1999-ம் ஆண்டு யுனெஸ்க்கோ தலைமை நிர்வாக இயக்குனர் பிரெட்ரிகோ மேயருக்கும், தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு இடையே நடந்த உரையாடல் தொகுப்பு:
பிரெட்ரிகோ: அடுத்த இருபது ஆண்டுகளில் வறியோர் வாழ்நிலை மேம்பாடடைவதில் ஏதேனும் நம்பிக்கையிருக்கிறதா?
பிடல்: மனித சமூகம் விழிப்புணர்வு கொள்ளத் துவங்கியிருக்கிறது. சியாட்டிலிலும், தாவோஸிலும் எள்ள நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்.
பிரெட்ரிகோ: ஏப்ரலில் ஹவானாவில் நடைபெற்ற ஜி 77 நாடுகளின் உச்சி மாநாட்டில், சர்வதேச நியதிகளை நெறிமுறைப்படுத்தும் விதத்தில் பல்வேறு யோசனைகளை முன்வைத்தீர்கள்! அவற்றை மீண்டும் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
பிடல்: பல்வேறு வளர்முக நாடுகளின் அந்நியக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதோடு. பல்வேறு நாடுகளுக்கு தக்க நிவாரணம் அளிக்க வேண்டும் எள்பதற்காகவும் உச்சி மாநாட்டில் நான் வாதாடினேன்.
இது தவிர சர்வதேச நாணய அமைப்பையும் கலைத்து விட வேண்டுமென்று கூறினேன். உலகப் பொருளாதாரத்தில் எவ்வித ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்தாத இந்த அமைப்பிலிருந்து மூன்றாவது உலக நாடுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மூன்றாவது உலக நாடுகள் எழுப்பிட இதுவே தக்க தருணமாகும். இந்த கபடமான, நவீன தாராளமயக் கொள்கைகள் ஒவ்வொரு வளர்முக நாடுகள் மீதும் விபரீத விளைவுகளை உருவாக்குகிறது. அதிலும் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளும், கரீபியன் நாடுகளும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறது. இன்றைய உலக பொருளாதார நெறிமுறைகள் விளைவித்த படுகொலை குறித்து “ந்யூரம்பர்க்” பாணியிலான இன்னொரு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினேன்.
பிரெட்ரிகோ: இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கிறது.
பிடல்: நிச்சயமாக இல்லை ஒரு வேளை குறைத்து வேண்டுமானால் மதிப்பீடு செய்திருக்கலாம். இதுகுறித்து நுட்பமாக உணரும் பொருட்டு தெற்கத்திய நாடுகளின் உச்சிமாநாட்டில் எனது நிறைவுரையிலிருந்து சில பகுதிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “ஆப்பிரிக்காவில் இருந்தவந்த இன வேற்றுமை குறித்து மக்கள் பேசி வந்தனர். இன்றைய தினம் உலகெங்கிலும் இருந்து வரும் இன வேற்றுமை குறித்து நம்மால் பேச முடியும். நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாழ்வது, சுகாதார வசதி, கல்வி பாதுகாக்கப்பட்ட குடிநீர் உணவு உறைவிடம், வேலை வாய்ப்பு போன்ற அடிப்படையான மனித உரிமைகளே மறுக்கப்படுகிறது.
தங்களின் எதிர்காலம் குறித்து மட்டுமின்றி தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் நம்பிக்கை கொண்டிருக்க முடியவில்லை. இந்தப் போக்கில் சுவாசிக்கக்கூடும் காற்றும் மறுக்கப்படுகிறது. விரயமாகும் நுகர்வோர் சமூக அமைப்பு சுவாசிக்கும் காற்றை நஞ்சாக்குவதோடு மனிதனின் வாழ்முறையை அழிக்கிறது. அடிமைமுறை காலனியாதிக்கம், கொடூரமான சுரண்டல் ஆகியவை வளர்ச்சியின்மைக்கும் வறுமைக்கும். காரணிகளாக இருப்பதை செல்வந்த நாடுகள் மறக்கடிக்க முயற்சிக்கிறது பல நூறு ஆண்டுகளாக நமது நாடுகள் இந்தக் கொடுமைக்கு ஆட்ப்ட்டிருந்தன.
