இந்திய விடுதலை இயக்கத்தில் தலைமைப் பாத்திரத்தை வகித்த காங்கிரஸ் கட்சி, அந்த கட்சி துவங்கப்பட்ட பல பத்தாண்டுகள் முழுமையன சுதந்திரம் என்ற சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.
1885 இல் துவக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930 இல் தான் இந்திய தேசத்தின் முழு விடுதலை (பூரண சுதந்திரம்) என்ற முழக்கத்தை முறையாக அதன் அகில இந்திய மாநாட்டில் பிரகடனப்படுத்தியது.
இதற்கு பின்னணியில் கம்யூனிஸ்ட்களின் போராட்டமும் அடங்கியுள்ளது.
விடுதலை பெற்ற இந்தியா எத்தகைய சமூகமாக இருக்க வேண்டும் என்பது பற்றி காங்கிரஸ் விரிவாகவோ ஆழமாகவோ பேசவில்லை. அடுத்தடுத்து வந்த காலங்களில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் விடுதலை இயக்கத்தில் விரிவாக பங்கேற்க வைப்பதற்கு ( இதற்கு பின்னணியில் கம்யூனிஸ்ட்களின் போராட்டம் அடங்கியுள்ளது )அவர்களது அன்றாட வாழ்வுசார் கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும் என்ற அவசியத்தை காங்கிரஸ் தலைமை, முன்பின் முரணின்றி இல்லாவிடினும் ஓரளவாவது உணர்ந்தது.
இதனால் தான் உழுபவனுக்கு நிலம் சொந்தம், குறைந்தபட்சக்கூலி, வேலை நேரம் வரையறுக்கப்படுவது போன்ற பிரச்சனைகள் பற்றி அது பேசியது. 1930களில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் பெரும் வீழ்ச்சியில் பத்தாண்டு காலம் சிக்கி, உழைக்கும் மக்கள் பெரும் வேலையின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்ச னைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் சோசலிச சோவியத் ஒன்றியம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மூலம் அனைவருக்கும் வேலையையும், தொடர்ந்து உயரும் வாழ்க்கை நிலையையும் உறுதிப்படுத்திய அனுபவம்தான், இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையின் ஒருபகுதியினரை சோசலிசம் பற்றியும் திட்டமிடுதல் பற்றியும் பேச வைத்தது.
எனினும் காங்கிரஸ் கட்சி விடுதலை இயக்க காலத்திலும் அதன் பின்பும் சோசலிசம் பற்றிய பேசினார்களே தவிர அதைத் தாண்டி பயணிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைதான் காங்கிரஸ் கட்சியின் கனவாக விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதன் பின்பும் இருந்தது. .
இதுபற்றி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவர் தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட், மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நெருக்கடியில் இந்தியாவின் திட்டமிடல் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்.
விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் மாற்றுப் பார்வை
இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பின் வாயிலாக இந்திய முதலாளி வர்க்கம் 1885 ஆம் ஆண்டிலேயே அரசியல்களம் புகுந்து விட்டது.
இதற்குப்பின் பல பத்தாண்டுகளுக்குப் பின்னர் தான் நவீன தொழிலாளி வர்க்கம் உருவாகி எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்த நிலையில், உலகெங்கும், குறிப்பாக ரஷ்யாவிலும் எழுந்த புரட்சிகர அலைகளின் பின்புலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வும் விடுதலை வேட்கையும் வேகமாக வளர்ந்து அரசியல் களத்திற்கு வருகிறது. 1917இல் ரஷ்யாவில் எழுந்த மகத்தான நவம்பர் புரட்சியின் தாக்கம் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.
1921இல் காங்கிரஸ் முன் கம்யூனிஸ்டுகள் வைத்த கடிதம்
1920இல் முதன்முறையாக கூடிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) வளர்ந்துவந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு குறியீடு ஆகும். அதேபோல், 1921இல் அகமதாபாத் நகரில் கூடிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி கூட்டத்தில் இந்திய பொது உடமை இயக்கத்தின் முன்னோடிகளான எம்.என்.ராய், அபானி முகர்ஜி ஆகிய இருவரும் சமர்ப்பித்த கடிதத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அறைகூவல் விடுதலை இயக்கத்தில் சில இடதுசாரிக் கருத்துக்களை பிரகடனப்படுத்தியது.
