2024 – 2025 ஆண்டுக்கான இடைகால பட்ஜெட் பிப் 1 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்க நாளான ஜன 31 அன்று உரையாற்றிய குடியரசுத்தலைவர் முர்மு 25 கோடி இந்தியர்கள் பன்முக வறுமையை விட்டு வெளியேறி இருப்பதாக பாஜகவின் ஆதாரமற்ற குரலை எதிரொலித்து சென்றுள்ளார். இந்த கருத்து 2024 துவக்கத்தில் இருந்து பிரச்சாரம் செய்யப்பட்டுவருகிறது.இந்திய அரசின் சிந்தனை களஞ்சியமாக இருக்கும் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் இருந்துதான் இந்த கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
பன்முக வறுமை என்பது ஒரு நாட்டில் பண வறுமை (போதிய வருமானமின்மை ), கல்வி மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புச் சேவைகள் ஆகிய மூன்றிலும் பின்தங்கிய குடும்பங்களின் சதவீதத்தை அளவிடும் அளவீடு என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த பலபரிணாம வறுமை 2013-2014 ஆண்டு 29.17 சதவீதமாக இருந்து 2022-23 ஆண்டு 11.28 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் சுமார் 24.82 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாநில அளவில், உ.பி.யில் 5.94 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறி முதலிடத்திலும், பீகாரில் 3.77 கோடி பேரும், மத்தியப் பிரதேசம் 2.30 கோடி பேரும் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு போஷன் அபியான்,இரத்த சோகை முக்த் பாரத், உஜ்வாலா ஆகிய திட்டங்கள் முப்பரிமாண வறுமையில் இருந்து மக்களை வெளியேற்ற உதவியதாக நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே இந்திய பொருளாதார அறிஞர்களும் ஜனநாயக வாதிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உலக பட்டினி குறியீட்டில் சோமாலியா,ஆப்கானிஸ்தானுக்கு அருகில் மிக மோசமான நிலையில் 125 நாடுகளில் 111 ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் எப்படி 25 கோடி மக்கள் உறுப்பினர்களாக உள்ள குடும்பங்கள் போதிய வருமானமும் கல்வி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்று பன்முக வறுமையிலிருந்து வெளியேறி இதுக்கும் என்ற கேள்வியை எழுப்பினர்.
அரசு வழங்குகிற அல்லது அவர்களுக்குக் கிடைக்கும் சில நலத்திட்டங்களை அணுக ( பெற ) முடியாத மக்களின் சதவீதத்தை பல பரிணாம வறுமை குறியீடு எளிமையாக காட்டும்.எனினும் இந்த புள்ளிவிவரங்களை வறுமை ஒழிப்பு இலக்குகளை நிர்ணயிக்க திட்டமிடும் கொள்கை வகுப்பாளர்கள் கொள்கை வகுக்கும் போதோ அல்லது வறுமைக் குறைப்புக்கான திட்டங்களை உருவாக்கும் போதோ உள்ளீடாகப் பயன்படுத்தப்படுவதில்லை என இந்திய பொருளாதார சேவை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற கே.எல். தத்தா பேட்டியளித்துள்ளார். இந்த அறிக்கை குறித்து சின்ஹா இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குனரும் பொருளாதார நிபுணருமான சுனில் இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உயிர்வாழ தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் கொடுக்க வேண்டியுள்ள நிலையில் ஒரு நாடு எப்படி நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை வறுமையில் இருந்து வெளியேற்ற காரணமாக நிதி ஆயோக் குறிப்பிட்ட திட்டங்களை மட்டும் கணக்கில் எடுத்துப்பார்த்தலே உண்மை நிலை என்னவாக இருக்கும் என கண்டறியலாம்.