நமது நாடுகளை தரங்கெட்டதாக அவர்கள் கருதினர். ஆப்பிரிக்கர்கள் ஆசியர்கள், கரீபியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் மத்தியில் வறுமை நிலவி வருவதற்கு அவர்களின் இயலாமையே காரணம் என்று சித்தரிக்கப்படுகிறது கறுப்பர்கள், மஞ்சள் நிறத்தவர். சுதேசிகள். இதர கலப்பினத்தவர்கள் ஆகியோரால் வளர்ச்சியை பெறமுடியாது என்பது மட்டுமின்றி தங்களை நிர்வகித்துக் கொள்ளக்கூட அவர்களால் முடியாது என்று கூறி வந்தனர். அத்தோடு செல்வந்த நாடுகளால் திணிக்கப்படும் தற்போதைய பொருளாதார நெறிமுறைகள் கொடூரமானதோடன்றி அநீதியானது, மனிதத்தன்மையற்றது என்பதில் உறுதி கொண்டிருக்கிறோம். வரலாற்றுப் போக்கில் இது தவிர்க்க முடியாதது என்பதற்கு மாறாக இனத் துவேஷத்தை உள்ளடக்கியதாகவே இருக்கிறது
ஒரு காலத்தில் நாஜிகளின் இனப் படுகொலைகளுக்கும். ஐரோப்பாவில் இருந்த சித்தரவதை முகாம்களுக்கும் இனவெறிக் கோட்பாடுகளே ஊக்கமளித்தது. இன்றையதினம் மூன்றாவது உலக நாடுகளில் உள்ள அகதிகள் முகாமில் இது பிரதி பலிக்கிறது. வறுமை, பசி, வன்முறை ஆகியவற்றின் கோரமான விளைவுகளுக்கு பட்டவர்களே இந்த முகாம்களில் இருக்கின்றனர். இதுபோன்ற இனவெறிக் கோட்பாடுகளே ஆப்பிரிக்கர்களின் ஆபாசமான இனவெறி அமைப்புகளின் ஆதர்சமாக இருந்தது.
ஏழை நாடுகளின் அளப்பரிய உரிமைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். அதேநேரத்தில் மனித சமூகத்தின் நீடித்த நிலைபாட்டிற்கு உதவிகரமாக இல்லாததோடு மட்டுமின்றி, தங்களைத் தாமே நிர்வகிக்க இயலாத முரண்பாடுகள் அதிகரித்து வருகின்ற அதேநேரத்தில் சுயநலனை பாதுகாத்து வருகின்ற முதலாவது உலகத்திலிருந்து மீட்சி பெறும் பொருட்டும் போராடி வருகிறோம். உலகை நிர்வகிப்பதற்குரிய அந்த தலைமை ஜனநாயகத் தன்மை பொருந்தியதாக இருக்க வேண்டும். இதை துல்லியமாகவே நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். இந்த பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில் நாங்கள் இன்றைய தினம் போராடி வருகிறோம்.”
பிரெட்ரிகோ அவர்களே நாம் நீடித்திருக்கும் பொருட்டு மட்டுமின்றி மற்ற நாடுகளும் நீடித்திருக்கும் பொருட்டு, உடனடியாக போராட்டத்தை நடத்தவேண்டும். இதில் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது. ஏனெனில் அனைவருமே ஒரே ஸ்திதியில்தர்ன் இருக்கிறோம்.
இதுகுறித்த அந்த உச்சி மாநாட்டில், உருப்படியான பல்வேறு யோசனைகளை முன்வைத்தேன். சிக்கலான மாறுபட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளின் பேரில் அது அமைந்திருந்தது. வளர்ச்சிப் போக்கில் இருந்து வரும் நாடுகளுக்காவது, மாறுபட்ட விலைக் கொள்கைகளை பின்பற்றுமாறு எண்ணை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது உலக நாடுகளை நான் கேட்டுக் கொண்டேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெனிசூலாவும் மெக்சிகோவும் “சான்ஜோஸ்” உடன்பாட்டிற்கிணங்க இம்மாதிரியான ஏற்பாடு ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. இதன் மூலம் மத்திய அமெரிக்க நாடுகளும் கரீபியள் நாடுகளும் தாராளமான வழிமுறைகளின் பேரில் எண்ணை வாங்கிக் கொள்ள முடிந்தது.
