ஒரிசா ரயில் விபத்திற்கு காரணம் என்ன?

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி இன்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்துள்ளது (எண்ணிக்கை மேலும் உயரும்) 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணித்த அனைவரும் இறந்து விட்டதாக ரயிலில் பயணம் செய்து வந்த ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.அந்த அளவிற்கு மிக கோரமான விபத்தாக நடந்துள்ளது.

பொதுவாக இரயில் விபத்துகள் சிக்னல் செயலிழக்கும் போதே லோகோ பைலைட்டுகளின் கவனமின்மையாலும் ஏற்படும்.இந்த விபத்து நடந்த பிறகு ஆளும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது.

கடந்தாண்டு 2022-2023 ல் உயிர் சேதங்கள் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை  கொடுத்த 48 விபத்துகள் நடந்துள்ளது.இது 2021-2021 ஆண்டை விட 13 விபத்துகள் அதிகம்.அதே போல 2022-2023 ல் உயிர் சேதம் இல்லாத விளைவுகளை கொண்ட 162 விபத்துகள் நடந்துள்ளன.இதில் 35 விபத்துகள் Signal Passed at Danger (SPAD) வகையான விபத்துகள் அதாவது சிக்னல் கோளாறு சிக்னலை கவனிக்காமல் நடக்கும் விபத்துகள் தற்போது நடந்த விபத்தை போல பெரும் உயிர்ச்சேத்தை உருவாக்கும்.

இதற்கு முக்கிய காரணம் இரயில்வே துறையில் முக்கியமான பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதே. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் மூலம் நாடுமுழுவதும் 1275 ரயில்நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்று மோடியின் பாஜக அரசாங்கம் பெரும் தம்பட்டம் அடித்து சுத்தியது.

சில மாதங்களாக வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவங்கி வைப்பதற்காக மோடி பல ரயில் நிலையங்களுக்கு சென்று வந்தார் அதற்கு பல கோடி ரூபாய் செலவுகள் செய்யப்பட்டது. நாங்கள் வந்தே பாரத் ரயில் மூலம் நல்ல அனுபவத்தை பயணிகளுக்கு கொடுக்கப்போகிறோம் என்று கூறிகொண்டே பயணிகளின் பாதுக்காப்பை கோட்டை விட்டது. இதுவே இந்த பெரும் இரயில் விபத்திற்கு அடி காரணமாக இருக்கிறது ‌

தம்பட்டம் அடிக்க பலகோடி செலவு செய்த பாஜக இந்திய ரயில்வேயில் லட்சக்கணக்கில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவோ, சிக்னல் சிஸ்டத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கோ எத்தனை லட்சங்கள் செலவழித்தது?

இந்திய இரயில்வே துறையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய சிக்னல் தொழில் நுட்பங்களை கொண்டுவருவதற்கு இரயில்வே வாரியத்திடமோ, நிபுணர்களிடமோ, ரயில்வே சங்கங்களிடமோ ஆலோசனை செய்துள்ளதா?

இந்திய ரயில்வே துறையில் நிரப்பப்படாத காலிபணியிடங்களால் ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களுக்கு அதிகரித்து இருக்கும் பணிச்சுமையும் இந்த விபத்திற்கு காரணமாகும். குறிப்பாக லோகோ பைலட்டுகள் பணியிடங்களில் அதிகம் நிரப்பப்படாமல் உள்ளது‌. இதனால் அவர்கள் அதிக நேரம் பணிசெய்ய நிர்பந்திக்க படுகிறார்கள்.

அதிக பணி நேரத்தால் லோகோ பைலட்டுகளுக்கு உருவாக்கும் தூக்கம் இன்மை சோர்வு உள்ளிட்ட காரணங்களால் சிக்னலை கவனிக்காமல் சில விபத்துகள் அரங்கேறி வருகிறது. அதே போல முறையாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் இருப்பதும் இத்தகைய விபத்திற்கு இட்டுச்செல்கிறது‌.

முறையாக நிதி ஒதுக்கீடு செய்து தேவையான புதிய தொழில்நுட்பங்களை இந்திய ரயில்வே துறையில் பயன்படுத்துவது‌ம் முறையாக இருக்கும் அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்புவதுமே இத்தகைய விபத்துகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும்.

கட்டுரையாளர்: சேதுசிவன்

Leave a Reply