வெனிசுலா:  மூன்றாவது முறையாக இடதுசாரி ஜனாதிபதி மதுரோ மாபெரும் வெற்றி

வெனிசுலா  தேர்தலில் இடதுசாரி ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மாபெரும்  வெற்றியடைந்துள்ளார்.  நிக்கோலஸ் மதுரோ 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் மீண்டும் தனது வெற்றியை தக்கவைத்துள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  


ஜூலை 28 உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு  துவங்கி மாலை 6 மணிவரை  15,000க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெனிசுலாவில் மொத்தம் 1.1 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  நிக்கோலஸ் மதுரோ 51 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் (51.2 சதவீதம் ) பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார். 

மதுரோவை எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்க ஆதரவாளரான தீவிரவலதுசாரி  எட்மண்டோ கோன்சாலஸ்  44 லட்சம்  (44.2  சதவீதம்) வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.


இந்த தேர்தலில் ஐ.நா. பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள் என உலகம் முழுவதும்  சுமார் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 600 க்கும் மேற்பட்ட ‘சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள்’ கலந்து கொண்டனர்.


மதுரோவின் அரசியல் பயணம்


வெனிசுலா மெட்ரோ போக்குவரத்து தொழிலாளியாக  இருந்த நிக்கோலஸ் மதுரோ 1980 ஆம் ஆண்டுகளில்  சோசலிஸ்ட் லீக் அமைப்பில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தத் துவங்கிய அவர் தொழிலாளர்களை ஒன்றிணைத்து புதிய கிளைகளை அமைத்து தனது நிர்வாக மற்றும் அணிதிரட்டல் திறன்களை வெளிப்படுத்தினார்.


வெனிசுலா பொலிவாரியக் குடியரசின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை  உருவாக்கிய தேசிய அரசியல் நிர்ணய சபையில் முக்கிய உறுப்பினராக பங்காற்றினார்.


2000- 2006 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் வெனிசுலா நாடாளுமன்ற தலைவர் உட்பட பல பொறுப்புகளை வகித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நடவடிக்கையைத்  தீவிரப்படுத்துவது என தான் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் திறம்படச்  செயல்பட்டு வெனிசுலா மக்களின் நம்பிக்கையைப்  பெற்றார்.


வெளியுறவுத்துறை அமைச்சராக
வெனிசுலா மக்களின் மகத்தான அன்பைப்பெற்ற ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் பதவியில் இருந்த போது, மதுரோவின் திறனை முழுமையாக அங்கீகரிக்கும் விதத்தில் 2006 ஆம் ஆண்டு அவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமித்தார்.

அதன் மூலம் சர்வதேச அரசியலில் ஒற்றை ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அணிக்கு எதிராக ஒரு பன்முக உலகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பை ஏற்ற மதுரோ, லத்தீன் அமெரிக்க நாடுகளை ஒருங்கிணைப்பது, அதன் மூலம் தென் அமெரிக்க பிராந்தியத்தில்  அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான முக்கியத் திட்டங்களை செயல்படுத்தினார்.


900 வகையான
பொருளாதாரத் தடைகள்


கச்சா எண்ணெய் உள்ளிட்ட படிம எரிபொருட்கள் வெனிசுலாவின் பிரதான இயற்கை வளங்களாகும். இந்த எண்ணெய்  வளங்களே அந்நாட்டின் பொருளாதார பலமாகவும் உள்ளது. குறிப்பாக சர்வதேச அளவில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் விலை மிகக் குறைவு.

இது அமெரிக்காவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் 900 க்கும் மேற்பட்ட பொருளாதாரத் தடைகளை வெனிசுலா மீது விதித்துள்ளது.  
இத்தகைய  மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் ஏகாதிபத்திய அழுத்தங்களையும் தாண்டி மதுரோ  ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தக்கவைத்துள்ளார்.


