தோழர் அய்ஜாஸ் நம் காலத்தின் ‘மார்க்சிஸ்ட்’

அய்ஜாஸ் அகமதின் தத்துவார்த்த சிந்தனைகள் காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இடதுசாரி இயக்கத்தின் அறிவுசார் வளங்களுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றைக்கும் நிலையானவை. கலிபோர்னியாவின் இர்வின் நகரில் கடந்த வாரம் காலமான பேராசிரியர் அய்ஜாஸ் அஹ்மத், நமது காலத்தின் முதன்மையான மார்க்சிய அறிவுஜீவிகளில் ஒருவர். 1980-களின் பிற்பகுதியில் சோசலிசத்தின் பின்வாங்கலுக்கு பிறகும், 1991-ல் சோவியத் யூனியன் சிதைக்கப்படுவதற்கு வழிவகுத்த பனிப்போர் காலகட்டத்திலும் மார்க்சியக் கோட்பாட்டாளராக அவரது பணி முக்கியத்துவம் வாய்ந்தது.

இவருடைய மொழி புலமையும், திறமையும் பரந்துபட்ட அளவில் இருந்தது. உருது எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் தனது பணியைத் தொடங்கிய அய்ஜாஸ் அகமது, மேற்கத்திய நாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இலக்கிய ஆய்வுகள் மற்றும் கலாச்சார விமர்சனங்கள் குறித்து கற்பித்தார். தத்துவம், அரசியல் பொருளாதாரம் மற்றும் தற்போதைய உலக விவகாரங்கள் குறித்தும் ஆய்வு செய்து எழுதினார். குறிப்பாக இன்றைக்கு ஆபத்தானவையாக வளர்ந்து நிற்கும் இந்துத்துவ பாசிசம், பின்நவீனத்துவம் குறித்து பல கட்டுரைகளும், பேட்டிகளும் வழங்கியுள்ளார்.

அய்ஜாஸின் மார்க்சிய பார்வை தேசிய இனங்களின் விடுதலைக்கான காலனித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களின் பாரம்பரியத்திலிருந்து எழுந்தது. 1960-70 களில் உலகின் பெருநகர மையங்களில் இருந்து வெளிப்பட்ட மார்க்சிய சிந்தனையுடன் இது செழுமைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது. சோவியத்திற்கு பிந்தைய காலத்தில் பல மேற்கத்திய அறிவுஜீவிகள் மார்க்சியத்தை கைவிட்டபோது, ​​மார்க்சிய கோட்பாட்டை பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் அய்ஜாஸ் தனித்துவமான நிலையை வகித்தார். மேற்குலகின் கல்வித்துறையில் வியாபித்திருந்த மார்க்சியத்திற்கு பிந்தைய கோட்பாடான, பின்நவீனத்துவ மற்றும் பிந்தைய காலனித்துவ கோட்பாடுகளின் தொடர் குறித்து அவர் கற்க தொடங்கிய காலத்தில், அது சமூகத்தில் விரைவாக செல்வாக்கும் பெற்றது.

In Theory: Classes, Nations, Literatures என்ற அவரது புத்தகம் 1992- இல் வெளியிடப்பட்டது. மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து பல்வேறு “பிந்தைய” சித்தாந்தங்களின் தத்துவ மற்றும் சித்தாந்த நிலைகளின் மீது திறம்பட மற்றும் அழிவுகரமான விமர்சனத்தை வழங்கிய உன்னதமான படைப்பு இது. இந்நூலின் அறிமுகமானது, உலக வரலாற்றுச் சூழலை தற்போதைய சூழலுக்கும், உலகில் இன்னும் வெளிவருகின்ற முரண்பாடுகளை வழங்கும் ஒரு காலச் சுற்றுப்பயணமாகும். இடதுசாரி அமைப்புகள் சார்ந்த மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பின்-நவீனத்துவத்தை  தீவிரமான கட்டுக்கதைகள் என்று விமர்சித்தும் அவை குறித்தும் விரிவாக குறிப்பிடுகிறார்.

எண்பதுகளின் நடுப்பகுதியில், அய்ஜாஸ் அவர் பிறந்த பூமியான இந்தியாவுக்கு வந்து மூன்று தசாப்தங்களாக வசித்தார். டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தில்  நீண்ட காலம் பணியாற்றிய நேரத்தில்தான், அவர் in thesis: classes, literature, nations புத்தகத்தை எழுதினார். மேலும் நாட்டின் அரசியல் மற்றும் சமூக முன்னேற்றங்களைப் பற்றி சிந்திக்கவும் எழுதவும் தொடங்கினார். சர்வதேச அளவில், சோவியத் யூனியனின் அழிவு மற்றும் பனிப்போரின் முடிவு கலாச்சாரம் மற்றும் சித்தாந்தம் உட்பட அனைத்து துறைகளிலும் அமெரிக்க மேலாதிக்க செல்வாக்கை கொண்டு வந்தது.

