வரலாற்றில் தல்வார் கப்பற்படை வீரர்களின் வீரமிக்க எழுச்சி

1946 பிப்ரவரி 18-ஆம் நாள் பம்பாய் கப்பற்படையில் இருந்த் இந்திய மாலுமிகள் முதன் முதலில் புரட்சி முழக்கம் எழுப்பினர்.  எச்.எம்.எஸ். தல்வார் எனும் போர்கப்பலில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியை இறக்கிவிட்டு இந்திய தேசிய காங்கிரஸின் மூவர்ணக்கொடி, முஸ்லீம் லீக்கின் கொடி, கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி மூனறையும் ஒன்றாக பறக்கவிட்டனர். ராயல் இந்திய கடற்படையில் இருந்த இந்தியர்களுக்கு மோசமான உணவு வழஙகப்பட்டு வந்தது. அதேநேரத்தில் வெள்ளையர்களுக்கு நல்ல உணவு வழங்கப்பட்டது. விடுப்பு, மருத்துவ வசதி முதலியவற்றில் பாகுபாடு காட்டப்பட்டது. வெள்ளை அதிகாரிகள் இந்திய மாலுமிகளை மிக கேவலமாக நடத்தினர். மோசமான வார்த்தைகளில் திட்டுவதும் தண்டிப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. வெள்ளையர் நிறவெறியும் தலைவிரித்தாடியது.

ஆயினும் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், உரிமைகள் இவற்றையும்விட வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போரட்ட உணர்வே மேலோங்கி இருந்தது. அரசியல் உணர்வற்ற பின்தங்கிய பகுதியினரை ஒன்றினைப்பதற்கு உணவு போன்ற பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அடிமைத்தனத்திற்க்கு எதிரான அரசியல் உணர்வே இப்போராட்டத்திற்கு அடிப்படையாக இருந்தது.

தல்வாரில் துவங்கி தேசம் முழுவதும்.. 

தல்வாரில் தொடங்கிய வேலை நிறுத்தப்போராட்டம் பம்பாயில் முகாமிட்டிருந்த 60 போர்க்கப்பல்கள், பயிற்சி நிலையங்களில் இருந்த அனைத்து மாலுமிகளின் போராட்டமாக உருவெடுத்தது. பிப்ரவரி 19-ஆம் நாள் காலை பம்பாய் நகர தெருக்கள் புதிய எழுச்சியைக் கண்டது. வேலைநிறுத்தம் செயத வீரர்கள் வீதியில் அணிவகுத்தனர். ‘இன்குலாப் ஜிந்தாபாத்! வெள்ளையர் ஆதிக்கம் ஒழியட்டும்! இந்து முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக! என தொண்டை நரம்புகள் அதிர முழக்கமிட்டனர். வழியெங்கும் கடையடைப்பு நடந்தது.

அமெரிக்க செய்தி நிறுவனத்தை ஊர்வலம் கடந்தபோது அங்கு பறந்து கொண்டிருந்த அமெரிக்க கொடியும் கிழித்தெறியப்பட்டது.காலை 11:45-க்கு ஊர்வலம் தல்வார் பயிற்சி நிலையத்தை அடைந்தது. அங்கு நடந்த கூட்டத்தில் எம்எஸ்.கான் தலைமையில் போராட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. கோரிக்கை சாசனம் வடிவமைக்கப்பட்டது. ஐ.என்.ஏ. வீரர்களை விடுதலை செய். இந்தோனேஷியாவில் உள்ள இந்திய படைகளை வாபஸ் வாங்கு என்ற அரசியல் கோரிக்கை தொடங்கி மாலுமிகளின் உணவு மற்றும் உரிமைகள் உட்பட எட்டு அம்ச கோரிக்கை உருவானது. மீண்டும் மாலை 10 ஆயிரம் மாலுமிகள் ஊர்வலமாக சென்றனர். பம்பாய் மட்டுமல்ல தேசம் முழுவதும் கப்பற்படை வீரர்களின் எழுச்சி செய்தி பறந்தது.

