1917-ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி தோழர் லெனின் தலைமையில் தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் இணைந்து சோசலிச புரட்சியை நடத்தினர்.இந்த மகத்தான புரட்சி உலகமெங்கும் உழைக்கும் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டியது. அதே சமயத்தில் முதலாளித்துவ சக்திகள் நடுங்கினர். அவர்கள் புரட்சியை அழித்திட முனைந்தனர்.
உலகில் முதல் முறையாக மனிதனை மனிதன் சுரண்டுவது ஒழிக்கப்பட்டது. முதல் முறையாக உழைக்கும் மக்கள் அரசு அதிகாரத்தை கைப்பற்றினர். அன்றைக்கு காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய மக்களுக்கு சோவியத் யூனியன் ஆதரவினை நல்கியது. புதிதாக விடுதலையடைந்த தேசங்களுக்கு சொந்தக்காலில் நிற்க உதவி செய்தது. உலக பாசிச சக்திகளை தோற்கடித்தது. பனிப்போரை தடுத்து உலக சமாதானத்தை உத்தரவாதம் செய்தது.
எனினும் 1990களில் சோவியத் யூனியன் சோசலிசம் பின்னடைவை சந்தித்தது. முதலாளித்துவ சக்திகள் சோசலிசத்திற்கு மரண சாசனம் வாசித்தனர். ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதலாளித்துவம்தான் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மாறாக சோஷலிச சக்திகள் படிப்பினைகளை கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கு தயாராக உள்ளன.
புதிய மனிதன்
சோவியத் புரட்சி சுரண்டலை மட்டும் ஒழிக்க வில்லை. புதிய மனிதனை உருவாக்கியது. சமூக வாழ்வுதான் சமூக சிந்தனையை விளைவிக்கிறது என்பது பொருள் முதல்வாதத்தின் அரிச்சுவடி. சோசலிச சமூக வாழ்வு புதிய சிந்தனையை கொண்ட புதிய மனிதனை படைத்தது. அந்த புதிய மனிதன் சோசலிசத்தை பாதுகாக்க முதலாளித்துவ சக்திகள் உருவாக்கிய உள்நாட்டுப் போரை முறியடித்தான். இந்த புதிய மனிதன் ஆலை உற்பத்தியை பன்மடங்கு உயர்த்தி அமெரிக்காவை பின்னுக்கு தள்ளினான்.
இந்த புதிய மனிதன் விவசாய உற்பத்தியில் புதிய சாதனைகளைப் படைத்தான். 1932ம் ஆண்டு கடைசி வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டான். இரண்டாம் உலகப்போரில் இரண்டு கோடி உயிர்களை பெரும் தியாகம் செய்து பாசிச சக்திகளை தோற்கடித்து உலகை காப்பாற்றினான். போரினால் முற்றிலும் அழிந்து போன சோவியத் பொருளாதாரத்தை பீனிக்ஸ் பறவை போல மீண்டும் உயிர்ப்பிக்க வைத்தான்.
அனைவருக்கும் உணவு/உடை/இருப்பிடம்/கல்வி/மருத்துவம் ஆகியவற்றை உத்தரவாதப் படுத்தினான். யூரி ககாரின் மற்றும் வாலண்டினா வடிவத்தில் முதல் ஆண் மற்றும் முதல் பெண்ணாக விண்வெளியில் பறந்த வீரர்களை உருவாக்கினான். சோவியத் யூனியனை அமெரிக்காவுக்கு இணையாக வல்லரசாக உருவாக்கி சாதனை படைத்தான்.
அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளில் புதிய உச்சத்தை தொட்டான். தன் தேசத்து உழைப்பாளிகளும் கம்யூனிசம் பக்கம் சாய்ந்துவிடுவார்களோ எனும் பயத்தை உலக முதலாளித்துவ சக்திகளுக்கு உருவாக்கினான். அதனாலேயே உழைப்பாளிகளுக்கு பல சலுகைகளை முதலாளித்துவ தேசங்கள் தர வேண்டிய அவசியம் உருவானது. அப்படித்தான் சில மக்கள் நல கொள்கைகள் முதலாளித்துவ தேசங்களில் தோன்றின.
