இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஆளுமை!

பாட்டாளி வர்க்க தளபதிகளில் ஒருவரான தோழர் ஏங்கெல்ஸ் பெரும் தொழிலதிபரின் மகனாக இருந்தாலும் தன்னை பாட்டாளி வர்க்கத்திற்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தது போல இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்திற்காக உழைத்த சரித்திரத்தில் சாதனைகளை படைத்தவர் தோழர் பி ஆர் எனும் பி.இராமமூர்த்தி.சிறு வயது முதலே சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வளர்ந்து வந்தவர்.

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் எல்லோரைப் போலவும் காங்கிரஸ் இயக்கத்தாலும் காந்தியாலும் ஈர்க்கப்பட்டவர்களுள் ஒருவராக இருந்தார். திருவல்லிக்கேணியில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு நடைபெறும் சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வந்த பி.ஆர் காந்தியின் அந்நிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பள்ளி செல்லும் போது தன் வீட்டில் கதர் வாங்கி கொடுத்தால் தான் பள்ளி செல்வேன் இல்லையென்றால் செல்ல மாட்டேன் என்று வீட்டிலேயே சில நாட்களுக்கு தர்ணா செய்து போராட்டத்தில் வெற்றி கண்டவர்.தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் அதற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்ற போர் குணத்தை வளர்த்துக் கொண்ட தோழர் பி.ஆர் காசியில் கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருந்த போது பகத்சிங்கின் தலைமையில் உருவாக்கப்பட்டிருந்த நவ் ஜவான் பாரத் சபா அமைப்பின் காசி கிளையில் உறுப்பினராக இருந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

1928 சைமன் கமிஷன் எதிர்ப்பு இந்தியா முழுவதும் தீவிரமடைந்திருந்தது காசி நகருக்கு வந்த சைமன் குழுவை எதிர்த்து தோழர் ராமமூர்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி 30 படகுகளை வாடகைக்கு நிறுத்தி கங்கை நதியில் சைமன் கமிஷன் செல்லும் போது அங்கும் இங்குமாக 30 படகுகளிலும் தன் நண்பர்களோடு சைமனே திரும்பி போ!!. ஆங்கில ஆட்சி ஒழிக!! சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை!! என்ற உரத்த குரலில் முழக்கமிட்டனர். இதை கண்டு சைமன் கமிஷன் திகைத்து போனது. பெரும் நீர் சுழல் மிகுந்த அந்த கங்கையில் பி. இராமமூர்த்தியையும் அவர் நண்பர்களையும் ஆங்கிலேயர்களால் ஒன்றும் செய்து விட முடியவில்லை.

இடது கருத்தியல்:-

1929 ல் கம்யூனிஸ்டுகள் மீது புனையப்பட்ட மீரட் சதி வழக்கு விசாரணையை கம்யூனிஸ்டுகள் நீதி மன்றத்தை பிரச்சார மேடையாக பயன்படுத்தி விவாதித்தது பத்திரிகையில் வெளியானது இந்த விஷயங்கள் தோழர் பி. ராமமூர்த்தி க்கு இடதுசாரி கருத்துகளின் மீது பார்வையை ஏற்படுத்தியது.