ஏழு மாற்றங்கள்


எப்படியேனும் மதுரோவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்குடன் வலதுசாரி கைக்கூலிகளை ஏவிவிட்டது அமெரிக்க நிர்வாகம். இதை எதிர்கொள்ள, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று 2030 இல் வளர்ச்சி இலக்கை எட்டுவதற்காகவும், அமைதியைப் பாதுகாக்கவும், சமூக நலனுக்கு உத்தரவாதம் அளிக்கவும்,  உற்பத்தியை அதிகரிக்கவும் 7 மாற்றங்களை (7T)  2024 ஜனவரி 15 அன்று மதுரோ முன்மொழிந்தார்.


1. பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தைச் சமாளிக்க புதிய உற்பத்தி முறையை உருவாக்குவது.


2. அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள  வெனிசுலாவின் அனைத்துத் துறைகளையும் மீட்டெடுப்பது.


3. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு பலத்தை மேம்படுத்தி சமூக அமைதியை ஒருங்கிணைப்பது. அந்த பலத்தின் மூலம் படிம எரிபொருட்கள் நிறைந்த வெனிசுலாவிற்கு உட்பட்ட கயானா எஸ்சிகிபா என்ற பகுதியை மீட்பது.


4. வெனிசுலா மக்களின் சமூக உரிமைகளின் பொதுத் தன்மையை ஒருங்கிணைத்தல் ,அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல்.


5. மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற பங்களிக்கும் சமூகத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது.


6. காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது. அதற்காக மாற்று எரிசக்திகளை மேம்படுத்துவது மற்றும் உணவு உற்பத்தித் திட்டத்தை உருவாக்குவது.


7. சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்காக வளர்ந்து வரும் பொருளாதாரக் குழுவான ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் வெனிசுலாவை இணைப்பது. லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளை (CELAC) ஒருங்கிணைப்பதுடன் , தென்  அமெரிக்க மக்களுக்கான பொலிவாரியன் கூட்டணியை விரிவுபடுத்துவது – மக்கள் வர்த்தக ஒப்பந்தம் (ALBA-TCP) என நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க இந்த 7 மாற்றங்களை  மதுரோ அரசு முன்மொழிந்து செயல்படுத்தத் துவங்கியது. 


பொய்ப் பிரச்சாரத்தை துவங்கிய எதிர்க்கட்சிகள்

இந்நிலையில், தேர்தலில்  மதுரோவை எப்படியாவது வீழ்த்தி அமெரிக்க ஆதரவு வேட்பாளரான எட்மண்டோ கோன்சாலஸை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என அமெரிக்காவும் அதன் சார்பு ஊடகங்களும் பல பொய்களையும் ஆதாரமற்ற  தகவல்களையும் தேர்தல் நேரத்தில் பரப்பி வந்தன. இந்த பொய்களை எல்லாம் மதுரோ மக்கள் ஆதரவுடன் முறியடித்துள்ளார்.


தற்போது தேர்தல் முடிவை ஏற்க மறுத்து அமெரிக்காவும் எதிர்க்கட்சிகளும் இந்த தேர்தல் முடிவே பொய் என பிரச்சாரம் செய்து வருகின்றன. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்க்கன், “இந்த முடிவு  எங்களுக்கு கவலை அளிக்கிறது” என எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். 


நாங்கள் 70 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். அதை மாற்றிவிட்டார்கள் என எதிர்க்கட்சி  தலைவர்  மரியா கொரினா மச்சாடோ, எந்த ஆதாரமும் இன்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
உண்மைக்கு மாறான இந்த பிரச்சாரம் குறித்துப் பேசிய ஜனாதிபதி மதுரோ, “இது போன்ற நாடகங்கள் இப்பொழுது மட்டுமல்ல, எல்லா தேர்தல் முடிவிலும் நடக்கும். இது தான் தீவிர வலதுசாரிகளின் செயல்பாடு. கடந்த 20 ஆண்டுகளாக இதுதான் நடந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply