மோடி தலைமையிலான பாஜக அரசு தனது கூட்டாளிகளான பெரும் முதலாளிகளின் லாப நலன்களுக்காக பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக புதியதாக 4 தொழிலாளர் குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளன.
புதிய நான்கு தொழிலாளர் குறியீடுகள் (Labour codes):
1. தொழில்துறை உறவுகள் குறியீடானது, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தடுப்பதற்கும், சங்க பிரதிநிதிகளாக யாரை நியமிக்க வேண்டும் என்பதிலும் அரசாங்கத்திற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. மேலும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ரகசிய வாக்கெடுப்பு முறையையும் இந்த குறியீட்டில் தகர்த்து இருக்கின்றனர்.
வேலைநிறுத்தங்களை ‘சட்டவிரோத வேலைநிறுத்தமாகவே’ கருதும் இந்த குறியீடு, அதில் பங்கேற்பவர்களுக்கும் அதற்கு உதவியவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிப்பதோடு சிறை தண்டனையையும் வழங்கும் வகையில் திருத்தம் செய்துள்ளது. 8 மணிநேர வேலை, வாரத்திற்கு 5 நாள் வேலை இதற்காக செய்யப்படும் வேலைநிறுத்தங்களைத்தான், அரசாங்கம் சட்டவிரோதமாக கருதி தொழிலாளர்களை முடக்குகின்ற வேலையை செய்துள்ளது.
2. ஊதியம் தொடர்பான குறியீடானது, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை நீக்குகிறது. அதிக நேர வேலைக்கான ஊதியம், விடுப்பு ஊதியம் மற்றும் விடுமுறை நாட்களுக்கான ஊதியம் போன்றவற்றின் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.
நிர்வாக ரீதியாக ஊழியர்களை வகைப்படுத்தும் இந்த குறியீடானது, தொழிலாளர்களை பணியில் அமர்த்தவும், பணியில் இருந்து நீக்கவும் இருக்கின்ற அதிகார வரம்பு குறித்தான எந்த விளக்கமும் அதில் கூறப்படவில்லை.
3. ஊழியர்களின் சமூக பாதுகாப்பு குறித்த குறியீட்டில், தொழிலாளர்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை, நன்மைகளை வழங்குவதாக கூறும் அரசாங்கம், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களை இதிலிருந்து விலக்கியே வைத்துள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான பங்களிப்பை 12%-ல் இருந்து 10%-ஆக குறைத்துள்ள அரசு, எந்தவொரு தொழிலாளர் பிரிவினருக்கும் வைப்புநிதி பங்களிப்பு விகிதத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை அரசாங்கமே தீர்மானிக்கும் எனவும் கூறியுள்ளது.
நிறுவனத்தின் முதலாளியும், பெரும்பாலான தொழிலாளர்களும் ஒப்புக்கொண்டால் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பிற பலன் அனுபவிக்கும் உரிமை திட்டங்களில் இருந்து அந்நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.
4. பணிகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடானது, 40-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட சிறு, குறு நிறுவனங்கள் எந்தவொரு தொழிலாளர் சட்ட விதிகளையும் பின்பற்றுவதில் இருந்து விலக்கி வைத்துள்ளது. நிரந்தர தொழிலாளர்களுக்கு நிகரான சம ஊதியம், பிற உரிமை பலன்களை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பதை இந்த குறியீடு தட்டி பறிக்கிறது.
ஒரு தொழிலாளி கூடுதல் வேலை நேரத்தை மறுக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்குவதோடு, 12 மணி நேரம் பணி செய்வது மற்றும் அரசாங்கம் தன்னிச்சையாக வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை வாங்க அனுமதிப்பது என கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்துள்ளது. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் பணியிடங்கள் குறித்து வழங்கும் புகார்களின் அடிப்படையில் தொழிற்சாலையை ஆய்வு செய்வதற்கு எவ்வித வழிகாட்டு முறையினையும் அரசாங்கம் குறிப்பிடவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தாலும் பணியிடங்களை அவர் சோதனையிட வேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மே தின கொண்டாட பட்டது அன்றைய சென்னை மாகணத்தில்தான்.. அதை முன்னின்று நடத்திய தோழர் சிங்காரவேலர் பிறந்தநாளில் தொழிலாளர்கள் நீண்ட , நெடியதூரம் போராடி வென்றெடுத்த பல உரிமைகளை நீர்த்து போகச் செய்யும் இந்த புதிய தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிராக ஒன்றினைந்து போராட உறுதியேற்போம்.