பிரெட்சிகோ: ஐநா பற்றிய உங்களது அபிப்ராயம் கடுமையாக இருக்கிறதா?
பிடல்: அப்படியொன்றும் இல்லை. இந்த அமைப்பே காலத்துக்கு பொருந்தாத அமைப்பாக இருப்பதாக நான் கருதுகிறேன். இதோடன்றி 58 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை மீண்டும் சீரமைத்திட வேண்டியது அவசியமாகிறது. ஐக்கிய நாடுகள் சபை என்பது அதன் பெயருக்கேற்றபடி விளங்க வேண்டும். அசலான மனித நேயத்தோடு, நீண்ட கால இலக்குகளின் அடிப்படையில் இதிலுள்ள உறுப்பு நாடுகள் உண்மையிலேயே ஒன்றுபட வேண்டும். பெரிய நாடுகள், சிறிய நாடுகள். வளர்ச்சி பெற்ற நாடுகள், வளர்முக நாடுகள் போன்ற அனைத்து உறுப்பு நாடுகளுமே தங்கள் குரலை ஒலித்திட வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
ஐ.நா ஒரு பெரும் விவாத மேடையாக திகழவேண்டும். அங்கே அனைவரும் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, விவாதிப்பதாயும் இருக்க வேண்டும். அது உண்மையிலேயே ஜனநாயக பூர்வமான தளத்தை கொண்டதாக செயல்பட வேண்டும். மேலும் ஜி-77 அணிசேரா நாடுகளின் அமைப்பு போன்ற குழுக்கள் ஐநா அமைப்பிற்குள்ளாக செயல்பட வேண்டுமென்பது முக்கியமானது.
ஐ.நா.வின் கட்டமைப்பு என்பது முற்றிலுமாய் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் இன்றைய உலகில் சமூக வளர்ச்சியில் இச்சபை பெரும்பங்காற்ற முடியும். மூன்றாவது உலக நாடுகளைப் பொறுத்த மட்டில், அதன் அத்தியாவசியத் தேவையென்பது மட்டுமின்றி உலக வங்கியின் செயல் முறை என்பது நிதி நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் நிதி உதவி அளிப்பதல்ல. அதற்கு மாறாக” சமூக வளர்ச்சியை மேம்படுத்துவதே பிரதான அம்சமாக திகழ்கிற ஆயின் இத்தகைய வளர்ச்சிப் போக்கு இல்லாதது இக்காலத்தின் மாபெரும் சோகமான நிகழ்வாக இருக்கிறது.”
பிரெட்ரிகோ: இன்றைய தினம் உலகப் படத்தில் என்னென்ன மாறுதல்களை செய்ய விரும்புகிள்றீர்கள்?
பிடல்: உண்மையான மனிதர்கள் நிறைந்த உலகமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். உச்சாணி நிலையில் இருக்கக்கூடிய செல்வந்தர்களும், ஆதாரங்களை விரயம் செய்யும் நாடுகளும் இல்லாத உலகமாய் அது திகழ வேண்டும். ஒரு பக்கம் எண்ணற்ற நாடுகள் சொல்லொண்ணா வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. இன்னொரு பக்கத்தில் உலகில் பல்வேறு தனித்தன்மைகளும் கலாச்சாரமும் பிரத்யேகமாய் பாதுகாக்கப்பட வேண்டும். நியாயமும் ஒருமைப்பாடும் நிறைந்த உலகம், அநியாயங்களும் அடக்கு முறைகளும் யுத்தங்களும் இல்லாத உலகம் அது.
