“போராட்டமே அனைத்துக்கும் தீர்வு!” என்பதை மலைவாழ் மக்கள் அடுத்தடுத்து நடத்தியுள்ள தொடர் போராட்டங்கள் கண்முன்னே நிறுத்தியுள்ளன.
மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் வன உரிமைச்சட்டம் 2006இன்படி கல்வி, சுகாதாரம் மற்றும் சாலை வசதிகளை செய்ய மறுக்கும் வனத்துறையின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் உடுமலை வனத்துறை அலுவலகத்தின் முன்பாக 12 ஆம் தேதி முதல் வனமக்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, கருமுட்டி, பூச்சி கொட்டாம்பாறை, திருமூர்த்திமலை, ஈசல்திட்டு, தளிச்சி, கோடந்தூர், கொட்டையாறு, பொருப்பாறு, ஆட்டுமலை, வசம்குழம், புளியம்பட்டி, மயிலாடும்பாறை, கரட்டுபதி, சேலையூத்து மற்றும் காட்டுபட்டி என்று 18 மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலை மக்கள் வசித்து வருகிறார்கள்.
நாடு விடுதலை பெற்று தற்பொழுது வரை இந்த மக்களுக்கு எவ்வித அடிப்படையான வசதிகளும் கிடைக்கவில்லை. பின்னர் மலைவாழ் மக்கள் சங்கத்தில் இணைத்து பல போராட்டங்களை நடத்தி சில திட்டங்கள் மட்டும் பெயருக்கு அரசு அதிகாரிகளால் நிறைவேற்றப்பட்டன. நாடாளுவோரையும், மாநிலத்தை ஆளுவோரையும் தேர்ந்தெடுக்க வாக்குரிமை மட்டும் கொடுத்திருந்தனர். எனினும் உள்ளாட்சி அதிகாரம் என்பது இல்லை. உள்ளாட்சி வாக்குரிமை தரப்படாத நிலை நீண்ட காலம் நீடித்தது. இந்த நிலையில் உள்ளாட்சி வாக்குரிமை வேண்டும் என்று சங்கம் நடத்திய போராட்டத்தால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருமூர்த்திமலை மற்றும் குருமலை குடியிருப்பு பகுதியை தளி போரூராட்சியில் இணைத்து தேர்தல் வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றி பெற்று தளி போரூராட்சியின் துணை தலைவராக சங்கத்தின் மாநில துணை தலைவர் கோ.செல்வன் தேர்வு செய்யபட்டார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மக்களின் அங்கீகார வெற்றியாக உள்ளது.
இந்நிலையில் குழிப்பட்டி, மாவடாப்பு, குருமலை மற்றும் மேல் குருமலை மக்கள் மருத்துவம் மற்றும் குழந்தைகள் படிக்க செல்ல வால்பாறை சாலை, காடம்பாறை வழியாக சுமார் 120 கிலோ மீட்டருக்கும் மேல் சென்று பொள்ளாச்சிக்கு வர வேண்டும். ஆனால் திருமூர்த்திமலையில் இருந்து குருமலை செல்ல சுமார் ஐந்து கிலோ மீட்டர் ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தி வரும் பாதையில், சாலை அமைக்க வேண்டும் என்று வனக்குழு மற்றும் தளி பேரூராட்சி சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. இதை வனத்துறை அனுமதி வழங்க மறுத்தது. வனத்துறையின் நடவடிக்கையை கண்டித்து கடந்த 12ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் மூன்று நாட்கள் நடைபெற்றது.
புதன்கிழமை உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோ.செல்வன், மணிகண்டன், குப்புசாமி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் ஊர்வலமாக உடுமலை வனத்துறை அலுவகத்தின் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார்கள்.