பம்பாய் துறைமுகத்தில் இருந்த பஞ்சாப் எனும் போர்கப்பலில் தல்வாரை பின்பற்றி பிரிட்டிஷ் கொடியை கீழே இறக்கி மூன்று கொடிகளை பறக்கவிட்டது. கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு இருந்த எஸ்.எம்.எஸ் பரோடவிலிருந்து மாலுமிகளும் தல்வார் தோழர்களுடன் கைகுலுக்க முடிவுசெய்து போர்க்கொடி உயர்த்தினர். பம்பாய் துறைமுகத்திலிருந்து பிரான் ஒளத், குறுயோன், மோடி, நீலம், தனுஷ், ஜமுனா, தீர். அஸ்ஸாம், சிந்து, மராத்தா, மதராஸ் என எல்லா போர் கப்பல்களிலும்  யூனியன் ஜாக் கொடி கீழே இறக்கப்பட்டது. கிழித்தெறியப்பட்டது. மூவர்ண கொடியும், பச்சை கொடியும், செங்கொடியும் பறக்கவிடப்பட்டன. துறைமுகத்துக்கு அப்பால் வெகு தூரத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களுக்கும் செய்திகள் பறந்தன. விளைவு உடனே நர்மதா, ஹீரா, கைபர், கிளைவ் லாரன்ஸ் ஆகிய போர்க் கப்பல்களிலும் புரட்சிக் கொடிகள் ஏற்றப்பட்டன.

ஒரு பக்கம் ராணுவ குவிப்பு, மறுபக்கம் பேச்சுவார்த்தை

கப்பற்படை தளபதி வைஸ் அட்மிரல் கோட்பிரே டெல்லியிலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தான். கப்பற்படை புரட்சியை ஒடுக்கும் பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டான். பிப்ரவரி 20-ஆம் நாள் அதிகாலை டிராம்பே பகுதியிலிருந்த எஸ்.எம்.ஐஎஸ். சீட்டாவை ராணுவம் சுற்றிவளைத்தது. இச்செய்தி விரைவாக நகர் முழுவதும் பரவியது. பதட்டம் அதிகரித்தது. தானா பகுதியிலிருந்த எச்.எம்.ஐ.எஸ். அக்பரில் இருந்த 3,500 வீரர்கள் இச்செய்தி கேட்டு ஆத்திரம் அடைந்தனர். காவல் அறைக்குள் நுழைந்து கதவை உடைத்து கைதிகளை விடுவித்துள்ளனர்.

“தல்வார் சலோ” முழக்கத்துடன் சுழன்றடிக்கும் சூறாவளியாக வீரர்கள் புறப்பட்டனர். தல்வார் சலோ ஊர்வலம் பம்பாய் நகர் வீதிகளை கலக்கியது. ஊர்வலத்தில் பெரும்பாலானோர் முஸ்லீம் ஒற்றுமை ஓங்குக என முழக்கமிட்டது. புதிய எழுச்சியின் உந்துசக்தியாக இருந்தது. இதற்கிடையே கடற்படை தளபதி அட்மிரல் கோட்பிரே எச்சரித்தார். மாலை 3:30 மணிக்குள் அனைத்து மாலுமிகளும் அவரவர் கப்பல்களுக்கோ கப்பற்படை நிறுவனங்களுக்கோ திரும்பிச் செல்லவேண்டும். யாரேனும் வீதியில் காணப்பட்டால் கைது செய்யப்படுவார்கள்.

இந்த அறிவிப்பு மாலுமிகளை ஆத்திரம் கொள்ள செய்தது. ஆயினும் போராட்டக்குழு தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பேச்சுவார்த்தை நடத்த உதவியாக மாலுமிகள் கப்பல்களுக்குத் திரும்பினர். அதேநேரம் கப்பல் படை நிலையங்களை சுற்றி மராத்தா வீரர்கள் நிறுத்தப்பட்ட செய்தியும் பரவியது. ஒரு பக்கம் ராணுவ குவிப்பு, மறுபக்கம் பேச்சுவார்த்தை என பிரிட்டிஷ் அரசின் நாடகம் துவங்கியது. இதற்கிடையில் கராச்சி துறைமுகத்தில் நங்குரமிட்டிருந்த ஹிந்துஸ்தான், திருவிதாங்கூர் கப்பல்களுக்கும் போராட்ட செய்தி எட்டியது. அவர்களும் போரட்டத்தில் குதித்தனர். ஹிந்துஸ்தான், திருவிதாங்கூர் கப்பல்களிலும், சமக் பகதூர், ஹிமாலாயா கப்பல் நிறுவனங்களிலும் போராட்டம் பரவியது. கராச்சி துறைமுகம் முழுவதும் வேலைநிறுத்தம் நடந்தது. பிப்ரவரி 21-ஆம் நாள் கராச்சி நகரில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்து நிறுவனங்களின் சிறைகளை திறந்து விட்டனர்.