இந்தியாவுக்கு மகத்தான உதவி
இந்தியாவின் பொருளாதார சுயசார்புக்கு சோவியத் யூனியன் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சமல்ல! துர்காபூர்/பிலாய் உருக்காலைகள்/ நெய்வேலி மின்நிலையங்கள்/ பி.எச்.இ.எல்/ எச்.எம்.டி/ ஓ.என்.ஜி.சி./ அலுமினிய ஆலைகள்/ துறைமுகங்கள் என பல திட்டங்கள் உருவாக தனது தொழில்நுட்பத்தை தாரளமாக தந்து சோவியத் யூனியன் உதவியது. தனது ரூபிளுக்கு பதிலாக இந்திய ரூபாய் மதிப்பிலேயே வாங்கி கொண்டதால் இந்தியாவுக்கு பெரும் பொருளாதார சுமை குறைந்தது. மும்பையில் இந்தியாவின் முதல் ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தை உருவாக்குவதிலும் சோவியத் யூனியன் பெரும் உதவி செய்தது.
1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. போருக்கு தயாராக இருந்த இந்தியா வலுவான பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை மிரட்டுவதற்கு வங்கக் கடலில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏழாவது கப்பற்படை நுழைந்தது. அதே சமயம் அரபிக்கடலில் இங்கிலாந்தின் போர் கப்பலான “ஈகிள்”” நுழைந்தது.
இரண்டு இராணுவ வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் இங்கிலாந்தும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நேரடியாக இந்தியாவை மிரட்டவும் தேவைப்பட்டால் தாக்கவும் முயன்றன. இந்த சமயத்தில்தான் இந்தியா சோவியத் யூனியனின் உதவியை நாடியது.ஸ்டாலின்கிராடு எனப்படும் விளாதிவோஸ்கிலிருந்து அணுசக்தி ஆயுதங்களை கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடலில் நுழைந்தன.
அவை கடலுக்கு மேலே வந்து தமது இருக்கையை வெளிகாட்டி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எச்சரிக்கை செய்தன. இதனை கண்ட அமெரிக்காவும் இங்கிலாந்தும் வேறு வழியின்றி பின் வாங்கின.டிசம்பர் 16 அன்று பாகிஸ்தான் படை சரண் அடைந்தது. போர் முடிவுக்கு வந்தது. இந்தியா மகத்தான வெற்றி பெற்றது மட்டுமல்ல; பங்களா தேஷ் எனும் புதிய தேசம் பிறந்தது. அன்று மட்டும் சோவியத் யூனியன் இராணுவ உதவி செய்திருக்காவிட்டால் இந்த போரின் முடிவு வேறுமாதிரியாக இருந்திருக்கும்!
ஆயினும் 1991ம் ஆண்டு சோவியத் சோசலிச பரிசோதனை முயற்சி முடிவுக்கு வந்தது. இந்த பின்னடைவு உலகமெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகளுக்கும் முற்போக்காளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுத்தது. 21ம் நூற்றாண்டில் சோசலிசம் நிர்மாணிக்க முயலும் அனைவருக்கும் இந்த பின்னடைவின் மூலம் கற்றுகொள்வதற்கு நிறைய படிப்பினைகள் உள்ளன.
உற்பத்தி சக்திகள் வளர்ச்சியில் தேக்கம்:
சோசலிசத்தின் வெற்றி காரணமாக சோசலிச உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய திறவுகோலை அளித்தன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை சோவியத் யூனியன் சாதித்தது. முதலில் 1930களிலும் பின்னர் இரண்டாம் உலகப்போரில் கிட்டத்தட்ட சாம்பலாகிப்போன உற்பத்தி சக்திகளை மீண்டும் சோவியத் யூனியன் உயிர்ப்பித்தது.
ஒவ்வொரு துறையிலும் முதலாளித்துவத்தை பின்னுக்கு தள்ளியது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. தொழில் மற்றும் விவசாய உற்பத்தி இரண்டிலுமே உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக மிக அதிகமான உபரி மதிப்பு உருவானது. சோசலிச அரசாங்கம் அதனை அனைத்து மக்களின் சமூக நன்மைக்காக பயன்படுத்த முடிந்தது. உணவு/ உடை/ இருப்பிடம்/ மருத்துவம்/ கல்வி அனைத்தும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைத்தது.
