உழைக்கும் வர்க்கத்தின் மீது கொடூரமான அடிமைத்தனத்தைத் திணிக்கும் சட்டம்…

labor code decode

தொழிலாளர் சட்டங்கள் பற்றிய தெளிவுரை.

உழைக்கும் மக்களின் மீது அடிமைத்தனத்தை நிறுவனப்படுத்தும் வகையில் கொடூரமான சட்ட வடிவமைப்பை மோடி அரசு இயற்றியுள்ளது.

2020-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது நிலுவையில் இருந்த பின்வரும் மூன்று தொழிலாளர் சட்ட தொகுப்புகளான

1. தொழில்துறை உறவுகள் சட்டம் (the industrial relations code)

2. தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டம் (the Occupational Safety, Health and Working Conditions Code)

3. சமூக பாதுகாப்பு சட்டம் (the Code on Social Security)

ஆகியவையை சமீபத்தில் நடைபெற்ற மழைக்கால அமர்வில் நிறைவேற்றியது. இதில் ஊதியங்கள் குறித்த சட்டம் 2019-லே நிறைவேற்றப்பட்டு விட்டது.

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், “இந்த ஆண்டு டிசம்பருக்குள் நான்கு தொழிலாளர் சட்டங்கள் ஒரே தருணத்தில் அமல்படுத்தி, தொழிலாளர் துறைக்கான இறுதிக்கட்ட சட்ட சீர்த்திருத்தங்களை முடிக்க அரசு இலக்கு வைத்துள்ளது” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த “விரிவான தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள்” மூலம் உலக வங்கியின் (Ease of Doing Business Index)எளிதாக வணிகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில், முதல் 10 இடத்தில் ஒன்றாக இந்தியா மாறும் என பாஜக அரசு எதிர்பார்க்கிறது.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து எதிர்ப்பையும் தகர்த்தெறிந்து தனது கார்ப்பரேட் எஜமானர்களின் இந்த நீண்டகால கோரிக்கையை சட்டமாக்குவதில் காட்டிய ‘துணிச்சலுக்கு’ இந்த அரசாங்கம் வெளிப்படையாகவே தற்பெருமை கொள்கிறது.

FICCI (இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு)-க்கு தொடர்புடைய AIOE (அகில இந்திய முதலாளிகளின் அமைப்பின்) மூலம் நடத்தப்பட்ட வலைத்தள கருத்தரங்கில் பேசிய மத்திய தொழிலாளர் துறை அமைச்சர், “கடந்த 73 ஆண்டுகளில் முதல் முறையாக, நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது ” என கூறினார்.

இவ்வாறு தற்போதுள்ள 29 தொழிலாளர் சட்டங்கள் நீக்கப்பட்டு, அதற்கு மாறாக இந்த புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அனைத்து வரம்புகள் மற்றும் குறைபாடுகள் இருப்பினும், முந்தய 29 சட்டங்களினால் பணியிடத்தில் முதலாளிகளால் தொழிலாளர் தடையின்றி சுரண்டப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்கும், மற்றும் சில உரிமைகளையும் சலுகைகளையும் தொழிலாளர்களுக்கு வாழங்குவதற்கான வாய்ப்பிருந்தது. அவையும் தற்பொழுது இல்லை.

இருந்த போதிலும் முன்பிருந்த தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் உழைக்கும் வர்க்கத்திடம் வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்பட்டவை அல்ல.  ஆனால் முந்தய சட்டங்கள் ஒவ்வொன்றும் முதலாளிகள், ஆளும் வர்க்கம் மற்றும் அதன் பக்கம் நின்ற அரசுகளின் ஒடுக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் வஞ்சனையை துணிச்சலாக எதிர்த்து நின்ற உழைக்கும் வர்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக பெற்றதே. அவற்றில் சில ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பெற்றவையாகும்.

சென்ற தலைமுறையைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கம் தங்கள் உரிமைகளுக்காக வேலைகளையும், வாழ்வாதாரங்களையும், ஏன் இன்னுயிரையும் கூட இழந்துள்ளனர். தங்கள் வாழ்நாளிலேயே இவற்றை அடையலாம் என்று எப்போதும் எதிர்பார்த்திடவில்லை. தங்களுக்காகப் போராடும் அதே வேளையில், தங்களுடைய வருங்கால சந்ததியினர் உரிமைகளுடனும், சுயமரியாதையுடனும் வாழ்க்கையை நடத்துவதற்காகவும் மகத்தான தியாகம் செய்து போராடினார்கள்.

நமது கடந்த தலைமுறையினரின் இந்த தொலைநோக்கு பார்வையும் அவர்களின் போராட்டங்களின் வழியாக பெற்ற சட்ட உரிமைகளும் பலன்களும், தற்போதுள்ள நவதாராளவாதத்தின் வருகையினால் நமது நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. கேலிக்கூத்து என்ன வென்றால், பாட்டாளி வர்க்கமும் மற்றும் பிற விழும்புநிலை மக்களின் இந்த உரிமைகளையும் – நன்மைகளையும் தாக்கும் முயற்சி ‘சீர்திருத்தங்கள்’ என்ற போர்வையின் கீழ் நடத்தப்படுகின்றன. இந்த கொடும்செயலை ‘தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்களின்’ ‘இறுதி நீட்சி’ என்று மோடியின் பாஜக அரசாங்கம் செய்து முடிப்பதில் பெருமை கொள்கிறது..