அரிஜன சேவை சங்க ஊழியர்

பூனா ஒப்பந்தத்திற்கு பிறகு காந்தி தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த முடிவு எடுத்து அரிஜன சேவா சங்கத்தை தொடங்கியபோது அச்சங்கத்தில் தன்னை ஒரு ஊழியராக இணைத்துக் கொண்டார் தோழர் ராமமூர்த்தி. சங்கத்தின் செயல்பாடானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுய சுத்தங்களை சொல்லிக் கொடுப்பதும் குழந்தைகளை சுத்தப்படுத்துவது என்ற NGO வேலைகளாகவே இருந்தது. அச்சமயத்தில் தோழர் பி ஆர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தர்மகர்த்தாவிற்கான தேர்தல் நடப்பதை அறிந்தார் கோவிலின் சுவருக்கு அருகில் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக்கூடாது என்று இருந்த அந்த நிலையை உடைப்பதே அம்மக்களுக்கு செய்யும் மிக முக்கியமான சேவையாக இருக்கும் என்பதை பி‌ஆர் உணர்ந்தார். எனவே அதன் அடிப்படையில் கோவில் தேர்தலுக்கான விதிகளை படித்து முடித்த ராமமூர்த்தி திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வந்த செருப்பு தைக்கும் தொழிலாளர்களில் 200 ஆண்களை அழைத்து அவர்கள் தோள்பட்டையில் சங்கு சக்கரத்தை சூடு போடச் செய்தார் அதன் பிறகு அவர்களை பார்த்தசாரதி கோவிலுக்கு அழைத்துச் சென்று வாக்காளர்களாக பதியும்படி வலியுறுத்தினார்‌.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் பெயரில் பி.ஆர் மேல்முறையீடு செய்து வாதாடுவதற்காக டி ஆர் வெங்கட்ராமன் சாஸ்திரியை ஏற்பாடு செய்து வழக்கில் வெற்றியும் பெற்றார். தர்மகர்த்தவிற்கான தேர்தலில் 200 பேரும் வாக்களித்தனர் ஒருவேளை அந்த 200 தொழிலாளர்களில் யாருக்கேனும் சொத்துரிமை இருந்திருந்தால் அவர்கள் தர்ம கருத்தாவாகவே போட்டியிட்டு தர்ம கருத்தாகவும் அன்று ஆகி இருக்க முடியும் அதற்கான சாத்தியக் கூறுகளும் அன்று இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சோப்பும் எண்ணெய்யும் கொடுப்பதாலும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று வெறும் பிரச்சாரம் மட்டும் செய்தால் பத்தாது இருக்கும் சட்டங்களை அதிதீவிரமாக பயன்படுத்தி எளிய மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுப்பதே சரியான பாதை என்பதை இந்தியாவிற்கே இந்த வழக்கின் மூலம் தோழர் பி.ஆர் உணர்த்தி காட்டினார்.

இது மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதை அன்று இந்திய மக்களுக்கு அறியச் செய்வதற்காக காந்தியே ஹரிஜன் பத்திரிகையின் தலையங்கத்தில் இதை விவரித்து இருந்தார்.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து கிளர்ச்சி

தென்தமிழகத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒரு பகுதியினரை குற்ற பரம்பரை என்று வகைப்படுத்தி ஆங்கிலேய ஆட்சி கொடுமைப்படுத்தி வந்த காலத்தில் ‌ காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால் 1937 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற பின் ராஜாஜி தலமையிலான காங்கிரஸ் அரசு சட்டத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டது

இச்சட்டத்தை ஒழிப்பதற்காக தோழர் பி ஆர் தோழர் ஜீவா முத்துராமலிங்கம் அவர்களோடு இணைந்து மிகப்பெரும் பேரணி போராட்டம் என கிளர்ச்சி செய்து அருப்புக்கோட்டை மாநாட்டில் மூன்று மாதத்தில் சட்டத்தை நீக்கா விட்டால் சட்டம் மீறப்படும் என்று ராஜாஜி அரசிற்கு நேரடியா எச்சரிக்கையையும் விடுத்தனர்.

