அரசு வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் செய்து திறமையின் அடிப்படையில் வேலை வழங்க வங்கதேச உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
93 சதவீத இடங்கள் திறமையின் அடிப்படையிலும் 7 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் நிரப்ப தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு நடைமுறை
வங்கதேச அரசுப் பணியிடங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீதம், பின் தங்கிய மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீதம், பெண்களுக்கு 10 சதவீதம், சிறுபான்மையினருக்கு 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் என 56 சதவீத இடஒதுக்கீடு நடைமுறை அமலில் உள்ளது.
மாணவர்களின் போராட்டம்
1971 வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் கொடுக்கப்பட்டு வரும் 30 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் எனவும் திறமையின் அடிப்படையிலேயே பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் வங்கதேச மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மையால் தவித்து வரும் மாணவர்கள் இந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் திரும்பப்பெற வேண்டும் எனவும், பெண்கள் மாற்றுத்திறனாளிகள், பின்தங்கிய மாவட்டத்தில் உள்ளவர்களுக்கான இடஒதுக்கீடு தொடரட்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.
மாணவர்களை வேட்டையாடிய ஹசீனா அரசு
மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக ஹசீனா அரசு 2018 ஆம் ஆண்டு அந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தியது. ஆனால் கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயர் நீதிமன்றம் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்தியதை தொடர்ந்து ஜூலை 5 முதல் மீண்டும் போராட்டம் வெடித்தது.
அந்த போராட்டத்தில் ஆளும் கட்சியின் மாணவர அமைப்பான, “சத்ரா லீக்” கலவரத்தை உருவாக்கியது.
அவர்கள் உருவாக்கிய கலவரம் நாடு முழுவதும் மாணவர்களின் அமைதியான போராட்டதில் வன்முறைத் தீயை மூட்டியது.
போராட்டம் மிக மோசமான கட்டத்தை அடைந்தவுடன் ராணுவத்தை களமிறக்கி மாணவர்களை வேட்டையாடிய ஹசீனா அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இணைய சேவைகளை முற்றிலுமாக துண்டித்தது. அதுமட்டுமின்றி போராட்டக்காரர்களாக யாரை அடையாளம் கண்டாலும் சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டது.
மாணவர்கள், போராட்டக்காரர்கள் என 130 க்கும் அதிகமான நபர்களை இந்த வன்முறையில் ஹசீனா அரசாங்கம் படுகொலை செய்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஜூலை 21 அன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவில் என்ன கூறியுள்ளது?
உச்ச நீதிமன்றம் 93 சதவீத வேலைகள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மீதமுள்ள 7 சதவீதத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 5 சதவீதம் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மீதமுள்ள 2 சதவீதம் சிறுபான்மை, திருநங்கையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர் அமைப்பின் கோரிக்கை
காவல் துறை கைது செய்துள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர்களை விடுவிக்க வேண்டும். போராட்டக்காரர்களுக்கு எதிரான மிருகத்தனமான அடக்குமுறையைத் தூண்டி விட்ட உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் மற்றும் வங்கதேச ஆளும் கட்சியின் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர் ஆகியோர் பதவி விலக வேண்டும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என மாணவர் அமைப்பு தலைவர்கள்
தெரிவித்துள்ளனர்
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து இடஒதுக்கீட்டு முறையில் மாற்றம் வங்கதேச உச்சநீதிமன்றம் உத்தரவு