தேர்தல் ஆணையம் மக்களை ஏமாற்றுகிறதா?


7 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 அன்று நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த ஐந்துக்கட்ட வாக்குப்பதிவுகளிலும், எத்தனை லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது என  எண்ணிக்கையாக அறிவிக்கவில்லை அதற்கு பதிலாக பதிவான வாக்குகளை சதவீதத்தில் மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதாவது வாக்குப் பதிவு நடந்த முடிந்தவுடன் ஒவ்வொரு தொகுதியாகவோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ பதிவான வாக்குகள் எத்தனை லட்சம் என எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் கூறி இருக்க வேண்டும்

உதாரணத்திற்கு வாரணாசி தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது என எண்ணிக்கைவும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.ஆனால் தேர்தல் ஆணையம் அவ்வாறு குறிப்பிடவில்லை. 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது 58.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டு வருகின்றது.அதுவும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் வெளியிட்டது.

குறிப்பாக முதல் கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்கு பிறகு மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்ட வாக்கு சதவீதத்திற்கும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவீதத்திற்கும் பெரிய இடைவெளி இருந்தது‌ குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழ் நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்தது பெரும் விவாதமானது.

அதேபோல முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன் இறுதிகட்ட முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் 11 நாட்களை எடுத்துக்கொண்டது. அவ்வறே அடுத்தடுத்து நடந்த  மூன்று கட்ட வாக்குப்பதிவுகளுக்கும் 4 நாட்களுக்குப் பிறகே பதிவான சதவீதத்தை அறிவித்தது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் தாமதமாகவும் ரகசியமாகவும் செயல்படுவதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் மக்களுக்கு சந்தேகம் எழுந்து வருகிறது.

இந்த சூழலில் தான் வாக்குப்பதிவின் போது பதிவான மொத்த தகவல்களையும் வெளியிட வெறும் 5 நிமிடங்களே போதுமானது என முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி குறிப்பிட்டுள்ளார். இதனை The Wire இணையதளம் பதிவு செய்துள்ளது.

மேலும் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவில் 1 கோடி வாக்குகள் அதிகரித்துள்ளது என்று அதிர்ச்சி தகவல்களையும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The wire வெளியிட்டுள்ள அந்த செய்தியில் Times Insight Groupகளின் பகுப்பாய்வுகளின் படி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நான்கு கட்ட  வாக்குப்பதிவு சதவீதத்தில் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதாவது முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள 379 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் 28 ஆயிரம் வாக்குகளும் அதிகரித்துள்ளன.

இது எப்படி அதிகரித்தது ? பதிவான வாக்குகள் எண்ணிக்கை என்ன? தேர்தல் ஆணையம் ஏன் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை வெளியிட மறுக்கிறது என்ற  கேள்விகள் எழுந்து வருகின்றது.

ஆனால் இந்த கேள்விகள் எதற்கும் பாஜக தேர்வு செய்த தேர்தல் ஆணையர்கள் முறையான விளக்கம் கொடுக்க தயாராக இல்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த தாமதமான மற்றும் முறையற்ற செயல்பாடு குறித்து ADR அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கின் மீதான விசாரணை மே 17 அன்று நடைபெற்றது.

அந்த வழக்கில் வாதாடிய பிரசாந்த் பூஷன் தேர்தல் நடத்தும் ஒவ்வொரு தேர்தல் அலுவலரும் கட்டாயமான முறையில்  17C படிவத்தை நிரப்புவார்கள். அதில் வாக்குப் பதிவின் முழு விபரங்களும் இருக்கும். அந்த படிவத்தை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்  வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் நடத்தும் அலுவலர்  தொகுதி முழுவதும் தரவுகளை சேகரிக்கிறார் அதற்கு நேரம் எடுக்கும். மேலும் தொலைதூரமாக உள்ள வாக்கு சாவடி உள்ள தொகுதிகளும் உள்ளன.சில தொகுதிகளிலும் மறு வாக்குப்பதிவுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தரவுகளை ஒப்படைக்க தாமதம் ஆகிறது என உப்பு சப்பற்ற காரணத்தை தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின்  கூடுதல் செயலாளராக பணியாற்றிய சஞ்சீவ் குப்தா, தனது ட்விட்டில் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது   தேர்தல் ஆணையத்தின் ENCORE இணைய  மென்பொருளில் வாக்காளர்களின்  17C  படிவத்தின் தரவுகள் அனைத்தும் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும்.  ஒரு பட்டனை தட்டினாலே அனைத்து தகவல்களும் கிடைத்து விடும் என்ற நிலை இருக்கும் போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இல்லை என தேர்தல் ஆணையம் எப்படி சொல்ல முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றமும் ஏன்  பதிவான மொத்த வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் தரவில்லை என கேள்வி எழுப்பியதோடு மே 24 அன்று நடைபெறும் வழக்கு விசாரணையில் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

மே 24 க்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் கோடை கால விடுமுறை துவங்க உள்ளது. மீண்டு தேர்தல் முடிவுகளுக்குப்பிறகே உச்ச நீதிமன்றம் திறக்கப்படும் என்ற நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையும் நேர்மையும் முறையான செயல்பாடும் உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

– சேது சிவன்

Leave a Reply