ஜெர்மன் புரட்சியின் போது முக்கிய பாத்திரத்தை வகித்த ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி (SPD) புரட்சிக்கு பிறகு முதலாளித்துவ சார்பு நிலையையே எடுத்தது. லெனின் இவர்களை ‘திருத்தல்வாதிகள்”’ என்று சாடினார். சமூக ஜனநாயக கட்சிக்குள் இருந்த தீவிர இடதுசாரிகளான ஸ்பாட்டசிஸ் (USBD) குழுவினர் பாட்டாளி வர்க்கத்துக்கான சோசலிச அரசை அமைக்க இருப்பதாக கூறி செயல்ப்பட்டனர். சில மாதங்களில் பல்வேறு தொழிலாளர்கள் போராட்டங்களுக்கு பிறகு ரோசா லக்சம்பேர்க், கார்ல் லிபர்க்னெட் போன்றோர் சமூக ஜனநாயக கட்சியில் இருந்து விலகி ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) உருவாக்கினர். ரஷ்ய போல்ஷ்விக்குகள் இவர்களை ஆதரித்தனர்.
இவர்களை கடுமையாக எதிர்த்த சமூக ஜனநாயக கட்சியினர் ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளை ‘போல்ஷ்விக் தீவிரவாதம்’ அதை ஏற்கமாட்டோம் என்றனர். இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல்களும், கைகலப்புகளும் நடந்தது. இந்த நிலையில்தான் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம் தீவிர்மடைந்திருந்தன. மே 1 அன்று சோசலிச இயக்கத்தின் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தது. இதனை சமூக ஜனநாயக கட்சியினர் தடை செய்தனர். ஏற்கனவே சமூக ஜனநாயக கட்சியின் அரசு, நாஜிக்களுக்கும் – கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து பொது இடங்களில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்து இருந்தது. இதைதான் மே தின நிகழ்வு தடைக்கும் காரணம் காட்டியது.
சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் வலதுசாரிகளும் வன்முறை உருவாகும் சூழலை கருதி கம்யூனிஸ்ட்டுகளை தடை செய்ய வலியுறுத்தினர்.
ஆளும் வர்க்கத்தின் ஆர்ப்பாட்ட தடையை மீறி மே தினத்தை கொண்டாடுவதற்கு KPD அறைகூவல் விடுத்தது. இதற்காக ‘பெர்லின் மே கமிட்டி’-யை அமைத்து இருந்தது. பெர்லினில் உள்ள தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் தடைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். பெர்லின் மே கமிட்டி தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்துக்கு தொழிலாளர்கள் வெகுஜன வேலைநிறுத்தம் மூலம் பதிலடி கொடுப்பார்கள்! செங்கொடிகளை அவிழ்த்து விடு! ஆர்ப்பாட்டத்திற்கு வீதிகளை சுத்தப்படுத்து! என தொழிலாளர்கள் மத்தியில் முழங்கியது. மே 1 தொழிலாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தது. பேரணி அமைதியாக நடக்க கோரியிருந்த நிலையில் சமூக ஜனநாயக கட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் தடையை மீறிய வெகுஜன போராட்டத்தில் கலந்து கொள்ள தயக்கம் காட்டினர்.
பெர்லின் நகர வீதிகளில் அமைதியாய் நடந்து கொண்டிருந்த மே தின கொண்டாட்ட நிகழ்வில் இராணுவத்தினர் வன்முறையை ஏவினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியில் வன்முறை நிகழ்ந்தது. கண்மூடித்தனமாக இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 33 பேர் மரணமடைந்தனர். வீதிகளில் சிவப்புக்கொடி தென்பட்ட இடமெல்லாம் குறிவைத்து தாக்கப்பட்டது. தொழிலாளர்களின் ஆயுதமேந்திய தாக்குதலை அறிந்திருந்த இராணுவத்தினர் கூட்டத்தினரை கலைக்க கவச வாகனங்களை பயன்படுத்தினர். நாள் முழுவதும் ஒயாமல் வெடித்தது இராணுவத்தின் குண்டுகள்.
பேரணியில் நிகழ்ந்த வன்முறை தாக்குதலை எதிர்த்தும் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனுதாப போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். பாட்டாளி வர்க்க அரசியலுக்கான முன்னோட்டமாக இந்நிகழ்வு அமைந்தது. இதன்பிறகான செல்வாக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெர்மனியின் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்தது. தொழிலாளர்களும் இதன்பிறகு ஆயுத தாக்குதல்களை பயன்படுத்த தொடங்கினர்
சமூக ஜனநாயகவாதிகள் மீதான திருத்தல்வாத குணம் இச்சம்பவத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்தது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு மே தின நிகழ்வு வரலாற்றில் புரட்சிகர நினைவாக இன்றளவும் நிற்கிறது. ‘Bloody May day’ ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளின், பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமானதொரு அங்கமானது.