போஷன் அபியான்
ஐ நா வின் நிலையான வளர்ச்சி அடிப்படையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து அதிகரிக்க 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டமே போஷன் அபியான் திட்டம். குழந்தைகளின் ஊட்டச்சத்து,பெண்களின் ரத்தசோகை குறைபாட்டை சரி செய்யவும் குறை பிரசவத்தை தவிர்பதுமே இதன் பிரதான நோக்கம். 2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 20 ஆயிரம் கோடி மட்டுமே இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது இது ஒட்டுமொத்த பட்ஜெட்டிலும் 0.57 சதவீதம் மட்டுமே. 2020-2021 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 18.5 சதவீதம் குறைவாகும்.2023 – 2024 ஆம் ஆண்டு இத்திட்டத்திற்கு 20,554 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. . 2024-2025 க்கான இடைக்கால பட்ஜெட்டில் 21 ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறைவான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கிய நிதியையும் முறையாக பயன்படுத்தாத நிலை ஆகியவற்றால் லட்சக்கணக்கான குழந்தைகள் பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக இத்திட்டத்தின் கீழ் 2018 மார்ச் மாதம் முதல் 2019 டிசம்பர் மாதம் வரை வெளியிடப்பட்ட 4,300 கோடியில் வெறும் 1,570 கோடிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அமைப்பின் தணிக்கை அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். திட்டம் கொண்டுவரப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. குழந்தைகளின் ஊட்டச்சத்தில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தால் இந்தியா தனது உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்தையும் உற்பத்தியில் கிட்டத்தட்ட 8 சதவீதத்தையும் இழக்கிறது என ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக டவுன் டூ எர்த் என்ற செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
2023 பிப் மாதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ராணி நாடாளுமன்றத்தில் கொடுத்த தகவலின் படி 43 லட்சம் (7.7 சதவீத) குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளதாக தெரிய வந்துள்ளது.போஷன் டிராக்கர் தரவுகளின் அடிப்படியில் அவர் கண்டறியப்பட்டுள்ளதை தெரிவித்துள்ளார்.இந்த எண்ணிக்கை வெறும் 5.6 கோடி குழந்தைகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு மட்டும் தான் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களை கணக்கில் எடுத்தால் எண்னிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இரத்த சோகை முக்த் பாரத்
2020 ஆம் ஆண்டு இரத்த சோகையை ஒழிக்க போவதாக “அனீமியா முக்த் பாரத்”திட்டத்தை பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் அந்த இலக்கை அடையவில்லை.உடனே 2047 க்குள் நிலைமையை மாற்றுகிறோம் என 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மிஷன் மோட் என்ற மற்றொரு புதிய அறிவிப்பைக் கொண்டு வந்தது. தரமான சிகிச்சை பரிந்துரைகள் அல்லது ரத்த சோகை தடுப்பு என எந்த ஒரு முறையான செயல்பாடும் இல்லாமல் 2047 ஆம் ஆண்டிற்குள் இந்த நிலையை அரசாங்கம் எப்படி ஒழிக்கும்? 2016 ஆம் ஆண்டே ரத்தசோகை உள்ளிட்ட ரத்தம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்சனைகளை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அமைச்சகம் வழிகாட்டுதலை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய திட்டங்கள் பல மாநில சுகாதாரத் துறைகளில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலையான வளர்ச்சியை நோக்கி செல்ல மோடி அரசு அறிவித்த திட்டங்களில் வெறும் 2 திட்டங்களின் உண்மையான எதார்த்த நிலையை இதுதான்.ஆனால் 2030 க்குள் நிலையான வளர்ச்சியை அடைவோம் எனவும் அதற்க்கு முன் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து வெளியேற்றி விட்டோம் எனவும் மோடி தம்பட்டம் அடித்துக்கொண்டு உள்ளார். கடந்த ஆண்டு வெளியான லான்செட் ஆய்வும் ஐ. நா சபையின் 33 நிலையான வளர்ச்சி குறியீட்டில் 19-ஐ கூட தொடும் நிலையில் இந்தியா இல்லை என தாது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளது.ஆனால் மோடி அரசு உண்மையை ஏற்று மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் மீண்டும் மீண்டும் உண்மைக்கு புறம்பான புள்ளிவிவரங்களையும்,தனக்கு சாதகமான வார்த்தைகளையே பதிலாகவும் பொய்களையும் மட்டுமே பேசி வருகிறது
கட்டுரையாளர்; சேதுசிவன்