இரத்ததால் வெள்ளைக்கொடி சிவப்பானது

இதற்கிடையில் ஹிந்துஸ்தான் கப்பல் போராட்டத்தை ஒடுக்க பிரிட்டிஷ் உத்தரவுக்கு கூர்க்கா படையினர் அடிபணிய மறுத்தது அதுதான் முதல்முறை. பிளாக் வாச்சு ரெஜிமெண்ட் என்ற பிரிட்டிஷ் படையே நேரடி தாக்குதலில் ஈடுபட்டது. மோதல் உக்கிரமானது. கராச்சி துறைமுகத்திலும் சண்டை நடந்தது. நமது மாலுமிகள் ஆறு பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்றனர். எதிரிப்படை அதிக வலுவுடன் இருந்ததால் இனி போராடுவது உசிதமல்ல என்கிற முடிவுடன் வெள்ளைக்கொடியுடன் கப்பலின் மேல்தளத்துக்கு சென்ற 18 வயது இளைஞன் சுடப்பட்டார். அவன் ரத்தத்தால் வெள்ளைக்கொடி சிவப்பானது. வேறு வழியின்றி ஹிந்துஸ்தான் கப்பல் அடிபணிந்தது.

இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே கத்தியவார் துறைமுகத்தில் இருந்த ‘கத்தியவார்’ போர்க்கப்பலுக்கு இச்செய்தி சென்றது. ஆத்திரமடைந்த மாலுமிகள் கத்தியவார் கப்பலை ஹிந்துஸ்தானுக்கு உதவ விரைந்தனர். அதற்கு ஒத்துழைக்க கேப்டன் மறுத்தபோது அவனை அவனது அறையில் உட்கார வைத்துவிட்டு கப்பலை கராச்சிக்கு திருப்பினர். அப்போது கப்பலோட்டும் பயிற்சி உடைய ஒருவர் மட்டுமே இருந்தார். அவர் எப்படி 16 மணிநேரம் ஒட்ட முடியும்? கேப்டனோ ஒத்துழைக்க மறுத்தார். தோழர்களே கவலைப்படாதீர்கள் நான் உங்களை கராச்சி சேர்ப்பேன். அந்த வெட்கங்கெட்ட பொறுக்கிகளின் உதவி நமக்கு வேண்டாம் என்றவாறு கப்பலை கராச்சி நோக்கி விரட்டினார் அந்த இளைஞர். ஆனால் அதற்கிடையில் ஹிந்துஸ்தான் சரண் அடைந்து விட்ட செய்தியை அறிந்தனர். இனி அங்கு போய் பயனில்லை என்பதால் பம்பாய்க்கு கப்பலை திருப்பினர்.

நாங்கள் உங்களைச் சுட மாட்டோம்

பம்பாய் துறைமுகத்தில் நுழைய கொடி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். ஆயிரம் தடைகளை தகர்த்து கத்தியவார் பம்பாய் துறைமுகத்தில் வெற்றிகரமாக நுழைந்தது. இதற்கிடையில் பிரிட்டிஷ் அரசு மராத்தா படைகளை அனுப்பி துறைமுகத்தில் யுத்தம் துவக்கியது. வேட்டுச் சத்தங்களிடையே வெளியே வந்த கப்பற்படை வீரர்கள் மராத்தி வீரர்களை நோக்கி, “மராத்திய வீரர்களே நாம் இந்தியர்கள். இந்தியாவிற்காக போராடுகிறோம். இது உங்களுக்கான போராட்டமும் ஆகும். நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டாமா எனக் கேட்டனர். நாங்கள் உங்களைச் சுட மாட்டோம் என்று உறுதியளித்தனர் மராட்டிய வீரர்கள்.

வேறு வழியின்றி பிரிட்டிஷ் ராணுவம் நேரடியாக இறங்க வேண்டியதாயிற்று. அந்த தாக்குதலை எதிர்கொள்ள இந்திய கப்பற்படை வீரர்களுக்கு சிக்கல் தந்து கொண்டிருந்த கேரளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்தார். போராட்டம் உக்கிரமடைந்தது. தாக்குதலும் எதிர் தாக்குதலும் நீடித்தன. மாலூமிகளை வெள்ளை படைகள் தாக்கும் செய்தியை மோட்டார் படைவீரர் பாலகிருஷ்ணன் விமானப்படை வீரர்களுக்கு எடுத்துச் சென்றார். அவன் விமானப் படை வீரர்களிடம் செய்தியை சொல்லி முடித்ததும், ஒரு சீக்கிய விமானப்படை வீரர் முழக்கமிட்டார். இன்குலாப் சிந்தாபாத், ஹிந்து முஸ்லீம் ஏக் ஹோ, ஏகாதிபத்தியம் அழியட்டும். பலூச்சி வீரர்கள், கூர்க்கா படையினர், மராத்தி படையினர் வரிசையில் விமானப்படை வீரர்களும் கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டனர். அவர்களை சுட மறுத்தனர். பிரிட்டிஷ் அரசு கதி கலங்கியது.

