இளம்பருவம் என்பது இயற்கையின் பல்வேறு மாற்றங்களுக்கு மனிதனை தூண்டும் ஒரு பருவம். அப்போது ஒர் கலங்கரை விளக்கு இல்லையென்றால் எங்கு பயணிக்கிறோம் என்றே தெரியாமல் சென்று இறுதியில் சேற்றிலோ, சகதியிலோ சிக்கிவிடுவோம். அப்படியாக தனது வறுமையிலும், ஒடிக்குமுறையிலும் சிக்கி தவித்தபோது சமூக மாற்றம் என்ற கருத்து என்னையறியாமல் என்னை தொற்றிக்கொண்டது. அப்படியான எனக்கு அப்படியான எனக்கு கலங்கரை விளக்கமாக லெனின் வந்தார்.
ஏன் நமக்கு சமூக மாற்ற கனவு?
வேறெந்த காரணமும் வேண்டாம் என் பெயரே போதும் ஆம் பள்ளி பருவத்தில் ஒரு இஸ்லாமிய பெயரை தாங்கி இருந்ததாலேயே கடும் ஒடுக்குமுறை கல்வி வளாகத்திற்குள் எனக்கு நிகழ்ந்தது. ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஒவ்வொரு இதயமும் இந்த சமூகத்தை வெறுக்கும் . நான் மட்டும் என்ன அதில் விதிவிலக்கா? நானும் வெறுத்தேன். அப்போது என் ஆசிரியர் ரமேஷ்பாபு என னிடம் தம்பி! நீ நல்லா பேசுற ஆனா கொஞ்சம் அரசியல் கற்றுகொள் என்று கூறினார். அதற்கு உதவியாக தோழர் லெனின் அவர்களது புத்தகமாக அவரின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவ நூல் ஒன்றையும், அம்பேத்கரது ஒலிவடிவ நூல் ஒன்றையும் வழங்கினார். அதில் தோழர் லெனின் அவர்களது வாழ்க்கையும், சாதனையும் என்னை சமூக மாற்றத்தை விரும்பக கூடிய விதையை விதைத்தது.
இளைஞராக நம்மை ஈர்ப்பார் தோழர் லெனின்
தோழர் லெனின் தன் குடும்பத்தோடு மிகவும் சந்தோஷமாக வளரும் ஒர் குழந்தையாகவே வாழ்ந்தார். புத்தகமும் கையுமாக இருந்த தன் அண்ணன் அலெக்சாண்டரை தன் முன் மாதிரியாக கொண்டிருந்தார். தன் அண்ணனுடன் ரஷ்யா நிலை குறித்து கேட்டறிந்தார். ஜார் மன்னனின் கொடுங்கோல் தனத்தையும், அவர் ரஷ்ய மக்களக அடிமையாக வைத்திருப்பதையும் கூறினார். அலெக்சாண்டர் அதை மாற்ற புரட்சிகர குழுக்களின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட அலெக்சாண்டர் ஜார் மன்னரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றத்திற்காக 1888-ம் ஆண்டு 17-வது வயதில் தூக்கலிடப்பட்டார். தன் அண்ணனின் மரணத்தால் நிகழ்ந்த துயரம் லெனினை வெகுவாக பாதித்தது. தனது அண்ணனின் வழியில் போராடுவதாக உறுதி பூண்டார். தன் அண்ணனின் புத்தக அலமாரியில் ஒன்றான தாஸ் கேப்பிடல் (மூலதனம்) புத்தகத்தை வாசித்தார். தனது போராட்டக்குணம் மேலும் வலுவடைந்த்து ஆனால் தன் அண்ணனை போல் அல்லாமல் வேறு வழியில் ஜார் மன்னனை வீழ்த்த வேண்டும் என்பதை மார்க்ஸ் வழியே உணர்ந்தார். கஸான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் மாணவராக சேர்ந்த தோழர் லெனின் ஜார் மன்னனுக்கு எதிராக போராடக்கூடாது என்ற விதிகளையெல்லாம் உடைத்தெறிந்து போராடினார். கைது செய்யப்பட்டார். ஒராண்டு சிறை வாழ்க்கைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். கஸான் பல்கலைகழகம் தொடர்ந்து படிக்க அனுமதி மறுத்ததால் வீட்டிலேயே படித்து வழக்கறிஞர் ஆனார். மக்கள் கடுமையாக வேதனைப்படும்போதும், சுரண்டப்படும்போதும் நாம் நமக்கான வேலை மட்டும் பார்ப்பதென்பது மக்களுக்கு செய்யும் துரோகமாக பார்த்தார். எனவே தன் பணியை துறந்து மக்களுக்காக தனது வாழ்க்கை அர்ப்பணித்தார். இந்த தியாகப்பூர்வமான லெனின் இளமைக்காலமும், போராட்டக்குணமும் சமூகத்தின் மீதான அக்கறையையும், சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு இளைஞரையும் ஈர்க்கும். அப்படித்தான் இந்தியாவின் சமூக மாற்றமே நாட்டின் விடுதலை என்று கர்ஜித்த பகத்சிங்கையும் பல்வேறு இளைஞர்களையும் ஈர்த்தது. மக்களுக்காக வாழ்வை அர்ப்பணிக்க தூண்டியதும் லெனின் இளமைக்காலத்தை படிக்கும் எல்லா இளைஞர்களையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
