தமிழருக்கான அடையாளத்தை உருவாக்குகிறேன் என்ற பெயரில் கல்வியில் சமயம் சார்ந்த பாடத்தை திணிக்கும் முயற்சி
ஒரு பக்கம் நீதியரசர் சந்துரு தயாரித்த தமிழக பள்ளிகளில் நிலவும் சாதி ரீதியான பாகுபாடுகள் குறித்த அறிக்கையை பெற்றாகி விட்டது. அதை முழுமையாக அமல்படுத்தவே எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்று தெரியாது. இன்னொரு பக்கம் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.573 கோடியை நிறுத்தி வைத்துள்ளது. அதை எப்படி சமாளிக்கப் போகிறோம்? தெரியாது.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமல்படுத்துவதற்கான அழுத்தம் ஒரு பக்கம். இதெல்லாம் ஒரு புறம் இருக்க, மாநிலத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனாரில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை, கிட்டத்தட்ட அனைத்து பெயர்போன அரசு கல்லூரிகளும் பல்வேறு முறைகேடுகளை சந்தித்து வருகின்றன. நீட் தேர்வினால் ஆண்டுக்காண்டு பல்லாயிரக்கணக்கான மருத்துவக் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. இருக்கிற பிரச்சனையில் இருந்து மீளவே இங்கு மூச்சு திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில், கல்வியை காவிமயமாக்கும் பணியையும் நாமே எடுத்துக் கொண்டால் அது “செர்ரி ஆன் டாப்” ஆக இருக்கும் என தி.மு.க. சிந்தித்திருக்கும் போலும்.
இப்போது நடந்து முடிந்திருக்கும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், விழாக்காலங்களில் முருகன் கோவில்களில் மாணவர்களை கொண்டு கந்தசஷ்டி கவசம் பாட வைப்பது, இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் பள்ளி கல்லூரிகளில் முருக பக்தி இலக்கியங்களை வைத்து போட்டிகள் நடத்துவது, ஆன்மீகப் பாடப்பிரிவுகளை உருவாக்குவது போன்ற ஆபத்தான தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்களின் கற்றல் திறனோ அறிவியல் சிந்தனைகளோ கூடுமா என்றால் கிடையாது. இருக்கின்ற கொஞ்சநஞ்ச பகுத்தறிவு போக்கையும் அணுகுமுறையையும் அழிந்து போகச் செய்யும். இவ்வளவு விமரிசையாக பெரியாரை அம்பேத்கரை மார்க்ஸை கூட பள்ளிப்பாடங்களில் அறிமுகப்படுத்தாத தி.மு.க. முருகனுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது ஏன்? இது குறித்து மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் அல்லது கல்வியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதா?
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் “எங்களுக்கு பாடப்பிரிவில் முருகன் வேண்டும்!” என கடிதங்கள் எழுதி கோட்டையை நிறைத்தனரா? ஜனநாயக மாண்புகளில் இருந்து விலகிப் போகும் தி.மு.க. துர்கா பூஜையை அரசியல்மயமாக்கிய திரிணாமூல் காங்கிரஸை போல தன்னை நினைத்துக் கொண்டது போல தெரிகிறது.
இன்று அறநிலையத்துறை அமைச்சர் “அடுத்து அம்மன் மாநாடு நடத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார். தேர்தல் அரசியல் தேவைகளுக்கு ஆன்மீகத்தை கையில் எடுத்தால், அது அத்தோடு முடியாது. பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பதற்கு தி.மு.க.-வின் இந்த செயல் சாட்சி. தி.மு.க. வேலைத் தூக்கட்டும் அல்லது காவடியைத் தூக்கட்டும், ஆனால் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, அரசு இலாகாக்களை செயலில் இறக்கிவிட்டு இதுபோல பள்ளிகளையும் கல்லூரிகளையும் கல்வியையும் காவிமயமாக்குவது மாநிலத்தின் மதசார்பற்ற சூழலுக்கு பேராபத்தை உருவாக்கும்.
சில நேரம் பெரியவர்கள் குழந்தைகளிடம் “ஐஸ்கிரீம் வேண்டாம். சாக்லேட் வாங்கித் தருகிறேன்” என்பார்கள். அதே போல, திமுக “ராமர் வேண்டாம். முருகனுக்கு காசு தருகிறேன்” என்று தமிழ் மக்களிடம் கூறியிருக்கிறது.
மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாக “அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல்.” உள்ளது. இந்த மாநாட்டின் மூலம் இளம் தலைமுறையினரை, குறிப்பாக மாணவர்களை, ஆன்மீகத்தின் பக்கம் தி.மு.க. இழுக்க முயல்வதை மறுக்க முடியாது. அன்றாட வாழ்வில் ஆன்மீகமும் நாத்திகமும் மதச்சார்பின்மையும் நிறைந்திருக்கும் ஒரு மாநிலத்தில் திடீரென்று கோட்பாடு வகுத்து இளைஞர்களை கவர்வதற்காக அவசியம் என்ன?
மாநாடு சார்ந்த அறிக்கைகளில் முருகனை இந்து மதத்துடன் தொடர்பு படுத்துவதை தவிர்த்திருந்தாலும், விழாவை முன்னின்று நடத்தியது என்னவோ இந்து சமய அறநிலையத்துறை தான். “இந்து” அறநிலையத் துறையின் துணையோடு முருகன் “தமிழக்” கடவுளாக வலம் வருகிறார்.
நாளைக்கே முருகன் ஒரு மதவாத ஆயுதமாக மாற்றப்பட்டு, வட இந்தியாவில் கல்வி நிலையங்களில் சாதாரணமாக “ஜெய் ஸ்ரீராம்” கோஷம் எழுப்புவதை போல தமிழ்நாட்டில் ஒரு மாணவன் சிறுபான்மை மதத்தை சேர்ந்த இன்னொரு மாணவனை “முருகன் வாழ்க!” என்று ஆக்ரோஷமாக ஏதோ ஒரு காரணத்திற்காக கத்தினால் அதற்கு தி.மு.க. பொறுப்பேற்று கொள்ளுமா? ஒரு மதசார்பற்ற சமூகத்தில் தி.மு.க. ஒரு தேவையற்ற ஆபத்தான பரிசோதனையை மேற்கொள்கிறது. இந்த பரிசோதனையில் இருந்து தீய விளைவுகள் வராமல் இருக்கலாம், ஆனால் நல்ல விளைவுகள் என எதுவும் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
பத்திரிகையாளர் சித்தார்த்