இந்தியா போன்ற புதிதாக விடுதலை அடைந்த தேசங்களுக்கும் சோவியத் யூனியன் தாராளமாக தொழில்நுட்ப மற்றும் ராணுவ உதவிகளை செய்வது சாத்தியமாயிற்று.1970களின் தொடக்கத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தேக்கம் அடைந்தது. 1980களில் முதலாளித்துவத்தை ஒப்பிடும் பொழுது பின்னடைவை சந்தித்தது. இதன் பொருள் என்ன? தொழில் மற்றும் விவசாயத்தில் கடும் வீழ்ச்சி. இதன் விளைவாக சோஷலிச சமூகத்திற்கு பயன்பட வேண்டிய உபரி உற்பத்தி கடும் சரிவு.
உச்சத்தை தொட்ட தொழில்நுட்ப கருவிகள் காயலான் கடைக்கு உகந்ததாக மாறின. குறிப்பாக சில்லு புரட்சி எனப்படும் நவீன மின்னணுவியல் மற்றும் கணினிதுறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இது கடும் பொருளாதார நெருக்கடிகளை விளைவித்தது.
முதலாளித்துவத்துடன் வாழ்வா சாவா போராட்டம் நடக்கும் பொழுது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் கவனக் குறைவு ஏற்பட்டால் அது முடிவில் சோசலிச உற்பத்தி முறைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பது சோவியத் யூனியனின் வீழ்ச்சி கற்றுத்தரும் முக்கிய படிப்பினையாகும்.
திட்டமிட்ட பொருளாதாரமா? சந்தை பொருளாதாரமா?
சோசலிச உற்பத்தி முறையின் அடிப்படை அம்சம் திட்டமிடப்பட்ட பொருளாதாரம் ஆகும். அதே சமயத்தில் சந்தைப் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கிய பங்கு இருக்கும். சரக்கு உற்பத்தி இருக்கும் வரை சந்தை என்ற பொருளாதார அம்சம் தொடரும். சந்தை சக்திகள் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது அல்ல பிரச்சனை. எது அடிப்படையானது? திட்டமிடலா அல்லது சந்தையா என்பதுதான் பிரச்சனை. சோஷலிச உற்பத்தி முறையில் திட்டமிட்ட பொருளாதாரம் என்பது தான் அடிப்படையானது. அதற்கு உட்பட்டு சந்தை சக்திகள் செயல்படவேண்டும்.
சோவியத் யூனியனில் நீண்ட நாட்களாக சந்தையின் முக்கியத்துவம் உணரப்படவில்லை. அதன் முக்கியத்துவம் உணரப்பட்ட பொழுது சோசலிசப் பொருளாதாரத்தை சந்தை பொருளாதாரமாக மாற்றுவதற்காக முயற்சிகள் கோர்பச்சேவ் காலத்தில் நடந்தன. சந்தை பொருளாதாரத்தை தலைமை பீடத்தில் அமர வைப்பது சோசலிசத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாகும். திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திற்கு கீழ்படிந்து சந்தை சக்திகளை செயல்பட அனுமதிப்பது என்பதே பொருத்தமான அணுகுமுறையாகும். சோவியத் யூனியனில் உருவான இந்த தவறு சோஷலிச பொருளாதாரத்திற்கு பெரிய பலவீனத்தை உருவாக்கியது.
கட்சியும் அரசும்
சோவியத் யூனியனில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைப்பாளிகள் அனைவரும் சேர்ந்து சோசலிசப் புரட்சியை நடத்தினர். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். புரட்சியின் போதும் அதற்கு பின்னர் இந்தப் புரட்சியை நிலைநிறுத்துவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.
சோசலிசத்தை சீர்குலைக்க முதலில் உள்நாட்டுப் போரும் பின்னர் இரண்டாம் உலகப்போரும் சோவியத் யூனியன் மீது திணிக்கப்பட்டன. கடுமையான சவால்களை எதிர் கொண்டு வென்றதில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பாத்திரத்தை வகித்தது.அதே சமயத்தில் இந்த ஆபத்துக்கள் நீங்கிய பிறகு கட்சி எப்படி செயல்பட வேண்டும்? சோவியத் அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதில் சில தவறுகள் நிகழ்ந்தன.