வாசிப்பை தூண்டினார் லெனின்
தோழர் லெனின் தீவிர வாசிப்பாளர். தனது 22-வது வயதில் 1893-ல் குடியானவர் வாழ்க்கையில் புதிய பொருளாதார வளர்ச்சி என்ற முதல் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அதே ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ரஷ்ய மொழியில் வெளியிட்டார். மார்க்சியத்தை முழுமையாக கற்று தேர்ந்தார். மார்க்ஸ் , ஏங்கெல்ஸ் நூல்களை வாசிப்பதோடும், மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் விமர்சிக்கும், மேற்கோள்காட்டும் அத்துணை நூல்களையும் வாசித்து தனது இரஷ்ய சூழலுக்கு ஏற்ப முன்வைத்து பல்வேறு நூல்களை வெளியிட்டார். இயல்பாக அறிவு எனும் ஆயுதம் பெற லெனின் ஆசிரியர் ஆவார்.
அவர் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுவதற்காக ‘இஸ்காரா’ எனும் பத்திரிகையை துவங்கி ரஷ்யா முழுவதும் புரட்சி புயலை தூண்டினார். சமூக மாற்றத்தை நாம் விரும்புவது மட்டும் போதாது அதை நடைமுறைப்படுத்த ஆழ்ந்த வாசிப்பும் அவசியம் என்பதை லெனின் எழுத்துக்கள் நமக்கு உணர்த்தும்.
அமைதி, உணவு, நிலம்
லெனின் தான் விரும்பிய சமூக மாற்றத்தின் மூலம் உலகை குலுக்கி போட்டார். அதனால் வரை சூரியனை சுற்றிவந்த பூமி லெனினை சுற்றிவர ஆரம்பித்தது என்றால் மிகையாகாது. கொடுமையான அந்த ரஷ்ய சமூகத்தில் இருந்து விடுதலையை பெற, உலகப்போரில் இருந்து வெளியேற வேண்டும். அனைவருக்கும் நிலம் என்கிற பிரதான Peace, Bread, Land கோஷத்தை ரஷ்யா முழுவதும் மக்கள் லெனின் தலைமையில் அணிசேர்ந்து நவம்பர் புரட்சியின் மூலம் ரஷ்யா ஒரு புது உலகத்தை தொழிலாளிகளின் சொர்க்கத்தை உருவாக்கியது. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, பொது மருத்துவம் என சகலத்தையும் ஏற்படுத்தினார். அந்த கட்டமைப்பே சோசலிச கட்டமைப்பாகும். இவையாவும் தோழர் லெனினின் மகத்தான சாதனைகளின் ஒரு துளியின் சாரம்சமும் ஒருபகுதியாகும். சோசலிசம்தான் உண்மையான சமூக மாற்றம் என்பதை எனக்கு தெளிவாக உணர்த்தினார்.
லெனினை பற்றிபிடித்து சமூகத்தை மாற்றியமைப்போம்
இறுதியாக தோழர் லெனின் நம்மோடு இல்லை. சோவியத் ரஷ்யா இல்லை ஆனால் தோழர் லெனின் அவர்களின் சக்திவாய்ந்த சிந்தனை தத்துவம் நம்மிடம் இருக்கிறது. மார்க்சிய லெனினியம் நம்மோடு இருக்கிறது. முதலாளித்துவம் மிகவும் மோசமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஆசான் லெனின் சுட்டிக்காட்டியதை போல் ஏகாதிபத்திய வடிவமான மூலதனம் மக்களை கடுமையாக கொன்று வருகிறது. தோழர் லெனின் வழியில் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அதை எந்த வழியில் செயல்படுத்துவது என்ற கேள்விக்கு தோழர் லெனின் தன் எழுத்துக்கள் மூலம் கலங்கரை விளக்கமாக உள்ளார். லெனினை கற்போம்! லெனினிடம் இருந்து கற்போம்! மோசமான இந்த சமூக கட்டமைப்பை மாற்றியமைப்போம்.
புரட்சியாளர் லெனின் புகழ் ஒங்குக!
தோழர் லெனின் நீடுழி வாழ்க!
கட்டுரையாளர்: தௌ.சம்சீர் அகமது (மாநில துணை தலைவர், இந்திய மாணவர் சங்கம்)
சிறப்பான பதிவு