வால்பாறை மலை முகட்டில் சங்கமிப்போம்..

வால்பாறை தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் …

 

ஆர் வேலுசாமி கோவை

Leave a Reply