அதே காலத்தில்தான் இந்தியாவில், புதிய தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளின் எழுச்சிக்கும் வழிவகுக்கும் நவீன தாராளமயமாக்கலின் இரட்டை செயல்முறைகள் வேகமாக தொடங்கின. அய்ஜாஸ் இந்த அம்சங்கள் குறித்து படிப்பதிலும் பகுப்பாய்வு செய்வதிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். உலகளவில் தீவிர வலதுசாரிகள் எழுச்சியின் பின்னணியில் இந்துத்துவாவின் எழுச்சி பற்றிய அவரது கட்டுரைகள் மற்றும் விரிவுரைகள், அதன் அமைப்புகளின் நீண்ட அணிவகுப்பு மூலம் இந்திய அரசை மறுசீரமைக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார திட்டத்தின் தன்மை பற்றிய அவரது தொடர்ச்சியான அற்புதமான பகுப்பாய்வு இவை. இந்திய இடதுசாரிகளுக்கு இந்த வலதுசாரி சக்திகள் மற்றும் அவை எதை காட்டுகின்றன என்பதை பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவியது. உலக அளவில், பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் ஏகாதிபத்தியத்தின் போக்கை ஆராய்வதில் அய்ஜாஸ் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஈராக் போர், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் மற்ற ஆக்கிரமிப்பு போர்கள் உலக மேலாதிக்கத்தின் ஏகாதிபத்திய திட்டத்தின் ஒரு பகுதியாக எப்படி இருந்தன என்பதைக் காட்ட பகுப்பாய்வு செய்தார். உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவ உலகில் ஏகாதிபத்தியம் ஒரு பொருத்தமான வகையாக இல்லை என்று வாதிட்ட பல மேற்கத்திய மார்க்சிய அறிஞர்களின் கருத்துக்களை அவர் இங்கேயும் திறம்பட எதிர்த்துப் போராடினார்.
அய்ஜாஸ் ஒரு விரிவுரை கல்வி பணியாளர் அல்ல. அவர் எப்போதும் ஏகாதிபத்தியம், தேசிய ஒடுக்குமுறை மற்றும் இனவெறிக்கு எதிரான இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் இந்தியாவில் இருந்த ஆண்டுகளில், புரட்சிகரக் கோட்பாட்டை புரிந்துகொள்வதற்கு உதவுவதற்காக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் குழுக்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதில் நிறைய நேரம் செலவிட்டார்.

அய்ஜாஸ் ஒரு அன்பான மற்றும் அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஆளுமை கொண்டவர். கூர்மையான அறிவுத்திறனுடன் ஒரு கவிஞரின் உணர்வுடன் இருந்தார். பலருடன் புதிய நட்பை உருவாக்கி, இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களை பற்றிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அவரை நண்பராகக் கொண்டிருப்பது எனது அதிர்ஷ்டம். நாங்கள் நடத்திய வழக்கமான உரையாடல்கள் அறிவுத் தூண்டுதலாக இருந்தன, மேலும் அவர் எனக்கு புதிய புத்தகங்கள் மற்றும் யோசனைகளுக்கான கதவுகளைத் திறந்தார்.

தனது தாயகத்தில் வாழ்ந்து இறக்க வேண்டும் என்ற அவரது நிறைவேறாத ஆசையின் காரணமாக அவரது இறுதிக்காலம் கடுமையாக இருந்தன. விசாவுக்குப் பிறகும் விசாவில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்த பிறகு, இளைஞனாக பாகிஸ்தானில் இருந்ததால், அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்ததும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், இர்வின் இலக்கிய ஒப்பீட்டுத் தலைவராக பதவியேற்று அங்கேயே தங்கினார். அவர் வகிக்க மதிப்புமிக்க நாற்காலி இருந்தபோதிலும், மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என ஏங்கினார். அவரது வாழ்க்கையின் கடைசி எட்டு ஆண்டுகள், அவரைப் பொறுத்தவரை, நாடு கடத்தப்பட்ட ஒருவரின்  வாழ்க்கையை போன்றதாக இருந்தது.

இந்தியாவில் உள்ள அவரது எண்ணற்ற நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு, இடதுசாரி இயக்கத்தின் அறிவுசார் வளங்களுக்கான அவரது படைப்புகள் மற்றும் பங்களிப்புகள் என்றென்றைக்கும் உந்துசக்தியாக இருக்கும்.

கட்டுரை :- பிரகாஷ் காரத் (  சிபிஎம் முன்னாள் பொதுச்செயலாளர்) இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

Leave a Reply