அறிவியலும் நவீன நுட்பமும் மனித சமூகத்திற்கு பயன்படக்கூடியதாய் இருக்கக்கூடிய உலகம். இயற்கையை பாதுகாக்கக்கூடிய உலகம், மக்கள் கூட்டம் இவ்வுலகில் நீடித்து வாழ்ந்திடுவதோடு மேன்மேலும் வளர்ச்சி பெறும். பொருட்செல்வத்தை மட்டுமின்றி ஆன்மீகச் செல்வங்களையும் பெறுவதோடு. திறமையையும் உழைப்பையும் உருவாக்கக்கூடிய அதில் மற்றொரு புதிய உலகத்தின் தேவை பற்றி கேள்விகள் எழ வேண்டிய அவசியம் கிடையாது. நான் காணும் உலகில் முதலாளித்துவ சிந்தனைக்கே இடமில்லை.
பிரெட்ரிகோ: உங்கள் அமைச்சரவையில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் புரட்சி வெற்றி பெற்ற போது பிறந்தவர்களல்ல!
பிடல்: ஆம் அவர்கள் இளைஞர்கள் என்பதோடு புரட்சிக் கட்டத்தில்தான் உருவானார்கள்.
பிரெட்ரிகோ: இன்றைய தினம் கியூபா மக்கள் எவ்விதமான கனவுகளை கொண்டிருக்கிறார்கள்.
பிடல்: இன்றைய தினம் ஒரு கோடியே ஒரு லட்சம் கனவுகள் இங்கே இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
பிரட்ரிகோ: இந்தக் கனவுகள் கடந்த தலைமுறையினரின் கனவுகளைக் காட்டிலும் எந்த விதத்தில் வித்தியாசமானவை?
பிடல்: முன்னர் அவர்கள் தங்களின் சொந்த சந்தோஷத்தைப் பற்றிய கனவுகளையே கொண்டிருந்தனர். ஆயின் இன்றைய தினம் அனைவருமே ஒட்டு மொத்த ஜன சமூகத்தின் மகிழ்வு குறித்த கனவுகளை கொண்டிருக்கின்றனர்.
பிரெட்ரிகோ: அரசியல் ரீதியாக முடிவெடுக்கும் வழிமுறைகளில், மக்களை பெருமளவில் இணைத்திட நீங்கள் இன்னமும் தயாராக இல்லையா?
பிடல்: மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாமல், கியூபாவும் புரட்சியும் நீடித்து இருக்க முடியும் என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்புகின்றீர்களா?
பிரெட்ரிகோ: யாருமே காலத்தை வென்றதில்லை. அரசில் உயர் பதவியில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி அல்லது சாதாரண ஆணோ பெண்ணோ எல்லோரும் ஒரே நிலைதான். உங்களுக்கு வாரிசு ஒருவரை உருவாக்குவது சரியானதாக படவில்லையா? ஆட்சி மாற்றம் நிகழும்போது அது கியூபா மக்களை அதிர்வடையச் செய்யாது அல்லவா?
பிடல்: இன்றைக்கு இல்லாவிட்டாலும் மனிதன் என்றாவது ஒருநாள் மரிக்கத்தான் வேண்டும் என்பதை நான் நன்கறிவேன், அதற்காக நான் மணம் வருந்தி நிலை குலைந்ததும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அதுவே எனது வாழ்வில் மிக மூக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன். எனது புரட்சிகர இயல்பின் காரணமாக, புரட்சிப் போராளி என்று அழைக்கப்படும் அபாயத்திற்கு ஆளானேன், இது பற்றி எவரும் என்னை நிர்ப்பந்தித்தது கிடையாது.
தவிர நான் நீடித்த நாட்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு குறைவானது என்பதையும் அறிவேன். நான் நாட்டின் அதிபரல்ல. ஒரு சாதாரண மனிதனே. பதவியையும், பொறுப்பையும் பாரம்பரியமாக நான் கொண்டிருக்கவில்லை. அவ்வாறே நான் ஒரு மன்னனுமல்ல. எனவே வாரிசு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை நான் ஏற்கவில்லை, அப்படியிருந்தாலும் குழப்பமான நிலையில் மாற்றம்’ நேரிடுவதை வாரிசுகளால் தடுக்க முடியாது. இது விபத்து என்பதல்ல. அம்மாதிரியே வேறு மாதிரியான மாற்றத்திற்கும் அவசியமில்லை.