முதல் நாள் தொடங்கி மூன்றாம் நாள் வரை போராட்ட களத்தில் எவ்வித சட்ட மீறல்கள் இல்லாமல் தங்களுக்கு தேவையான உணவுகளை சமைத்தும் போராட்ட பகுதியை மிகவும் சுத்தமாகவும் வைத்து இருந்தார்கள். போராட்டம் நடைபெற்ற பகுதி நகரின் மையப் பகுதியாகவும், அனைத்து அரசு அலுவலகம் இங்கு இருந்தபோதும் போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
குறிப்பாக முதல்நாள் வனத்துறை சார்பில் துணை வன அலுவலர், உடுமலை வட்டாச்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் என்ற மட்டத்தில் பெயருக்கு மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தலைவர்கள் தங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரை வனத்துறை அலுவலக்தின் முன்பாக காத்திருப்போம் என்று உறுதியாக இருந்தால் 12ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மாவட்ட வனஅலுவலர் பேச்சுவார்த்தைக்கு வந்தார். அப்பொழுதும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
இரண்டாம் நாள் வன அலுவலரின் பிடிவாத போக்கு போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் இருந்தது. உடுமலையில் இருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவகத்திற்கு மக்களுடன் நடைபயணமாக செல்ல சங்கத்தினர் முடிவு செய்தனர். இதன் பின்னரே 14ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரலாற்று சிறப்பு மிக்க உடன்பாடு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி அடுத்த தலைமுறைக்கு நல்வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கைக்குழந்தைகளுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்ட களத்தில் இருத்தார்கள்.
இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு, பல்வேறு பகுதி பொது மக்கள் பல்வேறு வகையான உதவிகளை தானாக முன்வந்து செய்தனர். இது இவர்களது போராட்டம் நியாயமானது என்று உணர்த்துவதாக இருந்தது.
பெண்கள் பயன்படுத்தி கொள்ள நகராட்சி மண்டபத்தில் இருக்கும் குளியல் மற்றும் கழிப்பறைகள் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் அனுமதி தந்தது. பல்வேறு அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களின் நியாமான கோரிக்கைகளை வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார்கள்.
போராட்டத்திற்கு ஆதரவுதரும் வகையில் திமுக உடுமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், தளி பேரூராட்சி தலைவர் உடுமலை மத்திய ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்கள். இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடமும் தொடர்ச்சியாக இப்போராட்டத்தின் நியாயம் குறித்துப் பேசினார்கள்.
உடுமலை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் போராட்டத்திக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அனைவருக்கும் தினமும் பிஸ்கட், ஐஸ்கிரிம் மற்றும் ரோஸ்மில்க் என ஏற்பாடு செய்வது மட்டும் இல்லாமல் போராட்டத்திற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தார்கள்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலைநிகழ்ச்சி, மாதர் சங்கத்தின் மாவட்டக்குழு தோழர்கள் தினமும் போராட்டத்தில் கலந்து கொண்டு பெண்களும் ஆடிப்பாடி போராட்டத்தில் இணைந்து கொண்டது, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் மூன்று நாட்களும் போராட்டத்தில் கலந்து கொண்டது. குறிப்பாக தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று பல்வேறு உதவிகளை செய்தது என உழைக்கும் மக்களின் ஆதரவுக் கரம் பெரும் உத்வேகத்தை அளித்தது.
14 ஆம் தேதி குழிப்பட்டி பகுதியை சேர்ந்த சஸ்வந்த் என்ற ஆறு வயது மாணவன் தன்னுடைய பிறந்தநாளை போராட்டம் நடைபெற்ற இடத்தில் தலைவர்களுடன் கொண்டாடினார்.
மூன்று நாட்களும் அனைத்து காட்சி ஊடகம் மற்றும் தின நாளிதழ்களில் செய்திகளை சிறப்பாக வர வைத்ததுடன், உணவு மற்றும் பல்வேறு வகையில் மலைவாழ் மக்களுக்கு உதவி செய்த பத்திரிக்கையாளர்களையும் தலைவர்கள் பாரட்டினார்கள்.
போராட்டம் வெற்றி அனைவரின் கூட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தலைவர்கள் அறிவித்தபோது தங்களின் பாரம்பரிய இசை கருவிகளை உற்சாகமாக வாசித்ததுடன், தலைவர்களையும் வாசிக்க வைத்து நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
மலைவாழ் மக்கள் தங்களின் வாழ்வுரிமைக்காக நடத்திய போராட்டம் உடுமலை மக்களின் திருவிழா போன்று நடைபெற்று மகத்தான வெற்றி பெற்றது.
கட்டுரையாளர: கே.மகாதேவன் (தீக்கதிர் நிருபர்)