போராடும் கப்பற்படை வீரர்களுக்கு பிரிட்டிஷார் உணவளிக்கவில்லை. தண்ணீர் தரவில்லை. ஆனால் மக்கள் ஆதரவாகத் திரண்டனர். ஒவ்வொரு வீட்டிலும் சப்பாத்திகளை சுட்டுக் குவித்தனர். கூடைகளில் நிரப்பிக்கொண்டு கடற்கரையை நோக்கி சென்றனர். சப்பாத்தியும் ரொட்டியும், பழங்களும் சுமந்துகொண்டு தாய்மார்கள் இளைஞர்கள் கடற்கரையோரம் குவிந்தனர். மாலுமிகள் படகுக்ளில் வந்து அவற்றை பெற்றுச் சென்றனர். பாட்டாளி மக்களும் படைவீரர்களும் கைகோர்த்து கட்டித்தழுவி நின்றனர்.

வஞ்சித்த காங்கிரசும், முஸ்லீம் லீக்கும்

இதற்கிடையில் பிப்ரவரி 26-ஆம் நாள் மாலுமிகள் உடனடியாக சரணடையுமாறு கொடி அதிகாரி மிரட்டினான். தேசிய தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஆதரவு கேட்டு போராட்டக்குழுவினர் அறிக்கை விடுத்தனர். காங்கிரசும், முஸ்லீம் லீக்கும் ஆதரவு தர மறுத்தது. ராயல் இந்திய கப்பற்படைக்கு அத்தகைய  வேண்டுகோள் விடுக்க உரிமை கிடையாது என்று கூறிய நேரு, பம்பாய் நகரத்தில் கப்பற்படை போருக்கு பெருத்த ஆதரவு இருப்பதை ஒப்புக்கொண்டார். கப்பற்படை மாலுமிகள் ஆயுத கலகம் செய்திருக்க கூடாது என்றும் படையில் கட்டுபாடு இருக்கவேண்டும் என்றும் தளபதியின் கூற்றை ஆதரிப்பதாகவும் வல்லபாய் படேல் கூறினார்.

வேலைநிறுத்தங்களும் ஹர்த்தால்களும் இன்றைய தற்காலிக அதிகாரத்தை மீறி நடப்பது அவசியமற்றது. இடைக்கால பொறுப்பாளர்களாகப் பணியாற்றும் அயல்நாட்டு ஆட்சியாளர்களுடன் பிணக்கு கொள்வதற்கு உடனடியாக காரணம் எதும் எழவில்லை என்றார் அபுல் கலாம் ஆசாத். அவர்கள் மேலிருந்து கீழ் வரை ஒன்றுபட்டு இருப்பின் அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். அது இந்தியாவை வெறிக் கூட்டத்திடம் ஒப்படைப்பதாகும் என்பது மெய். அந்த முடிவை கண்ணால் காண 125 வயது வரை உயிர் வாழ நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன் என்றார் காந்தி.

கம்யூனிஸ்டுகளின் ஆதரவு

மறுபக்கம் 22-ஆம் தேதி பொது வேலைநிறுத்தமும், ஹர்த்தாலும் நடத்தி ஆதரவு தெரிவிக்க கம்யூன்ஸ்டுகள் அறைகூவல் விடுத்தனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துகிற மாலுமிகளை இரும்பு கரத்தால் அடக்கி ஒடுக்க முயற்சிக்கிற அந்நிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. கப்பற்படை வீரர்களை நோக்கி சரணடையுங்கள் அல்லது அழிந்து போங்கள் என்று கமாண்டிங் அதிகாரிகூறியிருப்பதை மானமுள்ள ஒவ்வொரு இந்தியனும் கண்டிக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்டுகளின் அறைகூவல் தொழிலாளர்களையும், மாணவர்களையும் வெறி கொள்ளச் செய்தன. நாடெங்கும் கம்யூனிஸ்டுகள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பம்பாய் முழுவதும் 35 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். வீதியெங்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர். படைவீரர்களும் பாட்டாளிகளும் கொடி உயர்த்தி கோஷமிட்டு அணிவகுத்தனர்.