ஒரு சமூக அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்பை நோக்கிய பயணம் நாற்பதாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. இதில் ஒருவனுக்கு மாற்று இன்னொருவன் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு அச்சு அசலான புரட்சி நிலை கொண்டு, உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிந்தனைகளும் உணர்வோட்டங்களும் இதன் பலனை அளிக்கத் தொடங்கும் போது, எந்த மனிதருமே தவிர்க்க முடியாதவர்கள் அல்ல. அவருடைய தனிப்பட்ட பங்காற்றல் என்னதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் இதே நிலைமைதான்.
கியூபாவில் எந்த தனி மனிதருக்கு வீர வழிபாடு நடைபெறுவதில்லை. உயிரோடு இருக்கக்கூடிய தலைவர்களின் அதிகார பூர்வமான அரசாங்க புகைப் படங்களை கியூபாவில் நீங்கள் பார்க்கவே முடியாது. அம்மாதிரியே தெருக்களுக்கோ, பூங்காக்களுக்கோ பள்ளிகளுக்கோ, உயிரோடு இருக்கும் எந்த தலைவரின் பெயரும் சூட்டப்பட்டதில்லை.
சகல மீட்டத்திலும் பொறுப்புகள் சீராக வினியோகிக்கப்பட்டதோடு வேலைப்பிரிவினையும் பலர் மத்தியில் பரிந்துரைக்கப்படுகிறது. பெருமளவில் இருக்கக்கூடிய இளைஞர்கள் ஏற்கெனவே அனுபவம் பெற்ற மக்கள் ஆகியோருடன் இணைத்துக் கொண்டுள்ள பழைய புரட்சியாளர்களில் சிறிய குழு ஆகியோரே நாட்டை நடத்திச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி பெருமை கொண்டிருப்பதோடு நெறி முறைகளின் உயர் அமைப்பாக கட்சி இருந்து வருவதை எவராலும் புறக்கணிக்க முடியாது. எனவே கவலை ளெள்ள வேண்டிய அவசியமில்லை.
பிரெட்ரிகோ: நீங்கள் கூறியது முற்றிலும் சரியே ஆயினும் தற்போது தனிநபர்களுக்கும் கட்டமைப்பிற்கும் மாற்றாக ஒரு கட்டத்தில் வேறு ஒரு நிவாரணப்படை கையகப்படுத்திக் கொள்ளும் போது இன்று இருந்து வரும் சமூக சாதனைகள் கேள்விக்குரியாகக் கூடிய அபாயம் எழக்கூடுமல்லவா?
பிடல்: நீங்கள் நிவாரணப் படை என்று குறிப்பிட்டீர்கள். அது தயாராக இருக்கிறது என்பது மட்டுமின்றி, நீண்ட காலமாகவே தயார்படுத்திக் கொண்டும் வருகிறது.
பிரெட்ரிகோ: பழங்கதை பேசி வாழ்வது என்பது ஒரு விருப்பம். ஆயின் நீங்கள் மறைந்த பிறகு ஒரு மரபு சார்ந்த வரலாற்று உருவமாக உங்கள் நினைவு போற்றப்படுமா?
பிடல்: நான் ஒன்றும் கற்பனை பாத்திரமல்ல. தொடர்ந்து வந்த அமெரிக்க நிர்வாகிகள் என்னை கற்பனைப் பாத்திரம், மாயை என்றெல்லாம் புறந்தள்ளினார்கள். நிகழ்காலத்திலேயே வீர புருஷனாக சித்தரிக்கப்படுகிறேன் என்றால், பல முறை தோல்வியுற்ற அவர்களின் கொலை முயற்சிக்குத்தான் நன்றி, சொல்ல வேண்டும். ஆனால் அதே நேரத்தில் இறந்த பின்னரும் என்றும் என்னைப் பற்றிய நினைவுகள் தொடரும்.
தமிழ் மொழிபெயர்ப்பு: மார்க்சிஸ்ட் மாத இதழ்