ஆட்சிக் கவிழ்ப்பை தடுக்க இடதுசாரிகள் ஒன்றிணைய வேண்டும்

ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பிறகு இந்தியாவில் தங்கியுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா   வங்காள விரிகுடா கடல் பகுதியில் அமைந்துள்ள வங்கதேசத்தின் செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு விட்டு கொடுத்திருந்தால் எனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டிருக்க முடியும் எனவும் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் முன் அவர்  மக்களிடம் உரையாற்ற நினைத்தாகவும், அதற்குள் நிலைமை மோசமானதால் பேசவில்லை, தற்போது தனது கட்சியினருக்கு அதை செய்தியாக வெளியிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரது மகன் இதனை மறுத்துள்ளார்.

இந்த கருத்தை ஷேக் ஹசீனா பேசினாரா ,  இல்லையோ   அதற்கு முன்பாகவே வங்கதேச ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்காவின் சதி இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என செய்திகள் வெளியாகி இருந்தன. அந்நாட்டு அறிவு ஜீவிகளில் ஒரு பிரிவினர் போராட்டத்தை அமெரிக்கா எப்படி பயன்படுத்தியது என குறிப்பிட்டிருந்தார்கள் என்பதை தமிழ் மார்க்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளோம்

செயின்ட் மார்ட்டின் தீவு மீது அமெரிக்காவிற்கு ஏன் ஆர்வம் ?

வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவு  வெறும் 3 சதுர கிமீ பரப்பளவு மட்டுமே கொண்டது.

இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து 400 கிமீ தொலைவிலும், சீனாவின் லாசா என்ற பகுதியில் இருந்து 950 கி.மீ தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது.

இந்த தீவின் location தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் பலத்தை அமெரிக்காவிற்கு கொடுக்கும். அமெரிக்கா அங்கு விமானப்படைத்  தளத்தை அமைத்தால், முழு வங்காள விரிகுடா பகுதியையும், இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளையும் கண்காணிக்க முடியும். ஆசிய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முடியும். ராணுவ ரீதியாக பயமுறுத்தி இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முடியும்.

உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான இந்தியப் பெருங்கடலை இணைக்கும் வங்காள விரிகுடாவில் இயற்கை எரிவாயு உள்ளிட்ட அதிகளவு வளங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவைகளை கொள்ளையடிப்பது தான் அமெரிக்காவின் பல ஆண்டுகால கனவும் கூட.

வங்கதேசத்தில் கடற்படை அல்லது விமான தளத்தை நிறுவ அமெரிக்கா நீண்ட காலமாக முயன்று வருகிறது. அதற்காக பல முறை இந்தோ – பசுபிக் ராணுவ கூட்டமைப்பிலும், குவாட் (QUAD ) ராணுவ கூட்டமைப்பிலும் சேர வங்கதேசத்துக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.

அமெரிக்காவின் சூழ்ச்சி

நவீன தாராளமய கொள்கையால் ஹசீனா அரசாங்கமும் பல ஆண்டுகளாக நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தது. மேலும் ஹசீனா அரசின் சில கொள்கைக் காரணமாக இயல்பாகவே அந்நாட்டில் எழுந்து வந்த எதிர்ப்பு இயக்கத்தை அமெரிக்கா பயன்படுத்தி கொண்டு ஆட்சிக்கவிழ்ப்பை அரங்கேற்றியுள்ளது.

தற்போதைய வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாதக் கட்சி (BNP), ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட  17 பேர்  கொண்ட குழுவில் அமெரிக்கவுடன் நேரடி தொடர்பில் உள்ள நபர்களும் அடங்கியுள்ளனர். ஆனால் வங்கதேச இடதுசாரி  கட்சிகளோ பிற ஜனநாயக அமைப்புகளோ இடம் பெறவில்லை.

அதே போல இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், அமெரிக்காவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளார் என விக்கிலீக்ஸ் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளது. அதி அவர் தொடர்ந்து பலமுறை வங்கதேச அரசியல் சூழல் குறித்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சூழல் வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தையும் ராணுவத்தையும் அமெரிக்கா எளிமையாக பயன்படுத்தி தெற்காசிய நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்யும். அதோடு நாம் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விசயமும் உள்ளது.

இடதுசாரிகள் ஒற்றுமையை, சுய பலத்தை அதிகரிக்க வேண்டும்

இடதுசாரிகள் தங்களுக்கு இடையேயான ஒற்றுமையையும், சுய பலத்தையும் அதிகரித்து கொள்ள வேண்டும். அதுதான் ஒரு நாட்டின் அரசியலில் அவர்களது இருப்பை உறுதி செய்யும். அனைத்து நாடுகளிலும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் தனியார்மயம், வேலையின்மை, குறைந்த ஊதியம், வறுமை என மக்கள் அரசாங்கங்களின் மீது கோவத்தையும் வெறுப்பையும் கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் மீதான இந்த கோபம் மார்க்சியத்தின் இயங்கியல் கோட்பாட்டின் படி மக்கள் எழுச்சிப் போராட்டமாக வெடிக்கும் போது அதனை ஒருங்கிணைக்க கூடிய அல்லது தலைமை தாங்கி நடத்தக்கூடிய கூடிய பலத்தை ஒவ்வொரு நாட்டின் இடதுசாரிக்  கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பிற இடதுசாரி இயக்கங்களும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த போராட்டத்தை கைப்பற்றி தனக்கு ஆதரவாக உள்ள அரசாங்கத்தை ஏகாதிபத்திய நாடுகள் அமைத்துக்கொள்ளும்.

அந்த ஆபத்து தான் தற்போது வங்கதேசத்தில் உருவாகியுள்ளது.

Leave a Reply