இந்தியாவில் 1940 முதல் 1950 வரையிலான காலகட்டம் கம்யூனிஸ்ட்டு இயக்கங்களின் பொற்காலமாக இருந்தது. இக்காலத்தில்தான் தெலங்கானா ஆயுதப்போராட்டம், தெபாகா, புன்னப்புரா வயலார், கண முக்தி பரிஷத், சர்மா பள்ளத்தாக்கு போன்ற நிலபிரபுத்துவத்திற்கு எதிரான பல்வேறு புரட்சிகர விவசாய போராட்டங்கள் நடந்தன. அதன் ஒருபகுதியாக மகாராஷ்டிரா மாநிலம், தானேவில் வார்லி ஆதிவாசி மக்களின் வீரமிக்க போராட்டமும் நடந்திருந்தது. இன்றோடு வார்லி மக்கள் எழுச்சி போராட்டம் நடந்து 75 ஆண்டுகள் ஆகின்றது.
இந்தியாவில் விடுதலை போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த காலம் அது. அச்சமயத்தில்தான் சீனாவில் தோழர் மாவோ தலைமையில் விவசாயிகள் புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றி இருந்தனர். இதனால் எழுச்சியுற்ற இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் நாடுமுழுவதும் விவசாயிகளை சந்தித்து இயக்கமாக கட்டியெழுப்புவது என தீர்மானித்து இருந்தனர்.
மராட்டிய மாகாணத்தில் அன்று கிசான் சபை (AIKS) இல்லையென்பதால் பம்பாய் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்கள் – விவசாயிகளின் சமூக, அரசியல் உரிமைகளுக்காக பகுதி வாரியாக உள்ளூர் அளவில் போராடி வந்தது. விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்த இவ்வியக்கம் ஒடுக்குமுறை இல்லாத சமத்துவ சோசலிச கனவை கொண்டு தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமையை வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்தது.
மராட்டிய மாகாணம் தானே மாவட்டம் மன்னாரட்சி காலத்திலிருந்து, ஆங்கிலேயர் பின்னரான நிலபிரபுத்துவ ஆட்சியாளர்களின் காலம் வரை கொத்தடிமை மற்றும் திருமண அடிமை முறை ஆகியவற்றால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், ஆதிவாசி மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்தனர். தானே மாவட்டம் குன்பி விவசாயிகளை கொண்ட கடலோர பகுதி மற்றும் வார்லி ஆதிவாசிகளை கொண்ட மலைப்பகுதியாக இரண்டுப்பகுதிகளாக பிரிந்து இருந்தது.
தானே மாவட்டத்தில் விவசாயிகளின் அணிச்சேர்க்கைக்காக சென்ற பம்பாய் கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் பண்ணையார்களின் ஆதிக்கத்தையும், கொத்தடிமை முறையையும் ஒழிக்க விவசாயிகள் மத்தியில் அறைகூவல் விடுத்தனர். கிசான் சபையின் முதல் போராட்டம் கடலோர பகுதியான கல்யாணில் நடந்து முடிந்தது. குன்பி பகுதியில் கிசான் சபையை தொடங்கிய சாம்ராவ் பாருலேகர், விவசாயிகளின் மக்கள் சீனப்புரட்சியால் ஈர்க்கப்பட்டு தானே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளின் விவசாயிகளுடன் இணைந்து செயல்பட அனுமதி கோரியிருந்தார். பின்னர் கட்சியின் வழிகாட்டுதல்படி சாம்ராவ் பாருலேகருடன், கோதாவரி பாருலேகர் எனும் தோழரும் இணைந்து செயல்பட தொடங்கினர்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை கல்யாண் வாரச்சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர். ஆனால் வணிகர்களோ விவசாயிகளின் பொருட்களை சரியாக எடை கணிக்காமல் அவர்களை ஏமாற்றினர். இதனை எதிர்த்து விவசாயிகள் குரல் கொடுத்தனர். இதை கையிலெடுத்த கிசான் சபை, தோழர் பாருலேகர்கள் தலைமையில் 500 விவசாயிகளை செங்கொடியின் கீழ் அணிதிரட்டினர். இதன் மூலம் விவசாயிகள் போராட்டம் வெற்றியடைந்தது. இவை கிசான் சபை மற்றும் செங்கொடியின் மீது மக்களிடையே பரவலான செல்வாக்கை பெற்றுக்கொடுத்தது.
இந்தப் போராட்டத்திற்கு பிறகு தானே மாவட்டத்தில் கிசான் சபை அமைப்பதற்கான வேலைகளில் பாருலேகர்கள் ஈடுபட்டனர். மேலும் முதலாவது மராட்டிய மாநில கிசான் சபை மாநாடு நடைபெற இருந்தது. இதற்காக வார்லி ஆதிவாசி பகுதிகளில் இருந்து பிரதிநிதிகளை வரவழைப்பதற்காக பாருலேகர்கள் முதல்முறையாக அப்பகுதிக்கு சென்றனர். மக்யா தங்தா எனும் தலசாரி கிசான் சபை உறுப்பினர் ஒருவர் வார்லி ஆதிவாசி மக்கள் நிலபிரபுக்களால் அனுபவிக்கும் அடிமைத்தனங்களையும், துன்பங்களையும் கூறினார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தோழர்கள் கொத்தடிமை மற்றும் திருமண அடிமை முறை ஒழிப்பதற்கான தீர்மானங்களை மாநில மாநாட்டில் நிறைவேற்றினர். வார்லி ஆதிவாசி மக்களை ஒற்றுமையாக அணிதிரட்டி ஜமீன்தார்களுக்கு எதிராக போராட தயார்படுத்தும் வேளைகளில் கிசான் சபை ஈடுபட்டது. மராட்டிய மாநில முதல் கிசான் சபை மாநாட்டில் 7 ஆயிரத்திற்கு அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் பி.சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, பி.கிருஷ்ணா பிள்ளை, எம்.ஏ.ரசூல், தேஜா சிங் ஸ்வதந்த்ரா, என்.எம்.ஜோஷி ஆகிய முக்கிய கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்கள் பங்குபெற்று உரையாற்றினர்.
இதன்பிறகு தலசாரியில் 1945-ல் நடந்த ஆயத்த கூட்டத்தில் வார்லி ஆதிவாசி மக்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கவும், நிலபிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வார்லி ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் ஜரி என்னும் கிராமத்தில் கூட்டத்திற்கு கிசான் சபை முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் 5000 வார்லி பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இதனை சீர்குலைக்க ஜமீன்தார்கள் அடியாட் படைகளை அனுப்பினர். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை கண்ட அவர்கள் தலைதெறிக்க ஒடினர். இவ்வாறு தொடர்ச்சியான போராட்டங்களின் மூலம் வார்லி ஆதிவாசி மக்களை அடிமைத்தளையிலிருந்து கிசான் சபை அவர்களை மீட்டெடுத்தது. வார்லி ஆதிவாசி மக்களும் நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் நிலப்பிரபுக்களை எதிர்க்க முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டனர். வார்லி இன மக்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் உணர்சசிகர ரீதியாக செங்கொடி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.
வார்லி மக்கள் புரட்சி ஓங்குக! தொழிலாளர்-விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக!