உலக பொருளாதாரத்தை தூக்கி பிடிக்கும் தெற்குலக நாடுகளின் தொழிலாளர்கள்

தெற்குலக நாடுகள் என வரையறுக்கப்படுகின்ற வளரும் நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உலக பொருளாதாரத்திற்காக  சுமார் 90 சதவீதமான உழைப்பை வழங்கி இருக்கின்றனர். ஆனால் வருமானத்தில் வெறும் 21 சதவீதம் மட்டுமே திரும்பப்பெறுகிறார்கள் என நேச்சர் கம்யூனிகேசன்ஸ் ( Nature Communications ) ஆராய்ச்சியாளர்கள் கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வு கட்டுரைகள் தெரிவித்துள்ளன.

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களாலும் வளரும் நாடுகளில் உள்ள  தொழிலாளர்களின் உழைப்பு  எவ்வாறு சுரண்டப்படுகின்றது என்பதையும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் உழைப்பு பரிமாற்றம் சீரற்றதாக மாற்றப்பட்டுள்ளது என்பதையும் இந்த ஆய்வுக்கட்டுரை வெளிக்கொண்டு வந்துள்ளது.

உலக பொருளாதாரத்தில் தெற்குலக நாடுகளின் தொழிலாளர்களின் உழைப்பு பங்களிப்பு 90 சதவீதமாக இருந்தாலும், இந்த தெற்குலக நாடுகளில் தான் வறுமை விகிதம் அதிகமாகவும், தீவிரமாகவும் உள்ளது.  இங்குதான் ஏற்றத்தாழ்வுகளும், போர்களும், உள்நாட்டுக் கலவரங்களும் நடந்து வருகின்றன.

2021 இல் தெற்குலக நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சுமார் 906 பில்லியன் மணிநேர உடலுழைப்பை உலக பொருளாதாரத்திற்காக பங்களிப்பு செய்துள்ளனர். இந்த உழைப்பால் பணக்கார நாடுகளே அதிக லாபம் அடைந்துள்ளன.

அதாவது பணக்கார நாடுகளின் நிறுவனங்கள் ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்யவும், உதிரி பாகங்களை உற்பத்தி செய்யவும், உதிரி பாகங்களை ஒருங்கிணைப்பு செய்யவும் தேவையான உழைப்பை ஏழை நாடுகளில் உள்ள தொழிலாளர்களிடம்  இருந்து வாங்கிக்கொண்டன.

அதற்கு ஈடாக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளில் உள்ள விவசாயத்துறை உள்ளிட்ட பல துறைகளுக்கு தேவைப்படுகிற அதிக / குறைந்த திறன் கொண்ட வேலை அல்லது கணினி பொறியியல் போன்ற தொழில்நுட்ப துறைகளுக்கு தேவைப்படுகிற அதிக திறன் கொண்ட வேலை ஆகியவற்றுக்கு வெறும் 80 பில்லியன் மணிநேர உழைப்பை மட்டுமே கொடுத்துள்ளன.

அதாவது உலக பொருளாதாரத்திற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த தொழிலாளர்கள் உழைப்பை விட அதிக நேர உழைப்பு தெற்குலக நாடுகளின் தொழிலாளர்களிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என இந்த ஆய்வு தெளிவாக காட்டுகிறது.

தெற்குலக நாடுகளின் தொழிலாளர்கள் உலக பொருளாதாரத்திற்கு கொடுத்த உழைப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகலாவிய வடக்கு நாடுகளின் நிறுவனங்கள் தொழிலாளர்களின் வேலை நேரத்துக்கு உரிய ஊதியம் வழங்கி இருந்தால் அது சுமார்  18.4 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருக்கும்.

ஆனால் தெற்குலக நாடுகளின் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியமானாது 80 -90 சதவீதம் குறைவானது என கூறப்படுகிறது.

தெற்குலக நாடுகள் குறைந்த திறன், அதிக திறன் என அனைத்து வகை தொழிலாளர்களையும் தன்னிடத்தில் குவித்து வைத்துள்ளது. 2021 ஆம் ஆண்டு மட்டும் உலகப் பொருளாதாரத்திற்கு தேவையான அனைத்து திறன்களை உள்ளடக்கிய 1,124 பில்லியன் மணிநேர உழைப்பை தெற்குலக நாடுகள் வழங்கியுள்ளன.

ஆனால் அதே ஆண்டில் பணக்கார நாடுகளான வடக்குலக நாடுகள் மொத்தமாகவே 971 பில்லியன் மணிநேரங்கள் மட்டுமே பங்களித்தன.

அதாவது தெற்குலக நாடுகள் அனைத்து விதமான உற்பத்தியிலும் ஈடுபடுகின்றன.  ஆனால் மிக மிக மோசமான ஒப்பந்தத்தை தான் பெறுகின்றன. ஊதிய விகிதம் அதிகரித்திருப்பதாக கூறினாலும், தெற்குலக நாடுகள் செயற்கையான முறையில் பொருளாதார ரீதியாக அடிமட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் பொருளாதார நிபுணரான ஆஸ்டின் கூறுகையில், தெற்குலக நாடுகள் மேலும் தன்னிறைவை அடைவதற்காக உருவாக்கும் திட்டங்களும் கொள்கைகளும் சமத்துவமின்மையை மேலும் ஆழமாக்கலாம் என்கிறார்.

இவ்வாறு சமத்துவமின்மை உருவாவதற்கு காரணம் என்னவென்றால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதற்கு, தெற்குலக நாடுகள் பெரும்பாலும் தங்கள் சொந்த நாட்டின் பொதுச் சுகாதாரம், பொதுக் கல்வி மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய பல பொதுத்துறைகளுக்கான அரசு செலவினங்களைக் வெட்டி குறைத்து விடுகின்றன.

அதற்குப் பதிலாக வாங்கிய கடன்களைச் செலுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அப்படி இல்லை என்றால் உழைப்பு, கனிமம் உள்ளிட்ட சொந்த நாட்டின் வளங்களை பிற நாடுகளுக்கு வளங்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இத்தகைய நெருக்கடிகளின் காரணமாக தெற்குலக நாடுகள் மிக அரிதாகவே தங்களுடைய வணிகத்தின் மூலமாக வறுமையைக் குறைக்கின்றன.

இதேபோல வடக்குலக நாடுகளை, தெற்குலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 1995 முதல் 2021 வரை வடக்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கான ஊதியம் 11 மடங்கு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தகுந்த விசயமாகும்.

Leave a Reply