இந்து – முஸ்லீம் வேறுபாடின்றி வீதியில் குவிந்தனர். பிரிட்டிஷார் கடும் அடக்குமுறையை ஏவினர். பம்பாய் போர்க்களமானது. சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர். கமல் தாண்டே என்ற கம்யூனிஸ்ட் தலைவர் கொல்லப்பட்டார். இந்திய ராணுவத்துக்கு உள்ளும் இதன் எதிரொலிகள் இருந்தன. பலர் போர்க்கொடி உயர்த்தினர். கல்கத்தா, விசாகப்பட்டினம், டெல்லி கான்பூர், சென்னை என எங்கும் மக்கள் எழுச்சி ஓங்கி நின்றது. சென்னை நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத தொழிற்சங்கமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழிலாளர்கள் எழுச்சியுற்றனர். சென்னை நகரின் வட கோடியில் இருந்து தென் கோடி வரை ஹர்த்தால் நடந்தது.

பச்சையப்பன் கல்லூரி, சட்டக் கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி என எல்லா கல்லூரிகளிலும் வேலைநிறுத்தம். பி. ராமசந்திரன், எம்.பி. சீனிவாசன் கம்யூனிஸ்ட் மாணவர் தலைவர்களும் முன் நின்றனர். எம்.எஸ்.கோ போன்ற மாணவர் அமைப்புகள் முன் நின்றன. இதில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்கள் 1947 ஆகஸ்ட் 12 வரை சிறையில் வாடினர். கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக அன்று மாணவர்களிடம் தோன்றிய ஆவேசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது.

ஜின்னா, படேல் ஆகியோர் மாலுமிகளை சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்தனர். மக்கள் ஆவேச அலை வீதிகளில் எல்லையற்று இருந்தபோதும் காங்கிரஸும் முஸ்லீம் லீக்கும் கப்பற்படை புரட்சியாளர்களை சரண் அடைய செய்ய நிர்பந்தித்தனர். கம்யூனிஸ்டுகள் மட்டும் ஆதரவு நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். பம்பாய் நகர வீதிகளில் ராணுவ தடை அமைத்தும், கொரில்லா முறையிலும் பாட்டாளிகளும் படைவீரர்களும் போராடினர்.

மக்களிடம் சரண் அடைகிறோம்

எது எப்படி இருப்பினும் பிரிட்டிஷ் தாக்குதல் மூர்க்கமானது. இதற்கிடையில் போர்க் கப்பல்களில் இருந்த காங்கிரஸ், முஸ்லீம் லீக் கொடிகள் இறக்கப்பட்டு செங்கொடி மட்டுமே பறந்தது. காந்தியவாதி குமரப்பா, சரணடையும் வேண்டுகோளுடன் போராட்ட வீரர்களை சந்தித்தார். தாக்குதல் தொடர்வதால் வேறு வழியின்றி மாலுமிகள் சரணடைந்தனர். நீதியும், நியாயமும் கிடைக்காத நாம் நமது தலைவர்களை நம்புவோம். நாம் பிரிட்டிஷ் காரர்களிடம் சரணடைவதாக யாரும் நினைக்க வேண்டாம். நாம் நமது மக்களிடம் சரண் அடைகிறோம். அவர்கள் நமக்கு ஆதரவாக உள்ளனர் என்ற முடிவுடன் இறுதியில் கப்பற்படைவீரர்கள் சரணடைந்தனர்.

கப்பற்படை வீரர்கள் கூறினார்கள் நம்முடைய வேலை நிறுத்தம் நம் நாட்டு வாழ்க்கையில் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக இருந்துள்ளது. முதன்முதலாக ஒரு பொது இலட்சியத்திற்காக ராணுவத்தில் உள்ள மனிதர்களின் இரத்தமும் வீதியில் உள்ள மனிதர்களின் இரத்தமும் சேர்ந்து பெருகின. படையில் உள்ள நாங்கள் இதை ஒருக்காலும் மறக்க மாட்டோம். எங்கள் சகோதர, சகோதரிகளான நீங்களும் மறக்க மாட்டீர்கள் என்பதை அறிவோம். நம்முடைய பெருமக்கள் நீடுழி வாழ்க! ஜெய்ஹிந்த்! இதுதான் கப்பற்படை போராட்டக்குழு கடைசியாக விடுத்த செய்தியாகும்.

 வறுமையும், ஏற்றத்தாழ்வும் இல்லாத நவீன இந்தியாவை உருவாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு போராளிகளுக்கும் கப்பற்படை எழுச்சியின் நினைவுகள் ஆவேசத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும்.

Leave a Reply