புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி கவலை கொள்ள யாரேனும் உள்ளனரா?

குவைத் தீ விபத்தில் இறந்த தொழிலாளர்களை பார்த்து நாடே கண்கலங்கியது, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி கவலை கொள்ள யாரேனும் உள்ளனரா?

குவைத்தில் மட்டும் அதன் மொத்த மக்கள்தொகை 4.3 மில்லியனில் 70% பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக உள்ளனர்.

GCC எனப்படும் Gulf Cooperation Council நாடுகளில் சுமார் 35 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இது உலகில் உள்ள மொத்த புலம்பெயர் தொழிலாளர்களில் 10% ஆகும்.

குவைத்தை பொருத்த மட்டில் அங்கு குறைந்த பட்ச ஊதியமான 75 குவைத் தினார் பெறும் தொழிலாளருக்கு தங்குமிடம் வசதி முதலாளியால் செய்து தரப்படவேண்டும், அல்லது ஊதியத்திலிருந்து 25% வீதம் கூடுதலாக பணம் வழங்கவேண்டும்.

ஒரு நபர் குவைத்தில் நன்றாக வாழ்க்கை நடத்த 200 குவைத் தினார் வேண்டும், அதுவே குடும்பம் என்றால் 800 குவைத் தினார் வேண்டும் எனவே அவர்கள் தங்களது குடும்பங்களை பிரிந்தே பணி செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.

தங்குமிடம் என்ற பெயரில் அடிப்படை வசதிகள் இல்லாத கட்டிடங்களே பெரும்பாலும் இத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

இதில் வீட்டுப்பணி தொழிலாளர்கள் பல்வேறு சலுகைகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர் எவ்விதத்திலும் வேறு வேலை செய்யலாம் என்ற மனநிலைக்கு வரவிடாத படி அதிக நேரம் வேலை, குடும்பத்தை விட்டு பிரித்து வைத்தல், தரமற்ற தங்குமிடம், உணவு வழங்குதல் என்ற நிலையில் வைத்திருக்கவே முதலாளிகள் விரும்புகிறனர். இதில் இந்தியாவிலிருந்து சென்று முதலாளியானவர்களும் அடக்கம்.

நவீன அடிமை முறை

வளைகுடா நாடுகளில் இந்தியத் தொழிலாளர்கள் எவ்வளவு மோசமான வாழ்நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள் என்பதை அதிர்ச்சியளித்திடும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நமக்கு வெளிப்படுத்துகிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுவதற்காக ‘கஃபாலா’ எனப் படும் மிகவும் சுரண்டல்தன்மையுடன் கூடிய முதலாளி-தொழிலாளி ஒப்பந்த முறையானது நவீன கால அடிமைத்தனத்தை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாகும்.

இந்தமுறையின்கீழ்தான் ஓமன், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், குவைத், கத்தார், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளுக்கு தொழிலாளர்கள் அதிக செலவுகள் செய்து, முறைகேடாகவும், மோசடியான முறையிலும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் மோசமான பணிநிலைமைகளில் பணிபுரிகிறார்கள். தொழிற்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு என்பவை மிகவும் மோசமாக இருக்கின்றன என இந்தியக் கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சட்டங்களை முதலாளிகள் சரியாக பின்பற்றி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தரப்படுகிறதா என்பது கண்காணித்து நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக அரசு இருத்தல் வேண்டும், ஆனால் முதலாளித்துவ அரசு அவ்வாறு செயல்படாது. முதலாளிகளுக்கே பாதுகாப்பு அரணாக அது செயல்படும்.

சொந்த நாடுகளில் வேலைப்வாய்ப்பை உருவாக்காதஅரசும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

தங்களது அடிப்படை வசதிகளை, சரியான ஊதியத்தை, வகுக்கப்பட்ட வேலை நேரத்தை கோர முடியாது, சங்கமின்றி கூட்டுபேர உரிமையற்று சிதறிக்கிடக்கின்றனர் புலம்பெயர் தொழிலாளர்கள்.

Leave a Reply