நிறை குறைகள் இருந்தாலும், இது கவனிக்கத்தக்க ஆவணம். அடுத்த ஆண்டு கயாவில் காங்கிரஸ் கூடிய பொழுதும் இக்கடிதம் அனுப்பப்பட்டது.
இக்கடிதம் “முழு சுதந்திரம்” – “பூரண ஸ்வராஜ்” – என்ற கோரிக்கையை விடுதலை இயக்கத்தில் முதன் முறையாக எழுப்பியது. இந்த கோரிக்கையை 1929 இல் தான் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. அதாவது முழு சுதந்திரம் வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் கேட்டு 9 ஆண்டுகளுக்கு பிறகே காங்கிரஸ் அதை ஏற்றது. அது மட்டு மல்ல; விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர உழைக்கும் மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் உடனடி வாழ்வுசார் பிரச்சனைகளை காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டும் என்று கடித வடிவிலான இந்த பிரகடனம் வலியுறுத்தியது.
அந்தப் பிரகடனம் கூறியது என்ன?
தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை “(காங்கிரஸ்) தனது கோரிக்கைகளாக ஏற்கட்டும்; விவசாய சங்கங்களின் திட்டத்தை தனது திட்டமாக ஏற்கட்டும்….
விரைவில் காங்கிரஸ் முன்னேறு வதை எந்த இடையூறும் தடுக்க இயலாது. தங்களின் பொருள்சார் நலனுக்காக உணர்வுப்பூர்வமாகப் போராடும் அனைத்து மக்களின் எதிர்கொள்ள முடியாத வலிமை காங்கிரசுக்கு பின்புலமாக இருக்கும்.”
இந்த அறைகூவலைத் தொடர்ந்து தோழர் சிங்கார வேலர், காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் ‘அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட்’ என்ற முறையில் ‘முழு சுதந்திரம்’ என்ற முழக்கத்தை ஏற்குமாறு வற்புறுத்தி உரை நிகழ்த்தினார்.
வகுப்புவாத எதிர்ப்பில் இடதுசாரிகள்
1922 முதல் 1927 வரை ஏராளமான வகுப்புக் கலவரங்கள் நிகழ்ந்தன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் வகுப்புவாத சிந்தனைகளுக்கும் செயல்பாட்டுக்கும் மாறினர். இந்து மஹாசபா தலைவராக இருந்த வி.டி.சாவர்க்கர் எழுதிய ‘இந்துத்வா’ என்ற புத்தகம் 1923இல் வெளிவந்தது. 1925இல் ஆர் எஸ் எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்பு வாதத்தை சமரசமின்றி எதிர்ப்பது என்ற தனது நிலைபாட்டை உறுதிபட கடைப்பிடித்தது. காங்கிரசைப் போல் அல்லாமல், வகுப்புவாத அமைப்பைச் சார்ந்த எவரும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக முடியாது என்ற நிலையை அது ஏற்கெனவே எடுத்திருந்தது.
தொடர்ந்து பிரிட்டிஷ் காலனி அரசின் கடும் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை புனரமைத்துக்கொண்டு 1926ஆம் ஆண்டு மே மாதத்தில் வகுப்புவாதப் பிரச்சனை பற்றி தனது அறிக்கையை வெளியிட்டது.
தோழர்கள் முசாபர் அகமதுவும், பாகர்ஹட்டாவும் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அந்நிய மற்றும் இந்திய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களால் சமமாக சுரண்டப்படுகின்றனர் என்றும், இருசாராரின் பொருளாதார நலன்களும் ஒன்றானவையே என்றும் வலியுறுத்தினர். வர்க்க பேதமற்ற சமூகத்தை இருசாராரும் இணைந்து உருவாக்க முன் வரவேண்டும் என்றும் அக்கடிதம் அறை கூவல் விடுத்தது. காலனி ஆதிக்கச் சுரண்டலை எதிர்க்கவும் அழைப்பு விடுத்தது.
