தமிழக அரசானது சென்னையை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் உள்ள பல்வேறு பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைத்து “அவுட்சோர்சிங்” முறை பணியிடங்களாக மாற்றியமைக்கப் போவதாக அரசாணை (எண் 152) வெளியிட்டுள்ளது. இவை நகராட்சி, உள்ளாட்சிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை ஒட்டுமொத்தமாக ஒப்பந்த பணியிடங்களாக்கும் முயற்சி.
நிதி பற்றாக்குறை:
மனித வள ஆற்றலானது ஒரு நிர்வாகத்திற்கு மிக முக்கியமானது. ஆனால் அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலி பணியிடங்களை நிரப்பி சம்பளம், ஓய்வூதிய பலன்களை வழங்கும் செலவு அதிகமாகிறது. அதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிதி ஆதாரம் இல்லையெனவும், அரசாங்கத்திற்கு அதிகமான மனித வள ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே அதனை பூர்த்தி செய்வதற்கு ஆலோசனைகள் வழங்க “மனித வள சீர்திருத்த கமிட்டி” ஒன்றை தமிழக அரசு (அரசாணை எண் 115) அமைத்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் “அவுட்சோர்சிங்”:
இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையிலான நிரந்தரமற்ற வேலையாக மாற்றுவதற்கான முடிவை வெளியீட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதமானது அதிகரித்திருக்கும் நிலையிலும், கோவிட நெருக்கடியினால் கடந்த காலங்களில் அரசின் பணியிடங்களை முறையாக நிரப்பாமல் விட்டதாலும் அரசு அலுவலகங்களின் பணிகள் தேங்கி கிடக்கின்றன. பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் தமிழக அரசாங்கமானது இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தூய்மைப்பணி, ஓட்டுநர் பணி, வரி வசூலிக்கும் அலுவலர் பணி, ஆவண எழுத்தர் பணி மற்றும் குடிநீர் விநியோக பணி என நிர்வாகத்தின் அடிமட்டத்தில் உள்ள “டி” பிரிவு பணியிடங்கள் போன்ற பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றும் உள்ளாட்சி பணியிடங்களில் வெளி முகமை (அவுட்சோர்சிங்) மூலம் ஆட்களை தேர்வு செய்யும் முடிவை எடுத்துள்ளது. இதனால் உள்ளாட்சி துறையே தனியார்மயமாகும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே அரசின் பல துறைகளில் பின்பற்றப்படும் ஒப்பந்தப்பணி முறைகளினால் தொழிலாளர்களின் நலன்கள் பல இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டன. தனியார் நிறுவனத்திடம் உள்ளாட்சி பணியிடங்களை ஒப்படைத்தால் மக்கள் நலனை கருதாமல் லாப நோக்கமே முதன்மையானதாக கருதி செயல்படும்.
தொழிலாளர் நலனுக்கு விரோதமானது:
மேலும் இந்த முறையினால் பணிக்காலத்தில் ஒருவர் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரருக்கு பணி வழங்குவதை தடை செய்கிறது. அவருக்கான ஓய்வூதிய பலன்கள் மறுக்கப்படுகின்றன. பதவி உயர்வோ, சம்பள உயர்வோ அடிப்படை கட்டாயம் கிடையாது. தற்போது 100 தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களே வருங்கால வைப்பு நிதி திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர் நல சட்டங்களை ஒன்றிய அரசு தனியாருக்கு சாதகமாக திருத்தி அமைத்திருக்கும் நிலையில் அவுட்சோர்சிங் முறையால் தொழிலாளர்களுக்கு எவ்வித பயன்களும் கிடைக்கப்போவதில்லை.
தனியார்மய ஆபத்து:
கோவை மாநகராட்சியில் தண்ணீரை விநியோகிக்கும் பணியை சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததன் விளைவே தனியார்மயத்தின் ஆபத்திற்கு ஓர் உதாரணம். 24 மணிநேரமும் தண்ணீரை வழங்குவோம் எனக்கூறிய சூயஸ் 10 நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீரை வழங்கி வருகிறது. இதில் எங்கே இருக்கிறது மக்கள் நலன்? அதோடு தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை பெரும் பிரச்சனையாக தமிழகத்தில் உருவெடுத்துள்ளது. அத்துக்கூலிகளாக அடிமாட்டு விலைக்கு வெளிமாநில தொழிலாளிகளை அழைத்து வரும் வெளி முகமை நிறுவனங்கள் (இடைத்தரகர்கள்) லாபத்தை காரணம் காட்டி உள்ளூர் தொழிலாளர்களுக்கு, இளைஞர்களுக்கு வேலை கொடுக்க மறுத்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர் குறித்து எவ்வித வரையறையையும் தமிழக அரசாங்கம் மேற்கொள்ள நிலையில் அவுட்சோர்சிங் முறையினால் உள்ளாட்சி அமைப்பு பணிகளிலும் வெளிமாநில தொழிலாளிகளை தனியார் நிறுவனங்கள் நியமிப்பதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. மேலும் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியிடங்களை வசதி படைத்தவர்கள் பேரம் பேசி பெறுவதோடு ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் , மக்கள் பணிகளுக்கான திட்டங்களில் லஞ்ச லாவண்யத்திற்கும் வழிவகுக்கும் அபாயம் ஏற்படும்.
தேர்தல் வாக்குறுதி:
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் 10 வருடங்களாக உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த முறையில் பணிபுரிபவர்களை நிரந்தரமாக்குவோம், வீட்டில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவோம் என கூறிவிட்டு, தற்போது அரசுப்பணியையே இல்லாமல் ஆக்கும் வேளைகளில் இறங்கியுள்ளது. சமூக நீதியே உயிர் மூச்சு என சொல்லும் முதல்வர் அவர்களே, இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச்செய்யும் தனியார்மயத்தை தமிழக அரசாங்கம் கைவிட வேண்டும்.