மோடி தலைமையிலான பாஜக அரசு பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக புதியதாக 4 தொழிலாளர் குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

1. தொழில்துறை உறவுகள் குறியீடானது, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தடுப்பதற்கும், சங்க பிரதிநிதிகளாக யாரை நியமிக்க வேண்டும் என்பதிலும் அரசாங்கத்திற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. மேலும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ரகசிய வாக்கெடுப்பு முறையையும் இந்த குறியீட்டில் தகர்த்து இருக்கின்றனர்.வேலைநிறுத்தங்களை ‘சட்டவிரோத வேலைநிறுத்தமாக’ கருதும் இந்த குறியீடு, அதில் பங்கேற்பவர்களுக்கும் அதற்கு உதவியவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிப்பதோடு சிறை தண்டனையையும் வழங்கும் வகையில் திருத்தம் செய்துள்ளது.8 மணிநேர வேலை, வாரத்திற்கு 5 நாள் வேலை இதற்காக செய்யப்படும் வேலைநிறுத்தங்களைத்தான், அரசாங்கம் சட்டவிரோதமாக கருதி தொழிலாளர்களை முடக்குகின்ற வேலையை செய்துள்ளது.

2. ஊதியம் தொடர்பான குறியீடானது, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை நீக்குகிறது. அதிக நேர வேலைக்கான ஊதியம், விடுப்பு ஊதியம் மற்றும் விடுமுறை நாட்களுக்கான ஊதியம் போன்றவற்றின் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை கேள்வி குறியாக்கியுள்ளது.நிர்வாக ரீதியாக ஊழியர்களை வகைப்படுத்தும் இந்த குறியீடானது, தொழிலாளர்களை பணியில் அமர்த்தவும், பணியில் இருந்து நீக்கவும் இருக்கின்ற அதிகார வரம்பு குறித்து எந்த விளக்கமும் அதில் கூறப்படவில்லை.

3. சமூக பாதுகாப்பு குறித்த குறியீட்டில், தொழிலாளர்களுக்கு உலகளாவிய அங்கீகாரத்தை, நன்மைகளை வழங்குவதாக கூறும் அரசாங்கம், விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களை இதிலிருந்து விலக்கியே வைத்துள்ளது.தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான பங்களிப்பை 12%-ல் இருந்து 10%-ஆக குறைத்துள்ள அரசு, எந்தவொரு தொழிலாளர் பிரிவினருக்கும் வைப்புநிதி பங்களிப்பு விகிதத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை அரசாங்கமே தீர்மானிக்கும் எனவும் கூறியுள்ளது.நிறுவனத்தின் முதலாளியும், பெரும்பாலான தொழிலாளர்களும் ஒப்புக்கொண்டால் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பிற பலன் அனுபவிக்கும் உரிமை திட்டங்களில் இருந்து அந்நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கப்படும்.

4. பணிகள் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடானது, 40-க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட சிறு, குறு நிறுவனங்கள் எந்தவொரு தொழிலாளர் சட்ட விதிகளையும் பின்பற்றுவதில் இருந்து விலக்கி வைத்துள்ளது. நிரந்தர தொழிலாளர்களுக்கு நிகரான சம ஊதியம், பிற உரிமை பலன்களை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பதை இந்த குறியீடு தட்டி பறிக்கிறது.ஒரு தொழிலாளி கூடுதல் வேலை நேரத்தை மறுக்கும் உரிமையை கேள்விக்குள்ளாக்குவதோடு, 12 மணி நேரம் பணி செய்வது மற்றும் அரசாங்கம் தன்னிச்சையாக வாரத்தில் 6 நாட்களுக்கு வேலை வாங்க அனுமதிப்பது என கார்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்துள்ளது.தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் பணியிடங்கள் குறித்து வழங்கும் புகார்களின் அடிப்படையில் தொழிற்சாலையை ஆய்வு செய்வதற்கு எவ்வித வழிகாட்டு முறையினையும் அரசாங்கம் குறிப்பிடவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் புகார் அளித்தாலும் பணியிடங்களை அவர் சோதனையிட வேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் நீண்ட, நெடியதூரம் போராடி வென்றெடுத்த பல உரிமைகளை நீர்த்து போகச் செய்யும் இந்த புதிய தொழிலாளர் குறியீடுகளுக்கு எதிராக ஒன்றினைந்து போராடுவோம்.

மொழிபெயர்ப்பு.. சைலஸ் அருள்ராஜ்,லத்தீஸ்,ஹரி..

One thought on “உழைக்கும் வர்க்கத்தின் மீது கொடூரமான அடிமைத்தனத்தைத் திணிக்கும் சட்டம்…

Leave a Reply