1930 இல் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த திட்டம்
1920 கள் முழுவதும் பிரிட்டிஷ் காலனி அரசால் வேட்டையாடப்பட்டு வந்த போதிலும் கம்யூனிஸ்டுகள் உறுதியுடன், எதிர்காலப் பணிகள் பற்றி முனைப்புடன் சிந்தித்தனர். 1930ஆம் ஆண்டு ‘நடவடிக்கைக்கான நகல் திட்டம்’ என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆவணம் இந்திய மக்களின் விடுதலை பற்றி கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டத்தைப் பதிவு செய்தது.
அது கூறியது: “இந்திய மக்களின் அடிமைத்தளை களை அழித்தொழிக்கவும், தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் அவர்களை கசக்கிப் பிழியும் வறுமையில் இருந்து விடுவிக்கவும், தேசத்தின் விடுதலையை அடைவது அவசியம். விவசாயப் புரட்சி என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவசியம்…… இந்தியாவின் புரட்சிகர விடுதலைக்கு பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்து வத்திற்கு எதிராகவும் விவசாயப் புரட்சியை சாதிப்பது தான் அடிப்படை.”
இதனைச் செய்வது யார் என்ற கேள்விக்கு அந்த அறிக்கை தொடர்ந்து பதிலளித்தது:
“உலக வரலாறும் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகளும் இந்திய மக்களின் விடுதலை, தேச அடிமை நிலையை ஒழிப்பது, தேச வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிவது, (சுரண்டும் வர்க்கங்களின்) நிலங்களைப் பறிமுதல் செய்து, புரட்சிகர தன்மையிலான மிகப்பெரிய அளவிலான ஜனநாயக புனரமைப்பைச் சாதிப்பது ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.”
ஆக.1921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறுமனே, அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலு வாக முன்வைத்தனர். வர்க்க அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர்.
இத்தகைய பாதையின் மூலம் தான் உண்மையான ஜனநாயகத் தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற இயலும் என்பதை 1921,1930 ஆவணங்களில் மட்டுமின்றி, அதற்குப் பின்பும், விடுதலைப் போராட்ட காலத்திலும், இன்று வரையிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்.
அதேபோல் சமூக ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதும் பழங்குடி மக்களின் சம உரிமை களை நிலை நாட்டுவதும் பாலின சமத்துவத்தை நோக்கிப் பயணிப்பதும் இந்திய நாட்டு மக்களின் விடுதலைப் பயணத்தின் இன்றியமையாத அம்சங்கள்.
சமகாலத்தில் பல்வேறு அரசியல் பார்வைகளும் “மாடல்களும்” உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபுறம் ஆர்எஸ்எஸ்-இன் கார்ப்பரேட் இந்துத்வா மாடல் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மதச்சார்பின்மை பற்றி அவ்வப்பொழுது பேசினாலும் தாராளமயப் பாதை தான் சரியான மாடல் என்று காங்கிரஸ் கருதுகிறது.
விவசாயப் புரட்சியின்றி, சில சமூக சீர்திருத்த முனைவுகள், சில நலத்திட்டங்கள் மற்றும் தாராளமயக் கொள்கைகள் மூலம் வளர்ச்சி காணலாம் என்ற சில மாநில முதலாளித்துவக் கட்சிகளின் மாடல்கள் முன்மொழிகின்றன.
கம்யூனிஸ்ட் இயக்கம் சமூக ஒடுக்குமுறையையும் பொருளாதாரச் சுரண்டலையும் இணைந்தே எதிர்ப்பது தான் சரியான, புரட்சிகரமான வர்க்கப்
பார்வை என்ற புரிதலில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதான் மக்கள் விடுதலை என்ற இலக்கை அடைய சரியான பாதை.
எனவே தான், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளையும் இதர உழைக்கும் மக்களையும் திரட்டிப் போராடுவதோடு, சாதி ஒடுக்குமுறையைத் தகர்ப்பது, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது, பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப் பிடிப்பது, தாராளமயப் பாதையை நிராகரிப்பது, பொதுத்துறையை வலுப்படுத்துவது, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மதச்சார்பின்மையைப் பாதுகாப்பது ஆகிய அம்சங்களும் கம்யூனிஸ்ட்கள் வெற்றிக்கு இன்றியமையாத ஒன்று .
பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா எழுதிய இந்திய மக்களின் விடுதலை தெளிவான பார்வை கட்டுரையின் சுருக்கம்.