கட்சி வேறு; சோவியத் அரசு வேறு என்பதன் வேறுபாடு உணரப்படவில்லை. சோவியத் யூனியனின் அரசியல் சட்டத்திலேயே கட்சியின் முன்னணி பாத்திரம் குறித்து வலுவாக குறிப்பிடப்பட்டது. இது தேவைதானா என்பது விவாதத்துக்குரிய ஒன்றாகும். கட்சியின் தலைமைப் பாத்திரம் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றால் கட்சியின் நிலைபாடு குறித்து உறுப்பினர்கள் அல்லாதவர்கள் விமர்சனம் முன் வைக்க முடியுமா? அவ்வாறு விமர்சனம் முன்வைத்தால் அவர்கள் மீது பாதிப்பு வராமல் இருக்குமா? இதுகுறித்து அரசியல் சட்டத்தில் அல்லது நடைமுறையில் எந்த தெளிவும் இல்லை.
கட்சிதான் அரசின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கும் என்றால் சோவியத் நாடாளுமன்றத்தின் பணி என்ன?அரசின் பல்வேறு நிர்வாக பிரிவுகளின் பங்கு என்ன? எனும் கேள்விகள் எழுகின்றன. கட்சி அரசை வழிநடத்துகிறது எனில் அதன் பொருள் என்ன? கட்சியின் மத்திய குழு அல்லது அரசியல் தலைமைக்குழு அரசை வழிநடத்தும் என்று பொருள். இது சோசலிச ஜனநாயகத்தை சிதைத்தது.
மக்களின் பரந்துபட்ட பங்கேற்பை தடுத்தது. சோசலிச சமூகத்தில் கட்சியின் வழிகாட்டுதல் பாத்திரம் மிக முக்கியமானது என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது. ஆனால் அதே சமயத்தில் கட்சி தான் அரசு; அரசுதான் கட்சி எனும் நிலை சோசலிச ஜனநாயகத்தை தடம்புரள வைத்தது. சோசலிச புரட்சியின் நோக்கம் தொழிலாளி வர்க்க அரசை அமைப்பதுதான்! கட்சியின் அரசை அல்ல!
தனிநபர் சுதந்தரம்
சோசலிச சோவியத் அரசாங்கம் அதுவரை மனிதகுலம் கண்டிராத பல உரிமைகளை உழைப்பாளி மக்களுக்கு கொடுத்தது. முதலாளித்துவ அரசியல் சட்டம் உரிமைகளை தருகிறது. ஆனால் அந்த உரிமைகளை பயன்படுத்த வாய்ப்புகளை தருவது இல்லை. முதலாளித்துவ உரிமைகள் பெயரளவுக்கான உரிமைகளாகவே இருக்கும்.
ஆனால் சோசலிச அரசியல் சட்டம் முதலாளித்துவம் தரத்துணியாத உரிமைகளை தந்தது மட்டுமல்ல; அந்த உரிமைகளை பயன்படுத்த அனைத்து வாய்ப்புகளையும் திறந்துவிடுகிறது. வேலை உரிமை/ கல்வி உரிமை/மருத்துவ வசதி உரிமை/ஓய்வு உரிமை/முதிய வயதினர் மற்றும் உடல் நலிந்தோர் பராமரிப்பு உரிமை/பாலின சமத்துவ உரிமை/அனைத்து குடிமக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத சமத்துவ உரிமை/மதவழிபாடு உரிமை/ மதத்தை துறக்கும் உரிமை போன்ற பல உரிமைகளை சோவியத் அரசியல் சட்டம் வழங்கியது.
1977ம் ஆண்டு திருத்தப்பட்ட அரசியல் சட்டம் வீடு உரிமையையும் அளித்தது. இந்த உரிமைகளை குடிமக்கள் பயன்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன.தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தரப்பட்டது. பணிக்காலத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு அந்த குடும்பத்திலிருந்து ஒருவர் பணிக்கு செல்லும்வரை அவர் ஈட்டிய இறுதி ஊதியம் உத்தரவாதப்படுத்தப்பட்டது.