தொழிலாளர்களின் நாயகன்

பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற அரசாக இந்தியா இருக்கிறது. 1937ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் போது முதலாளிகளின் மீது பிரிட்டிஷ் அரசை ஒருவரால் நடவடிக்கை எடுக்க வைக்க முடிந்தது என்றால் அது தோழர் பிஆர் எனும் சரித்திர நாயகனே. மதுரையில் மெஜூரா கோட்ஸ் லேபர் யூனியன் முன்னெடுத்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.நாள் கடந்த போராட்டத்தை தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி உடைத்து விடலாம் என்று மில் முதலாளிகள் திட்டமிட்டனர்.அவர்களின் நடவடிக்கையை உடைத்து எறிவதற்காக தோழர் பி.ஆர் மிக சாதுர்யமாக அரசியல் நகர்வுகளை செய்தார். அதாவது அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜியின் நண்பர்களான வைத்தியநாத ஐயரையும் லட்சுமி சங்கர் ஐயங்காரையும் அழைத்துக் கொண்டு முதல்வரை சந்தித்து தொழிலாளர்கள் பிரச்சினையில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.எனவே ராஜாஜி மில் நிர்வாகம் ஒப்பந்தம் இறுதியாகாமல் ஆலையை திறக்க கூடாது என்று 144 தடை உத்தரவு பிறப்பித்தது.இந்தியாவிலேயே முதலாளிகள் மீது எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கையாகவே இது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

சிறுவனாக சுதந்திரப் போராட்டத்திற்குள் நுழைந்த பி ராமமூர்த்தி படிப்படியாக கற்று பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு இடதுசாரி கருத்தியலை ஏற்றுக்கொண்டு தோழர் பி.ஆர் ஆக மதுரை சதி வழக்கு சென்னை சதிவழக்கு

என சந்தித்து தன் இயல்பான பிடிவாத குணத்தால் பாட்டாளி வர்க்கத்திற்கான ஓர் அரசியல் அமைப்பை தமிழகத்தில் கட்டி எழுப்பிய அந்த மாபெரும் சரித்திர நாயகன் 1987 டிசம்பர் மாதத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அந்நேரத்தில் இந்திய அரசாங்கம் இ எம் எஸ் ,பிடி ரணதிவே, ஹர்கிசன் சிங் சுர்ஜித், பி.ஆர் என 90 நபர்களை கேட்காமலேயே சிறந்த சுதந்திர போராட்ட வீரர்களாக தேர்வு செய்து விருதையும் ஓய்வூதியமும் அளித்தது. தோழர் பி.ஆர் சிகிச்சையில் இருந்த போது தமிழரசு கழகத் தலைவர் மாபோ சிவஞானம் மற்றும் மூன்று அதிகாரிகள் பி.ஆர் யை சந்தித்து விருதை பெற்றுக் கொள்ளும்படி கேட்டதற்கு அது எனக்குத் தேவையில்லை எங்கள் கட்சி முடிவே இறுதியானது என்று தெளிவாக பதில் அளித்தார்

1987 டிசம்பர் 15 அன்று சென்னையில் நடைபெற இருந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் வரவேற்பு குழு தலைவராக இருந்த தோழர் பி ஆர் இறுதியாக ஆசைப்பட்ட ஒரே விஷயம் மாநாட்டில இளைஞர்கள் மத்தியில் உரையாற்ற வேண்டும் என்பதே ஆனால் தோழர் பி ஆர் டிசம்பர் 15 அன்று தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.

நாட்டின் வளர்ச்சி என்பது சுய சார்புடன் இருக்க வேண்டும் என்று அதற்காக போராடி சேலம் உருக்காலை நெய்வேலி பழுப்பு நிலக்கரி என்று நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரும் பங்காற்றியவர். தோழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பி ஆர் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்பவராக திகழ்ந்தார்.தன் தோழர்களுக்காக யாரோடு வேண்டுமானாலும் வாதிடுவார்.

சுரண்டலற்ற சமூக மாற்றத்திற்காக போராடும் எல்லோரும் தோழர் பி.ஆர் யை நினைவு கூறுவோம் இந்தியாவின் விடுதலைப்போர் அவன் பெயர் சொல்லும் நாளை இமயம் முதல் குமரி வரை அவன் போர் வெல்லும்.

கட்டுரையாளர்: சேதுசிவன் (திண்டுக்கல் DYFI மாவட்ட பொருளாளர்)

Leave a Reply