தொழிற்சங்க அனுமதி இல்லாமல் எந்த தொழிலாளியையும் வேலை நீக்கம் செய்ய இயலாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 45 முதல் 50% தொழிற்சாலை அல்லது நிலத்தில் பணியாற்றும் தொழிலாளி/விவசாயிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. திறமையாக செயல்படாத தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை திரும்பப்பெறும் உரிமை அளிக்கப்பட்டது. இப்படி பல உரிமைகள் சோவியத் அரசியல் சட்டம் அளித்தது.
இவ்வளவு மகத்தான உரிமைகளை தந்த சோவியத் அரசியல் சட்டம் ஓரிரு முரண்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது. நீதிபதிகள் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத் சமூகத்தில் புரக்குரேட்டர் ஜெனரல் (Procurator General) என்னும் ஒரு பதவி சகல அதிகாரங்களுடன் உருவாக்கப்பட்டது. இவர் எவரையும் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம். சோவியத் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்படும் இவருக்கு 5 ஆண்டுகள் பதவி காலம். பல்வேறு மாநிலங்களில் இவர் புரக்குரேட்டர்களை நியமிக்கலாம்.
இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது நாடாளுமன்ற அமைப்புகளுக்கோ கட்டுப்பட்டவர்கள் அல்ல. இத்தகைய ஒரு அமைப்பு இரண்டாம் உலகப் போரின் பொழுது இருந்தால் அதனை புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் பாசிச சக்திகளுக்கு உதவி செய்பவர்களை இது கட்டுப்படுத்த உதவும். ஆனால் போர் முடிந்த பின்னரும் கூட கடைசிவரை இந்தப் பதவி இருந்தது என்பது கடும் முரண்பாடு ஆகும். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டது அல்லது சிறையில் அடைக்கப்பட்டது சோஷலிச ஜனநாயகத்தை சிதைவுக்கு உள்ளாக்கியது.
சுரண்டலிலிருந்து விடுதலை கிடைத்த காரணத்தாலேயே அனைத்துவித தனிநபர் சுதந்திரமும் உத்தரவாதப்பட்டுவிடும் எனும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. தனிநபரின் சுதந்திரம் செழுமைப்பட வலுவான அரசியல் சட்ட உத்தரவாதம் தேவையாக இருக்கும் என்ற படிப்பினையை நாம் பெற வேண்டி உள்ளது.
கோர்பச்சேவ் கால சீர்குலைவுகள்
சோவியத் சமூகத்தில் உருவான பல சவால்களும் தேக்கநிலைகளும் பிரஷ்னேவ் காலத்தின் இறுதிகட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அவருக்குப் பிறகு கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்ற யூரி ஆந்திரபோவ் இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆழமான விவாதங்களை துவக்கினார். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை!” என ஏகாதிபத்தியத்திற்கு சவால் விட்ட அதே நேரத்தில் சோவியத் சமூகத்திற்குள் இருந்த பலவீனங்களை முதலாளித்துவம் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அவற்றை களைவதற்கு கவனம் செலுத்தினார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக குறுகிய காலத்தில் அவர் மரணம் அடைந்தார். அவருக்குப் பிறகு செர்னன்கோவும் அவருக்கு பின்னர் கோர்பசேவும் பொதுச் செயலாளராக பதவியேற்றனர்.சோவியத் சமூகத்தில் உருவான பலவீனங்களை கலைவதற்கு லெனினிய வழியில் முயற்சிகள் மேற்கொள்ளப் போவதாக கோர்பசேவ் அறிவித்த பொழுது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் குறுகிய காலத்திற்குள் இவரது நடவடிக்கைகள் சோசலிசத்திற்கு எதிராகவும் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளுக்கு எதிராகவும் திசை திரும்பின.
சோஷலிசத்தை ஒழிப்பதை லட்சியமாகக் கொண்ட எல்ஸ்டின்/ஷெர்வனாட்சே போன்றவர்கள் தலைமைப் பதவியில் அமர்ந்தனர். குரோமிகோ போன்ற பல மூத்த தலைவர்களும் சோசலிச ஆதரவாளர்களும் வயது அல்லது உடல் நிலையைக் காரணம் காட்டி ஒதுக்கப்பட்டனர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடுகள் மீது கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்ட பொழுது கட்சியின் பொது செயலாளர் என்ற முறையில் கோர்பச்சேவ் மௌனம் காத்தார். சுயநலவாதிகள் கட்சியை சீர்குலைக்க முயன்றனர். கட்சி ஊழியர்கள் திசைவழி தெரியாமல் திணறினர்.
லெனின் உருவாக்கிய மகத்தான கட்சி நிராயுதபாணி ஆக்கப்பட்டது. பொருளாதார தளத்தில் தேக்க நிலையை அகற்றுவது என்ற பெயரில் சந்தைப் பொருளாதாரம் திட்டமிடப்பட்டது. சோவியத் சமூகத்தில் உருவான இந்த முரண்பாடுகளை ஏகாதிபத்தியம் திறமையாக பயன்படுத்திக் கொண்டது.
இந்த சீர்குலைவு செயல்களை தடுத்திட வேறு வழி இல்லாமல் மார்க்சிய-லெனினிய ஆதரவாளர்கள் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கினர். கோர்பசேவுக்கு சவால் விட்டனர். ஆனால் அதற்குள் எதிர்ப்புரட்சி வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது. சோசலிசமும் சிதைந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் முடக்கப்பட்டது.
கட்சியின் மார்க்சிய லெனினிய பரிசுத்த தன்மையை பாதுகாக்க இடைவிடாத சித்தாந்த போராட்டம் இல்லையெனில் மகத்தான சோவியத் கம்யூனிஸ்டு கட்சி கூட சிதைந்துவிடும் எனும் படிப்பினையை நாம் பெற வேண்டியுள்ளது.
சோசலிசத்துக்கே எதிர்காலம்!
சோவியத் யூனியன் சிதைவு குறித்து ஆய்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. எனினும் ஒரு உண்மையை எவரும் மறுக்க முடியாது. மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனைகள் எதையும் முதலாளித்துவம் தீர்க்க முடியாது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சோசலிச நாடுகள் சோவியத் யூனியனின் பின்னடைவிலிருந்து படிப்பினைகள் பெற்று முன்னேறி கொண்டுள்ளன. சீனா உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதில் பெரும் சாதனை படைத்து அமெரிக்காவுக்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால்தான் சீனா மீது வர்த்தக போர் திணிக்கப்படுகிறது.
வியட்நாம் உற்பத்தி சக்திகளை முன்னேற்றுவதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. கியூபாவும் அத்தகைய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. 21ம்நூற்றாண்டு சோசலிசம் முன்னேற்றம் காண இந்த முயற்சிகள் வெல்வது மிக அவசியம். குறிப்பாக கோவிட் பெரும் தொற்று காலத்தில் சோசலிச சமூகம்தான் மக்களை காப்பாற்ற முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
சமூக நெருக்கடியை தனது வழக்கமான வழியில் தீர்க்க முடியாத பொழுது முதலாளித்துவம் வலதுசாரி கோட்பாடுகளையும் வலதுசாரி தலைவர்களையும் உருவாக்குகிறது. சிறிது காலத்திற்கு வலதுசாரி தலைவர்கள் மக்களை ஏமாற்றினாலும் இறுதியில் அவர்களும் தூக்கி எறியப்படுவார்கள். எதிர்காலம் சோஷலிசத்துக்குதான் என்பதை கம்யூனிஸ்டுகள் உறுதியாக நம்புகின்றனர்.
21ம் நூற்றாண்டில் சோசலிசத்தைன் நிர்மாணிக்க கடும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்துள்ளனர். இந்த எதிர்கால சவால்களை சந்திப்பதில் சோவியத் சோசலிச புரட்சியின் சாதனைகளும் படிப்பினைகளும் கம்யூனிஸ்டுகளுக்கு செழுமையான வழிகாட்டுதலாக அமையும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க இயலாது.
கட்டுரையாளர் :- தோழர் அன்வர் உசேன்.
ஆதார ஆவணங்கள்:
1. Seventy Glorious years : achievements and problems/ B.T. Ranadive.
2. The Gorbachevian reforms: Dismantling of Communist Party/Praksh Karat.
3. Economy: Reforms for restoration of capitalism/ Sitaram yechuri.
4. ON CERTAIN IDEOLOG
ICAL ISSUES/ (Resolution Adopted at the 14th Congress of the CPI(M) Madras, January 3-9, 1992)